வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.
எண்ணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எண்ணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி


வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் வேலையில்லா பிரச்சனை முக்கிய பிரச்சனையாக உள்ளது. தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பாரம்பரிய வேலைகளுக்கான கேள்வி குறைந்து தொழில்நுட்பங்கள் அந்த இடத்தை பிடித்துக்கொண்டதால் பாரம்பரிய வேலைவாய்ப்புக்கள் மேலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.


இருந்தபோதிலும் தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக  தொழில்நுட்பத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைவாய்ப்புக்கள் திறந்து விடப்பட்டிருக்கின்றது.இந்த நிலையில் உண்மையில் வேலைவாய்ப்புக்களுக்குரிய தகுதி வாய்ந்த வேலையாட்கள் இல்லாமை  இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. வேலை தேடுவோருக்கும் வேலைதருநர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக்கொண்டிருப்பதனை அனுமதித்துக்கொண்டிருக்க முடியாது. அதற்குரிய காரணிகளை ஆராய்ந்து வேலைதேடுவோரின் திறமைகளை வளர்த்து அவர்களுக்குரிய வேலைவாய்ப்பினை உறுதிசெய்யவேண்டிய கடமை சகல தரப்பினருக்கும் உள்ளது. அது அவர்களின் சுயதொழில் முயற்சியாண்மையினை வளர்ப்பதாக கூட இருக்கலாம்.

வேலைவாய்ப்பு குறைவுக்கு வெறுமனே ஒரு தரப்பினை மட்டும் காரணமாக்கிவிட்டு இருக்கமுடியாது. இந்த நிலையில் மேலே நான் குறிப்பிட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறையினை  பொறுத்தவரை வாய்ப்புக்கள் கொட்டிக்கிடக்கின்றன. தகவல் தொழில்நுட்பம் எந்தளவுக்கு பாரம்பரிய வேலைவாய்ப்புக்களை குறைத்ததோ அதற்கு நிகராக அத்துறைசார்ந்த வேலைவாய்ப்புக்களை அதிகரித்து விட்டிருக்கின்றது.


இந்நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த இளைஞர்களையும் யுவதிகளையும் தயார்படுத்த  தனியார் துறை ஊடாக எவ்வாறு பங்களிப்புக்களை மேற்கொள்ள முடியும் என்பதை இங்கு நோக்கலாம். தகவல்தொடர்பாடல் தொழில்நுட்பம் எளிதில் எல்லா தரப்பினராலும் அணுகப்படக்கூடிய துறையாக இருக்கின்றது. இருப்பினும் இத்துறையில் எம்நாட்டில் தங்களை வேலைவாய்ப்புக்காக தயார்படுத்துபவர்களின் எண்ணிக்கை திறமையின் அடிப்படையில் மிகக்குறைவாக உள்ளது. அதிலும் பெண்களின் பங்கு மிக மிக குறைவாக உள்ளது.அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன அவற்றிற்கு நடைமுறைச்சாத்தியமான தீர்வுகளை வழங்குவதன் மூலம் ஓரளவுக்கேனும் முன்னேற்றலாம்

தனியார்துறையினர் தகவல்தொழில்நுட்பத்துறை தொழில் வாய்ப்புக்கள்  ஊடாக  இந்த வீழ்ச்சியினை குறைப்பதற்கும், பயிற்சிகளை வழங்குவதற்கும் இத்துறைசார்ந்த மேம்பாடுகளை மேற்கொள்வதற்கும் எந்த வகையில் உதவலாம் என்று இங்கு சிந்திப்பது சாலச்சிறந்தது. வடக்கில் இத்துறையில் ஒரு தொழில்முயற்சியாளனாய் 14 வருட அனுபவத்தின் அடிப்படையில் எனது கருத்துக்கள் அமைகின்றன.

தகவல்தொடர்பாடல் துறைசார்ந்த தனியார் துறையினர் தமது வருடாந்த சமூக பணிகளுக்கான ஒதுக்கீட்டில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விழிப்புணர்வு நிகழ்வுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதன்மூலமும்,அவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் பொதுநிறுவனங்களுக்கு அனுசரணை வழங்குவதன் மூலமும் சமூகத்தில் உள்ள தகவல் தொடர்பாடல் தொடர்பிலான அறியாமை மற்றும் தெளிவின்மை தயக்கம் போன்றவற்றை போக்குவதற்கு வழிசமைக்கலாம்.


பயிற்சிகளை பொறுத்தவரை தொழில்தேடும் இளையவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சிறப்பு பயிற்சிகளுக்கு தமது அனுபவங்களை நுட்பரீதியாகவும் வழிகாட்டல் போதனைகள் மூலமாகவும் வழங்க முடியும்.

பொதுவாகவே பயிற்சி என்றவுடன் கல்விசார் ஆளணியினர் மூலமாகவே பெரும்பாலும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதை விடுத்து கல்வித்தகுதிக்கு அப்பால் அனுபவம் துறைசார்ந்த வல்லமை திறன் ஆகியவற்றை  அடிப்படையாக கொண்ட தனியார் துறை நிறுவனங்களின் ஆளணியினைரை சர்வதேச உள்ளுர் தொழிற்துறை வல்லுனர்களை இந்த பயிற்சிகளில் உள்வாங்குவதன் ஊடாக அர்த்தமுள்ள தொழில் சார் பயிற்சிகளை வழங்கலாம். இதன் மூலம் தொழிற்சந்தையில் உள்ள சவால்களை எதிர்கொள்ளக்கூடியவர்களாக அல்லது சுயதொழில் முயற்சியாண்மையில் ஈடுபடக்கூடியவர்களாக  இளைஞர் யுவதிகள் மாற்றப்படலாம்.

