வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழக தேர்தல் குறித்து எனது நிலைப்பாட்டினை சொல்லியே ஆக வேண்டும். ஈழத்தவனாக இருந்தாலும் அதுவிடயத்தில் கருத்து சொல்ல காரணம் இதுதான். எமது ஈழப்பிரச்சனையினை குறிவவைத்தே பலவேளைகளில் தமிழக அரசியலில் அது சட்ட மன்ற தேர்தலாக இருக்கட்டும்.நாடாளுமன்ற தேர்தலாக இருக்கட்டும் நகர்வுகள் மேற்கொள்ளப்படுவது வழமை.

அதே போல தமிழகத்தின் பொதுப்பிரச்சனையாக இருக்கட்டும் ஈழப்பிரச்சனையாக இருக்கட்டும் அது குறித்து அமைப்புக்கள் உருவெடுப்பது அரசியலுக்ள் உள்நுழைவதற்கானதாகவே இருந்திருக்கிறது. அது ஆரம்பத்திலேயே எம்மால் உணர முடியும். ஈழத்தமிழருக்கான பல்வேறு கட்சிகளின் அமைபப்புக்கள் , அன்னசாரேவின் ஊழலுக்கெதிரான போராட்டம், நாம் தமிழர் அமைப்பு , கூடங்குளம் அணுமின்னிலையத்திற்கு எதிரான உதயகுமாரனின் போராட்டம் அனைத்தும் எனது எண்ணவோட்டத்தில்  ஆரம்பத்திலேயே அரசியலுக்கான அத்திவாரமாக தெரிந்தன. ஆனால் கடைசியில் அதுதான் நிகழ்ந்தது. ஆனால் இது ஒன்றும் தவறானதாக எனக்கு படவில்லை.அது யதார்த்தமானதே  அரசியலும் மக்கள் எழுச்சிகளும் பிரச்சனைகளுக்கெதிரான கருத்துருவாக்கங்களும் இறுதியில் அரசியலில் தான் சங்கமிக்கின்றன. நடிகர் சங்கங்கள் கூட அரசியல் எதிர்பார்ப்புகளுடன் கூடியதே.

அவ்வாறே சீமானின் நாம் தமிழர் கட்சியின்  ஈழத்தமிழர் குறித்த அக்கறை தமிழ்த்தேசிய அக்கறை பன்னாட்டு நிறுவனங்களுககு எதிரான கொள்கை சாதி மதச்சார்பற்ற கொள்கைகள் 100 வீத எதிர்பார்ப்புகள் அற்றது என்று கூறி விடமுடியாது.மற்றைய கட்சிகள் போலவே அவர்களும் ஆட்சி கிடைத்தால் சில விடயங்களில் கொள்கைகளுக்கு மாறாக அவற்றை மாற்றிக்கொள்ள சந்தர்பங்கள் இல்லை என்று அடித்து கூறிவிடமுடியாது.

அதே போல மக்கள் நல கூட்டணியை சேர்ந்தவர்களும் , நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும் ஈழத்தமிழர் போராட்ட அடையாளங்களை பயன்படுத்தியும் வருகின்றனர். ஆனால் அதிமுக திமுக போன்றவை அந்த அடையாளங்களை பயன்படுத்துவது ஒப்பீட்டில் குறைவு அவர்கள் தங்கள் கட்சித்தலைமைகளின் மீதான தனிமனித வழிபாடுகளில் கூடுதல் கவனம் செலுத்துவதால் அவர்களுக்கு அது தேவைப்பட்டிருக்காமல் போயிருக்கலாம்.அவர்கள் ஈழத்தமிழர் பிரச்சனையினை தமக்கு பயன்படுத்துவதும் ஒப்பீட்டளவில் குறைவு.அருந்தபொழுதிலும் சரிவுகளை நிமிர்த்த பயன்படுத்தி வந்துள்ளனர்

தமிழகத்தால் ஈழத்தமிழருக்கு தமிழீழம் வாங்கித்தரமுடியாது என்பது  வெள்ளிடைமலை. இதற்காக தமிழக அரசியல்வாதிகளின் மக்களின் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களை உணர்வுகளை அரசியல் நகர்வுகளை முழுவதுமாக கொச்சைப்படுத்தி விடவும் முடியாது. அவர்கள் யாதார்த்தத்திற்கு மேலான உணர்வுகளை கொண்டிருப்பதும் உண்மை. ஆனால் அந்த வேளைகளில் அந்த உணர்வினை தம் நாட்டு விடயங்களில் காட்டுவதில்லை காரணம் அது இந்திய இறையாண்மைக்கு விரோதமானது.அந்த இடத்தில் அவர்கள் ஒற்றுமை

சரி இப்ப இந்தத்தேர்தலில் யார் ஆதரிக்க சிறந்தவர்கள் என்ற  கேள்வி எழும்போது சாத்தியங்கள் அல்லாத சில விடயங்கள் கொண்டிருந்தாலும் எமது விடுதலைப்போராட்டத்தில் தலைமையால் முன்னெடுக்கப்பட்ட கட்டமைப்புத்திட்டங்களை முன் மாதிரியாக எடுத்துக் கொண்டும் தமிழனுக்கே உரித்தான மிடுக்கு வீரம் மொழி இயற்கை பாரம்பரியங்கள் போன்றவற்றை கடைப்பிடிக்க இளைய தலைமுறையினை வளர்த்தெடுக்கும் வகையில் சலுகை அரசியலுக்கெதிரான தன்னிறைவு பொருளாதார கொள்கைககளை ஓரளவுக்கேனும் கொண்டிருக்கும் பாரம்பரிய அடிபணிவு தமிழக அரசியல்  கலாச்சாரத்தினை மாற்றுவேன் என்றும் கூறிக்கொண்டு புறப்பட்டிருக்கும் நாம் தமிழர் கட்சி எனக்கு முதன்மையாக படுகின்றது.

மக்கள்நலக்கூட்டணி ஏன் தெரிவாக முடியாது என்று கேட்டால் அதில் அரசியல் அனுபவம் , மாறி மாறி க்கூட்டுவைத்த அனுபவம் தவிர நாம் தமிழர் கட்சியில் இருந்து வித்தியாசப்படும் படியான எதுவும் பெரிதாக எதுவும் எனக்கு தோற்றவில்லை. மாற்றம் என்று கருதினால் அதில் மாற்றம் தெளிவாக தெரிய வேண்டும்.

மாறி மாறி இரண்டு கட்சிகளின் கையில் இழுபட்ட அரசியலை மாற்று அணி ஒன்றுக்கு வழங்கி பார்க்க வேண்டிய தேவை தமிழக மக்களுக்கு உண்டு. அதை அவர்கள் செய்வார்களா என்பது கேள்விக்குறியே.

இருந்தாலும் மக்கள் நலக்கூட்டணியைகூட சாதாரணமாக பார்த்துவிட முடியாது தேர்தலின் பின்னராவது அவர்களும் நாம் தமிழர் கட்சியும் கூட்டாக இணைந்தால் நிச்சயம் விரும்பிய மாற்றத்தினை ஓரளவுக்கேனும் மக்கள் அனுபவிக்க முடியும்.திடீரென நாம் தமிழர் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று நான் கனவு காண விரும்பவில்லை. நிச்சயமாக இருபெரும் திராவிட கட்சிகளுக்கும் இந்த தேர்தல் சவாலாகவே இருக்கும் என்பது வெளியில் இருந்தான அவதானிப்பாக உள்ளது களநிலமை தமிழக மக்களின் கையில்தான்.

இலங்கை அரசியலமைப்பின் 99(6) (அ) உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய, ஒரு மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 1/20 க்கு (5%) குறைவான வாக்குகளைப் பெறும் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சி அல்லது சுயேச்சைக் குழு தகுதியற்றதாக்கப்படும். எஞ்சிய செல்லுபடியான வாக்குகள், விகிதாசாரக் கணிப்பீட்டு அடிப்படையில் ஆசனங்களை ஒதுக்குவதற்காக, கணக்கில் எடுக்கப்படுகின்றன.
குறித்த மாவட்டத்தின் உறுப்பினர் எண்ணிக்கையில் இருந்து ஒன்றினை கழித்து அந்த எண்ணிக்கையினால் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளை பிரித்து ஒரு உறுப்பினரருக்காக கட்சிச்சின்னம் பெற்றிருக்கவேண்டிய வாக்குகள் தீரமானிக்கப்படும் . அந்த அடிப்படையில் இடங்கள் ஒவ்வொரு கட்சிக்குமான வாக்குகளில் இருந்து கழிக்கப்பட்டு அதற்குரிய இடங்கள் வழங்கப்படும்.
முதல் சுற்றில் கணிப்பில் வந்த ஒரு இடம் ஒதுக்குவதற்கான வாக்குகள் போதுமானதாக இல்லாவிடில் எஞ்சிய வாக்குகளில் கூடிய வாக்குகளின் அடிப்படையில் இடங்கள் கட்சிகளுக்கு பகிரப்படும்
கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்காக கட்சிகளுக்குள் விருப்பு வாக்கு ஒழுங்கில் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவர்
மாவட்டத்தில் கூடிய வாக்கு பெற்ற கட்சிக்கு முதலில் கழித்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு இடம் வழங்கப்படும்
இதனால் மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் வாக்கு பெற்ற கட்சிக்கும் உறுப்பினர்கள் பகிரப்பட வாய்ப்பு உண்டு அதேவேளை கிடைக்கும் இடங்கள் கட்சிக்குள் பகிரப்படும்போது அங்கு குறைந்த விருப்பு வாக்கு பெறும் உறுப்பினரும் தெரிவுசெய்யப்படலாம்.
உதாரணம் -வன்னி மாவட்டம்
---------------
மாவட்டத்தில் அழிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 1000
மாவட்டத்திற்கான உறுப்பினர் எண்ணிக்கை 6
கட்சிகள் பெற்ற வாக்குகள்
A = 501
B =302
C =197
D =0
என வைத்துக்கொள்வோம்
இங்கே 5 வீதத்திற்கு மேலாக 3 கட்சிகள் பெற்றுள்ளன
A B C கவனத்தில் கொள்ளப்படும்
S= 6-1 =5 கணிப்புக்குரிய இடங்களின் எண்ணிக்கை (S)
N= 1000/5 =200 (முதலாவது சுற்றில் ஒரு இடத்தினை பெற ஒரு கட்சி தரவேண்டிய வாக்குகள்)
அதன்படி
A இற்கு 2 இடங்கள் போன பின் (501-400) =101 வாக்குகள் உள்ளன
B இற்கு 1 இடம் போன பின் (302-200) =102 வாக்குகள் உள்ளன
C இற்கு 197 வாக்குகள் உள்ளன முதற்சுற்றில் இடம் வழங்கப்பட போதாது
இனி பிரித்து தெரிவு செய்யப்பட வேண்டி 2 இடங்கள் உள்ளன அவை மிஞ்சிய வாக்குகள் எண்ணிக்கை ஒழுங்கில் பார்த்தால்
முதலாவதாக C இற்கு ஒன்றும் பின்னர் B இற்கு ஒன்றும் வழங்கப்படும். ஆரம்பத்தில் கழித்து ஒதுக்கிய ஒரு இடம் ஆகக்கூடிய வாக்குகள் பெற்ற கட்சியான A இற்கு வழங்கப்படும்
எனவே கட்சிகள் பெறும் இடங்கள் வருமாறு அமையும்
A : 3
B : 2
C : 1
இலங்கையின் மொத்த 225 உறுப்பினர்களில் மொத்தமாக 196 பேர் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட
தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் 29 பேர் தேசிய ரீதியில் கூடுதலாக எடுத்த வாக்குகளின் அடிப்படையில் கட்சிகளுக்கு பகிரப்படும்
அதில் பெரும்பாலும் தேசியக்கட்சிகளே கூடியளவில் சுவீகரிக்கும்
மாவட்ட ரீதியில் தெரிவுசெய்யப்பட வெண்டிய தமிழர் மாவட்ட பாராளுமன்ற இடங்கள் வருமாறு
யாழ்ப்பாணம் - 7
வன்னி - 6
மட்டக்களப்பு - 5
திருகோணமலை -4
அம்பாறை -7
வாக்காளர் ஒருவருக்கு 4 வாக்குகள் உள்ளன ஒரு வாக்கு கட்சி சின்னத்திற்கும்(கட்டாயமானது ) ஏனைய 3 வாக்குகள் (கட்டாயமானவை அல்ல)விருப்பு வாக்குகள் விரும்பிய 3 வேட்பாளர் இலக்கங்களுக்கும் வழங்கலாம்(அதிலும் வாக்குகளில் எத்தனையினையும் பயன்படுத்தலாம்). கட்சிக்கு வழங்காமல் விருப்பு வாக்கு வழங்க முடியாது

யாருக்கு வாக்களிப்பது?

Posted by Thava சனி, 4 ஜூலை, 2015 0 comments

வருகின்ற தேர்தல் தொடர்பிலான வாக்களிப்பு தொடர்பில் எனது இறுதி நிலைப்பாடு என்ன என்று என்னாலேயே தீர்மானிக்க முடியவில்லை.
அதற்காக வருந்தவில்லை

மகிந்த பற்றி நாம் பேசிக்கொள்வதால் அல்லது அவரது வருகையின் விளைவு பற்றி நாம் ஆராய்வதிலும் பலனில்லை. தேசிய ரீதியில் ஏற்படப்போகும் அந்த மாற்றத்தால் எமக்கு எந்த விளைவும் இல்லை காரணம் அதனால் பாதிக்கப்படபோவது சிங்கள மக்கள் தான் அதனை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.அவரது வெற்றியும் தோல்வியும் சிங்கள மக்களின் கையில் மட்டுமே இப்போது உள்ளது.

இங்கு நாம் எமது பிரதேச அரசியலை எடுத்துக்கொண்டால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எங்களின் தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தது எனினும் அவர்களது கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது என்ன நிலையில் இருந்ததோ அந்த நிலையில் தற்போது இல்லை. நிறைய பேர் வெளித்தள்ளப்பட்டனர் அல்லது வெளியேறினர் புதியவர்கள் பலர் நுழைந்தனர். ஆகமொத்தத்தில் அது உருமாற்றம் பெற்றுவிட்டது.

கூட்டமைப்பின் நடவடிக்கைகளில் முக்கிய பங்குவகிக்கும் தமிழரசுக்கட்சி உண்மையில் சனநாயகப்பண்புகளை பேணவில்லை. அடிப்படை கட்சி கட்டமைப்புக்களை பேணவில்லை .பெயரளவில் மாத்திரம் அது இருக்கிறது தவிர முடிவுகள் ஒரு சிலரால் மட்டுமே எடுக்கப்படுகின்றன.

சிறந்த எதிர்கால அரசியல் தலைமை வளர்த்தெடுக்கப்படவில்லை அல்லது அதற்கு அவர்கள் விரும்பவில்லை. இந்நிலையில் தமது இருப்புக்களுக்காகவும் பதவிகளுக்காகவும் பிழைகளை சுட்டிக்காட்ட பலரும் தயங்குகின்றனர்

தமிழ்தேசியமக்கள் முன்னணியும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் அடி்ப்படையில் இனப்பிரச்சனைக்குரிய தீர்வு தொடர்பில் கொள்கை  ஒற்றுமை உடையவர்களாகவே உள்ளனர் ஆனால் பெயர்களால் மாயாஜாலம் செய்கின்றனர்.தேசம் நாடு என்பன இரண்டும் ஒன்று என்றும் சிலர் கூறுகின்றனர் .State Province Country என்றவற்றில் வித்தியாசங்களை நுணுக்கமாக ஆராய்ந்து கொண்டிருக்கும் மனநிலையில் மக்கள் இல்லை என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.அதில் தெளிவு ஏற்படுத்துவதும் கடினம். அனைவரும் ஒற்றையாட்சிதான் வலியுறுத்துகின்றனர்

அப்படிப்பார்த்தால் ஒற்றையாட்சியினை தீர்வுக்கு சரிவராது என்று சொல்லும் கூட்டமைப்பு எந்தவகையிலும் மக்கள் முன்னணிக்கு சளைத்ததாக இருக்காது .

இங்கு முக்கிய விடயம் என்னவென்றால் இப்போது  ஒற்றையாட்சினை வலியுறுத்தும் சத்தியப்பிரமாணத்தில் கையெடுத்திடும் பராளுமன்ற  உறுப்பினர் பதவிக்காகதான் இரண்டும் போட்டியிடுகின்றன.கூட்டமைப்பின் நடவடிக்கைள் போக்குகளில் விரக்தியுற்றவர்களின் களமாக மக்கள் முன்னணி திகழ்கின்றது. கூடுதலாக இளைஞர்களின் ஆதரவினை அது கொண்டிருக்கின்றது

ஆரம்பத்தில் ஆதரவு குறைந்திருந்த அந்த கட்சி தற்போது ஆதரவினை பெற்று வருகின்றது. அதற்கு கூட்டமைப்பின் துாரநோக்கற்ற அரசியல் பணிகள் செயற்பாடுகள் தான் அன்றி தீர்வுக்கொள்கை தொடர்பிலான மாற்றுத்தேடலாக இந்த அணி திகழவில்லை என்று நாம் நம்புகின்றேன்.

இவ்வாறான மாற்று அணிஒன்று  இருப்பது அவசியமே அவ்வாறு இருந்தால் தான் கூட்டமைப்பு தன்னை திருத்திக்கொள்ள வழிசமைக்கும். இம்முறை முன்னணி 1 ஆசனைத்தினை பெற்றுக்கொண்டால் கூட கூட்டமைப்பு தன்னை திரும்பி யோசிக்க வைக்கும்.மாறங்களை உள்வாங்க அழுத்தத்தினை பிரயோகிக்கும் .

தொடர்ந்து தாயகம் விடுதலை மற்றும் புலி கோசங்கள் தமிழ் தேசிய அரசியலுக்கு உதவியாக இருக்கும் என்று நம்பமுடியாது அதற்கும் ஒரு கால வரையறை உண்டு யுத்தம் முடிந்து 6 ஆண்டு கள் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து அவ்வாறான உணர்ச்சி நிலைகள் நவீன அரசியலுக்கு ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

இந்நிலையில் முன்னாள்போராளிகளை கொண்டு  செய்யப்படும் அரசியல் எந்தவகையிலும் உணர்ச்சிகரமானதாக அமையப்போவதில்லை.

இது வரை அரசுடன் இணைந்திருந்த ஈபி டீபி போன்ற கட்சிகள் தமது இருப்பினை தமது வாக்கு வங்கிகளின் ஊடாக தக்கவைக்க பகீரத பிரயத்தனம் செய்தவிண்ணம் உள்ளன அத்துடன் சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியும் தமது வாக்கு வங்கியினை அதிகரித்து ஒரு இடத்தினையாவது கைப்பற்றிவிடவேண்டும் என துடிக்கின்றன. இல்லாவிடடால் அவர்களால் தேசிய ரீதியில் கிடைக்கும் போனஸ் ஆசனத்துக்கான வாக்கு வங்கியில் அதிகரிப்பாவது  காட்ட முனைகின்றன.

மற்ற போட்டியிடப்போகும் உதிரிக்கட்சிகள் சுயேட்கைள் பற்றி கதைக்கவே தேவையில்லை.கட்டுப்பணத்தினை இழந்து போகும் நிலைதான்

யாழ் மாவட்டத்தி்ல் இருப்பதோ 7 இடங்கள் கூட்டமைப்பு 5 இனை பெறுவதற்கு வாய்ப்பு உண்டு 4  பெறுவது உறுதி.

