வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

அரசியலிலும் புதிய பதிப்பு வேண்டும்

Posted by Thava சனி, 21 செப்டம்பர், 2013

நடந்து முடிந்த வடமாகாணசபை தேர்தலில் வரலாற்று வெற்றிக்காக கிராமங்கள் தோறும் மிகவும் அர்பணிப்புடன் தொழிற்பட்டு வாக்களிப்பு வேகத்தினை கூட்டியும் விழிப்புணர்வினையும் ஏற்படு்த்திய இளைஞர்களுக்கு இந்நாளில் நன்றிகூறவேண்டும்.தள்ளாத வயதிலும் வாக்களித்த பெரியவர்களின் விருப்பையும் மதிக்கவேண்டும்.

இளைஞர்களின் பங்கின்றி எதுவும் இல்லை என்பதை இது எடுத்துகாட்டியிருந்தது.அதற்காக அவர்கள் எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள் நிறைய.

எப்படியிருப்பினும் வடக்கு தேர்தல் நடைபெற பல தரப்புக்கள் உதவி செய்திருக்கையில் வெற்றியை தீர்மானித்தது நமது வடமாகாணத்தில் வாக்களித்த மக்களே! வாக்குரிமையினால் கிடைத்த வெற்றியான அதில் எவரும் உரிமை கோர முடியாது! இறுதி பாதைக்கான கொள்கை மாறியிருப்பின் அல்லது மக்களின் கோரிக்கைக்கு மாறானதாக இருந்திருப்பின் இந்த ஆணையினை மக்கள் வழங்கியிருக்கமாட்டார்கள்! தேர்தல் விஞ்ஞாபனம் என்ன சொன்னதோ அந்த ஆணையுடன் வேறு நீங்கள் விரும்பும் ஆணைகளை இணைத்து அடுத்த கட்ட அரசியல் நகர்வினை யாரும் குழப்பிவிடவேண்டாம்!

எதனையும் நேரடியாக அடைந்துவிடமுடியாது சில நகர்வுகளின் ஊடாக படிபபடியாகவே பெறமுடியும்.

எமது மக்கள் தற்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை ஒரு பதில் சொல்ல வேண்டிய அமைப்பாக மாற்றிவிட்டிக்கின்றார்கள். விக்கினேஸ்வரனின் கையில் முக்கிய பொறுப்பினை ஒப்படைத்திருக்கிறார்கள். ஐயாவின் இலக்கம் என்ன என்று கேட்டு கேட்டு வாக்கு போட்டதை நான் நேரில் அவதானித்தேன்.

ஒரு இனத்தின் தலைவிதியை அவ்வினத்தின் ஒருதலைமுறை மட்டும் நிர்ணயித்து விடமுடியாது. வயது வந்தவர்களை முற்றாக ஒதுக்கிவிடவும் முடியாது என்பதையும் இத்தேர்தலின் ஆணை எமக்கு எடுத்தியம்புகின்றது.அதை இளைஞர்கள் உணர்ந்துவிட்டார்கள் என்றே தோன்றுகின்றது.எம்மை நாம் சுயமீளாய்வு செய்யவும் வேண்டிய தேவையினை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த அடுத்தகட்ட அரசியல் நகர்வுக்கு எம்மை கொண்டுவந்து விட்ட பெருமை நிச்சயமாக நாங்கள் நேசித்த அந்த தியாகிகளையே சாரும்.அதற்கான நாம் கொடுத்த விலை கணிப்பிடமுடியாதது. வெண்ணை திரண்டு வருகையில் யாரும் தாழியை உடைக்க மாட்டார்கள் என நம்புவோம்.

என்னைப்பொறுத்தரை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எடுத்தார் கைப்பிள்ளையாக இருக்கமாட்டார் என நம்புகின்றேன். அவருடைய சமீபத்தைய கூற்றுக்கள் செயற்பாடுகள் அதனையே எடுத்துக்காட்டுகின்றன.இறுதியாக கூறியிருந்தார் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளவேண்டும் என்று. அதனையும் கூட எம் மக்கள் ஏற்றிக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.காலம்காலமாக புறக்கணிப்புக்களின் ஊடாக நாம் பெற்ற உரிமைகளைவிட இழந்த உரிமைகள் ,நன்மைகள் கூட.

அரசும் அதனோடு இணைந்து இயங்கும் அரசியல்வாதிகளும் தமது நிலைப்பாட்டையும் செயற்பாடுகளையும் மீள்பரிசீலணை செய்யவேண்டிய கால கட்டத்தில் இருந்துகொண்டிருக்கின்றனர்.அவர்கள் தமது சலுகை மற்றும் அபிவிருத்தி அரசியலின் பதிப்பை மேம்படுத்தி அடுத்த தீர்வு அரசியலுக்கான புதிய பதிப்பினை வெளியிடவேண்டியதன் தேவையினை இது உணர்த்தியிருக்கிறது.சிந்திப்பார்களா? அரசு மட்டுல்ல நம்மவர்களும்! இது காலத்தின் தேவை! இவ்வுலகில் மாற்றம் ஒன்றே மாறாதது! -தவா

0 comments

கருத்துரையிடுக