இதைவிடவும் உள்ளகப்பயிற்சிகளை நிறுவனங்களில் வழங்குவதன் மூலமும் தனியார் துறை பங்களிக்க முடியும். ஆனால் தனியார்துறை எப்போதும் இலாபத்தினை முன்னிலைப்படுத்துவதால் அவர்களின் வணிகரீதியான செயற்பாடுகளுக்கு இவ்வாறான உள்ளக பயிற்சிகள் வழங்குகை பாதிப்பை ஏற்படுத்துவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். அதற்கு பரஸ்பரம் நன்மை கிடைக்கும் வகையில்  பயிற்சிக்காலக்கொடுப்பனவையும் அவர்களுக்கு தேவையான உபகரணங்களையும் , பயிற்சி பெறுவோருக்காக நிறுவனங்கள் தங்களை தயார் செய்யவேண்டிய வசதிகளுக்கான வளங்களையும் நிபந்தனையின் அடிப்படையில் தொண்டு நிறுவனங்களோ அரசாங்கமோ வழங்குவதன் மூலம் உள்ளக பயிற்சியின் ஊடாக உலகத் தரமான திறன்மிக்க மனித வலுவை வெளியீடாக பெறமுடியும்.


இதைவிட அரசாங்கமானது , தனியார்துறையினருக்கான வசதிகளை அதிகரிப்பதன் மூலமும், தொழில்பாதுகாப்பினை அனைவருக்கும் சமமானதாக்குவதன் மூலமும் , தனியார்துறைக்கும் அரசதுறைக்குமான வசதிகளில் இடைவெளியினை இல்லாதொழிப்பதற்கான சட்டங்களை இயற்றுவதன்மூலமும் , தங்கள் திறனை வளர்த்தால் தான் தங்களுக்கான வேலைவாய்பு உறுதிசெய்யப்படும் என்பதை இளையவர்களுக்கு உண்ர்த்துவதற்கு முன்வரவேண்டும்

அத்துடன் தொழில்திணைக்களம் அரச கட்டமைப்புக்கள் மற்றும் சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கான திணைக்களங்களின் கட்டமைப்புக்கள் வணிக முயற்சிகளுக்கான அரச ஆதரவுகள் கடன் திட்டங்கள்  அவற்றின் சேவைகள் இன்னும் இலகுவாக்கப்படவேண்டும். அரச கட்டமைப்புக்கள் யாவும் கணினிமயப்படுத்துவதன் மூலம் அரசிற்குள்ளும் தனியார்தறையிலும் தகவல்தொழில்நுட்பத்துறைசார் வேலைவாய்ப்புக்கள் மேலும் வலுப்பெறும்.


இதன்மூலம் தனியார்துறையின் பங்களிப்பு மேலும் அதிகரிக்கப்படும். தனியார்துறையினரும் உற்சாகமாக வேலைவாய்ப்புக்களை அதிகரித்து தங்களை மேம்படுத்தும் அதே வேளை வேலைவாய்ப்புக்களையும் உறுதிசெய்து கொள்ள வழிசமைக்கலாம்.


அரசாங்க துறையுடன் ஒப்பிடும்போது இலங்கையினை பொறுத்தவரை சவால்கள் மிக அதிகம். இதனால் தொழில்பாதுகாப்பினை உறுதி செய்வதற்கும் வேலைவாய்ப்பினை அதிகரிப்பதற்கும் உள்ளகப்பயிற்சிகளுக்கான சந்தர்ப்பங்களை வழங்குவதற்கும் தனியார் துறை பின்னடிக்கின்றது. அத்துடன் வருகின்ற வேலையாட்கள் திறன் குறைந்தவர்களாகவும் அடிப்படை தகவல் தொழில் நுட்ப அறிவினை மட்டும் கொண்டவர்களே அதிகமானவர்களாகவும், சான்றிதழ்களில் தெரியப்படுத்தப்பட்டிருக்கும் விடயங்களுக்கும் அவர்களின் உண்மையான தொழிற்திறனுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.


தொழில்நுட்பக்கல்லுாரிகளில் வழங்கப்பட்ட தொழிற்பயிற்சிகள் கூட பரீட்சைகளை மையமாக கொண்ட பெறுபேறுகளை கொண்டவையாகவும் தற்போதுள்ள தொழிற்சந்தையினை  எதிர்கொள்ள முடியாதனவாகவும் உள்ளன. அந்தப்பயிற்சிகள்  குறிப்பாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பயிற்சிகள் தமது தரத்தினை மீளாய்வு செய்யவேண்டிய கட்டாயத்திலும் உள்ளன.


தகுந்த பயிற்சிகள் தனியார் துறையின் ஒத்துழைப்புடன் வழங்கப்படும் பட்சத்தில் நிச்சயம் வேலைவாய்ப்பினை அதிகரிக்க முடியும்.நாட்டின் பொருளாதாரமும் கட்டியெழுப்பப்படமுடியும்.

இலங்கையின் வடக்கினை பொறுத்தவரை போரினால் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்டு மீண்டெழுகின்ற பிராந்தியமாக உள்ளது. அத்துடன் தனக்கே உரிய பாரம்பரிய மனநிலையான அரச பணி செய்ய வேண்டும் என்பதை நோக்காககொண்ட சமூககட்டமைப்பாகவும் காணப்படுகின்றது.

தற்போது உட்கட்டமைப்புக்கள் ஓரளவுக்கு சரிசெய்யப்பட்டு விட்டாலும் இன்னும் முடிவுறுத்தப்படாத சில அடிப்படைப்பிரச்சனைகளும் உள்ளன. இவற்றுக்கிடையில் தமது வேலையில்லாப்பிரச்சனைக்கும் இளையவர்கள் முகம் கொடுத்தவண்ணம் இருக்கின்றனர். அத்துடன் போரில் பாதிக்கபட்ட பலர் தொழில்வாய்ப்பினை தேடியவண்ணம் உள்ளனர் இவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு தகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ள தயக்கத்தை நீக்கி அவர்களுக்கும் ஏனைய இளைஞர் யுவதிகளுக்கும் தகுந்த தொழிற்பயிற்சியினை வழங்குவதில் கவனம் செலுத்தவேண்டிய தேவை உள்ளது.

நிறைய நிறுவனங்கள் இங்கேயே ஆரம்பிக்கப்பட்டு அடுத்தநிலைக்கு செல்ல முடியாமல் உள்ளன. புதிய முதலீடுகளை வெளியில் இருந்து தருவிக்கும் அதேவேளை ஏற்கனவே உள்ள நிறுவனங்களை மேம்படுத்தவேண்டிய தேவையும் உள்ளது.அவற்றுக்கான திறன் மேம்மாட்டு பயிற்சிகள் மூலதன நிதி மற்றும் வளங்களை அதிகரிப்பதற்கான உபகரண உதவிகள் தேவைப்படுகின்றன அதன்மூலம் அவற்றினை மேம்படுத்தி உலகத்தரம்வாய்ந்த சேவைகளை வழங்கக்கூடியவர்களாக மாற்றலாம். அவர்களுக்கான சந்தையினை விரிவாக்கலாம் அதன்மூலம் நம்பகரமான நீண்டகால வேலைவாய்பினை உறுதி செய்யமுடியும். அதை விட படிப்படியாக சமூகக்கட்டமைப்பில் உள்ள வேலைவாய்ப்பு தொடர்பிலான  பாரம்பரிய மனநிலைகளை மாற்றவும் வேண்டிய தேவை உள்ளது.