கூட்டமைப்பின் மீதான ஆற்றாமையினை கொட்டுவதற்கான அல்லது கூட்டமைப்பு எதிர்காலத்தில் தன்னை மாற்றிக்கொள்ள அழுத்தம் பிரயோகிப்பதற்காக  மக்கள் முன்னணிக்கும் வாக்களிப்பது தவறாகப்படவில்லை. மக்கள் முன்னணியினை ஆதரிப்பவர்களில் பலர் கூட்டமைப்பினையும் ஆதரி்கின்றார்கள் அவர்களுக்கு ஆட்கள் தான் பிரச்சனை கூட்டமைப்பின் உட்கட்சி சனநாயகம்தான் மிகப்பெரிய பிரச்சனை.இந்நிலையில் அதில் எந்தக்கட்சிக்கு வாக்களித்தாலும் தமிழ்த்தேசியத்துக்குதான் வாக்களிப்பதாக இருக்கும் என கருதுகின்றேன்

தேர்தலை புறக்கணிக்கச்சொன்னவர்கள் புறக்கணித்தவர்கள் அதனால் மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு வாக்களித்தாலும் அது பிழையில்லை என்று எப்படி சொல்ல முடியும் என நீங்கள் கேட்டால் அவர்கள் கூட்டமைப்பினை எதிர்க்க வேண்டும் என்ற காரணத்துக்காக தான் தங்களை அவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தவே அவ்வாறு செய்தார்களே தவிர வேறு ஒன்றும் இல்லை என்றுதான் நான் கருதுகின்றேன்.இதை அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்பது வேறு கதை.

இரண்டு தரப்பும் பாராளுமன்றத்துக்கு சென்று தீர்வு தொடர்பில் எதுவும் சாதிப்பார்கள் என்று நான் கருதவில்லை. சிங்களவன் மனம் வைக்காத வரை எதுவும் நடடைபெறாது . எமது பிரச்சனைகளை பற்றி குரல் கொடுக்க பிரதிநிதிகள் செல்கிறார்கள் என்று திருப்திப்படலாம். அவ்வளவுதான். முன்னைய அரச ஆதரவு உதிரி கட்சிகள் போல இவர்கள் ஒருபோதும் மகிந்தவை ஏற்கவில்லை. மகிந்த இருந்திருந்தால் தீர்வு கிட்டியிருக்கும் என்றும் கூறியிருக்கவில்லை.

உண்மையில் தமிழ் மக்களின் தீர்வுக்காக இணக்கமின்றி தீவிரமாக போராடுபவர்களாக இருந்தால் இவர்கள் அனைவரும் பாராளுமன்ற தேர்தலையும் புறக்கணித்திருக்கலாம். அதுவும் போராட்டம் தான் அப்படி செய்மாட்டார்கள். அது தவறுமில்லை.ஆக மொத்ததில் மோதகமும் கொழுக்கட்டையும் தான்.தென்னிலங்கையில் ஐக்கியதேசயகட்சியும் சுதந்திரக்கட்சியும் போல தான்.

என்னைக்கேட்டால் எதிர்காலத்தில் மக்கள் முன்னணி மகாணசபை உள்ளுராட்சி சபை அனைத்திலும் போட்டியிடவேண்டும் ஒரு சில இடங்களையாவது கைப்பற்றி கூட்டமைப்பிற்கு தலையிடியாக இருப்பதன் மூலம் எமக்கான தமிழ் தேசிய அரசியல் வலுவடையும்.

வீட்டுக்கா சைக்களுக்கா வாக்களிக்கபோகின்றீர்கள் என கேட்டால் இன்னும் முடிவில்லை என்பது தான் என் பதில்.இப்படித்தான் இங்கு பலரும்.அதனால் தமிழ்த்தேசியத்திற்கு பாதிப்பு என்று நான் கருதவில்லை எதோ ஒன்றை எல்லோரும் தெரிவுசெய்யபோகின்றோம் சுவை மாறாது.

தேர்தல் பார்வை தொடரும்..

யாழ் முகாமையாளர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ”தமிழ் மக்களுக்கான வெளியில் உள்ள வழி” என்ற தொனியில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குமான இன்றைய 15.05.2015 பொது விவாதம் 4.30 மணித்தியாலங்கள் நீடித்தது. இருதரப்பும் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையினை வலியுறுத்துகின்றன. கஜேந்திரகுமார் ஒரு நாடு இரு தேசம் என்கிறார். சுமந்திரன் அது சமஷ்டியாக இருக்கலாம் என்கிறார். கூட்டமைப்புடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைவதற்கு ஆட்சேபனை இல்லை என்றும் கூறினார் ஆனால் கஜேந்திரகுமார் தற்போதய நிலையில் முடியாது என்கிறார். கலந்து கொண்டவர்கள் இணைய வேண்டும் என்றனர்

சுமந்திரன் சம்பந்தன் குறித்த சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு சுமந்திரன், தான் சட்டத்தரணி என்பதை நிரூபிக்கும் வகையில் பதில்களை முன் வைத்திருந்தார் .சம்பந்தனின் தேசியக்கொடி விவகாரம் தொடர்பில் கேட்ட கேள்விக்கு தேசிய கீதத்தினை தமிழில் பாடவேண்டும் என நாம் ஏன் கேட்கவேண்டும் அதைக்கேட்கிறோம் ? அதை ஏற்றுக்கொள்கின்றோம் அல்லவா அதேபோலத்தான் தேசியக்கொடியை ஏற்கத்தான் வேண்டும் என்று மடக்கினார் .அவர் எதிரியை மாற்றி நாங்கள் சென்றுகொண்டிருக்கும் படகினை கூத்தடித்து கவிழ்க்க வேண்டாம். என்று கேட்டுக்கொண்டார்.அரசியல் கைதிகள் பெரும்பாலானவர்கள் விரைவில் விடுதலை செய்யப்டபட உள்ளதாக தெரிவித்திருந்தார்.காணிகளில் ஒருபகுதி பொதுத்தேர்தலுக்குள் விடுவிக்கப்படும் பொதுத்தேர்தலின் பின் இதே அரசியல் நிலமை நீடித்தால் நிச்சயம் பெருமளவிலான காணிகள் விடுவிக்கப்படலாம் என்றார்.தண்ணீர்ப்பிரச்சனையில் கூட்டமைப்பு தலையிட விரும்பவில்லை என்று சுறிய அவர் அது அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனை அதில் அரசியல் கதைக்க விரும்பவில்லை என்றார்

சுமந்திரன் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தற்போதைய தேசியக்கொடியில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்து எனினும் தேசியக்கொடி மாற்றம் ஏற்படும் வரை .இது தான் தேசியக்கொடி அதற்குரிய மதிப்பினை கொடுக்கத்தான் வேண்டும் அதில் தவறில்லை என்ற வாதத்தினை முன்வைத்தார்.தேசிய கொடியில் தங்கள் இனத்துவங்களை பிரதிபலிக்கும் அடையாளங்கள் ஏற்படுத்த வேண்டும் என தமிழ், முஸ்லிம் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.தேசிய கொடியில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பாக எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க, ஜீ. ஜீ. பொன்னம்பலம், ஜே.எல். கொத்தலாவல, டி.பி. ஜாயா, எல்.ஏ. ராஜபக்ச, எஸ். நடேசன், ஜே. ஆர். ஜயவர்தன என்போர் அடங்கிய நாடாளுமன்றக்குழு ஏற்படுத்தப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைக்கமைய தேசிய கொடியில் சமஅளவு அகலம் கொண்ட மஞ்சள், பச்சை நிறமான இரண்டு நிலைகுத்தான பட்டைகள் உருவாக்கப்பட்டது ஜீ. ஜீ. பொன்னம்பலம் (கஜேந்திரகுமாரின் பேரன்) கூட அதனை ஏற்றுக்கொண்டிருந்தார் என சுமந்திரன் போட்டுடைத்தார்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உத்தியோக பூர்வ கருத்தாக யாருடையதை ஏற்பது என்ற கேள்விக்கு பதிலாக ” அரசியல் தீர்வு விடயத்தில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன கூறப்பட்டுளே்ளதோ அதுதான் என்றும் மற்றைய விடயங்களில் கூடடமைப்புக்குள் முரண்பாடான கருத்துக்கள் வருவதை தவிர்க்கமுடியாது என்றும் கட்சிக்குள்ளேயே வேறுபட்ட கருத்துக்கள் உள்ள நிலையில் கூட்டமைப்புக்குள் வருவதை ஒன்றும்செய்யமுடியாது தானே என்றார்.

மேலும் 2010 இல் சரத்பொன்சேகா வை ஆதரிக்கும் விடயத்தில் முடிவு எடுக்கையில் கஜேந்திரகுமர் உள்ளே தான் இருந்திருந்தார் அவர் எதிர்த்த பொழுதிலும் தேர்தல் நடைபெறும்போது கூட்டமைப்பின் முடிவுக்கு கட்டுப்பட்டிருந்தார் என்று சுட்டிக்காட்டினார்.எனவே முரண்பாடுகள் அமைப்புக்குள் தவிர்க்கமுடியாது என விவரித்தார்.

தேர்தல் வேளை யாழ்ப்பாணத்தில் மாவை. சேனாதிராஜா மைத்திரி தரப்புடன் எமக்கு உடன்படிக்கை இருக்கு அது எழுதப்படவில்லை அதை நாங்கள் தான் விரும்பவில்லை என்று கூற மைத்திரி ஆம்  எல்லாவற்றுக்கும் மேலாக இதயங்களில் ஒப்பந்தம் எழுதப்பட்டிருக்கு என்று சொல்லி சென்றதை சுமந்திரன் ஞாபகப்படுத்தினார். எழுதிய ஒப்பந்தமே நிறைவேற்றப்படாத இந்த இலங்கையில் இதய ஒப்பந்தம் எந்தவகையில் சரியாகும் என  பல்கலைக்கழக விரிவுரையாளர் உதயன் கேள்வி எழுப்பினார்

இதயங்களுக்கிடையில் பேசப்பட்ட அந்த ஒப்பந்தத்தினை மக்களுக்கு வெளியிட்டால் அது நிறைவேற்றப்பட்டதா என்ன பின்னாளில் சரிபார்க்கமுடியும் என்றும் இல்லாவிடில் தோ்தல் முடிய ஏதோ ஒன்றை கூறி அது தான் இதய ஒப்பந்த விடயங்கள் என மழுப்ப முடியும் என விரிவுரையாளர் உதயன் சாடினார் அதற்கு சுமந்திரன் அது அதற்கு முன்னர் வெளியிடப்படும் என்றார்

சுமந்திரன் தன்மீது தனிப்பட்ட ரீதியில் நிறைய விமர்னங்கள் இருப்பதாக ஒத்துக்கொண்டார் ஆனால் அவற்றுக்காக அவர் வருத்தபட்டிருக்கவில்லை. பெரும்பாலான மக்கள் தனது செயலை விரும்புவதாகவே கருதுகின்றார். மேலும் ஊடகங்கள் தான் தனது கருத்துக்களை திரித்து கூறுவதாகவும் உண்மையில் தான்கூறிய கருத்துக்கள் சரியான முறையில் தான் அமைந்திருந்தன என்றும் .சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் ஒரே விதமாகவே தான் கருத்து தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்

மகிந்த யாழ்ப்பாணம் வந்திருந்தால் மாகாணசபை உறுப்பினர்கள் அவரின் முன் சத்தியப்பிரமாணம் எடுத்திருக்கலாம் என்று கூறிய சுமந்திரன் அப்படி செய்வதில் என்ன தப்பு என்று வினவினார்

திருக்குமரன் என்பவர் சம்பந்தன் விநாயகமூர்த்தி போன்ற அறளை தலைவர்களை அகற்றவேண்டும் என தெரிவித்த கருத்து பலராலும் கண்டணத்திற்கு உள்ளானது .சுமந்திரன் கொதித்து எழுத்தார் பின்னர் திருக்குமரன் அதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டார். பின்வரிசையில் இருந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இளைய ஆதரவாளர்கள் சுமந்திரனுக்கு எதிரான கருத்துக்களுக்கு மட்டும் கைத்தட்டலிலும் இடக்கு முடக்காக உணர்ச்சி வசப்பட்டு சுமந்திரனை கலாய்ப்பதிலும் ஈடுபட்டமை வரவேற்கப்பட்டிருக்கவில்லை. சுமந்திரன் ஒரு சமயம் கைதட்ட கூட்டிவரப்பட்ட கூட்டம் அமைதிகாக்கவேண்டும் என்று கடிந்தார்.

கஜேந்திரகுமார் ஈபிடிபி தவராசா அவர்களையும் கலாய்க்க தவறவில்லை உங்கட கட்சி இணக்க அரசியல் என்று குறிப்பிட்டார். அதன்போது தவராசா கடுப்பாகிவிட்டார். கஜேந்திரகுமார் வாதம் நிறைய வெளிநாட்டு கதை சொல்வதிலேயே கழிந்தது.அவரது வாதம் கூட்டமைப்பினை விமர்சிப்பதிலும் இருந்தது. சாதாரண மக்களுக்கு புரியாத அரசியல் தீர்வு குறித்து அரசியல் தலைவர்கள்தான் எடுத்துரைக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.சாதரண மக்கள வாழ்கைப்பிரச்சனைக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள் அதனை கூட்டமைப்பும் செய்யக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

கஜேந்திரகுமார் மேலும் உரையாற்றுகையில் தமிழ்மக்களுக்கான பிரச்சனையிக்குரிய தீர்வினை இலங்கைக்குள் மட்டும் வைத்து சிந்திப்பது முட்டாள் தனமானது மீண்டும் ஏமாற்றத்தினையே தரும் என்றும் அது உலாகளாவிய ரீதியில் பூகோள அரசியல் மா்ற்றத்திற்குட்பட்டு நகர்த்தவேண்டும் என்றும் அதற்கு அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும் என்றும் , கிடைக்கின்ற ஆட்சிமாற்றங்களை தமிழர் நலன்களுக்குரிய பேரம் பேசும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்தியா ஒருபோதும் தனிநாட்டினை விரும்பவில்லை என்றும் இது போராளி இயக்கங்களுக்கு ஆதரவு தரப்படும் சமயத்திலேயே சொல்லப்பட்டு விட்டதாகவும் கூறினார்

ஜெனிவா தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா செயற்பட கூட்டமைப்பே காரணம் என்று குற்றம்சுமத்தினார். இந்தியாவை நாங்கள் பார்த்துக்கொள்ளுவோம் என அமெரிக்காவுக்கு கூட்டமைப்பு வாக்குறுதியளித்திருந்ததாக கூறினார். ஆனால் அதனை மறுத்த சுமந்திரன் இந்தியாவின் ஜெனிவா தீர்மானம் தொடர்பிலான முடிவு மாற்றத்திற்கு புலம்பெயர்ந்த சிலரதும் தமிழ் நாட்டு எதிர்ப்பு நடவடிக்கைகளும் தான் காரணம் என தெரிவித்தார். தாங்கள் தான் இந்தியப்பிரதமர் சமஸ்டி தான் தீர்வு என கூறவைத்ததாக பெருமைப்பட்டுக்கொண்டார்

கஜேந்திரகுமார் கூறுகையில் ஒருநாடு பலதேசம் என்ற கொ்ள்கையில் முஸ்லிம்கள் மலையக மக்கள் தங்களுக்கென தேசங்களை வகுத்தால் அதிலும் தனக்கு ஆட்சேபனையில்லை என்றார்.இருப்பினும் தற்போது தமிழர் மட்டுமே தேசத்தினை கோருகின்றனர் என்றார்
மகிந்த ஏன் கொடுமையானவர் என்று நீண்ட பட்டியிலை சுமந்திரன் வெளியிட கஜேந்திரகுமார் அதனை மறுப்பின்றி ஏற்றுக்கொண்ட அதேவேளை மகிந்த மட்டுமா கொடுமையானவர் சந்திரிகா சரத்பொன்சேகா ரணில் அனைவரும் கொடுமையானவர்களே அவர்களும் எமக்கு எதிராகவே செய்பட்டனர் ஏன் அவர்களை கூட்டமைப்பு ஆதரிக்க முற்படுகிறது என தனக்கு தெரியவில்லை என்றார்
தமிழர் குறித்த ஆயிரக்கணக்கிலான ஆண்டுகளாகவே சிங்களவர் பயங்கொண்டுள்ளதாகவும் இவர்களது இலக்கு தமிழ் தேசத்தினை இல்லாதொழிப்பதொன்றே என்று கஜேந்திரகுமார் விளக்கினார்


டில்லியில் நடந்த அனைத்துகட்சி கூட்டத்தில் 13வது திருத்தத்தினை மையப்படுத்தியே தீர்வுதிட்டம் அமையவேண்டும் என சுதர்சன நாச்சியப்பன் வலியுறுத்தியதின் விளைவாகவே அக்கூட்டம் தோல்வியடைந்துவிட்டதாக குறிப்பிட்டார் அவர். அங்கே சுமந்திரனும் கஜேந்திரகுமாரும் இணைந்து வழங்கிய ஒரு உத்தேச தீர்வு வரைபினை  நாச்சியப்பன் நிராகரித்து விட்டதாகவும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.அவர்கள் டெல்கி செல்ல முதலேயே சில தரப்புகளின் ஏற்பாட்டில் இருவரும் சந்தித்து ஒரு பொது இணக்கப்பட்டிற்கு வந்திருந்தனர், அதையே அங்கு இருவரும் இணைந்து 3 பந்திகளில் எழுதி இருந்தனர் என்றும் குறிப்பிட்டார்,

நாச்சியப்பன், அன்றாட பிரச்சினை, அபிவிருத்தி சம்பந்தமான முதல் இரண்டு பந்திகளையும் ஏற்றுக்கொண்டு, அரசியல் தீர்வு சம்பந்தமான 3ம் பந்தியை, 13 ம் திருத்ததின் அடிப்படையிலான தீர்வு என எழுதுபடி கூற, ENDLF,PLOTE சங்கரி,போன்ற 4 கட்சிகள் அதனை ஒத்துக்கொண்டு, ஆமோதித்தன. எதிர்ப்பதும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டும் தானே,, எனவே கூட்டமைப்பும் தம்முடன் சேர்ந்து இதில் கையெழுத்து வைக்குமாறு கூட்டமைப்பை கேட்டிருந்தன.அதே நேரம் 13 ம் திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வு என்பதை நிராகரித்த தாம், தமிழரின் நலன் கருதி,கொள்கை ரீதியிலான முடிவை எடுத்து தம்முடன் இணைந்து கையெழுத்து வைக்குமாறு கூட்டமைப்பை அழைத்திருந்ததாகவும், கூட்டமைப்பு  எல்லோரும் ஒற்றுமையாக போனால் தாம் கையெழுத்து வைப்பதாக கூறினர் என்றும் குறிப்பிட்டார்.

சுமந்திரனின் குற்றச்சாட்டான இணைவதற்கு மக்கள்முன்னணிக்கு உள்ள பிரச்சனை தலைமைத்துவம்தான் என்பதற்கு பதிலளிக்கையில்  , நீதிபதி விக்கினேஸ்வரன் ஒருநாடு இருதேசம் கொள்கையினை ஆதரிப்பதாகவும் அதனாலேயே அவரின் தலைமையில் கூட்டமைப்பு வந்தால் தாங்கள் இணையமுடியும் என தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.தந்தைசெல்வா ஆரம்பத்தில் தமிழீழ கோரிக்கைக்கு எதிராக அறிக்கையிட்டு தேர்தலில் நின்றவரென்றும் பின்னர் அவரே அந்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்டதையும் நினைவு கூர்ந்தார்

தேசம் நாடு மற்றும் சுயநிர்ணயம் சமஸ்டி போன்றவை பற்றி கருத்துக்கள் அங்கே பகிரப்பட்டிருந்தது .சுமந்திரன் கூறுகையில் ” தேசம் என்பது குறித்து தனக்கும் கஜேந்திரகுமாருக்கும் இடையில் நிறைய வாதங்கள் இடம்பற்றுள்ளதாகவும் ஆனால் சுயநிர்ணயம் வரையறுக்கப்பட்ட சமஸ்டியானது தேசத்தினை ஒத்தது தான் என்று பொருள் பட வாதம் முன்வைத்தார் மேலும் தேசம் என்னும் போதும் அது கருத்தியல் ரீதியாகமட்டுமே உள்ளதாகவும் அங்கே சுயநிர்ணயம் வரையறுக்கப்பட்டிருப்பதாக தான் பார்க்கவில்லை என்றும் எனவே சம்பந்தன் சொல்வது போல தேசம் வெற்றுக்கோசம் தான் என்றார். கூட்டமைப்பு அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய சமஸ்டிக்கு தான் தாம் இணங்குவோம் என்றும் கூறினார்

இருவரும் இதுவரை வெளியில் பகிராத நிறைய உள் வீட்டுத்தகவல்களை எடுத்துக்கொள்ளக்கூடியதாக இருந்தது.
மைத்திரி அரசாங்கத்துடன் பேச்சளவில் செய்யப்பட்ட உடன்படிக்கை குறித்து தேர்தலுக்கு முன்பாக கூட்டமைப்பு வெளியிடும் என்று சுமந்திரன் கூறினார்.