வடக்கினை பொறுத்தவரை தகவல்தொழில்நுட்பத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பொறுத்தவரை இரண்டு வரையான தேவைகள் உள்ளன. நடுத்தர நிறுவனங்களுக்கு சர்வதேசதரச்சந்தைக்கு உரிய சேவைகள் தயாரிப்புக்களை வழங்குவதற்கு தகுதிவாய்ந்த தகவல் தொழில்நுட்ப வேலையாட்கள் பற்றாக்குறை ஒருபுறமும் ,  புலம்பெயர்ந்து சென்று  அங்குள்ள பெருநிறுவனங்களில் வேலை செய்து  மீள தம் தாய்நிலத்தில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கோ அல்லது தென்பகுதியில்  பெருநிறுவனங்களில் வேலை செய்தவர்கள் அதே சம்பள அளவுகளில் தொழில் வாய்ப்பினை  இங்கு பெற்றுக்கொள்வதற்கோ உரிய பெருநிறுவனங்கள் போதுமானதாக இல்லாமையும் காணப்படுகின்றது. இந்த இடைவெளி நீக்கப்படவேண்டும்.

தகவல் தொழில்நுட்பத்துறை கல்வி நிறுவனங்கள் இன்னும் தங்கள் தரத்தினை மேம்படுத்தவேண்டிய தேவையில் உள்ளன.அனைத்து பாடநெறிகளும் பொதுக்கட்டமைப்பின் ஊடாக சரியாக நெறிப்படுத்தப்படவேண்டும். பிரபல தனியார் தேசிய கல்வி நிறுவனங்கள் கூட தமது கிளைகளை இங்கு பரப்பினாலும் அவர்கள் தங்கள் போதானாசிரியர்களின் தரத்தையோ பாடநெறிகளின் தரத்தினையோ சரியாக பேணுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

தனியார் துறையினருக்காக திறன்விருத்தி பயிற்சிகள் பெரும்பாலும் தென்னிலங்கையில் அல்லது தலைநகரினை மையப்படுத்தியே நடைபெறுவதால் தமது அலுவல்களை விட்டு அப்பயிற்சிகளுக்கு அங்கு பயணிக்கும் நிலையில் இங்குள்ளவர்கள் இல்லை அவையனைத்தும் வடக்கிலும் நடாத்தப்படவேண்டும்.

வேலைவாய்ப்பிற்கான  தேவையும் அதற்கான மனிதவலுவும் தேவையான அளவு இருந்தபோதிலும் வேலையாட்களின் திறன் மற்றும் அவர்களை உள்வாங்கக்கூடியளவிலான  சிறிய நடுத்தர நிறுவனங்கள் மீதான முதலீடுகளை கவரக்கூடிய வகையிலான உட்கட்டுமானம் மேலும் வளப்படுத்தப்படவேண்டியுள்ளது.

குறிப்பாக.வடக்கில் இருந்து வெளிப்பிராந்தியங்களுக்கான போக்குவரத்திற்கான நேரத்தை மிச்சப்படுத்த உள்ளுர் விமானநிலையமோ சர்வதேச விமான நிலையமோ வடக்கில்  இயங்கவேண்டிய தேவை உள்ளது. அதன்மூலம் சர்வதேச வளவாளர்களின் வருகை மற்றும் முதலீட்டாளர்களை மேலும் கவரக்கூடிய நிலை உருவாகும்.

சுயதொழில்முயற்சியாண்மை , புதிய பிராந்திய ரீதியிலான மற்றும் உலகளாவிய வணிகத்திட்டங்களை உருவாக்கல் குழு முயற்சிகளை எல்லாமட்டத்திலும் ஊக்குவித்தல் போன்றவற்றின் மூலம் வடக்கின் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு சந்தையினை விரிவாக்கலாம். 

தனியார் துறையில் தகவல்தொழில்நுட்பத்துறைசார்ந்த நிறுவனங்களின் பிராந்திய குழுமங்களை பலப்படுத்தி  தரம் , வேலைவாய்ப்பு நடத்தை ஒழுங்குகள் , திறன்விருத்தி  ,புதிய புத்தாக்கங்கள் ஆகியவற்றில் அவற்றின் நடவடிக்கைகளை  ஊக்குவிக்கவேண்டிய தேவை உள்ளது.அத்துடன் தரமான தொழிற்கல்வியையும் உறுதி செய்யவேண்டியுள்ளது.
சகல தரப்பும் ஒன்றிணைந்தால்  இது சாத்தியமே.

.முற்றும்.

My Entrepreneur Story Part 1

Posted by Thava செவ்வாய், 25 ஏப்ரல், 2017 0 comments

I started my Company (Speed IT net) virtually 14 years ago in 2003 .When I Start Technology #Startup company ,I don't have much money,My Investment was Rs 20,000 Value Credit card which was given by bank against my mother's Rs 25 ,000 Fixed Deposit.No other Help like now.
I worked in a company as Programmer for LKR 3000 before start the company.then left from there and moved to another company as senior programmer for LKR 9000 untill 2005.
Still I am wondering about my colombo life
- Few Floppy Diskettes
- Windows 98 OS Pentium III Computer
- Net Cafe for Internet Usage
- Room for Rent @ Colombo
When I launch my company physically @ Jaffna in 2005, I focused on Internet Based Development. At that time Web based Development was New to Jaffna.So many nights was left at my office alone.
We served for thousand of Clients locally and internationally. Developed Hundred of Sites, lot of Offline Online applications and trained significant amount of people. Taught ICT for hundred of students. I have not finished my journey yet.
However I proud to have Goodwill and Satisfaction rather than bank balance. I gave Opportunity for youths for their career path at our Company. Few of them misused lot of them used for good.Still I need to be settled in more things.I need to own few important things. But I never going to give up my journey.,I love my passion as #Entrepreneur ,even I could not earn big money and passed so many risk borders.
Keeping Honesty is big challenge for Business.I Lost money to save my words. Lost money for my non profit activities. But Still My Company Exist.
Nowadays there are so many Startup Eco Systems. Investment Opportunities,Degree Certificates,Technology resource Improvements. but Still People protesting for Government Job..