சில விருப்பத்தகாத வாதங்களும் நடவடிக்கைகளும் இடம்பெற்றிருந்த போதிலும் இனிதே நிறைவுபெற்றது. இருதரப்பும் மல்லுக்கு நிற்காமல் இணைந்து தீர்வு குறித்து விரிவாக சிந்திக்கவேண்டும்.

இறுதியில் ஒரு இளைஞர் ”வாக்குறுதிகள் உடன்படிக்கைகள் என்று தலைவர்கள் கதைக்கையில் எதிர்கால சந்ததியினருக்கு தீர்வு குறித்த என்ன செய்தியினை தமிழ் தேசியக்கட்சிகள் விட்டுச்செல்ல விரும்புகின்றன என்ற இளைஞர்களின் அச்சத்தினை போக்கவேண்டும் ” என்ற கருத்து முத்தானதாக இருந்தது!

சில வினாக்கள் கேட்கப்பட்டன நிறைய வினாக்கள் என்ற பெயரில் கருத்துகளாக கூறப்பட்டன. நிதானம் கேள்விக்குள்ளாக்கப்பட்ட உணர்ச்சிக்கொந்தளிப்பு நிலவிய அந்த கூட்டத்தில் நான் எந்த கேள்வியும் கேட்பதை தவிர்த்து விட்டேன். இறுதியில் போகும் போது தனிப்பட சுமந்திரனிடம் ஒன்றை மட்டும் சொல்லிவிட்டு வந்தேன் ”சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவிப்பதை தவிர்த்தால் நல்லது” கவனத்தில் கொள்கின்றேன் என்றார்!

என்னைப்பொறுத்தவரை இருதரப்பிடமும் கருத்தியல் ரீதியாக தவிர பொதுமக்கள் முன்னிலையில் முன் வைக்கக்கூடிய உத்தேச தீர்வுத்திட்டம் இருப்பதாக தெரியவில்லை. ஒவ்வொரு கட்சியும் தாம் சொல்வது செய்வது சரி என்றே கூற வருகின்றன. ஒருவகையில் இருகட்சிகளும் கொழுக்கட்டையும் மோதகமும் போன்றதே. எனவே இன்றைய நிலையில் தேர்தல் தான் பதில் சொல்லப்போகின்றது.
ஒருசிலரின் நடவடிக்கைகளுக்காக மக்கள் அவ்வளவு விரைவில் வீட்டில் இருந்து சைக்கிளுக்கு மாறி விடுவார்கள் என்று நான் கருதவில்லை.

முழுமையான காணொளி



மகிந்த இராஜபக்ச ,கருணாநிதி, காந்தி குடும்ப அரசியல்களினை பெரும்பாலும் மக்கள் பொதுவாக எதிர்த்தே வருகின்றனர். ஆண்ட பரம்பரை மீள ஆள நினைப்பதில் தவறேது என்று கேட்பது தமது இனத்தின் பரப்பரையினை குறித்தா அல்லது குடும்பங்களைக்குறித்தா என்ற கேள்விகள் காலத்துக்கு காலம் மக்களை சிந்தனையில் உதித்தவண்ணம் இருந்தாலும் ஏதோ சாட்டுக்களை முன்வைத்து அல்லது இயலாமையின் வெளிப்படையாக இது தொடர்ந்த வண்ணம் உள்ளமை கண்கூடு.

இந்த வகையில் தமிழ்த்தேசிய அரசியலிலும் விமர்சனங்களை எதிர்கொண்டு பயணிக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்குள்ளும் நாம் விரும்பாத குடும்ப அரசியல் முளைவிடத்தொடங்கிவிட்டதை மறுக்கமுடியாது. ஈழத் தமிழர் அரசியலில் குடும்ப அரசியல் புதிதல்ல என்ற பொழுதிலும் குறிப்பிடும் படியாக இருக்கவில்லை.மேலும் அரசாளும் சந்தர்பங்கள் கிடைக்காதிருந்தமை உணர்ச்சி அரசியலுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டடிருந்தமை தமிழ்த்தேசிய அரசியலில் விடுதலைப்புலிகளின் பங்களிப்பு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடாக முக்கிய பங்கை செலுத்தியிருந்தமை போன்ற காரணிகளால் மறைந்து போயிருந்த இந்த வெறுப்பிற்குரிய குடும்ப அரசியல் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் அணியினரால் அறிமுகப்படுத்தபபடுவது அவ்வளவு ஆரோக்கியமானதாக படவில்லை.

வடக்கு மாகாணசபைத்ததேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவின் போது அரசல் புரசல்களாக பேசப்பட்ட விடயம் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவின்பின் வெளிச்சத்துக்கு வந்தது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி முதலமைச்சர் வேட்பாளர் தெரிவின் போது ஒரு எழுதப்படாத உடன்படிக்கையினை செய்து கொண்டதாக தகவல்கள் கசிந்தது. அதாவது விக்கினேஸ்வரனை ஆதரிப்பதற்காக வேட்பாளர் தெரிவில் தனது தம்பியான கந்தையா சர்வேஸ்வரனை வேட்பாளராக களமிறக்க கொள்கையளவில் கூட்டமைப்பின் தலைமையினை இணைங்கச்செய்ததாக அந்த செய்தி இருந்தது. கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான விரிவுரையாளர். அவருக்கு யாழ்ப்பாணத்தில் மக்களுடனான எந்த விதமான பின்புலமும் இருந்ததில்லை. ஈபி.ஆர் எல். எவ் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட 4 இடங்களில் ஒன்றின் ஊடாக வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கப்பட்டு பத்திரிகைகளில் விளம்பரம் போடப்படும் வரை அவரை இங்கு பலருக்கு தெரியாது என்பதே உண்மை.

இந்நிலையில் செல்வாக்கு மற்றும் தகுதிவாய்ந்த வேட்பாளர் பலம் கொண்ட ஈ..பி.ஆர்.எல் எவ் கட்சியின் வேட்பளர் பட்டியிலில் தனது தம்பியான சர்வேஸ்வரனை இணைப்பதில் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு அதிக சிக்கல் இருக்கவில்லை. அவரது சொந்த வாக்கு வங்கியினை நம்பியே தம்பியை களமிறக்கினார் என்று கூறுகின்றார்கள். நிறுத்தியவுடனேயே வென்றால் அமைச்சு ஒன்று அவருக்குத்தான் என்ன கதையும் கட்டிவிடப்பட்டிருந்தது.

அவரது கட்சியின் கோட்டாவில்  சுழலியலாளர் ஐங்கரநேரசன், கடற்றொலிலாளர் சமாசத்தினை சேரந்த சுப்பிரமணியம், யாழ் வணிகர் கழக தலைவர் ஜெயசேகரம் ஆகியோர் களமிறக்கப்பட்டிருந்தனர்.தேர்தலில் அவர்களில் அதிகம் கல்விச்சமூகத்தில் பிரபல்யமான ஐங்கரநேசன் கூடிய விருப்பு வாக்குகளை பெற்று வெற்றிபெற்றிருந்தார் கலாநிதி கந்தையா சர்வேஸவரன் ஆரம்பத்தில் வெற்றிபெறவில்லை என்று கூறப்பட் போதிலும் இறுதி முடிவில் வெற்றியாளராக வந்தார்.விருப்பு வாக்குகள் தொடர்பில் வழமை போல சில கட்டுக்கதைகளும் உலாவருகின்றது. மற்றைய இருவரும் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். அந்த நான்குபேர்களில்  தம்பியார் சர்வேஸ்வரன் தவிர்ந்த ஏனைய 3 பேரும் நேரடியாக ஈ.பி.ஆர். எல்.எவ் கட்சியுடன் சம்பந்தப்படாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்நிலையில் இவ் வடமாகாணத்தேர்தலில் சுரேஸ் எம்பியின் கட்சிக்குரிய செல்வாக்கு சரிந்துள்ளது என்றே கூறமுடியும். இதற்கு அவரது குடும்ப அரசியலும் முக்கிய காரணமாக கூறப்படுகின்றது. எனவே கூட்டமைப்பில் குடும்ப அரசியலினை அறிமுகப்படுத்தியதன் மூலம் தனது கட்சிக்கான செல்வாக்கினை குறைத்துக்கொண்டுள்ள சுரேஸ் தொடர்ந்து அதனை சரியவிடாது பாதுகாக்க என்ன செயற்பாடுகளை செய்யப்போகின்றார் என்பதே கேள்விக்குறி. ஆரம்பத்தில் தேர்தலில் சுயேட்சையாக நின்று தோல்வியுற்றிருந்த இவர் கூட்டமைப்பின் ஊடாகவே எம்பியாக முடிந்தமை குறிப்பிடத்தக்கது. விடுதலைப்புலிகளின் மன்னிப்பின் ஊடாக ஈ.பி.ஆர் எல்.எவ் என்பது மண்டையன் குழு என்று மக்களிடம் பேசப்பட்ட நிலை மாறி தனக்கு கிடைத்த அங்கீகாரத்தினை குடும்ப அரசியலின் மூலம் குழப்பிவிடுவாரா அல்லது தன்னை மீளாய்வு செய்து சரியான வழி பயணிப்பார என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்

தர்மலிங்கத்தின் புண்ணியத்தால் அவரது மகன் சித்தார்த்தன் கூடிய செல்வாக்கினை யாழ்ப்பாணத்தில் பெற்றதன் மூலம் கூடிய விருப்பு வாக்குகளைப்பெற்று மாகாண சபைத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்கின்றார்.அதன் மூலம் புளொட் முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அரசியலில் செல்வாக்கு செலுத்த தொடக்கியிருக்கின்றமையும் இங்கு குறிப்பிட வேண்டியிருக்கின்றது. இந்த புளொட் அமைப்பு பல விமர்சனங்களுக்குள்ளானதும் இறுதியாக வந்திணைந்த பங்காளிக்கட்சி என்பதும், வவுனியா மக்களிடம் சற்று வெறுப்பை சந்தித்த கட்சி என்பதுவும் கவனிக்கத்தக்கது. சித்தார்த்னின் அரசுக்கு வக்காளத்து வாங்கும் செயற்பாடுகள் ,போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கியதான சில செய்திகள் ,போர் முடிவுற்றதன் பின்னரான பேட்டிகள் சங்கரிக்கு ஏற்பட்ட நிலைபோல சலசலப்பை ஏற்படுத்தியிருந்தமையும் மறுக்கமுடியாது.இருந்தும் அவரை தகப்பனாரின் புண்ணியம் காப்பாற்றியுள்ளது.

ரெலோ அமைப்பு மன்னாரில் கூடிய செல்வாக்கு செலுத்தி தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் ஒரு பேரம் பேசும்க ட்சியாக உருவெடுத்துள்ளது. அதனால் அக்கட்சிக்கு வடமாகாண அமைச்சில் ஒரு அமைச்சு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய அழுத்தத்தினை அது கொடுத்துவருகின்றது. அதன் முன்னணி செயற்பாட்டாளராக மன்னார் மாவட்ட எம்பி செல்வம் அடைக்கலநாதன் தொழிற்பட்டு வருகின்றார். யாழில் சிவாஜிலிங்கம் தொழிற்படுகின்றார்.

ஆனந்த சங்கரியின் தமிழர்விடுதலைக்கூட்டணியைப்பொறுத்தவரை அது தற்போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அரசியலில் மக்களால் ஓரங்கட்டப்பட்டுவிட்டது. கிளிநொச்சியை தமிழரசுக்கட்சியின் சிறீதரன் எம்பி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததன் மூலம் இது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.

தற்போது தனிப்பெரும் கட்சியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சி கோலோச்சி வருகின்றது. அந்நிலையில் போனஸ் ஆசனப்பங்கீடு விடயத்தில் அமைச்சரவை விடயத்தில் இந்த செல்வாக்குகள் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன செலுத்தும் என்பதை எவராலும் மறுக்கமுடியாது. இந்நிலையில் அமைச்சரவையில் தமிழரசுக்கட்சி 2 இனை அபகரித்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை ரெலோ ஒன்றினை பெற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கின்றது. எனவே அது மன்னாருக்கு கிடைக்கலாம். அது கூடுதலாக சுகாதார அமைச்சாகவே இருக்கக்கூடும் என கூறப்படுகின்றது. 

தமிழரசுக்கட்சி தனக்கு எடுக்கவுள்ள அமைச்சுக்கள் 2 இல் ஒன்றை கிளிநொச்சியில் குருகுலராஜாவுக்கே வழங்கும் என கூறப்படுகின்றது . அதில் சிறீதரன் எம்பி பிடியாக இருக்கிறாராம்.மற்றையது யாழ்ப்பாணத்திற்கு கிடைக்கலாம். அடுத்த ஒன்று யாருக்கு என்பதை சுரேசின் நடவடிக்கைகள் தீர்மானிக்க போகின்றன என்றே தெரிகின்றது. இருப்பினும சுரேஸ் அவர்கள் தம்பிக்காக வாதாடுவாரா அல்லது வெற்றிபெற்ற தனது மற்றைய வேட்பாளருக்காக வாதாடுவாரா என்று அவருக்குதான் வெளிச்சம். தம்பிக்குத்தான் வாதாடுவார் எனில் குடும்ப அரசியலினை மேலும் உறுதிப்படுத்தி தனது கட்சி செல்வாக்கினை மக்களிடத்திலும் கூட்டமைப்பின் தலைமையிடத்திலும் குறைத்துக்கொள்ளவே வாய்ப்பிருக்கின்றது என கூறலாம். தமிழரசுக்கட்சி உயர்பீடம் தமது நெருங்கிய வட்டாரங்களிடையே அந்த ஆதங்கத்தினை ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கின்றனராம்.

புளொட் சித்தார்த்தனுக்கு அமைச்சு அவழங்கப்படவெண்டுமென்ற குரல்களை அவைத்தலைவர் பதவி கொடுத்து ஆசுவாசப்படுத்த முயற்சிகள் நடைபெற்றுவரும் நிலையில் சுரேசின் முடிவு பலத்த எதிர்பார்ப்புகளை பெற்றிருக்கிறது. இதேவேளை தேர்தலில் கூட்டமைப்புக்கு கிடைத்த 2 போனசில் ஒன்று முல்லிம் வேட்பாளருக்கும் மற்றையது முல்லைத்தீவில் பெண்வேட்பாளருக்கும் என கூறப்படுகின்றது.இறுதி முடிவு நாளை தெரியவரும்

எது எப்படியோ அமைச்சுப்பதவிகள் துறைசார்ந்தவர்களிடம் செல்லவேண்டும். அந்த பதவிகள் பொதுநலன் சாரந்ததாகவேயன்றி தனிப்பட்ட நலன்களுக்கானதாக இருக்ககூடாது . இந்த போனஸ் அமைச்சரவைத்தெரிவுகள் கூட்டமைப்புக்குள் குழப்பத்தினை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கவேண்டும்.

எமது மக்கள் விக்கிரமாதித்தன்கள் தான்!

Posted by Thava வெள்ளி, 27 செப்டம்பர், 2013 0 comments

வடக்கு மாகாகாண தேர்தலை புறக்கணித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் .அதன் தலைவரான பொருளியல் ஆசிரியர் வரதராஜன் தான் அக்கட்சியில் இருந்து விலகி அறிக்கை விட்டதன் பின்னணியில் கூட்டமைப்பிற்கெதிரான விமர்சனங்களை முடுக்கி விட்டிருக்கின்றனர்.அவரது அறிக்கை மீதான விமர்சனத்திற்கு அப்பால் கூட்டமைப்பின் உள் வீட்டு விவகாரங்களுக்கு அப்பால் ,பொதுவாக நோக்கின் யாரும் புனிதர்கள் கிடையாது! ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவதில் பலனில்லை. மற்றவர்கள் அப்படி செய்திருக்கலாம் இப்படிச்செய்திருக்கலாம் என்று கூறுவது இலகு .

ஏன் அதனை தாமே செய்திருக்கலாமே? பிறகெதற்கு கட்சி, கொள்கை. எல்லோருக்கும் தெரியும் மக்கள் இந்த கட்சிகளின் தற்போதைய கொள்கைகளை ஏற்கவில்லை என்றும் அவர்கள் வெறுமனே அரச எதிர்ப்புக்கொள்கையில் தான் இருக்கிறார்கள் என்றும் இந்த மக்களுக்கு தலைமை தாங்கக்கூடிய ,அந்த மக்களது உண்மையான உரிமைக்குரலுக்கு வடிகாலாய் அரசியல் செய்யக்கூடிய எவனும் இங்கு இல்லை என்றும் எல்லோருக்கும் தெரியும். தற்போது இலங்கையில் அதற்கான சாத்தியப்பபாடுடைய சூழலும் இல்லை. அது வெளியில் இருந்துதான் செய்யமுடியும்.

அதற்காக அரசுக்கட்சிக்கு வாக்களிக்கவும் மக்கள் ஒருபோதும் தயாரில்லை.எனவே உங்கள் சந்தர்ப்பவாத அரசியலுக்கு வீழச்சி இல்லை என்றும் நம்பலாம்.

சர்வாதிகார ஆட்சியில் இங்கு எவராலும் எதனாலும் எதையும் சாதிக்கமுடியாது என்பதை நிரூபித்துக்கொண்டு , நமக்கு பிரச்சனை இருக்கிறது. தீர்வு தேவை என்று தெரியப்படுத்தி நமது மக்களின் இருப்பையும் எதிர்காலத்திற்கான அடிப்படை விடையங்களையும் முன்கொண்டு செல்வதே தற்போதைக்கு முடியும். அதை இந்தக்கட்சிகள் தம் தம் வழியில் செய்யலாம். அதை விடுத்து ஒருத்ததரை ஒருத்தர் பிடுங்கித்தின்ன நினைக்கும் சந்தர்ப்பவாத அரசியலை தவிர்க்க வேண்டும்

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பாயிருந்தால் என்ன தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியாக இருந்தால் என்ன இரு கட்சிகளாலும் தமது இலக்கினை அடைவதற்கான தெளிவான வழிமுறைகளை முன்வைக்க முடியவில்லை.இவர்களிடம் ஒரு உத்தேச தீர்வுத்திட்டம் கூட இல்லை. வெறுமனே தாம் துறை சார்ந்தவர்கள் சட்டவாளர்கள் என்று இருகட்சிகளிலும் சிவில் சமூகக்குழுக்களிலும் இருந்து அறிக்கைளை விடுகிறார்கள் . ஆலோசனைகளை அள்ளி வீசுகின்றனர். அது மக்களுக்கு ஏற்கனவே தெரிந்த விடயங்கள். எல்லாம் மாயை. அவர்கள் முடிந்தால் சாத்தியமான ஒரு தீர்வுத்திட்டத்தினை வரைவு செய்யட்டும் பார்ப்போம்.தனிநாடு தான் என்று இலகுவாக கூறி தப்பிக்கொள்வார்கள்.