புலம்பெயர்ந்தவர்களே முதலிடுங்கள்!

Posted by Thava புதன், 16 அக்டோபர், 2013 0 comments

வடக்கு கிழக்கில் மக்களின் வாழ்வாதாரம்அபிவிருத்தி கல்வி மேம்பாடு போன்ற வற்றில் அக்கறை செலுத்தும் புலம்பெயர் உறவுகளில் பெரும்பாலானவர்கள் குறுகிய கால நன்மை தரக்கூடிய உதவிகளில் தான் நிறைய பங்களிப்பனை செய்து வருவதை அவதானிக்க முடிகிறது. மாணவருக்கு பயிற்சிக்கொப்பி ,விதைவைக்கு உதவிப்பணம் வாங்கிக்கொடுப்பதில் ஆரம்பிக்கிறது அவர்களின் உதவி. 

உதவி தேவையானவர்களைவிட வழங்குதற்காக முளைத்துள்ள உள்ளுர் உதவி வழங்கும் நிறுவனங்கள் , இணையத்தளங்களின் எண்ணிக்கை அதிகம். புலம்பெயர்ந்தவர்கள் நீண்டகால நோக்கிலான உதவிகளை செய்வதே நல்லது. குறித்த உதவி தொடர்ந்து வழங்கக்கூடிய அல்லது உதவிபெறுபவர்கள் தங்கி வாழ்வதில் இருந்த மீண்டு வரக்கூடிய நிலையினை எய்தும்வரையிலான உதவிகளாக இருப்பதற்கு உறுதிசெய்யவேண்டும்

அப்பியாசக்கொப்பிகளை வழங்குவதிலேயே அரசியலை ஆரம்பிக்கிறார்கள் இங்குள்ள அரசியல்வாதிகள். ஒரு வீடமைப்புத்திட்டத்தினை வழங்கலாம். ஒரு கல்விக்கூடத்தினை ஆரம்பிக்கலாம்(வெளிநாட்டுக்கு அனுப்புவோம் என்று கூறும் கூடங்களை அல்ல,வெளிநாட்டு பல்கலைக்கழகத்துக்கு ஆட்பிடிக்கும் நிலையங்களையும் அல்ல). பாடசாலை உபகரணங்களை உற்பத்திசெய்யும் நிறுவனங்களை ஆரம்பித்து வேலை வாய்ப்பினை கொடுத்து அதன் இலாபத்தினை மாணவர்களுக்கு உதவியாக வழங்கினால் நிறைய மாற்றம் ஏற்படும்.

நிதியங்களை ஏற்படுத்தி அதன் வட்டியில் இருந்து மாணவர் புலமைப்பரிசில்களை வழங்கலாம்,மருத்துவ உதவிகளை வழங்கலாம். புதிய மருத்துவமனைகளுக்கும் இது பொருந்தும்.பாதிக்கபட்ட மக்களுக்கு சலுகை வழங்கலாம்.


இதைவிட எம்மக்களின் அவலங்களை காட்டி புலம்பெயர் தேசங்கள் பலவற்றில் இன்னும் பணம்சேகரிப்பு நின்றபாடில்லை. சரி சேகரிக்கப்படுபவை உரியவர்களை உரிய திட்டங்களினை அடைகின்றனவாயின் சந்தோசப்படலாம் ஆனால் ஒரு சில தவிர பல சேகரிப்பவர்களின் பொக்கட்டுக்களுக்குள்ளேயே போகின்றன.அதனால் உண்மையாக சேவை செய்ய முன்வருபவர்களுக்கும் பின்னாளில் உதவி இல்லாது போகின்றது.

எனவே புலம் பெயர்ந்தவர்கள் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கிலான நிலையான முதலீடுகள் பற்றி சிந்திக்க வேண்டும். நீங்கள் நீர்கொழும்பில் கோட்டலுக்கு முதலீடு செய்ய இங்கு காங்கேசன்துறையில் கோட்டலுக்கு இராணுவத்தினர் முதலீடு செய்கின்றனர்.

பலர் இங்கு உறவினர்களால் பிழையாக வழிநடாத்தப்படுகின்றனர். தமது குறுகிய கால நலன்களுக்காகவும் உடனடி பணக்காரத்திட்டங்களுக்காகவும் முதலீடுகளை பிழையாக பயன்படுத்துகின்றனர்.முதலீட்டாளர்களின் சரியான நேரடி கண்பாணிப்பின்மையாலும் பொறுப்பற்ற முகாமைத்துவங்களால் தொழிற்துறைகள் தோல்வியடைகின்றன.

இங்கே கடைகளை கட்டுவதற்குதான் முதலீடுகள் வருகின்றனவே தவிர தொழில் முயற்சிகளுக்கு முதலீடுகள் கிடைப்பதில்லை. தொழிற்துறை ஆளுமையுள்ளவரிடம் பணம் இல்லை பணமுள்ளவரிடம் தொழிற்துறை ஆளுமை இல்லை. முதற்தோல்வியிலேயே முழுவைதையும் கைவிட்டோடுவதற்கு அவர்களுக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி அன்பளிப்புக்கள் வழிகோலுகின்றன. 


கட்டப்பட கடைத்தொகுதிகள் பல முற்பணங்களுக்காக காத்திருக்கின்றன. இன்னமும் கட்டிடங்கள் முளைக்கின்றன. உற்பத்தி மற்றும் சேவைகள் குறித்த தொழிற்துறை முயற்சிகளுக்கான முதலீடுகள் மிக மிக குறைவாக காணப்படுகிறது. வாங்கி விற்கும் முயற்சிகளுக்கு தான் முதலீடுகள் கரைகின்றன. சரியான திட்டமிடலின்றி வியாபாரம் செய்து விட்டு உலக ஒழுங்கில் தமது முயற்சிகளை செய்யாமல் விட்டுவிட்டு வங்கிகளை குறை கூறி சொல்லாமால் கொள்ளாமல் தப்பி ஓடுகிறார்கள்.