தேர்தல் புறக்கணிப்புக்கு பலர் கூறியகாரணம் வேறு உண்மைக்காரணம்வேறு. மாகாகாணசபை எப்படியோ அது மாதிரியே பாராளுமன்றமும். இதிலும் இவர்கள் சென்று கிழித்தது எதுவும் இல்லை தமது உறவினர்களுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்ததும் அதனால் கிடைத்த வசதி வாய்ப்புக்களை பெற்று அனுபவிப்பதுதான் இன்று வரை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நடைபெறுகிறது. ஒதுக்கீடுகளை கூட தமது அடுத்த வெற்றிக்கான வாக்கு வங்கி பலப்படுத்தல்களுக்காக தான் பயன்படுத்துகின்றனர் பயன்படுத்தினர். ஏன் இன்னும் பலர் அந்தப்பாராளுமன்றக்கதிரைகளுக்காக ஏங்கி இருக்கின்றனர். அதற்கான வேலைத்திட்டங்களில் இறங்கி இருக்கின்றனர்.முன்னர் இறங்கி தோற்றிருந்தாலும் கூட காத்திருக்கின்றனர்.

ஆக மொத்தத்தில் மக்களின் மனதை வெல்ல பாருங்கள் வெறுமனே ஊடகங்களை நம்பி அரசியல் செய்யாதீர்கள். கொள்கை ,தெளிவான பார்வை ,நோக்கு ,இலக்கை அடைவதற்கான முறையான வழி ,இதய சுத்தி இருந்தால் மக்கள் கூட்டம் வைக்காமலே வாக்கு போடுவார்கள்.

அதை இங்கு எவராலும் செய்ய முடியாது! அதற்கான திட்டம் எவரிடமும் இல்லை. சர்வதேசம் பார்த்து ஏதும் செய்தால்தான் உண்டு . அதைவிட வேறு ஒன்றும் இப்போதைக்கு இல்லை.இலக்குடன் இறுதிவரை பயணிக்க தலைவர் போல இங்கெவரும் இல்லை. அவர் வழியில் செல்லக்கூடிய தலைவர்களும் இல்லை.எனவே அப்படி ஒரு போராட்டத்தினை நாம் எதிர்பார்க்க முடியாது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரே! உங்கள் திட்டத்தினை மக்களிடம் முன்வைத்து அவர்களின் ஆதரவுடன் (அது கிடைத்தால்) அதை செயற்படுத்துங்கள்.ஏன் பகிரங்கமாக அரசிடமும் மக்களிடமும் சர்வதேசத்திடமும் அத்திட்டத்தினை அறிக்கையாக ஆவணமாக வெளியிடுங்கள் பார்ப்போம். தீர்வை அடையும் வழி ,மாதிரி தீர்வு திட்டம் தொடர்பாக கூட்டமைப்பிடமும்  ஒரு திட்டமும் இல்லை உங்களிடமும் ஒரு திட்டமும் இல்லை. உங்கள் திட்டத்திற்கான இணைப்பு ஏதாவது இருந்தால் தெரியப்படுத்துங்கள் பார்ப்போம் . விடுதலைப்புலிகளின் இடைக்கால நிர்வாக சபைத்திட்டங்கூட இன்று பொதுவெளியில் கிடக்கிறது. உங்கட ஒருத்தருடையதும் இல்லை. சும்மா விளங்காதமாதிரி உரைகளை நிகழ்த்துவதால் பலனில்லை.

அன்ரன் பாலசிங்கம் ஒருமுறை கிளிநொச்சியில் சந்திரன் பூங்காவில் உரையாற்றிய போது சொன்னார் ” சந்திரிகா அம்மா தன்னட்ட ஒரு திட்டப்பொதி இருக்கு அதை இந்தா திறந்து காட்டுறன் பொங்கலுக்கு காட்டுறன் என்டு சொல்லிக்கொண்டிருக்க சிவசிதம்பரம் ஐயா இப்பவே காட்டுங்க என்று காலில விழாக்குறையா சுத்திக்கொண்டு திரியிறார் ” என்று .அது போல நாமும் கேட்கின்றோம் அதை நீங்க இப்பவே காட்டுங்க எண்டு. கூட்டமைப்பு தங்கள் வழியால் செல்லட்டும். நீங்கள் உங்கள் வழியால் செல்லுங்கள். யாரால் முடிகிறது என்று பார்க்கலாம். சுத்தி சுத்தி இருதரப்பும் ஒரே விடயத்தினைத்தான் கூறுகின்றனர் .இருதரப்பும் தனிநாட்டுக்கோரிக்ககையினை கைவிட்டு கனகாலமாகிவிட்டது.கைவிட்ட திகதிகள் தான் வேறு.

தேர்தலில் பங்குபற்ற முடிவுசெய்தால் அது சுயேட்சையாயிருந்தால் என்ன , கட்சியில் ஊடாக என்றால் என்ன இரண்டும் ஒன்றுதான் சர்வதேசம் அதனை ஒன்றாகத்தான் நோக்கும். அதில் சுயேட்சையாக போட்டியிடுங்கள் என்று கேட்பது ,வேறு ஒரு நுண் அரசியல். உள்நோக்கம் கொண்டது .விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்பது உங்கள் வாதம். நீங்கள் வேலை செய்தாலும் வேலைசெய்யாவிட்டாலும் கொதித்திருந்த மக்கள் அரசுக்கு எதிராகத்தான் வாக்களித்திருப்பர்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு -இது தலைவர் பிரபாகரன் அவர்களால் தலைமை தாங்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆசியுடன் உருவாக்கப்பட்டது அவர்களால் வேட்பாளர்கள் தெரியப்பட்டிருந்தனர் , அப்படியென்றால் தலைவர் அவர்களையும்(கூட்டமைப்பில் புலிகளால் நிறுத்தப்பட்டு வென்றவர்களை ) நிராகரிக்கிறார் , கேவலப்படுத்துகின்றார் என்று அர்த்தமா ? தமிழர் விடுதலைக்கூட்டணி உதய சூரியன் சின்னத்தில் போட்டிட்ட ஒரு கட்சி இரண்டையும் விளங்கிக்கொள்ளாமல் சிலர் இளைவர்களை எப்போதோ வெளிவந்த வெட்டி எடுக்கப்பட்ட காணொளி மூலம் குழப்ப முயற்சிக்கின்றனர். வீட்டுக்கும் சூரியனுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களல்ல நம்மக்கள். தலைவரால் வெளியிடப்பட்ட இக்கருத்து வெளிவந்த காலப்பகுதி வேறு சந்தர்ப்பங்களும் வேறு. புரிந்துகொள்ளுங்கள்.

இலங்கையின் அரசியலமைப்பில் தமிழர்களுக்கு எந்த ஒரு இடத்திலும் தீர்வு இல்லை இது மாகாணசபையில் மட்டும் தான் இல்லை என்று மட்டும் கூறவேண்டாம்.முடிந்தால் அடுத்த பாராளுமன்றதேர்தலையும் தொடர்ந்து புறக்கணியுங்கள். புறக்கணிப்பு சரிவராது என்பதே என் நிலைப்பாடு.

இன்னும் இங்கு வடமாகாணசபை ஊடாக அதிசயம் ஏதும் நடைபெறும் என்று மக்கள் நம்புவதில் தப்பேதும் இல்லை! இன்று பத்திரிகை வாசித்த பின்னும் தீர்ப்புக்கள் மாற்றப்படலாம் என்று கூறும் பெரியவர்கள் நிறையப்பேர் உள்ளனர். எமது மக்கள் விக்கிரமாதித்தன்கள் தான்!

வெண்ணை திரண்டுவர தாழியை உடைத்துவிடாதீர்

Posted by Thava செவ்வாய், 24 செப்டம்பர், 2013 0 comments

அட இணையத்தளங்களில் கட்டுரை எழுதுறன் என்று காழ்ப்புணர்ச்சிகளை கக்குகின்றவர்கள் , வெளியில் தனிநாட்டு ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொண்டு தங்களது வெளிநாட்டு உள்நாட்டு இருப்பை காத்துக்கொள்ள பாடுபடுபவர்கள், விக்கி கல்லறை கட்டுறன் என்று கருத்து சொல்லிப்போட்டார் என பொய்ச்செய்தி பரப்புறவங்கள் , அவர் இவற்ற ஆள் அவா அவங்கட ஆள் என்று விக்கி , அனந்தி மற்றும் வேட்பாளர் பற்றி அவதூறு பரப்புறவங்கள் எல்லாரும் கொஞ்ச நாளைக்கு பொத்திக்கொண்டு இருந்தா நமக்கு ஏதாவது நல்லது நடக்கும்.

இப்பவே விமல் வீரவன்ச சவால் விடத்தொடங்கிவட்டார். வெண்ணை திரண்டுவர தாழியை உடைத்துவிடாதீர் உறவுகளே!

இன்னும் பதவியே அவங்கள் ஏற்கவில்லை அதுக்குள்ள ஆயிரம் புரளிகளும் விமர்சனங்களும் விடுறாங்கள். விக்கி பேட்டி கொடுக்குறத்துக்கு முதலும் கருத்து தெரிவிக்கிறத்துக்கும் ஏன் தும்முறத்துக்கும் முதல் உங்களைதான் கேட்கவேணும்போல! சுயாதீனமா அந்தாளை செயற்பட விடுங்க.உங்கட இணையத்தளங்களில் நீங்க மசாலா செய்திகள் போட்டு உழைக்கிறது காணாதா ஏன் எமது மக்களின் எதிர்கால இருப்பை பாழாக்குறீங்க.

மக்கள் என்ன ஆணை கொடுத்தவர்கள் என்று மக்களுக்கு தெரியும். வேட்பாளர்களு்க்கும் தெரியும் இதை மீண்டும் மக்களுக்கு நீங்கள் சொல்லிக்காட்டவேண்டிய அவசியமில்லை.உங்கட ஆய்வுகளை நிறுத்திவிட்டு வேறு ஏதாவது கதையுங்க. FB திறந்தா உங்கட குற்றச்சாட்டுக்களாலயும் கூட்டமைப்பு பற்றிய விமர்சனங்களினாலும் நிரம்பி வழியுது.எங்களிடமும் விமர்சனங்கள் உள்ளது . கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும். அதிலயும் மக்கள் கொதிப்புடன் உள்ளனர் என்று வேறு செய்தி போடுகினம். இங்க தாயகத்தில் மக்கள் வெற்றிக்களிப்பில் உள்ளனர் . அடுத்த கட்ட நகர்வுக்காக ஆறுதலாக அமைதியா உள்ளர் . சில வாக்காளர்கள் இதற்காக கிராமங்களில் அடிவாங்கியும் உள்ளனர். நீங்க ஒருத்தரும் ஆணிய புடுங்க வேணாம்...

அரசியலில் கதைக்க ஆயிரம் இருக்கு!அதை செய்யுங்க! வேணும் என்றால் எமது வெற்றியை கொண்டாடுங்கள் உலகமெங்கும் எடுத்துச்சொல்லுங்கள்! பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களாலால ஏதாவது புதிய வடக்கு அரசின் ஊடாக என்ன செய்யலாம் என சிந்தியுங்கள்.அடுத்த நகர்வுகள் குறித்து சாத்தியமான முன்மொழிவுகளை முன்வையுங்கள்.

வெற்றிக்கு உழைத்துவிட்டு அடுத்த நகர்வுகளுக்காக இருக்கும் உண்மையான அமைதியான உணர்வாளர்கள் நிறைய பேர் உலகமெங்கும் உள்ளர் உள்ளனர் அவர்களை இப்பதிவு குறிக்கவில்லை! பொறுத்தருளவும்.

நடந்து முடிந்த வடமாகாணசபை தேர்தலில் வரலாற்று வெற்றிக்காக கிராமங்கள் தோறும் மிகவும் அர்பணிப்புடன் தொழிற்பட்டு வாக்களிப்பு வேகத்தினை கூட்டியும் விழிப்புணர்வினையும் ஏற்படு்த்திய இளைஞர்களுக்கு இந்நாளில் நன்றிகூறவேண்டும்.தள்ளாத வயதிலும் வாக்களித்த பெரியவர்களின் விருப்பையும் மதிக்கவேண்டும்.

இளைஞர்களின் பங்கின்றி எதுவும் இல்லை என்பதை இது எடுத்துகாட்டியிருந்தது.அதற்காக அவர்கள் எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள் நிறைய.

எப்படியிருப்பினும் வடக்கு தேர்தல் நடைபெற பல தரப்புக்கள் உதவி செய்திருக்கையில் வெற்றியை தீர்மானித்தது நமது வடமாகாணத்தில் வாக்களித்த மக்களே! வாக்குரிமையினால் கிடைத்த வெற்றியான அதில் எவரும் உரிமை கோர முடியாது! இறுதி பாதைக்கான கொள்கை மாறியிருப்பின் அல்லது மக்களின் கோரிக்கைக்கு மாறானதாக இருந்திருப்பின் இந்த ஆணையினை மக்கள் வழங்கியிருக்கமாட்டார்கள்! தேர்தல் விஞ்ஞாபனம் என்ன சொன்னதோ அந்த ஆணையுடன் வேறு நீங்கள் விரும்பும் ஆணைகளை இணைத்து அடுத்த கட்ட அரசியல் நகர்வினை யாரும் குழப்பிவிடவேண்டாம்!

எதனையும் நேரடியாக அடைந்துவிடமுடியாது சில நகர்வுகளின் ஊடாக படிபபடியாகவே பெறமுடியும்.

எமது மக்கள் தற்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை ஒரு பதில் சொல்ல வேண்டிய அமைப்பாக மாற்றிவிட்டிக்கின்றார்கள். விக்கினேஸ்வரனின் கையில் முக்கிய பொறுப்பினை ஒப்படைத்திருக்கிறார்கள். ஐயாவின் இலக்கம் என்ன என்று கேட்டு கேட்டு வாக்கு போட்டதை நான் நேரில் அவதானித்தேன்.

ஒரு இனத்தின் தலைவிதியை அவ்வினத்தின் ஒருதலைமுறை மட்டும் நிர்ணயித்து விடமுடியாது. வயது வந்தவர்களை முற்றாக ஒதுக்கிவிடவும் முடியாது என்பதையும் இத்தேர்தலின் ஆணை எமக்கு எடுத்தியம்புகின்றது.அதை இளைஞர்கள் உணர்ந்துவிட்டார்கள் என்றே தோன்றுகின்றது.எம்மை நாம் சுயமீளாய்வு செய்யவும் வேண்டிய தேவையினை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த அடுத்தகட்ட அரசியல் நகர்வுக்கு எம்மை கொண்டுவந்து விட்ட பெருமை நிச்சயமாக நாங்கள் நேசித்த அந்த தியாகிகளையே சாரும்.அதற்கான நாம் கொடுத்த விலை கணிப்பிடமுடியாதது. வெண்ணை திரண்டு வருகையில் யாரும் தாழியை உடைக்க மாட்டார்கள் என நம்புவோம்.

என்னைப்பொறுத்தரை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எடுத்தார் கைப்பிள்ளையாக இருக்கமாட்டார் என நம்புகின்றேன். அவருடைய சமீபத்தைய கூற்றுக்கள் செயற்பாடுகள் அதனையே எடுத்துக்காட்டுகின்றன.இறுதியாக கூறியிருந்தார் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளவேண்டும் என்று. அதனையும் கூட எம் மக்கள் ஏற்றிக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.காலம்காலமாக புறக்கணிப்புக்களின் ஊடாக நாம் பெற்ற உரிமைகளைவிட இழந்த உரிமைகள் ,நன்மைகள் கூட.

அரசும் அதனோடு இணைந்து இயங்கும் அரசியல்வாதிகளும் தமது நிலைப்பாட்டையும் செயற்பாடுகளையும் மீள்பரிசீலணை செய்யவேண்டிய கால கட்டத்தில் இருந்துகொண்டிருக்கின்றனர்.அவர்கள் தமது சலுகை மற்றும் அபிவிருத்தி அரசியலின் பதிப்பை மேம்படுத்தி அடுத்த தீர்வு அரசியலுக்கான புதிய பதிப்பினை வெளியிடவேண்டியதன் தேவையினை இது உணர்த்தியிருக்கிறது.சிந்திப்பார்களா? அரசு மட்டுல்ல நம்மவர்களும்! இது காலத்தின் தேவை! இவ்வுலகில் மாற்றம் ஒன்றே மாறாதது! -தவா

வெல்லப்போவது யார்

Posted by Thava சனி, 14 செப்டம்பர், 2013 0 comments

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இன்னும் சில நாட்களில் அதாவது எதிர்வரும் 21 ம் திகதி நடைபெறவுள்ள வடமாகாணசபைத்தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற கேள்வி பலரால் கேட்கப்படுகிறது. வடக்கு மகாணத்தில் உள்ளவர்களை விட அதற்கு வெளியில் உள்ளவர்களாலேயே இந்த வினா பெரிதும் எழுப்பப்படுகின்றது.

வடக்குமாகாணத்தினைபொறுத்தவரை அவதானிக்கப்பட்ட மக்கள் அலைகள் மற்றும் கருத்துக்கணிப்புக்களின் பிரகாரம் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பெரு வெற்றி பெறும் என்பது உறுதியாகி வருகின்றது. வெளியில் உள்ளவர்களுக்கு இச்செய்தி 22ம் திகதிக்கு பின்னர்தான் உறுதிசெய்யக்கூடியதாக உள்ளது எனினும் இங்குள்ளவர்களுக்கு அது தெரிந்த முடிவாயிருக்கின்றது.

அரசதரப்பு வேட்பாளர்கள் அமைச்சர்கள் பலர் இதனை தமது ஆதரவாளர்களிடத்திலும் ஏன் சில கூட்டங்களிலும் தாமே கூறிவருகின்றனர். சனாதிபதி மகிந்த இராஜபக்ச கூட ,அவர்கள் வெற்றிபெற்றாலும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்ற முடியாது என்ற கருத்து தெரிவித்திருப்பதன் மூலம் இதனை ஒத்துக்கொள்கின்றார். அவற்றை எல்லாம் தாண்டி அரசு அமைச்சர் நிமால் சிறிபால்டி சில்வா  கூட்டமைப்பினரின் விஞ்ஞாபனத்திற்கு தம்மிடம் நல்ல மருந்துகள் இருப்பதாகவும் கூட்டமைப்பினரால் அதை நிறைவேற்ற முடியாதென்றும் கூறியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக்கட்சியும் அதன் தலைவர் பங்குபற்றியிருந்த கூட்டத்தில் விக்கினேஸ்வரன் தான் முதலமைச்சர் என் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சில வெளிப்படை உண்மைகளை தேர்தல் வைத்துத்தான் தெரியவேண்டுமென்பதில்லை .மக்கள் எளிதில் பழையதை மறக்கத்தயாரில்லை என்பதே யதார்த்தம் என நமது சுற்றுவட்டாரத்தில் சில வீட்டுக்கட்சி ஆதரவாளர்கள் கூறிக்கொள்கின்றனர்.

இந்த தேர்தலை பொறுத்தவரை  இங்குள்ள வாக்காளர்களில் கணிசமானவர்கள் இம்முறை தான் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தினை முதற் தடவையாக பயன்படுத்த உள்ளனர். பலர் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தேர்தல்களை புறக்கணித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இடம்பெயர்வின் காரணமாக வாக்களிப்பு நிலையங்கள் அவர்களது சொந்த இடங்களில் இருந்த நிலை மாறி தற்போது அனைவரும் தமது வாக்காளர் இடாப்பினை திருத்தி சரியான தொகுதிகளை மாற்றியிருக்கின்றனர்.அதோடு வடக்கு மாகாணசபை என்பதை பல வாக்காளார்கள் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கின்றார்கள் அதை புதிய ஒன்றாகவும் நோக்குகின்றனர். தீர்வுக்கான ஆரம்பமாகவும் நோக்குகின்றனர்.

பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நடைபெற்ற தேர்தல்களில் அரச தரப்புக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினருக்கும் மாறிமாறி அவர்கள் கேட்ட ஆணைகளுக்கு பதில் வழங்கி தமது நிலையினை தெரிவித்து வந்திருந்தனர்.அதன் போது  எதிலும் கணிசமான அதிகாரங்களுடன் ஆட்சியை அமைக்கக்கூடிய ஒரு அரசியல் கட்டமைப்புக்குரிய தேர்தல்களாக இவை அமைந்திருக்கவில்லை. சனாதிபதித்தேர்தலாக இருந்தால் என்ன பாராளுமன்ற தேர்தல்களாக இருந்தால் என்ன உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலாக இருந்தால் என்ன அவற்றில் இடங்களை கைப்பற்றுவதன் மூலம் சாதிக்கக்கூடிய ஆட்சி எதனையும் ஏற்படுத்திவிடமுடியாது  என்பதே அதற்கு காரணம். கடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் பலர் ஈடுபாடே காட்டியிருக்கவில்லை அவ்வளவுக்கு அது அரசியல் முக்கியத்துவம் கொண்டிருக்கவில்லை.

இருப்பினும் நடைபெற்ற கிழக்கு மாகாண தேர்தலில் கூட்டமைப்பு வெற்றியை நழுவ விட்டிருந்ததை மறப்பதற்கில்லை.தமிழ்மக்கள் பலரால் அதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை அத்தேர்தலில் முஸ்லிம்களும் முக்கிய தீர்மானிக்கும் சக்தியாக இருந்தமையும் கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவுகளும் அவர்களால் கிழக்கு மாகாணசபையினை கைப்பற்றமுடியாமல் போனமைக்கு முக்கிய காரணங்களாக அமைந்திருந்தது. இருப்பினும் நடைபெற உள்ள வடமாகாணசபைத் தேர்தலானது முற்றிலும் வேறுபட்டதாக காணப்படுகின்றது. சர்வதேசத்தின் கவனம் கூட இந்த தேர்தலில் மிகவும் இறுக்கமாக பதிந்திருக்கின்றது.இந்தியாவின் ஆதிக்கம் நிறையவே உள்ளது. இந்நிலையில் தமிழ்த்தேசிய அரசியலின் முதுகெலும்பாக கணிக்கப்படக்கூடிய யாழ்ப்பாண அரசியல் இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையில் இன்று நேற்றல்ல அன்று தொடக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

எனவே அது சார்ந்துள்ள வடமாகாணசபை தேர்தலில் மக்கள் கூடிய அக்கறையுடன் இருப்பதில் வியப்பேதுமில்லை. இந்த தேர்தலில் கூட்டமைப்பின் வெற்றியினை உறுதிசெய்யக்கூடிய நிறைய காரணிகள் முன்னரே தென்படத் தொடங்கியிருந்தன. அதற்கு அரசாங்கமே பலவழிகளில் வழிகோலியிருந்தது. மனித உரிமை குறித்த சர்வதேச நெருக்கடி, காணி சுவீகரிப்பு ,காணாமல்போனோர் விவகாரம் இறுதிப்போரில் சரணடைந்தவர்கள் நிலை குறித்த தெளிவின்மை போன்ற காரணிகளை இங்கு குறிப்பிடலாம்.

இது தெரிந்தோ என்னவோ அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் செய்கின்ற முதலமைச்சராக தானே வருவேன் என கூறிக்கொண்டிருந்த அமைச்சர் கூட இத்தேர்தலில் தான் போட்டியிடாது ஒதுங்கி தன் கட்சியின் மற்றவர்களுக்கு வழி விட்டிருந்தார்.அது அவரது சாணக்கியம் என பலரும் பேசிக்கொள்கின்றனர். அரசாங்கத்தினைப்பொறுத்தவரை வெற்றிலைச்சின்னத்தில் போட்டியிடுகின்றவர்களில் குறிப்பிட்ட தொகையினரேனும் வெற்றி பெறவேண்டும் என்ற அவாவிலேயே தொழிற்படுகின்றது. அதற்கு அரச தலைவர் தொடங்கி அமைச்சர்கள் வரை தனது முழு வளங்களையும் எந்தவித மட்டுப்பாடுகளுமின்றி பயன்படுத்திவருகின்றனர். அவர்களைப்பொறுத்தவரை ஆட்சியைப்பிடிப்பதல்ல முக்கிய நோக்கம். தமது தரப்பிலும் மக்கள் ஆதரவு இருக்கின்றது என்பதை காட்டுவதே ஆகும்.  தற்செயலாக வெற்றிலை அணி ஆட்சியை பிடித்தால் அது அவர்கள் எதிர்பாராத ஒன்றாக இருக்கும்.

இறுதி நேரத்தில் வெற்றிலை அணியினரின் உள்வீட்டுச்சண்டைகள் கூட வெற்றிவாய்பினை குறைத்திருக்கின்றது அத்துடன் கட்சிகளுக்கிடையிலும் ஒற்றுமை இருக்கவில்லை வெற்றிலைக்குள்ளும் அழுகினது வாடினது இருக்கும் என்று கூறியதன் மூலம் அமைச்சர் அதனை சூசகமாக கூறியிருந்தார். நவநீதம்பிள்ளையின் வருகையின் பின்னரான அம்மையாரின் இறுதிப்பேச்சு கூட அரச தரப்புக்கான ஒரு பின்னடைவே.

இந்நிலையில் முதலமைச்சர் தெரிவில் கூட்டமைப்பில் வெடித்த சண்டை மற்றும் அதற்கெதிரான விமர்சனங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை.அதனையே அரசதரப்பும் அடிக்கடி ஞாபகப்படுத்தி வருகின்றது. இருப்பினும் விக்கினேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்ட உடன் எழுந்த எதிர்ப்பு அலைகள் ஊடகங்களின் பார்வைகள் மெல்ல மெல்ல மறைந்து அநேக தமிழ் ஊடகங்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வெற்றிக்கு தமது பங்கினை செய்ய தொடங்கின செய்கின்றன என்பது உண்மை.அதற்காக கூட்டமைப்பினரை அவர்கள் முற்றுமுழுதாக ஆதரிக்கின்றார்கள் என்ற முடிவுக்கும் வர முடியாது.

கூட்டமைப்பு தொடர்பில் பலர் தெளிவாக புரிந்து வைத்துக்கொண்டுள்ளனர்  வாக்களிக்க முடிவுசெய்தவர்களிடம் உள்ள ஒரே காரணம் அவர்களுக்கு வழங்குவதற்குரிய இறுதி சந்தர்ப்பம் இது என்றும் அதற்கு பிறகும் வழிக்கு வரவில்லையென்றால் சிந்திப்போம் என்பதுவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருக்கு எதிரான சரியான தெரிவு அவர்களிடம் தற்போது இல்லை என்பதும் ஆகும்.

அவர்களில் பலர் கூட்டமைப்புக்குரிய பதிலீடாக அரச தரப்பினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். கூட்டமைப்புக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருக்ககூடிய கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் , முதலில் இருந்து கூட்டமைப்பினை ஆதரித்த சிவில் சமூகமும்   கூட்டமைப்பிற்கான மாற்று சக்தி ஒன்றை உருவாக்க பின்னின்றமையும் பலரால் விமர்சனக்கண்ணோட்டத்துடன் நோக்கப்படுகின்றது. விரும்பியோ விரும்பாமலோ அந்த மாற்று அணிக்கான தகுதிகாண் பரீட்சையாகக்கூட இந்த தேர்தல் மற்றும் அதன்பின்னரான ஆட்சி அமைப்போகின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை.

தமது தலைமைக்கு ஆப்பு வைத்துவிடக்கூடாது என்பதற்காக பல முக்கிய நபர்களை புறக்கணித்து அவர்களை ஆளும் கட்சிக்கு அனுப்பிவைத்த அல்லது ஆதரவு கொடுக்கவைத்த ,விலகி நிற்க வைத்த பெருமை தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு அதனை உள்வாங்கி மாற்றுவெளியை உருவாக்கத்தவறிய பெருமை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியையும் சிவில் சமூகத்தினையும் சாரும்!

கருத்துக்கணிப்புக்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வெற்றிபெறும் என்று கூறி நிற்கின்ற போதிலும் நியாயமான நேர்த்தியான இதய சுத்தியுடனான அரச எதிர்ப்புத்தளத்தினை நமது மக்கள் கொண்டிருக்கவில்லை என்ற கவலை பலரிடத்தில் இருக்கத்தான் செய்கிறது.வீட்டுக்கு புள்ளடியிடப்போகின்றவர்களில் பலரிடம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தொடர்பான நிறைய விமர்சனங்கள் உள்ளன.இந்த மாகாணசபையால் எதுவும் சாதித்துவிடமுடியாது என்ற போதிலும் நீதியரசர் தனது சட்ட நுணுக்கங்கள் ஊடாக ஏதாவது அதிசயங்கள் செய்வாரோ என்ற எதிர்பார்பிலும் பலர் உள்ளதை அறிய முடிகிறது. அதனை கட்டியம் கூறும் வகையில் தேர்தல் விஞ்ஞாபனம் இருந்தபோதிலும் இருதரப்பு மீதும் விசாரணைவேண்டும் என்பதை வேட்பாளர்களில் ஒருவரான அனந்தி சசிதரன்  (எழிலன்) எதிர்த்து நிராகரித்திருந்ததையும் இங்கு குறிப்பிட வேண்டும். காணாமல்போனவர்களின் உறவினர் மத்தியில் அவரது குரல் ஒங்கி ஒலிப்பதையும் காணமுடிகிறது.

வேட்பாளர்களின் முரண்பாடான கருத்துக்களுக்கு மத்தியில் முதலமைச்சர் வேட்பாளரான முன்னாள் நீதியரசரான விக்கினேஸவரன் மீது புலம்பெயர் தமிழர்கள் மற்றும் இந்தியத்தமிழர்களிடம் அவரது பேட்டிகளினால் ஏற்பட்டு இருந்த வெறுப்புணர்வு மறைந்து புலிகளின் தலைவர் பிரபாகரனை மாவீரன் என்று கூறியதன் மூலம் வளர்ந்த நிலை மீண்டும் தமிழரும் சிங்களவரும் கணவன் மனைவி உறவுள்ளவர்கள் என்று சாரப்பட கூறியதன் மூலம் கேள்விக்குள்ளாகியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. விமர்சனங்களுக்கு அப்பால் வடமாகாண மக்களில் பலர் விரும்பியோ விரும்பாமலோ வீட்டுக்கு வாக்கு போடவேண்டும் என்ற நிலையில் இருப்பதை மறுக்கமுடியவில்லை

உணர்ச்சிக்கு ஆட்பட்ட சாதாரண மக்கள் எதற்கும் பதில் கூறாமல் கண்மூடித்தனமாக வீட்டுக்கு போட போகின்றார்கள் அடுத்த பக்கத்தில் நடுவு நிலமையுடன் நிற்பவர்கள் என்று தம்மை சொல்லுகின்றவர்களில் ஒருபகுதி கூட்டமைப்பினை விட வேறு தெரிவு இல்லை என்கிறார்கள். இன்னொரு தரப்பு சரி வெற்றிலைக்கே போடலாம் என்கிறது இன்னும் ஒன்று ஒன்றுமே வேண்டாம்  என்று ஒதுங்கி கொள்கிறது.

இன்றைய நிலையில் கருத்துக்கணிப்பிற்கமைவாக மக்களின் தெரிவாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பே இருக்கின்றது அடுத்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இருக்கிறது. ஆசனங்களைப்பொறுத்தவரை மொத்தம் உள்ள 36 இடங்களில் கூட்டமைப்பு 25 இடங்களை வெல்வது உறுதி என கூறலாம். ஏனைய  இடங்களில் 10 இனை அரசும் 1 இனை ஐக்கிய தேசிய கட்சியும் பெறலாம். கூட்டமைப்பில் விக்கினேஸ்வரன் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெறுவார் என்பதில் ஐயமில்லை. சுயேச்சைகள் அனைத்தும் தோல்வியை தழுவும் என்றே தெரிகிறது.சுயேட்சை வேட்பாளர்களில் பலர் வெளிநாட்டு அகதி அந்தஸ்த்தினை கோருவதற்கு முன்னேற்பாடாகவும் வாக்குகளை சிதைப்பதற்காகவுமே களமிறங்கியுள்ளனர் என்பது ஊரறிந்த விடயம்.

அரசதரப்பில் இளையவர் தரப்பில் அங்கஜன் இராமனாதனின் குரல் ஓங்கி இருப்பதாக தெரிகிறது. அது வேலைவாய்ப்பினை நோக்கி மையம்கொள்வதை அவதானிக்கமுடிகிறது. அதைவிட அரசதரப்பில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முதன்மை வேட்பாளரும்  தன்பங்கிற்கு தனது இடத்தினை உறுதிசெய்ய பெரிதும் முயன்று வருவதை காணமுடிகிறது.

குறிப்பிடக்கூடியளவு இல்லாது விடினும் ஒரளவுக்கு வேட்பாளர்கள் மக்களின் தெரிவுக்கு இருபக்கமும் இருப்பதாகவே தெரிகிறது.தேர்தல் வேட்புமனு தாக்கல்செய்தபோது இருந்த நிலையிலும் தற்போது வேட்பாளர் அறிமுகம் ஓரளவுக்கு முன்னேறியிருக்கிறது. எது எப்படியோ சின்னங்கள்தான் இங்கு முன்னிலையில் மக்களிடம் பேசப்படுகின்றது.

முற்கூட்டிய கருத்துக்கணிப்பு அலைகள் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று வெற்றி பெறுமென்று எதிர்பார்க்கின்ற போதிலும் கட்சிகளின் அமைதியான வாக்கு வங்கிகள் ஒருபுறம் காத்துக்கிடக்கின்றன. யாழ்தேவியை கிளிநொச்சிவரை அனுப்பி அரசு அபிவிருத்தியினை அறை கூவுகிறது. அரச தலைவர் வேறு களத்தில் இறங்கியிருக்கிறார். இவற்றுக்கு சளைக்காமால் மக்களை ஒருகணம் சிந்திக்க வைக்கின்ற வகையான அமைச்சர்களின் மற்றும் இராவணா சக்தி போன்ற அமைப்புக்களின் இனவாதக்கருத்துக்கள் , ஆட்கொணர்வு  மனு தொடர்பிலான நீதிமன்ற நடவடிக்கைககள் இவற்றையெல்லாம் தாண்டி தேர்தல் முடிவுகள் மூலம் வெல்லப்போவது யார் என்று சொல்லப்போவது மக்கள் தான் நான் மட்டும் அதனை தீர்மானிக்கமுடியாது.

2009 இறுதி யுத்தத்தில் பலர் கண் முன் சரணடைந்தவர்களை நாம் பொறுப்பேற்கவே இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போல அரசு நீதி மன்றில் அறிக்கை சமர்ப்பித்திருப்பது மிக மிக தவறானது. 

போட்டுட்டம் என்று சொல்லி பிரச்சனையினை முடிவுக்கு கொண்டு வந்து பொதுமன்னிப்பு கேட்டிருந்தால் கூட மக்கள் மன்னித்திருக்கக்கூடும் . பொறுப்பு வாய்ந்த , தமிழ் மக்கள் மீது அக்கறையுள்ள இதயசுத்தியுடைய அரசு மனித உரிமைகளை மதிக்கின்ற அரசாக இருந்திருப்பின்

அந்த நாட்டின் அரச தலைவர் என்ற ரீதியில் மன்னர் மேதகு மகிந்த மக்களிடம் இறுதியு்த்தத்தில் தெரிந்தோ தெரியாமலோ கொல்லப்பட்ட மக்களுக்காக பொறுப்பேற்று மன்னிப்பு கோரியிருக்கலாம் அப்படி இருந்திருப்பின் அவரின் உயர்ந்த பண்பை எடுத்துக்காட்டி சர்வதேச சமூகத்தில் நன்மதிப்பினை ஏற்படுத்தியிருக்கும்.

அதிகுறைந்தது அமைச்சர்களின் பொறுப்பற்ற பேச்சுக்களையாவது அடக்கிவைத்திருக்கவேண்டும்.அவர்கள் எமது மக்களை மட்டுமல்ல நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளையும் கொச்சைப்படுத்துகின்றனர். இது நாட்டு மக்கள் என்றவகையில் எமக்கும் அபகீர்த்தியே!

இராவணா சக்தி போன்ற இனவாத அமைப்புக்களுக்கும் சம்பிக்க ரணவக்க போன்ற அமைச்சர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து அவர்கள் கூறியதற்காக நடவடிக்கை எடுக்கும் அரசு , அவர்கள் சார்பாக கருத்துக்களை தெரிவிக்கும் அரசுதலைவர் என இலங்கை நாட்டின் தேசிய நலன் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.

பொறுப்புக்கூறல் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் இனங்களுக்கிடையில் பாரபட்சம் போன்ற விடயங்களில் நமது நாடு இவ்வாறு நடந்து கொள்வது அந்த நாட்டின் வரிகளை செலுத்தும் குடிமக்கள் என்ற ரீதியில் எமக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதில் வியப்பில்லை .இதை அரசு புரிந்து கொள்ளுமா?

இந்த வகையிலான நாட்டின் தேசிய நலன் பற்றி கவனம் செலுத்த வழியற்ற தமது அன்றாட வாழ்க்கைக்கு அடுத்தவேளை உணவுக்கு தீர்வு தேடிக்கொண்டிருக்கும் ஒருதொகுதி மக்களுக்கு அரசின் உதவிகள் அபிவிருத்திகள் நிச்சயம் தேனாமிர்தமாக இருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை.இது ஒருபுறமிருக்க

எல்லாவற்றுக்கும் நீங்கள் தான் காரணம் நாங்கள் தான் காரணம் என்று அரசு தமது பொறுப்புக்களை தட்டிக்கழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரச்சனை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டு உடனடியாக அவற்றுக்கு முடிவுகட்டி அபிவிருத்திப்பாதையில் சென்றால் நிச்சயம் இலங்கை ஆசியாவின் ஆச்சரியமாகலாம் பொருளாதார வளர்ச்சி பெறலாம்.இல்லையெனில் அது உலக அதிசயமாகவே இருக்கும் . எந்த விடயத்தில் உலக அதிசயம் என்பது தான் கேள்விக்குறி. மன்னர் மனம் மாறுவாரா? மன்னிப்பு கேட்பாரா?

-யாழ்ப்பாணம் வரவுள்ள மன்னருக்கு ஒரு வாக்காளரின் பகிரங்க மடல்


12-7-2013
வடக்கின் முதலமைச்சர் யாரவது வரட்டும் அவர்கள் தமிழினத்தின் தனித்தலைவராகிவிட முடியாது. கூட்டமைப்பின் பேசப்படும் 2 வேட்பாளர்களும் மக்கள் மத்தியில் தமது செல்வாக்கினை நிரூபிக்கவேண்டியும் உள்ளதை மறக்கக்கூடாது. முதலே அறிவிக்காமல் தலைமைவேட்பாளராக ஒருவரை நிறுத்தி பின்னர் மக்கள் விருப்ப தெரிவின் அப்படையில் முதலமைச்சரை தீர்மானிக்கலாம் என்பதே இப்போது எடுக்கக்கூடிய இராஜதந்திரம் இல்லையெனில் வாக்குகள் சிதறும்!

எனக்கு எப்போதும் சம்பந்தனின் தெரிவுகளில் சந்தேகம் இருக்கிறது. சுமந்திரனை சம்பந்தன்தான் கொண்டுவந்தவர் என்பதை மறக்கமுடியாது. அவரை மக்கள் தெரிவு செய்யவில்லை .சனநாயகம் உரிமை என்று காது கிழிய கதறும் கட்சித்தலைமை மக்களின் தெரிவையே மதிக்கவேண்டும். தேர்தலில் பெற்ற விருப்புவாக்குகளின் அடிப்படையில் முதலமைச்சர் தெரிவு இடம்பெறவேண்டும். முதலமைச்சரை யாரும் எமக்கு திணிக்க முடியாது.எனது தனிப்பட்ட விருப்பை இந்த விடயத்தில் முன் வைத்து வாதாட விரும்பவில்லை.