நீண்டகால பொருளாதார மாற்றத்தினை நோக்கிய , தூரநோக்குடைய தொழில் முயற்சிகள் குறைவு. ஒருவர் செய்தால் அதைப்பார்த்து மற்றவரும் அதேபோல செய்யும் மனப்பான்மை வளர்ந்துவருகின்றது.

புலம்பெயர்ந்தவர்கள் இங்கு முதலீடு செய்வதற்கு அதுவும் சரியான முகாமைத்துவம் சந்தைப்படுத்தல் கணக்கியல் நடைமுறைகள் திட்டங்கள் உடனான முயற்சிகளில் ஈடுபட முன்வரவேண்டும். 

அரசாங்கம் புலம்பெயர்ந்தவர் முதலீட்டை ஆதரிக்கின்றது அதில் ஏதோ உள் நோக்கம் இருக்கின்றது என பலர் பயப்படுகின்றனர். உண்மைதான் அரசாங்கத்தின் உள்நோக்கத்தில் முக்கியம் தனது அரசை பொருளாதார சரிவில் இருந்து காப்பாற்றவேண்டும். அதேவேளை தனது பங்குடமையினை குறிப்பிட்ட இடங்களில் உறுதிசெய்து அரசில் உள்ளவர்கள் தமது சொந்த வங்கி வைப்பினையும் அதிகரிக்கவேண்டும் என்பதுதான். இதை நாம் அறிவு பூர்வமாக பயன்படுத்தி எமது பிரதேசங்களை வளப்படுத்தலாம். தேவையற்ற பயத்தினை கையிடலாம். அதேவேளை பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தலாம்.


நவீன தோட்டங்கள் உருவாக வேண்டும். சூழலை சூறையாடாத கைத்தொழிற்பேட்டைகள் வரவேண்டும்.மாசு தரும் மற்றும் எம் இயற்கை வளங்களை இல்லாதொழிக்கும் தொழிற்சாலைகள் அவசியமில்லை.மீள் சுழற்சி முறையிலான் உற்பத்தி பொறிமுறை வளர்க்கப்படவேண்டும்

”நெல்லுக்கு இறைக்கும் நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் ” என்பதற்கிணங்க நன்மை அவர்களுக்கும் (அரசு) கிடைக்கபோகின்றதென்றாலும் நாம் எமது பிரதேசத்தை முதலீடுகள் மூலம் வளப்படுத்தி மக்களையும் ஒரு அடுத்த கட்ட வாழ்க்கை வட்டத்திற்கு அழைத்துவரத்தயங்கினால் தரவைக்காணிகளில் சிங்களக்குடியேற்றங்களை தடுக்கவே முடியாது. அப்பியாசக்கொப்பிகளையும் புத்தகப்பைகளையும் காலணிகளையும் தென்னிலங்ககையில் வாங்கி அன்பளிப்புச்செய்து கொண்டே இருப்போம். எமது மக்கள் புலம்பெயர்வார்கள் . புலம்பெயர் மக்களின் முதலீட்டில் தென்னிலங்கை வளப்படும். .சிந்திப்போம் செயல்படுவோம் இதுபற்றி நிறைய கருத்துக்களை தொடர்ந்து பதிவிடுகேின்றேன்

வெண்ணை திரண்டுவர தாழியை உடைத்துவிடாதீர்

Posted by Thava செவ்வாய், 24 செப்டம்பர், 2013 0 comments

அட இணையத்தளங்களில் கட்டுரை எழுதுறன் என்று காழ்ப்புணர்ச்சிகளை கக்குகின்றவர்கள் , வெளியில் தனிநாட்டு ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொண்டு தங்களது வெளிநாட்டு உள்நாட்டு இருப்பை காத்துக்கொள்ள பாடுபடுபவர்கள், விக்கி கல்லறை கட்டுறன் என்று கருத்து சொல்லிப்போட்டார் என பொய்ச்செய்தி பரப்புறவங்கள் , அவர் இவற்ற ஆள் அவா அவங்கட ஆள் என்று விக்கி , அனந்தி மற்றும் வேட்பாளர் பற்றி அவதூறு பரப்புறவங்கள் எல்லாரும் கொஞ்ச நாளைக்கு பொத்திக்கொண்டு இருந்தா நமக்கு ஏதாவது நல்லது நடக்கும்.

இப்பவே விமல் வீரவன்ச சவால் விடத்தொடங்கிவட்டார். வெண்ணை திரண்டுவர தாழியை உடைத்துவிடாதீர் உறவுகளே!

இன்னும் பதவியே அவங்கள் ஏற்கவில்லை அதுக்குள்ள ஆயிரம் புரளிகளும் விமர்சனங்களும் விடுறாங்கள். விக்கி பேட்டி கொடுக்குறத்துக்கு முதலும் கருத்து தெரிவிக்கிறத்துக்கும் ஏன் தும்முறத்துக்கும் முதல் உங்களைதான் கேட்கவேணும்போல! சுயாதீனமா அந்தாளை செயற்பட விடுங்க.உங்கட இணையத்தளங்களில் நீங்க மசாலா செய்திகள் போட்டு உழைக்கிறது காணாதா ஏன் எமது மக்களின் எதிர்கால இருப்பை பாழாக்குறீங்க.

மக்கள் என்ன ஆணை கொடுத்தவர்கள் என்று மக்களுக்கு தெரியும். வேட்பாளர்களு்க்கும் தெரியும் இதை மீண்டும் மக்களுக்கு நீங்கள் சொல்லிக்காட்டவேண்டிய அவசியமில்லை.உங்கட ஆய்வுகளை நிறுத்திவிட்டு வேறு ஏதாவது கதையுங்க. FB திறந்தா உங்கட குற்றச்சாட்டுக்களாலயும் கூட்டமைப்பு பற்றிய விமர்சனங்களினாலும் நிரம்பி வழியுது.எங்களிடமும் விமர்சனங்கள் உள்ளது . கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும். அதிலயும் மக்கள் கொதிப்புடன் உள்ளனர் என்று வேறு செய்தி போடுகினம். இங்க தாயகத்தில் மக்கள் வெற்றிக்களிப்பில் உள்ளனர் . அடுத்த கட்ட நகர்வுக்காக ஆறுதலாக அமைதியா உள்ளர் . சில வாக்காளர்கள் இதற்காக கிராமங்களில் அடிவாங்கியும் உள்ளனர். நீங்க ஒருத்தரும் ஆணிய புடுங்க வேணாம்...

அரசியலில் கதைக்க ஆயிரம் இருக்கு!அதை செய்யுங்க! வேணும் என்றால் எமது வெற்றியை கொண்டாடுங்கள் உலகமெங்கும் எடுத்துச்சொல்லுங்கள்! பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களாலால ஏதாவது புதிய வடக்கு அரசின் ஊடாக என்ன செய்யலாம் என சிந்தியுங்கள்.அடுத்த நகர்வுகள் குறித்து சாத்தியமான முன்மொழிவுகளை முன்வையுங்கள்.

வெற்றிக்கு உழைத்துவிட்டு அடுத்த நகர்வுகளுக்காக இருக்கும் உண்மையான அமைதியான உணர்வாளர்கள் நிறைய பேர் உலகமெங்கும் உள்ளர் உள்ளனர் அவர்களை இப்பதிவு குறிக்கவில்லை! பொறுத்தருளவும்.

நடந்து முடிந்த வடமாகாணசபை தேர்தலில் வரலாற்று வெற்றிக்காக கிராமங்கள் தோறும் மிகவும் அர்பணிப்புடன் தொழிற்பட்டு வாக்களிப்பு வேகத்தினை கூட்டியும் விழிப்புணர்வினையும் ஏற்படு்த்திய இளைஞர்களுக்கு இந்நாளில் நன்றிகூறவேண்டும்.தள்ளாத வயதிலும் வாக்களித்த பெரியவர்களின் விருப்பையும் மதிக்கவேண்டும்.

இளைஞர்களின் பங்கின்றி எதுவும் இல்லை என்பதை இது எடுத்துகாட்டியிருந்தது.அதற்காக அவர்கள் எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள் நிறைய.

எப்படியிருப்பினும் வடக்கு தேர்தல் நடைபெற பல தரப்புக்கள் உதவி செய்திருக்கையில் வெற்றியை தீர்மானித்தது நமது வடமாகாணத்தில் வாக்களித்த மக்களே! வாக்குரிமையினால் கிடைத்த வெற்றியான அதில் எவரும் உரிமை கோர முடியாது! இறுதி பாதைக்கான கொள்கை மாறியிருப்பின் அல்லது மக்களின் கோரிக்கைக்கு மாறானதாக இருந்திருப்பின் இந்த ஆணையினை மக்கள் வழங்கியிருக்கமாட்டார்கள்! தேர்தல் விஞ்ஞாபனம் என்ன சொன்னதோ அந்த ஆணையுடன் வேறு நீங்கள் விரும்பும் ஆணைகளை இணைத்து அடுத்த கட்ட அரசியல் நகர்வினை யாரும் குழப்பிவிடவேண்டாம்!

எதனையும் நேரடியாக அடைந்துவிடமுடியாது சில நகர்வுகளின் ஊடாக படிபபடியாகவே பெறமுடியும்.

எமது மக்கள் தற்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை ஒரு பதில் சொல்ல வேண்டிய அமைப்பாக மாற்றிவிட்டிக்கின்றார்கள். விக்கினேஸ்வரனின் கையில் முக்கிய பொறுப்பினை ஒப்படைத்திருக்கிறார்கள். ஐயாவின் இலக்கம் என்ன என்று கேட்டு கேட்டு வாக்கு போட்டதை நான் நேரில் அவதானித்தேன்.

ஒரு இனத்தின் தலைவிதியை அவ்வினத்தின் ஒருதலைமுறை மட்டும் நிர்ணயித்து விடமுடியாது. வயது வந்தவர்களை முற்றாக ஒதுக்கிவிடவும் முடியாது என்பதையும் இத்தேர்தலின் ஆணை எமக்கு எடுத்தியம்புகின்றது.அதை இளைஞர்கள் உணர்ந்துவிட்டார்கள் என்றே தோன்றுகின்றது.எம்மை நாம் சுயமீளாய்வு செய்யவும் வேண்டிய தேவையினை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த அடுத்தகட்ட அரசியல் நகர்வுக்கு எம்மை கொண்டுவந்து விட்ட பெருமை நிச்சயமாக நாங்கள் நேசித்த அந்த தியாகிகளையே சாரும்.அதற்கான நாம் கொடுத்த விலை கணிப்பிடமுடியாதது. வெண்ணை திரண்டு வருகையில் யாரும் தாழியை உடைக்க மாட்டார்கள் என நம்புவோம்.

என்னைப்பொறுத்தரை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எடுத்தார் கைப்பிள்ளையாக இருக்கமாட்டார் என நம்புகின்றேன். அவருடைய சமீபத்தைய கூற்றுக்கள் செயற்பாடுகள் அதனையே எடுத்துக்காட்டுகின்றன.இறுதியாக கூறியிருந்தார் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளவேண்டும் என்று. அதனையும் கூட எம் மக்கள் ஏற்றிக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.காலம்காலமாக புறக்கணிப்புக்களின் ஊடாக நாம் பெற்ற உரிமைகளைவிட இழந்த உரிமைகள் ,நன்மைகள் கூட.

அரசும் அதனோடு இணைந்து இயங்கும் அரசியல்வாதிகளும் தமது நிலைப்பாட்டையும் செயற்பாடுகளையும் மீள்பரிசீலணை செய்யவேண்டிய கால கட்டத்தில் இருந்துகொண்டிருக்கின்றனர்.அவர்கள் தமது சலுகை மற்றும் அபிவிருத்தி அரசியலின் பதிப்பை மேம்படுத்தி அடுத்த தீர்வு அரசியலுக்கான புதிய பதிப்பினை வெளியிடவேண்டியதன் தேவையினை இது உணர்த்தியிருக்கிறது.சிந்திப்பார்களா? அரசு மட்டுல்ல நம்மவர்களும்! இது காலத்தின் தேவை! இவ்வுலகில் மாற்றம் ஒன்றே மாறாதது! -தவா

2009 இறுதி யுத்தத்தில் பலர் கண் முன் சரணடைந்தவர்களை நாம் பொறுப்பேற்கவே இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போல அரசு நீதி மன்றில் அறிக்கை சமர்ப்பித்திருப்பது மிக மிக தவறானது. 