நமது நாட்டில் அரசியலுக்கு வாரதே சாக்கடைக்கு வார மாதிரி தான் இதில் நல்லது யார் கெட்டது யார் என்று முதலே கூறுவது கடினம் பதவி கொடுத்து பார்தால் தான் சுயரூபம் வெளிப்படும் என்பதையும் கவனத்தில்கொள்ளவேண்டும்.முடிவடுக்கும் குழுவின் விருப்பு மக்களின் விருப்புக்கு விரோதமானதாக இருக்குமெனில் அதுவும் வேட்பாளருக்கான ஒரு உரிமை மறுப்பே!

தேர்தல் அறிவித்தபடியால் இனி மகாணசபை அரசமைப்பு மாற்றங்கள் நடைபெறாது நடைபெற்றாலும் அவை இம்முறை அமுல்படுத்தப்பட மாட்டாது. இந்த முறைமட்டும் தான் இந்த மகாணசபை முறைகூட இருக்கும் அடுத்தமுறை இதற்குபதில் இன்னும் வேலைக்குதவாத கிராமசபைகள் தான் இருக்கப்பபோகி்ன்றது. நம்மட ஆக்கள் எவனும் நேர்மையானவன் இல்லை. எல்லாம் குறுகிய அரசியல் இலாபம் நோக்கியே நடைபெறுகிறது. இதில் மாவை வந்தென்ன விக்கினேஸ்வரன் வந்தென்ன டக்ளஸ் வந்தென்ன தாயா மாஸ்டர் வந்தென்ன ஒன்றும் ஆகப்போவதில்லை எல்லாம் மன்னர் மனம் வைச்சால் தான் நடக்கும் ! ஆகவேண்டியதை பார்ப்பம்!

நான் விவாததத்தினை விரிவுபடுத்தவிரும்பவில்லை. ஒவ்வொரு பிரஜைக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கலாம் அதனுடன் ஓரளவுக்கேனும் ஒத்துப்போகும் கட்சிபற்றியும் அதன் தலைவர்கள் பற்றியும் விமர்சிக்கும் உரிமை கொண்டிருப்பார்கள். அவற்றின் நலன் பற்றி கதைப்பார்கள் அது தான் ஜனநாயகம். எல்லோரும் அரசு கட்சிபக்கமே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கமுடியாது தானே? அது சர்வாதிகாரம்.அதேவேளை மாற்றுக்கருத்துடையவர்களை நான் ஒருபோதும் துராகிகள் என்றும் அழைப்பதில்லை. என்னைப்பொறுத்தவரை அரசியல்வாதிகள் எவரும் புனிதர்கள் அல்லர். மத்தியில் மன்னர் நினைப்பது தான் நடைபெறும். அதுதான் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் சொல்லும் உண்மை. எவரும் குறிப்பிடத்தக்கதளவு செய்யமுடியாத ஒன்றை அல்லது இயல்பாக நாட்டு மக்களுக்கு கிடைக்காத ஒன்றை பெற்று தந்திருக்கவில்லை. அவர் என்ன செய்தார் இவர் என்ன செய்தார் என்பதல்ல முக்கியம் மன்னர் என்ன தருவாரோ என்பதுதான் எம் முன் உள்ள கேள்வி. தேர்தலில் மக்கள் தீர்ப்பு எழுதுவார்கள் பார்ப்போம். இந்த மக்களில் நானும் ஒருவன் அவ்வளவுதான்

சுமந்திரன் யாரெண்டு சனத்துக்கு தெரியாது பாருங்கோ! அது சரி பேப்பர்கள் தொடங்குறது சரி வாங்கிறதுக்கு ஆட்கள் வேணுமே! இப்பதான் எல்லாரின்ர வீட்டிலையும் இணையம் இருக்கு!

15-7-2013
தமிழ்த்தேசிய அரசியலில் கிட்லராக வர்ணிக்கப்படக்கூடியவர் சம்பந்தர் என்றால் அது மிகையில்லை.வேட்பாளர்களாக நியமிக்கப்படவேண்டும் என பகல் கனவு கண்டுகொண்டிருக்கும் ஏனையவர்கள் விரைந்து சம்பந்தனை சந்திப்பதே மேல். உங்கள் எம்பிமார்களால் முடியாது. மேலும் ஆங்கிலம் சட்டம் படித்திருந்தால் கை கொடுக்கும். கொழும்பில் படித்திருத்தல் வீடு வைத்திருத்தல் திருகோணமலை பூர்வீகம் எல்லாம் உதவும். நீதிபதிஉடன் நின்று பேச ஒரு தராதரம் வேன்ண்டாமா?. எது எப்படியோ கடைசியில் வாக்கு போடுவது என்னவோ மக்கள் தான்

17-7-2013
கிளிநொச்சியில் சாதாரண ஒரு தமிழ் பெண் சிங்கள இராணுவ அதிகாரியை விரும்பி திருமணம் செய்தால் துரோகி. கொழும்பில் நம்ம (முதல் அமைச்சர் )வேட்பாளர் மகன் மார் சிங்களப்பெண்களை திருமணம் செய்தால் புத்தி ஜீவிகள்! என்னங்கடா உங்க நியாயம்! சட்டம் எல்லாருக்கும் ஒன்றுதான் நீங்க செய்தது நல்லிணக்கம் புத்தி ஜீவித்தனம் என்றால் அவள்செய்ததும் நல்லிணக்கமே!

சரி வேட்பாளர் தெரிவிலாவது ஒழுங்கா ஒரேநாளில முடிவெடுப்பீங்களா அல்லது இவன் அவற்ற ஆள் இவற்ற ஆள் துரோகி புத்திஜீவி என்று வைச்சு இழுத்து கடைசயில காதில பூ சுத்துவீங்களா? ஒன்று மட்டும் உண்மை யாழ்ப்பாணத்திலேயே நிறைய மக்கள் மனமறிந்த (இவர்கள் விரும்பும் ?)ஆங்கிலப்புலமையுள்ள சட்ட அறிவுள்ள நிறையபேர் இருக்கினம் இவையள் முன்னாள் அதிகாரிகள் பேராசான்கள் ஆனால் அவர்களை எவரும் (உத்தமரை கேட்டது போல ) போய் கேட்கமாட்டார்கள் அவர்களாக விண்ணப்பித்தால் பதவியாசை என்பார்கள் வெறுத்துப்போய் ஒரு உத்வேகத்தில் சுயேட்சையாகவோ வேறுகட்சிகளிலோ கேட்டால் துராகி என்பார்கள்.இதுதான் இன்றைய கூத்தமைப்பு அரசியல்.

ஒன்றுமட்டும் இவர்கள் உணரவேண்டும் இதையெல்லாம் பாத்துக்கொண்டிருக்கும் மக்களாகிய நமக்கு மண்டையில் பகுத்தறியக்கூடிய மூளை இருக்கிறது. நேரம் வரும்போது பதில் கூறுவார்கள்.

”புத்திஜீவி ” என்ற சொல்லை யாருக்கும் புனைபெயராக கூறமுடியாது. பகுத்தறிவுள்ள அனைவரும் புத்திஜீவிதான். இதுக்குள் ஆயர் வேறு உத்தமர் அவர் என்று அறிக்கை விட்டிருக்கிறார் அதுதான் இந்த கடுப்பு. வேட்பாளர் தெரிஞ்சது சரியெண்டால் அதோட விடடுவிடவேண்டியது தானே ஏன் அதிக பிரசங்கித்தனம் மற்றவன் எல்லாம் அயோக்கியர்களா?. ”ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சர்க்கரை ” இது தான் உண்மையில் நடந்தது.

ஆயர் தமிழ்த்தேசிய அரசியலை தீர்மானிக்க முயல்வது அவ்வளவு சரியாக படவில்லை. ஆயர் அரசியல் கதைக்கலாம் என்றார் பிக்கு அரசியல் கதைப்பதிலும் தவறில்லைதானே! ஆக மொத்தத்தில் நடக்கின்ற கூத்துக்களை பார்த்தால் குருக்கள் XX விட்டால் குற்றமில்லை என்ற வாக்கியமே நினைவுக்கு வருகிறது.

ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். நான் எந்த ஒரு இடத்திலும் விக்கினேஸ்வரன் பொருத்தமற்றவர் என கூறியிருக்கவில்லை. அவரும் பொருத்தமான ஒருவர் தான் என்பதை ஆரம்பம் முதல் தெரிவித்திருக்கின்றேன். ஆனால் அவரை தெரிவுசெய்ய கூறிய காரணங்களும் தெரிவு செய்த பின்னரான மன்னார் ஆயர் போன்றவர்களின் அறிக்கையும் தான் கடுப்பேத்துகின்றன. விக்கினேஸ்வரன் மற்றும் மாவை கூட அமைதியாக இருக்க இவர்கள் ஆர்ப்பரிப்பதும் அவரை விட்டால் எவரும் இல்லை என்று கூற விளைவதும் நியாயமானதல்ல. இங்கு யாழ்பாணத்தில் ஒரு சிறந்த நிர்வாகியினை நிறுத்தியிருக்க முடியும் இது மாவையாக இருக்க வேண்டியதும் இல்லை. இங்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் வந்து போகின்றனர் அவர்கள் மொழிப்பிரச்சனையால் அவதிப்பட்டு செல்லவில்லை.

சாதரணமக்களுக்கு ஒருசட்டம் அரசியல்வாதிகள் என்று தம்மைக்கூறிக்கொள்வோருக்கு ஒருசட்டம் இருக்கமுடியாது. கொழும்பில் இருந்துகொண்டுதான் ஆளவேண்டும் என்ற நிலை மாற்றப்படவேண்டும்.நம்மை நாமே தாயகத்தில் ஆளவேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு போராட்டமும் நடபெற்றது.

இங்குள்ளவர்களை அவர்கள் அடையாளப்படுத்தப்பவில்லை அல்லது அரச ஆதரவு முத்திரை குத்தப்பட்டு விட்டிருக்கின்றனர் ஆனால் கூத்தமைப்பு உறுப்பினர்கள் அரசுடன் கொஞ்சி குலாவுகின்றனர். தமது குடும்பங்களை கொழும்பிலும் வெளிநாட்டிலும் வைத்திருக்கின்றனர்.இந்நிலையில் இங்குள்ளவர்களை அவர்கள் சாதாரணமக்களாயினும் அதிகாரிகளாயினும் அரசியல்வாதிகளாயினும் சோரம்போக்கூடியவர்கள் என்று அடையாளப்படுத்துவதில் முன்னிற்கும் ஊடகங்களும் கூத்தமைப்பின் தலைமை அடிவடிருடிகளும் தமிழ்மக்களின் எதிர்காலம் அது இது என்று கூறி ஒரு மாயையினுள் மக்களை வைத்திருக்க விரும்புகின்றனர்.ஊருகடி உபதேசம் உனக்கல்ல என்பதுதான் அவர்களது அரசியல்.

பகுத்தறிவுடன்நோக்கினால் கூத்தமைப்பு வெறும் சூனியம்தான் இதயசுத்தியுடன் நல்லதொரு விஞாபனத்துடன் நல்ல கட்டமைப்புடன் இறங்கினால் சுயேட்சையாகவும் போட்டியிட்டு வெல்லமுடியும.அரசு சார்பு கட்சியாகக்கூட இருக்கவேண்டிய அவசியமில்லை . அரசு கட்சிகளும் ஏதோ செய்யமுடியத அல்லது ஒரு நாட்டுமக்களுக்கு அரசு வழங்காத ஒன்றை அபிவிருத்தி என்ற பெயரில் வழங்கியதாக பிரச்சாரப்படுத்துகின்றனர்.

கூட்டமைப்பு மாயை நீண்டநாட்களுக்கு செல்லாது.கூட்டமைப்பும் எல்லாவற்றையும் கைவிட்டு 13ம் திருத்தத்தின் கீழ்தான் மகாணசபைத்தேர்தலில்போட்டியிடுகின்றது என்பதை நினைவில்கொள்ளவேண்டும். இம்முறை முதல்தரம் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது பலர் அமைதியாக உள்ளனர். சகல தேர்தல்களிலும் சந்தர்ப்பங்கள் வழங்கிவிட்டாயிற்று. இது ஒன்றுதான் பாக்கி அதையும் ஆடிப்பார்க்கட்டும். அவர்கள் எமக்கு ஒரு தீர்வையும் பெற்றுத்தரமாட்டார்கள்.

இதுதான் கூட்டமைப்பினரின் அரசியல் என்றால் இனிவரும்காலங்களில் நிறைய கட்சிகள் உதிக்கும் பலர் போட்டியிடுவர் என்பதில் ஐயமில்லை.இதை எவரும் குறை கூற முடியாது.அரசியல் கொழும்பில் குளிரூட்டிய அறைகளில் இருந்துதான் செய்யவேண்டும் என்பதில்லை.அதேபோல முகப்புத்தக போராளிகளினால் மட்டும் நிர்ணயிக்கப்படுவதுமில்லை. ஆன்மீகவாதிகளின் அறிவுறுத்தல்களினால்மட்டும் வழிநடாத்தப்படுவதுமில்லை. இது சகல மக்களின் பங்களிப்புடன் சம்பந்தப்பட்டது.
காலம் பதில்சொல்லும் .வழமைபோல மக்களில் ஒருவனாக காத்திருக்கின்றேன் தேர்தலில் வாக்களிக்க!


உங்கள் வாதத்தினை முற்றாக மறுதலிக்கின்றேன். உங்கள் புத்திஜீவித்தனத்தினை குப்பையில் போடுங்கள் நீங்களும் நீங்கள் முன்வைக்கும் ஒருசிலரும் கொழும்பில் உள்ளவர்களும் மட்டும் தான் அரசியல் மேதாவிகள் என்ற கருத்து ஏற்றுக்கொள்ளமுடியாதது.

சுத்திச்சுத்தி பல்கலைக்கழகத்திற்குள் மட்டும் ஆட்கள்தேடுவதும் அதனை விமர்சிப்பதும் உங்கள் வழமையாக உள்ளது. ஆளைக்காட்டு என்று கேட்கும் நீங்கள் அந்த ஆளை நியமிக்கும் திறன் உடையவராயிருக்கவேண்டும்.உங்களுக்கு நான் ஆட்கள் பிடித்தத்தரவேண்டும் என்பதல்ல. அது எனது வேலையும் இல்லை. தயவுசெய்து நீதிபதியை நியமித்ததற்கு நீங்கள் உரிமை கோர வேண்டாம் அதில் பல அந்தரங்க விடயங்கள் உள்ளன அது சம்பந்தனுக்கு மட்டுமே வெளிசச்சம். உங்கள் உப்புச்சப்பற்ற குழந்தைப்பிள்ளைத்தனமான ஊகங்களுடனான கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டிய அவசியமில்லை.

தமிழ்த்தேசியம் தொடர்பில் உங்களைவிடவும் மேலான அக்கறை எனக்கு உள்ளது.அதை உங்களிடம் நிரூபிக்கவேண்டியதில்லை. எனது வாதமே வேறு நீதிபதியின் வரவை எதிர்ப்பதல்ல அதை கொண்டாடும் விதம் தான் வலிக்கிறது. பிரதீப் கூறியவாறு தற்போது நாம் இக்கட்டான சூழலிலில் இணைந்து போகின்றோம் ஆனால் இப்படி தொடர்ந்து கபடி ஆடலாம் என்று கூட்டமைப்பு எண்ணுமானால் அது முட்டாள்தனமானதாக இருக்கும் மக்கள் முட்டாள்களல்ல.காலம் பதில்சொல்லும்.கொள்கை இல்லாதவர்களுடன் ஊகங்களின் அடிப்படையில் விவாதிக்க நான் தயாரில்லை

தமிழ்த்தேசியம் என்று கூறி கூட்டமைப்பு தலைவர்களால் எடுக்கப்படும் தான்தோன்றித்தனமான முடிவுகள் ஒவ்வொன்றின்போதும் ”தமிழ்மக்களின் எதிர்கால நலன் கருதி” அநுசரித்துச்செல்வோம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அவர்கள் கூறும் தமிழ்மக்களின் எதிர்கால நலன் அங்கு ஒருபோதும் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கவில்லை. அம்மக்களின் கருத்துக்களை மதிக்காத எதிர்கால நலன் கருதிய செயற்பாட்டுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கவேண்டும் என்று கேட்பது முட்டாள் தனமானது. எதற்கெடுத்தாலும் தலைவர் செய்தார் சொன்னார் என்று அந்த ”மயிர் நீர்ப்பின் உயிர் வாழாக்கவரிமான்” மனிதரை உங்கள் உப்புச்சப்பற்ற தேசியத்துக்கு பக்கப்பாட்டுக்கு இழுக்காதீர்கள்.

அறிவியல் பற்றி எனக்கு பாடம் நடாத்தவேண்டாம்.புத்திஜீவித்தனம் என்று இல்லாத ஒன்றை வைத்து சிலர் பிழைப்பு நடத்தமுயல்கிறார்கள். தமக்கு விரும்பாத செயலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டவேளைகளில் செய்யக்கூடாது என்பதற்காக பலர் தமது பதவிகளை எறிந்துவிட்டு வந்த சம்பவங்கள் நிறைய உண்டு.உதாரணத்துக்கு இந்த பயங்கரவாததடைச்சட்டத்திற்ன் மூலம் தமிழர்களை உள்ளே தள்ளுவதற்கு கருவியாக இருக்கும்போது இந்த தமிழ் தேசிய வாதி என்னசெய்தார் ? இது ஒரு உதாரணம் உண்மையில் அவரின் திறமையினையோ தெரிவையோ நான் இதன்மூலம் கேள்விக்குட்படுத்த விரும்பவில்லை.

பிரதேசவாதம் நான் பேசவில்லை. போராட்டமே பிரதேசங்களையும் இனத்தினையும் மொழியினையும் மையமாககொண்டதே.அப்படி ஒன்றும் இல்லையென்றால் கோத்தாவின் கருத்த இங்கு நிரூபிக்கப்பட்டுவிடும்.ஒரே தேசம் ஒரே நாடு என்று சம்பந்தருடன் தேசியக்கொடியை பிடிக்கலாம். அதாவது ” இலங்கை எல்லோருக்கும்சொந்தமானது எங்கும் யாரும் வாழலாம் அரசியலில் ஈடுபடலாம்” இதுதான் கோத்தாவின் வாதம். கூட்டமைப்பு தமிழீழத்தின கைவிட்டு கனகாலம் இன்னும் சிலவருடங்களில் இனத்தினையும் கைவிடும். கொழும்பில் இருந்து கொண்டு வடக்கில் வாக்குரிமை இல்லாத ஒருவர் இங்கு வடக்கு நிலமை பற்றி பேசமுடியாது. மக்களின் தெரிவுகளை மதிக்காத தான்தோன்றித்தனமான முடிவுகளால் கிழக்குமாகாணத்தில் நாம் இடைந்த தோல்வியை மறக்கவே முடியாது.

மக்களை தொடர்ந்தும் மந்தைகளாக கணிக்காதீர்கள் ”சாது மிரண்டால் காடு கொள்ளாது” சுயநலன் கருதாத ஆளுமை யாழ்பாணத்தில் இல்லை என்று கூறுவதன்மூலம் நீங்கள் உங்கள் புத்திஜீவித்தனத்தினை நிரூபித்துவிட்டீர்கள். மக்கள் பதில் சொல்வார்கள் காத்திருங்கள்

எது எப்படியோ வடமாகாணசபை தேர்தல் முடிவுற்றதும் பல சுவராஸ்யமான சம்பவங்கள் அரங்கேற காத்திருக்கின்றன 13வது திருத்தினை எமது வேட்பாளர்கள் மேலோட்டமாகவேனும் ஒரு தடவை வாசித்துவைத்திருப்பது அவசியம்.

21-7-2013
மக்களின் மாகாணத்தின் அபிவிருத்தி உள்ளிட்ட இதர தேவைகளை நிறைவேற்ற மத்தியில் பெரும்பான்மையின அரசுடன் இணைந்து இயங்கும் அரசியல்வாதிகள் தமது இருப்புக்களை முன்னிறுத்தி எமக்கு உதவி வருகின்றமை என்னவோ உண்மைதான்.இவர்களும் ஒரு சிலர் தேவைதான். இருப்பினும் இவை ஒன்றும் எமக்கு கிடைக்ககூடாதனவல்ல வரிப்பணத்தில் இயங்கும் அரசு தனது நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டியதைத்தான் தாமதித்து வழங்குகின்றார்கள்

எது எப்படியிருப்பினும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு துணிந்து அரசுக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடிய ஒரு உரிமைக்கட்சியாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மட்டும் தான் இருக்கின்றது என்பதை எவரும் மறுக்கமுடியாது. அங்கு நடைபெறும் கூத்துக்கள் பலவேளைகளில் கூட்டமைப்பினை கூத்தமைப்பாக மாற்றுவது என்னவொ உண்மைதான். இக்கட்சிக்கான மாற்றுப்புலம் ஒன்று இன்னும் ஒரு புதிய கட்சியினால் ஈடுசெய்யப்படும் வரை பெரும்பான்மையான தமிழ் மக்களின் பயணம் கூட்டமைப்பின் ஊடாக தான் இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது.ஆனால் அதை கூட்டமைப்பு சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். துஸ்பிரயோகம் செய்யக்கூடாது.

முதலமைச்சர் தெரிவில் நடந்த இழுபறிகளை விட தெரிவின் பின் வெளியிடப்படும் வர்ணனைக்கட்டுரைகள் அறிக்கைகள் தான் எம்போன்றவர்களை கடுப்பேத்திவருகின்றன.மற்றப்படி விக்கினேஸ்வரன் பொருத்தமற்றவர் என்ற கருத்தை நான் கொண்டிருக்கவில்லை.இன்று தினக்குரலில் காலகண்டன் விக்கினேஸ்வரனை கடவுகளாக குறிப்பிடாதது ஒன்றுதான் பாக்கி மற்றப்படி சகல துதிபாடல்களையும் செய்திருக்கின்றார்.சாதியைக்கூட விட்டு வைக்கவில்லை.அதை அடிப்படைத்தகுதியாக வர்ணித்திருக்கின்றார்.இன்றைய பல கட்டுரைகள் ஒரே ஆளைப்பற்றியே வரையப்பட்டுள்ளன. அதன் காரணமாக நான் பல கட்டுரைகளை வாசிக்கவே இல்லை . இவ்வாறான ஒரே கருக்கொண்ட கட்டுரைகளை தவிர்க்கவேண்டும்

இதுவரை கூட்டமைப்புக்காகத்தான் மக்கள் வாக்களித்தனரே தவிர ஆட்களுக்காக வாக்களிக்கவில்லை. முதன்மை வேட்பாளர் தெரிவின் முக்கியத்துவம் அரசுக்கும் வெளியுலகுக்கும் தெரியவேண்டுமே தவிர எமது மக்களுக்கு தேவையில்லை.இப்படி ஒருவரைப்பற்றி தொடர்ந்து கட்டுரை எழுதவேண்டுமாக இருப்பின் அவரைப்பற்றி மக்களுக்கு அடையாளம் தெரியாது என்று பொருளாகிவிடும். அவர்களுக்கு யாரும் யாரைப்பற்றியும் பாடம் நடாத்த தேவையில்லை. விசனத்துடன் உள்ள அவர்களுக்கு கூட்டமைப்பு வெல்ல வேண்டியதன் அவசியத்தினை வேண்டுமானால் இனி விளக்க முயற்சிக்கலாம்.

கிழக்கில் ஏற்பட்ட கதி கூட்டமைப்புக்கு வடக்கில் ஏற்படக்கூடாது. அதை நிவர்த்தி செய்ய வேட்பாளர் தெரிவில் நிதானத்துடன் நடந்துகொண்டு வெற்றிபெற்று முதலமைச்சரைக் கூட கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்க கூட்டமைப்பு முயலவேண்டும். எது எப்படியோ முடிவை நாம் தீர்மானிக்க முடியாது மக்கள் தீர்ப்பை மதிக்கவேண்டும்.

இன்றைய உதயனைப்பார்த்தால் சிவிகே மீது நேரடியாக தாக்கியுள்ளது சரியாகப்படவில்லை. ஏதோ பாதிக்கப்பட்டவர்கள் போலவும் எதிர்பார்த்தது கிடைக்காததுபோலவும் அதனால் நொந்து எழுதியது போலவும் அந்த அரசியல் பத்தி அமைதிருக்கின்றது. ஒருதலைப்பட்சமாக இக் கட்டுரை தனிநபர் தாக்குதலாக வரையப்பட்டிருக்கின்றது வருந்தத்தக்கது.

ஊடகங்கள் நடுவுநிலமையுடன் இருந்தாலே போதும் மக்கள் தீர்ப்பு எழுதுவார்கள்.ஊடகங்கள் கட்டுரைகளை பிரசுரிக்கும்போது கவனமாக இருப்பது நல்லது. கூட்டமைப்பின் வெற்றிகளை கட்டுரைகள் கூட குழப்புகின்றன. விசனமடையும் மக்கள் தான் ஒருத்தனும் வேண்டாம் என வாக்களிப்பனை புறக்கணிக்கின்றமை கடந்து வந்த வரலாறு. இது எதிர்த்தரப்புக்கு சாதகமாகும்.

25-7-2013

தமிழ் சிவில் சமூகம் என்ற  அமைப்பின் ஒருவருடத்திற்கு முந்திய கிழக்குமாகாணம் தொடர்புபட்ட செய்தியையும் வாசித்தேன். ஆழமான தேடல்தான் ஆனால் போட்டியிடுவதெண்டு முடிவெடுத்தாச்சாம் இனி சுயேட்சையென்ன கட்சியென்ன எல்லாம் ஒன்றுதான்! வெளிநாட்டுக்காரனுக்கு தேர்தல் நடந்தா சரி. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்! :-) தேர்தல் முடியட்டும்! (கிழக்கு மாகாண சபையில் இன்னும் கூட்டமைப்பு இருக்கினம் ஞாபகம் இருக்க்கட்டும்)

எந்த சின்னத்தில் போட்டியிடுகின்றோம் என்பதல்ல முக்கியம் எதற்காக,எந்த அரசியல் அமைப்பின்கீழ் போட்டியிடுகின்றோம் என்பதே! இதே மாதிரித்தான் பாராளுமன்ற உள்ளுராட்சி தேர்தல்களிலும் சொன்னார்கள் இறுதியாக கிழக்கிலும் சொன்னார்கள் நடந்தது என்ன? இப்போதுள்ள கேள்வி அதுவல்ல எமது உண்மையான இறுதி நோக்கு என்ன வென்பதே! எந்தவழியிலாயினும் மக்கள் இந்த நோக்குடையவர்களின் பின் உள்ளார்கள் என்று காட்டவேண்டும்.அதனை எவரும் சரியாக செய்வதாக படவில்லை இந்த இடத்தில் இலுப்பம்பூ சர்க்கரையாக கூட்டமைப்பு இருந்து காலத்தை ஓட்டுகிறது அவ்வளவுதான்

தேர்தல் ஊடாக அரசியல்போராட்டம் இது தான் காலம் காலமாக நடைபெறுகிறது. இதில் பெரிய மாற்றம் இல்லை.அப்போது பக்கபலமாக ஆயுதப்போராட்டம் இருந்தது இப்போது அது இல்லை.வெளிநாட்டுக்காரன் வருவான் காப்பாத்துவான் என்பது ஒரு ஆசை அது இப்போது அதட்டலுடன் வேட்பாளராக ஆளை க்காட்டுவதுடன் முடிவுறுகிறது.அவனுக்கு ஆதாயம் கிடைக்கும் வரை ஆட்டுவான்எ நமது தலைவர்கள் என்று கூறிக்கொள்வோர் மேடையில் விரலை ஆட்டுவார்கள் நாம் .... எல்லாம் ஒரு காலத்துக்குதான் பார்ப்போம். மீண்டு்ம் சொல்கின்றேன் விக்கிரமாதி்த்தனாக....தமிழர்கள் பலத்துடன் இருக்கவேண்டும் ஆகவே வெல்ல வேண்டும் (வேதாளம் பழையபடி முருங்கை மரத்தில்).

எதிர்ப்பரசியல் எதையும் தராது!

Posted by Thava வியாழன், 28 மார்ச், 2013 0 comments


தி.மு.க அரசியில் இருந்து விலகியிதால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிட்டது என்று கேட்கும் கருணாநிதியின் கருத்துக்களில் சில நியாயங்களும் இருக்கத்தான் செய்கிறது. எவரும் இதய சுத்தியுடன் ஒன்றையும் செய்யவில்லை என்பதையும் நாம் அறிவோம். யதார்த்தங்களை உணர மறுப்பதையும் நாம் அறிவோம். எமது பிரச்சனையினை தமது அரசியலுக்கு தேவையான அளவுக்கு இந்தியாவும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் பயன்படுத்திவருகின்றமைதான் கண்கூடு. இதையே நாம் தொடர்ந்து வலியுறுத்துகின்றோம்

எது எப்படியிருப்பினும் 2009 இல் தி.மு.க வெளியேறியிருந்தால் ஒரு அழுத்தம் கிடைத்திருக்கும் என்பதுதான் உண்மையே தவிர இந்திய நடுவண் அரசு கவிழ்ந்திருக்கும் என்பது உண்மையில்லை.அதுதான் இம்முறையும் நடந்திருக்கின்றது.

ஆனால் இங்கு முகப்புத்தகங்களில் இந்திய ஊடகங்களில் எமக்கு தரப்படும் தகவல்கள் தி.மு.க விலகியிருந்தால் ஈழத்தில் கொடூரம் நடந்திருக்காது என்று கூறமுனைந்திருந்தன இந்த கருத்துக்களால் ஒருவகையில் நானும் ஈர்க்கப்பட்டிருந்தேன். இது நடுவண் அரசில் தி.மு.க வின் பலம்  குறித்தான எமது அறியாமையின் வெளிப்பாடாகவும் கொள்ளலாம். ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கும் அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கும் இது தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை இக்கருத்துக்களில் பல , கட்சி எதிர்ப்பரசியலை மையமாககொண்டவை என்பதே உண்மை.

இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு அதனை வெளிப்படுத்தாமல் தமிழ்நாட்டுக்கட்சிகள் இன்றும் தமிழீழ உணர்வலைகளை தேர்தலை நோக்கிய தமது  கட்சியரசியலுக்கு தாரளமாக பயன்படுத்திவருகின்றன. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் இருந்து தமக்கான ஆதரவுத்தளத்தினை வலுப்படுத்தி வருகின்றன.

இன்னும் ஒருநாட்டில் தனிநாடு அமைக்க அயல்நாட்டில் இருக்கும் மக்களால் முடியாது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.இதற்கு தற்போதுள்ள உலக அரசியல் போக்கு இடம்கொடாது என்பதுதான் உண்மை. ஒருவேளை  எங்களுக்கு ஒரு அரசியல்தீர்வினை பெற்றுக்கொள்ள இவர்களின் போராட்டங்கள் வழிவகுக்கலாம்.

இதை உணராமல் மேலெழுந்தவாரியாக எல்லாவற்றையும் எதிர்ப்போம் என இறங்கக்கூடாது என்பது என்கருத்து. எதையும் ஒன்றுக்கு பலதடவை சிந்தித்தபின்னர் முடிவெடுக்கவேண்டும். யாரோ சொன்னார்கள் என்பதற்காக Airtel நிறுவனத்திற்கு எதிராகவும் போராட்டம் நடாத்தப்படுகிறது. அப்படிப்பார்த்தால் இந்தியாவில் முக்கால்வாசி நிறுவனங்களையும் எதிர்க்கவேண்டும் இங்கு நாம் சகல தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் எதிர்க்கவேண்டியிருக்கும். அதன்காரணமாக நாம் தொலைபேசி சேவையினை புறக்கணிக்க வேண்டியிருக்கும். அது எந்தவகையில் எமக்கு நன்மையினை தரப்போகிறது என சிந்தித்தால் ஒன்றும் இல்லை என்றே பதில் கிடைக்கும்.

தமிழ்நாட்டு மாணவர்களின் உணர்ச்சிகளை மதிக்கத்தக்கவை அவர்களது போராட்ட அர்பணிப்பினை பாராட்டத்தக்கவை. தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டம் ஆரம்பத்தில் அமெரிக்க தீர்மானத்தினை ஒட்டியிருந்தபோதும் தற்போது ஒவ்வொரு முறையும் திசை திருப்பப்பட்டு புதிய புதிய இலக்குகள் நிர்ணயிக்கப்படுவது அவதானிக்கப்படக்கூடியதாக உள்ளது.அதனை அவர்களது ஒவ்வொரு தீர்மான அறிக்கைகளும் வெளிக்காட்டுகின்றன. இன்னமும் எது வரை அவர்களின் போராட்டம் தொடரும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டினை காணமுடியவில்லை. அவர்கள் எத்தனை காலம் தமது கல்வியை போராட்டத்திற்காக அர்ப்பணிக்கமுடியும் எனபதும் இங்கு கேள்விக்குறி. முழுமையான போராட்டமாக அமையாமல் பகுதியான போராட்டமாக இனி இது அமைவதே சிறப்பானதாக இருக்கும்.மாணவர்கள் சரியான வகையில் வழிநடத்தப்படவேண்டும் இல்லாவிடில் அதன் பிரதிபலன் பிரச்சினைக்குரியதாக இருக்கும்.

இறுதியாக ஒன்றை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இரண்டு தடவை இலங்கைக்கு எதிராக தீர்மானம் இயற்றிய அமெரிக்காவும் தெற்கு ஆதரவாக வாக்களித்த இந்தியாவும் இலங்கையில் மக்கள் கொல்லப்படுவதற்கும் புலிகளின் தலைமையினை அழித்து போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவருவதிலும் குறியாக இருந்தன. அதை யாராலும் மறுக்கமுடியாது. இலங்கையில் பிரச்சனை இருக்கவேண்டும் என விரும்பும் இந்த நாடுகள் உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகள் தனிநாட்டுக்கோரிக்ககையினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டா. யதார்தத்தினை உணர்ந்து தந்திரோபாய அரசியலை முன்னகர்த்தவேண்டும்.

ஈழத்தமிழரின் தனிநாட்டுக்கோரிக்கை உலக நாடுகளால் தோற்கடிக்கப்பட்ட நிலையில் இங்கு நாம் எமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கும் இன ரீதியான பாரபட்சங்களுக்கும் எதிராக குரல்கொடுத்து எமது உரிமைகளை பெற இயலுமான சாத்தியமான வழிகளில் முயற்சிக்கின்றோம். இனரீதியாக பல இடங்களில் நாம் சீண்டப்படுக்கின்றமையும் உண்மை. அது தற்போது இலங்கையில் முஸ்லிம்களின் பக்கம் கூடுதலாக திரும்பியிருக்கிறது.அதனை அந்தச்சமூகம் கூட விரைவில் உணரும்.இங்குள்ளவர்களின் மனதில் மட்டும் உள்ளதை அயல்நாட்டிலும் புலம்பெயர்ந்தும் வாழ்பவர்கள்  வெளிப்படையாக தனிநாட்டுக்கோரிக்கையாக முன்வைத்தவண்ணம் உள்ளனர். இதில் எதுவும் இறுதி இலக்கினை உடனடியாக அடையப்போவதில்லை என்பதே யதார்த்தம். மனிதரை மனிதன் மதிக்கும் மனப்பாங்கு சகலரிடமும் உருவாகும் வரை போராட்டங்கள் தொடரும்.வருடங்களும் நகரும்.ஆம் புன்னகை எங்கே மறுக்கப்படுகின்றதோ அங்கே போர் தொடங்குகிறது என்பதை சகல அரசுகளும் உணரவேண்டும்

எது எப்படியோ 2009 நடந்த துயரச்சம்பவங்கள் எம்மிடமிருந்து மறந்துபோக நிறைய வருடங்கள் எடுக்கும். அதை மறப்பதற்கு அரசு விடுமா என்பது தான் இப்போதுள்ள கேள்விக்குறி. அரசின் வெற்றிக்கொண்டாட்டங்கள் நினைவுச்சின்னங்களே எமக்கு அவற்றினை நினைவுபடுத்துகின்றன என்பதை அரசு உணர மறுக்கிறது.நாம் அதை மறந்தால் அரசு சீண்டுவதை நிறுத்தினால் நிச்சயம் நல்லிணக்கம் மலரும். இதனை போராட்டங்களை செய்வோர் முக்கியமாக வலியுறுத்தவேண்டும். அதற்காக முற்றுமுழுதான எதிர்ப்பரசியல் எதையும் தராது.


இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தான் ஆட்சியைக்குறிவைக்கும் அரசியல் கூட்டமைப்புக்கள் உள்ளன .அவை நிரந்தரமானவையல்ல. கொள்கைப்பிடிப்புள்ள முற்றிலும் நிறுவனமயப்படுத்தப்பட்ட கட்டமைப்புடன் கூடிய கட்சிஅமைப்பு கட்டியமைக்கப்படவேண்டும்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் எந்த ஒரு நிரந்தரமான கொள்கைகளையும் கொண்டிராத ஒரு குழு. முதலில் ஒரு கட்சி அமைப்புக்கு அவர்கள் வரவேண்டும் . அதன் பெயர் கூட்டமைப்பாக இருந்தால் அதற்கு நிரந்தரமான கொள்கைத்திட்டங்கள் இருக்கவேண்டும். தலைவர் சரி இல்லாவிடில் கூட நீக்கக்கூடிய சிறந்த யாப்பு தேவை!

ஒவ்வொரு பங்காளிக்கட்சியும் தமது கட்சிகளையும் வளப்படுத்தக்கூடிய நிலை இருக்கக்கூடாது இது நிறுவனத்தின் பாதையினை ஒருநிலையில் கட்டாயம் சீர்குலைக்கும். இதயசுத்தி இருக்காது. ஒன்றுபட முடியாது என்றால் விலகி ஒரு புதிய நிறுவனமயப்படுத்தப்பட்ட கட்சியை உருவாக்கவேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரே உண்மையில் மாயையானது இன்று யாரும் அதன் தலைவர் என்று கூறமுடியும் சட்டச்சிக்கல் எதுவும் இல்லை.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என தேர்தல் திணைக்களத்தில் பதிவு இல்லை பத்திரிகை செய்திகள் அறிக்கைகள் மாத்திரமே இதனை கூறி வருகின்றன இன்றுவரை தமிழரசுக்கட்சிதான் தமிழ் கூட்டமைப்பாக முன்னிலைப்படுத்தப்படுகிறது. வாக்குச்சீட்டில் கூட தமிழரசுக்கட்சிதான். வீடுதான் அதன் சின்னம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் என்று ஏதாவது ஆவணம் உண்டா ?இந்த மாயையினை பலர் வில்லங்கமாக மறைக்கின்றனர் இதற்கு முடிவுகட்டப்படவேண்டும்.இல்லாத ஒன்றை கட்சியாக உருவகித்து வரும் நாம் ஒருவகையில் மன நோயாளிகள் தான்.