போட்டுட்டம் என்று சொல்லி பிரச்சனையினை முடிவுக்கு கொண்டு வந்து பொதுமன்னிப்பு கேட்டிருந்தால் கூட மக்கள் மன்னித்திருக்கக்கூடும் . பொறுப்பு வாய்ந்த , தமிழ் மக்கள் மீது அக்கறையுள்ள இதயசுத்தியுடைய அரசு மனித உரிமைகளை மதிக்கின்ற அரசாக இருந்திருப்பின்

அந்த நாட்டின் அரச தலைவர் என்ற ரீதியில் மன்னர் மேதகு மகிந்த மக்களிடம் இறுதியு்த்தத்தில் தெரிந்தோ தெரியாமலோ கொல்லப்பட்ட மக்களுக்காக பொறுப்பேற்று மன்னிப்பு கோரியிருக்கலாம் அப்படி இருந்திருப்பின் அவரின் உயர்ந்த பண்பை எடுத்துக்காட்டி சர்வதேச சமூகத்தில் நன்மதிப்பினை ஏற்படுத்தியிருக்கும்.

அதிகுறைந்தது அமைச்சர்களின் பொறுப்பற்ற பேச்சுக்களையாவது அடக்கிவைத்திருக்கவேண்டும்.அவர்கள் எமது மக்களை மட்டுமல்ல நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளையும் கொச்சைப்படுத்துகின்றனர். இது நாட்டு மக்கள் என்றவகையில் எமக்கும் அபகீர்த்தியே!

இராவணா சக்தி போன்ற இனவாத அமைப்புக்களுக்கும் சம்பிக்க ரணவக்க போன்ற அமைச்சர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து அவர்கள் கூறியதற்காக நடவடிக்கை எடுக்கும் அரசு , அவர்கள் சார்பாக கருத்துக்களை தெரிவிக்கும் அரசுதலைவர் என இலங்கை நாட்டின் தேசிய நலன் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.

பொறுப்புக்கூறல் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் இனங்களுக்கிடையில் பாரபட்சம் போன்ற விடயங்களில் நமது நாடு இவ்வாறு நடந்து கொள்வது அந்த நாட்டின் வரிகளை செலுத்தும் குடிமக்கள் என்ற ரீதியில் எமக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதில் வியப்பில்லை .இதை அரசு புரிந்து கொள்ளுமா?

இந்த வகையிலான நாட்டின் தேசிய நலன் பற்றி கவனம் செலுத்த வழியற்ற தமது அன்றாட வாழ்க்கைக்கு அடுத்தவேளை உணவுக்கு தீர்வு தேடிக்கொண்டிருக்கும் ஒருதொகுதி மக்களுக்கு அரசின் உதவிகள் அபிவிருத்திகள் நிச்சயம் தேனாமிர்தமாக இருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை.இது ஒருபுறமிருக்க

எல்லாவற்றுக்கும் நீங்கள் தான் காரணம் நாங்கள் தான் காரணம் என்று அரசு தமது பொறுப்புக்களை தட்டிக்கழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரச்சனை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டு உடனடியாக அவற்றுக்கு முடிவுகட்டி அபிவிருத்திப்பாதையில் சென்றால் நிச்சயம் இலங்கை ஆசியாவின் ஆச்சரியமாகலாம் பொருளாதார வளர்ச்சி பெறலாம்.இல்லையெனில் அது உலக அதிசயமாகவே இருக்கும் . எந்த விடயத்தில் உலக அதிசயம் என்பது தான் கேள்விக்குறி. மன்னர் மனம் மாறுவாரா? மன்னிப்பு கேட்பாரா?

-யாழ்ப்பாணம் வரவுள்ள மன்னருக்கு ஒரு வாக்காளரின் பகிரங்க மடல்

கடந்த வாரம் இடம்பெற்ற யாழ் பல்கலைக்கழகமாணவர் பிரச்சனை தொடர்பான பதிவு ஒன்று மாணவர்களிடையே குழப்பத்தினை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முற்படுகின்றது என நான் கருதுகின்றேன். பலர் பல்கலைக்கழகத்தினை தமது தேர்தல் வெற்றிக்கு பயன்படுத்துவதற்காக மறைமுகமாக தொழிற்படுகையில்அதற்கு இப்பதிவு துணைபோவதாகவே படுகிறது

கல்விக்கு ஒழுக்கம் பேணப்படவேண்டியது முக்கியம்

எங்கு தவறு நிகழ்ந்தாலும் தண்டணை வழங்கப்படவேண்டும் என்பதும் அவை தட்டிக்கழிக்கப்படக்கூடாது என்பதும் முக்கியம் அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இதில் யாரும் விதிவிலக்கல்ல. மாணவர்களுக்கு அநீதி நடைபெற்றிருந்தால் அதை தட்டிக்கேட்டு இறுதி வரை பின்வாங்காமல் நீதி கேட்க வேண்டியது முக்கியம் .அதை அவர்கள் செய்யாதிருந்தால் அவர்களின் இயலாமை.பிறகெதற்கு ஒன்றியங்கள்?. அவரவர் பிரச்சனையினை அவரவர் சாரந்த சமூகங்கள் தட்டிக்கேட்பது பொருத்தமானதே! மற்றையதரப்பினர் கேட்கவேண்டும் என எண்ணுவது கையாலாகாத்தனம்!
.
இதேபோல விரிவுரையாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்களுக்கும் நீதி வழங்கப்படவேண்டியது அவசியம். அவர்களது ஒன்றியங்களது கடமையும் கூட .பாவம் எதிர்காலம் பாதிக்கப்படும் அது மதுவெறியில் இடம்பெற்றது வழமையாக இடம்பெற்றது என்று எல்லாம் காரணம் சொல்லி தண்டணையில் இருந்து தப்ப முடியாது .நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே!