இங்கு எமது மனதுக்குள் உணர்வு இருந்தாலும் எமக்கான தீர்வு ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் அமையமுடியும் இதுதான் சாத்தியமானதும் கூட. இந்நிலையில் வெறுமனே புலம்பெயர் சமூகத்திற்கு ஒரு முகமும் அரசுக்கு ஒரு முகமும் எமக்கு ஒரு முகமும் காட்டும் இந்த கூட்டமைப்பின் பழுத்த கோமாளிகள் முதலில் தமது கொள்கைகளினை விளக்கி தமிழ் தேசிய அரசியல் கட்சியொன்றை பதிவுசெய்யவேண்டும்.

ஒன்றுமில்லாத ஒன்றை வைத்து பூச்சாண்டி காட்டக்கூடாது. தேர்தலுக்குமட்டும் எமது உணர்வுகைளை விலைபேசி மடையர்களாக்கமுடியாது. சங்கரி போன்ற வெளியிலே உள்ள அரசியல்வாதிகளும் இவர்களை விட வித்தியாசமானவர்கள் இல்லை என்பதையும் நினைவுபடுத்த விரும்புகின்றேன். வீட்டுச்சின்னத்தில் வெற்றிபெற்றவர்கள் அனைவரும் தாங்கள் புலிகளால் அங்கீகரிக்கப்பட்ட புனிதர்கள் என்று கூற விளைவது சுத்த முட்டாள்தனம். காலம் மாறிவிட்டது இனி புதுசா சிந்திக்கவேண்டும் பழைய பதிப்புக்கு பக்கவாத்தியம் பாட நாம் முட்டாள்கள் இல்லை.

நாம் எல்லாம் தெரிந்துகொண்டு ஏதோ ஒரு மாயைக்குட்பட்டு ஒன்றின்பின் தொடர்ந்து சென்று கொண்டிருப்பது தான் சரியாகப்படவில்லை.மாற்றத்தினை உள்வாங்க வேண்டும் அல்லது மாற்றப்படவேண்டும் சரிவராவிடில் மாற்று அணிதான் வழி!

எம்மில் பலர் புதிய மாற்றத்திற்கு தயாரற்றவர்களாக தமிழ் தேசிய அரசியலின் பழைய பதிப்பொன்றுக்கு பின் நின்று கூவிக்கொண்டிருக்கின்றோம். அதில் பிழைகள் இருக்கும் தருணங்களில் எல்லாம் விடுவோம் என்று அலட்சியமாக இருந்து வருகின்றோம். புதிய ஒன்றினை தெரிவு செய்ய தயக்கம் காட்டுகின்றோம். தொழில்நுட்பத்தில் மாத்திரம் தான் புதியனவற்றை தேடுகின்றோம்.அந்த நிலை மாற்றவேண்டும்.

ஒவ்வொரு தேர்தலிலும் ஆணை கேட்டுகொண்டு வெறும் சூதாட்டமாக நடைபெறும் தேர்தல் அரசியலில் நமது வாக்குரிமை ஜோக்கராக பயன்படுத்தப்படுவதை ஏற்கமுடியாது.சர்வதேசத்திற்கு ஒற்றுமையினைக்காட்டுகிறோம் என்று கூறி பல இறுதிச்சந்தர்ப்பங்களை வழங்கியும் மாற்றம் எதுவும் இல்லை. சாதாரண அபிவிருத்தி மட்டும்தான்.கிழக்கு மாகாணம் சில செய்திகளை சொல்லிவிட்டது. வடக்குமாகாணமும் சொல்லபோகிறது.

தேசியம் வாக்கு சிதறடிப்பு அது இது என்று ஏதேதோ பிதற்றுகின்றோம். மக்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்கவும் அவர்களுக்கான தெரிவுகளை போதியளவு வழங்கவும் நமது தமிழர் அரசியல் வளரவில்லை. ஆனால் தென்னிலைங்கையில் நிலமை வேறு. இங்கே அரசுக்கும் தமிழ்த்தேசியம் பேசுவேருக்குமான மாற்று அணி வலுவான நிலையில் இல்லாமையே அதற்கு காரணம். தொடர்ந்து பாராளுமன்ற ஆசனம் என்ற கனவுதான் தமிழ்த்தேசிய சந்தர்ப்ப வாத அரசியலில் இருக்கிறது. மக்களுக்கான தீர்வு குறித்து யாரும் சிந்திக்கவில்லை.

மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று ஒரு கட்டமைப்பு நிஜமாக உள்ளதா? ஒருமுடிவை கலந்து பேசி வாக்கெடுப்பு நடத்தி எடுக்கிறார்களா? அது ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் குரலாக இருக்கிறதா? விஞ்ஞான முறையில் புள்ளிவிபரங்களை எடுத்து நோ்க்கின் தேர்தலை புறக்கணிப்போர் வாக்களிப்போர் வாக்களித்தவர்களில் எத்தனைபேர் கொள்கைக்கு எத்தனைபேர் கட்சிக்கு எத்தனைபேர் சின்னத்துக்கு எத்தனைபேர் எழுந்தமானமாக வாக்களித்தார்கள் என்றால் அரச அரச சார்பற்ற தமிழ் கட்சிகள் எதுவும் தேறாது! தென்னிலங்கை நிலை முற்றிலும் வேறுபட்டது

முதலில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் சீரமைப்பு கூட்டம் கூட்டப்படவேண்டும் அதில் சகல தமிழ் தேசியத்ததினை ஆதரிக்கும் கட்சிகளின் அரசியல் தலைவர்கள் பிரதிநிதிகள் அழைக்கப்பட்வேண்டும் அதில் ஒவ்வொரு கட்சியும் குழுக்களும் தமது கொள்கைகளினை வெளிப்படுத்தவேண்டும் அதில் இடைக்கால நிர்வாகம் தெரியப்பட்டு கட்சி யாப்பு உருவாக்கவேண்டும் அதன்படி புதிய நிர்வாகம் தொழிற்படவேண்டும் அது பதிவுசெய்யப்படவேண்டும் தேர்தலுக்கான தற்காலிக ஏற்பாடுகள் எதுவும் சரிவராது. உடனடி புனருத்தானம் இப்போது தேவை! காலம் பொன்னானது

இந்த மாற்றத்திற்கு யாரும் தயாராகாது விடில் உடன்படும் உணர்வுள்ள அரசியல் வாதிகளை ஒன்று சேர்த்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்றே புதிய கட்சியை உருவாக்கவும் முடியும் அதன்போது சில கட்சிகள் ஒதுக்கப்படும் வாய்ப்புக்களும் உள்ளன. அதன்போது சின்னம் பிரச்சனை வரும்! என்னைப்பொறு்த்தவரை சின்னம் மாற்றினால் பிரித்தறிய முடியாத முட்டாள்களாக மக்களை கருத முடியாது! என்றே நினைக்கின்றேன்

நாம் 60 ஆண்டுகளாக அடைய முடியாததை இனியும் அடையலாம் என்று கனவுகாண முடியாது . அதற்கான அரசியல் களநிலை இனி ஒருபோதும் அமையப்போவதில்லை. அதற்கான வெளிக்கள நிலைகளும் இல்லை.அதனின்றும் விலகி ஒரு ஒன்றுபட்ட தீர்வினை அடைவது சாத்தியமே. சரித்திரப்புத்தகத்தில் தான் படையெடுப்புக்கள் வெற்றிகள் பற்றி படித்திருக்கின்றோம் அவற்றின் காலப்பகுதிகள் மிக மிக குறைவு இங்கு நடைபெற்றது நீண்ட காலம். இவ்வளவு பலத்துடன் கட்டுக்கோப்புடன் இருந்த நம்மால் முடியாமல் போன விடயத்தினை இந்த கட்டுக்கோப்பில்லா பழைய கோமாளிகளைக்கொண்டு அடைந்துவிடலாம் என்று எண்ணுவது தவறு. மீண்டும் ஒரு 60 வருடம் தேவையா?

நாம் அடைய எத்தனிக்கின்ற எமக்கான சமாதான தீர்வுக்கான பாதையில் கட்டுக்கோப்பான ஜனநாயக கட்சி ஒன்றினை உருவாக்கி அதன் கீழ் போகவேண்டிய தேவையில் உள்ளோம். ஒருவருக்கும் சோரம்போகாமல் எந்த வொரு சலுகைக்கும் விலைபோகாமல் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் போது குரல்கொடுக்கக்கூடிய தாக அக்கட்சி அமையவேண்டும். பழையது வரலாறு அதை மாற்றமுடியாது.புதியதை புதிய வழியில் எழுதவேண்டும்.

புலம்பெயர்ந்தவர்கள் அரசு மற்றும் இங்குவாழும் மக்கள் ஆகிய 3 பிரிவினரும் செல்லும் பாதைகள் வித்தியாசமாக உள்ளன அவை ஒருமுகப்படுத்தப்பட்டு உண்மையில் எது சாத்தியமோ அதனை அடைவதற்கு நாம் பாடுபடவேண்டும். இளைஞர்கள் நேர்மையானவர்கள் எதுவும் உண்மையாக இருக்கவேண்டும் என எண்ணுபவர்கள் அவர்களை உசுப்பேத்தி உணர்ச்சி அரசியலுக்குள் விழுத்தி எம்மை நாம் சிதைக்க கூடாது என வலம்புரி ஆசிரியர் தலையங்கத்தில் எழுதப்பட்ட கருத்து மிகப்பொருத்தமானது. நாமே நமது மக்களின் குரல்களை அவர்களுடைய கருத்து தெரிவிக்கும் உரிமையினை முடிவுகளை எடுக்கும்போது அவர்களின் பங்கினை மறுக்கும் போது இன்னொரு இனத்தின் கட்சி யிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது.

ஒன்று மட்டும் தெரிகிறது ஏன் இவர்கள் இப்படி ? கட்சிப்பதிவுக்கான ஆவணங்களை தயார் செய்ய முடியாத அளவுக்கு தலைவர்கள் இயலாதவர்களா? போன்ற கேள்விகள் பங்காளிகட்சிகள் பலரிடம் எழுந்திருந்தும் கட்சித்தலைமைக்கு கட்டுப்படுகின்றோம் என்று வாழாவிருக்கிறீர்கள். பல இடங்களில் இப்படி அனைவரும் வாழவிருந்ததன் விளைவு இப்போது சுமந்திரன் மற்றும் சம்பந்தனின் தனிப்பட்ட முடிவுகளில் கட்சி செல்கிறது

அரசியல்கட்சியாக பதிவுசெய்ய ஆவணங்களை தயார் பண்ணமுடியாதவர்கள் எப்படி தீர்வுத்திட்டத்திற்கான ஆவணங்களை தயாரிப்பார்கள் .அவதானித்த பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் எங்கே இதைக்கேட்கப்போய் அடுத்தமுறை நமக்கு நமது சிபார்சுகளுக்கு இவர்கள் ஆப்புவைத்து விடுவார்களோ என்ற பயத்தில் தாமுண்டு தம்பாடுண்டு என்று இருக்கின்றனர் இந்த நிலை மாறவேண்டும் மக்களுக்கு பதில்சொல்லக்கூடிய கட்சித்தலைமை வேண்டும் எங்களுக்கு ஒருமுகம் தமிழீழம் கோருவோருக்கு ஒருமுகம் அரசுக்கு ஒரு முகம் காட்டக்கூடாதல்லவா?

சும்மா வாக்கு வங்கி கூட்டுதல் பற்றி சிந்திப்பதற்கு முதல் அந்த வாக்குகளுக்கான பதிலையும் கூற கட்சி தயாராக இருக்கவேண்டும் வாக்கு வங்கிக்கு மட்டும் பாராளுமன்ற ஆசனங்களுக்கு வலுசேர்க்க மட்டும் மக்கள் இல்லை. தெரிவுசெய்யப்படும் வேட்பாளர்கள் தேசியப்பட்டியல் வேட்பாளர்கள் நிறுவன கட்டமைப்பின் ஊடாக தெரிவுசெய்யப்பட்டிருக்கவேண்டும். இப்போது தெரிவுசெய்யபட்டருக்கும் பெரும்பாலான உறுப்பினர்கள் இதயசுத்தியுடன் தொழிற்படவில்லை.அவர்களி்ன் தெரிவு கூட்டமைப்பு என்ற உருவகிக்கப்பட்ட அமைப்புக்கு கட்டுப்பட்டு மக்கள் வாக்களித்ததன்பேரில் நடைபெற்றதே விர வேறொன்றும் இல்லை

கூட்டமைப்பினை உருவாக்கியபோது பின்புலத்தில் புலிகள் இருந்தனர் அவர்கள் சொன்னதை இவர்கள் கேட்டார்கள் . அப்போதும் சில தவறுகள் இடம்பெற்றிருந்தது அதனாலேயே இராஜதந்திர அரசியல் தோற்றது இப்போதும் தோற்கிறது. எப்போது போராட்டம் மற்றும் அரசியல் மக்கள் மயப்படுத்தப்படுகிறதோ அப்போதுதான் வெல்லும்.

விடுதலைப்புலிகளால் கூட குறுகியகாலத்தில் தீர்வுத்திட்டம் ஒன்றை தயாரிக்க முடிந்திருக்கிறது. பழுத்த அரசியல்வாதிகளால் அது முடியாமல் இருப்பது வியப்பிற்குரியது.மகிந்தவிடம் எப்படி தீர்வுத்திட்டம் இல்லையோ இவர்களிடமும் தீர்வுத்திட்டம் இல்லை.

இந்த வகையில் நாம் எம்மை சுய பரிசீலனை செய்யவேண்டும்.கட்டமைப்புள்ள கட்சி சின்னம் யாப்பு தலைமைச்செயலகம் என வளர்ச்சியடைய வேண்டும். பாரம்பரிய சுதந்திரக்கட்சி வெற்றிலையில் ஒன்றிணைந்து வெற்றிபெறமுடியும் எனில் தமிழரசுகட்சி கூட்டமைப்புக்குள் முழுமையாக இணைந்துகொள்வதில் தடையில்லை.
தவறின் மக்களின் தேர்தல் புறக்கணிப்பு மற்றும் தமிழ் அரசியல் தோல்வி என்பன தவிர்க்கப்பட முடியாது. புதிய மாற்றுக் கட்சி ஒன்றுக்கான ஏது நிலையினையும் அதிகரிக்கும்.மக்கள் விழித்துவிட்டனர் வடக்கு தேர்தலை நிறுவன கட்டமைப்புடன் எதிர்கொள்ள வேண்டும். இல்லாவிடில் தோல்வி தவிர்க்க முடியாது! தேர்தல் மட்டும் அரசியல் இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது!

யாரை நோவது?

Posted by Thava வியாழன், 10 ஜூன், 2010 0 comments

எமது போராட்டம் கருணாநிதியை கேட்டு தொடங்கப்படவில்லை.கருணாநிதியையோ இந்தியாவையோ இல்லை ஒபாமாவையோ அல்லது பான்கிமூனையொ நம்பியோ தமிழர்களுக்கான இன விடுதலைப்பொராட்டம் தொடங்கப்படவில்லை.இலட்சியத்திற்காக முடிந்தவரை போராடி கடைசியில் இந்த நிலை

இதுவரை நாம் என்ன செய்தோம் செய்கிறோம் என சுயவாசிப்பு செய்தாலே போதும் சகலதுக்கும் விடை வெளிக்கும்.இன்று பலரும் இந்திய எதிர்ப்பு உலக எதிர்ப்பு கருத்துக்களை அள்ளிவீசுகின்றனர். அனைத்துத்தரப்பும் ஒன்றிணைந்துதான் எமது போராட்டம் ஒடுக்கப்பட்டது.அதிலே எமது தரப்புக்கும் பங்குண்டு

எது நடந்ததோ அது நடந்து முடிந்துவிட்டது இனி சுயவிமர்சனம் செய்து பிழைகளை திருத்தி நடக்கவேண்டியவற்றினைப்பார்க்கவேண்டும். அதைவிடுத்து அறிக்ககைகள் ஆதங்கங்களை மட்டும் விட்டுக்கொண்டிருப்பதும் நாம் நல்லபடி விரும்பியபடி வாழ்ந்து கொண்டு அழிவுகளில் இருந்து மீளத்துடிக்கும் மக்களை வைத்து அரசியல் நடத்துவது அநியாயம். அவர்களின் விடிவுக்கு இனி எவ்வாறு உதவலாம் எவ்வாறு எமது அடையாளங்களையும் பிரதேசங்களையும் கட்டிஎழுப்பலாம் என்று யோசிக்கவேண்டும்


புதிய அறிவியல் உலகிற்கு எமது மக்கள் அனைவரையும் அழைத்துச்செல்ல என்னசெய்யலாம் எமது அரசியல் உரிமைகளை எப்படி நிலைநிறுத்தலாம் என சிந்திப்பதைவிடுத்து தொடந்து வசைபாடிக்கொண்டிருப்பதில் எந்தவித இலாபமும் இல்லை அதன்மூலம் எம்மை தேசியவாதிகளாக காட்டிக்கொண்டிரக்கலாமே தவிர வேறொன்றுமில்லை.

தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு நடிகர்கள் வரக்கூடாதென்று அங்கே தடுக்கிறார்கள் ஆனால் நாம் என்னசெய்கிறொம் அப்படி வந்த நிகழ்வுகளை புறக்கணித்தோமா இல்லையே தவறாமல் சென்று கூத்தாடினீர்களே? மகிழ்ச்சி நிகழ்வுகளை நாம் நடாத்தாமல் விட்டிருக்கிறோமா?

கனக்க வேண்டாம் சகலரும் சண் தொலைக்காட்சியை பார்காமல் தவிர்ப்பீர்களா மக்கள் இங்க நோகிறாங்க உங்களுக்கு என்ன 20 20 கிரிக்கட் வேண்டிக்கிடக்கு.?சும்மா ஒரு நடிகர் ஏதோ சொல்லிவிட்டார் என்பதற்காக அவரது படத்தையே திரையிடவிடமாட்டோம் என குழு தொடங்கிறீங்க இப்படியே எல்லாத்தையும் எமது போராட்டத்தின் ஒரு பரிணாமத்தின் முடிவுக்கு(பிரச்சனை இருக்கும் வரை போராட்டம் முடியாது) காரணம்சொல்லி யாரையோ நொந்துகொண்டிருக்கிறோம்

துரையப்பா விளையாட்டரங்கில் துள்ளியாடுகிறார்கள். வெளிநாடுகளில் வெள்ளைகளுடன் விதம்விதமாய் ஆடுகிறார் எமது எதிர்காலத்துக்காய் என்னவெல்லாமோ செய்கிறோம் அந்த நொந்த மக்களை மீண்டுவர சந்தர்பம் கொடுக்கிறோமா? மீண்டும் மீண்டும் ஒரு இக்கட்டான சூழலுக்குள் வைத்திருக்க உணர்ச்சி அரசியலை உசாத்துணைக்கு அழைக்கிறோம். 

அய்யோ வேண்டாம் அவர்களை விடுங்கள் நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு உங்கள் மனதளவில் நேர்மையாக இருக்கப்பாருங்கள் சகலரும் நம்நாட்டில் நம் இனத்திற்கு என்ன நடக்கிறது அதை எப்படி எதிர்கொள்ளலாம் நாம் சார்ந்த சமூகத்தின் ஊடாக நிறுவனங்களின் ஊடாக எவ்வாறு எமது நொந்த மக்களுக்கும் வெந்தபுண்களுக்கும் ஆறுதல் கூறலாம் நல்வழி காட்டலாம் இனிமேலும் அழிந்துபோவதை தடுக்க என்ன செய்யலாம் சிதைந்த அடையாளங்களையும் பொருண்மியங்களையும் எவ்வாறு துாக்கி நிமித்தலாம் என சிந்தித்தால் செயற்பட்டால் விடிவு வெகுதுாரத்தில் இல்லை அதை விடுத்து அவனாலதான் கெட்டன் இவனாலதான் கெட்டன் என்று புலம்புவதில் பலனில்லை.

மற்றைவனை நம்பியவன் எல்லாம் வெற்றிபெற்றதாய் சரித்திரம் இல்லை