மாணவர்கள் குறித்த சம்பவ நாள் அன்று அடாவடி செய்தவேளை அவதானித்துக்கொண்டிருந்த பாதுகாப்பு கொடுக்க முற்பட்ட ஆண் பெண் விரிவுரையாளர்கள் கூட தகாத தூசண வார்த்தைகளால் பேசப்பட்டனர் உருளைக்கட்டடைகளால் தாக்குவதற்கு முயற்சிக்கப்பட்டு தடுக்கப்பட்டனர் என அறியமுடிந்தது. இதனை எந்தஒரு மனச்சாட்சி உள்ள மனிதரும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏன் வம்பு என்று இன்னும் பல பெண் விரிவுரையாளர்கள் முறைப்பாட்டினை பதிவுசெய்யாமல் பின்னடித்துகொண்டிருக்கின்றதாகவும் அறியவருகின்றது

இதே விடயம் தென்னிலங்கையில் இடம்பெற்றிருந்தால் குறித்த மாணவர்கள் உடனடியாக இடைநிறுத்தப்பட்டிருப்பர். ஒழுக்கம் எங்கு பிறழ்வு பட்டாலும் உரிய தண்டணைவழங்கப்படவேண்டும். தயவு செய்து இந்த பல்கலைநாதம் கணக்கினை நடாத்துபவர்கள் பொறுப்புணர்வுடன் தொழிற்படவேண்டும்.

ஒழுக்கத்தினை மீறி காட்டுமிராண்டித்தனமாக தொழிற்படும் இவர்கள் எப்படி நாளைய தலைவர்களாக முடியும்? எப்படி மக்களுக்கு அதிகாரிகளாக சேவை செய்ய முடியும்? எப்படி இனத்தின் அரசியல் இருப்பினை தீர்மானிக்கமுடியும். ? சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும் அவர்களுக்காக ஒட்டுமொத்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட கூடாது.

இதேவேளை மாணவர்களின் பிரச்சனையினை எப்படியாவது தமக்கு சாதகமாக்கிகொள்ள அரசில்வாதிகள் காத்திருப்பதால் என்னவோ ஊடகங்கள் பெரிதுபடுத்தவில்லை என நம்புகின்றேன்.

தாமதிக்கப்பட்ட நீதியும் மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பானது!
கல்வியே எங்கள் மூலதனம்

குறிப்பு:- கடந்த வருடம் மாணவர்கள் காவல்துறையினரால் படைத்தரப்பால் தாக்கப்பட்டபோது மாணவர்களுக்காக ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமூகமே குரல் கொடுத்திருந்தமை நினைவுகூரத்தக்கது.

”ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” -வள்ளுவர்.

தமிழ்நாட்டில் அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலமொழிகவழிக்கல்வி தொடர்பில் அண்மையில் பலரிடையே வாதப்பபிரதிவாதங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. இது தொடர்பில் நானும் முகப்புத்தகத்தில் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றேன் அவற்றினை இங்கே தொகுக்கின்றேன்.

இரு மொழி வழிக்கல்வியையும் அறிமுகப்படுத்துவதில் தப்பில்லை. எமது இலங்கை நாட்டிலும் இரண்டு மொழிகளிலும் விரும்பிய மொழியில் கல்விகற்கும் முறைமை தேர்ந்தெடுக்கப்பட்ட வளமுள்ள பெரிய பள்ளிகளில் அறிமுகப்படுத்தபட்டுவிட்டது. அதை தெரிவுசெய்யும் உரிமை என்னைப்பொறுத்தவரை பெற்றோர்களை விட மாணவர்களிடம் வி்ப்படுவதே மேலானது என நான் கருதுகின்றேன். 

தாய் மொழியில் கற்கும் சுக அனுபவமும் புரிதலும் வேற்றுமொழியில் கிடையவே கிடையாது.இதை மறுதலிப்பவர்கள் சுத்த முட்டாள்கள்.வரட்டுக்கௌரவம் கொண்டவர்கள் என்றே நான் கூறுவேன். தாய்மொழிக்கல்வியில் சிறந்த அபிவிருத்தியை பெற்ற தேசங்கள் நிறைய உண்டு.இதற்கு யப்பான் சீனா நாடுகள் சிறந்த உதாரணம் .

ஆங்கில அறிவு வேண்டும் அது ஒரு மொழிக்கல்வியாக கற்பிக்கப்படவேண்டும் அதன் முக்கியத்துவமும் மாணவர்களுக்கு உணர்த்தப்படவேண்டும்.அதற்காக தமிழ் மொழியில் கற்றவர்கள் நல்ல நிலையில் இல்லை வேலைவாய்ப்பில்லை என்று கூறுவதெல்லாம் யாரையோ திருப்திப்படுத்த முன்வைக்கப்படும் வாதங்கள்.

ஆங்கிலமொழிக்கல்வியை முற்றாக எதிர்பவர்களுக்கு எதிராக இங்கு கருத்துக்களை முன்வைப்பவர்கள் சரியாக காரணங்களை முன்வைக்கவேண்டுமே தவிர தாய்மொழிக்கல்வியையும் அதனை பெற்றவர்களையும் கொச்சைப்படுததும் வகையிலும் வாதம்செய்யக்கூடாது.

எனது குடும்பத்தில் சகலரும் தாய்மொழியில் கல்வி கற்பதையே ஊக்குவிப்பேன் அத்துடன் ஆங்கிலமொழிக்கல்வியை இரண்டாம் பாடமாக ஊக்குவிப்பேன்.அரசாங்கங்கள் ஆய்வுகளின் அடிப்படையில் பொதுநலன் அப்படையில் தான் திட்டங்களை முன்மொழியவேண்டும்.ஒரு சிலரின் நலன்களுக்காக தொழிற்பட முடியாது.

என்னைப்பொறுத்தவரை அரசுகள் தாய்மொழிக்ல்வியை ஊக்குவிகவேண்டும். இதேவேளை ஆங்கிலமொழிக்கல்வியை விரும்புவர்களின் உரிமையினை மதித்து சந்தர்ப்பங்களை வழங்கவேண்டும் அவ்வளவுதான்.அதற்காக ஆங்கிலமொழிக்கல்வி தான் இனித்தேவை என்ற வாதம் முன்வைக்கப்படக்கூடாது


அனுபவத்தில் அறிந்த உண்மை தான் நான் கூறுவது என்னுடைய நண்பர்கள் மாணவர்கள் என்னுடைய ஆசான்கள் மூத்தவர்கள் மற்றும் நான் முன்மாதிரியாக பார்க்கின்ற மனிதர்கள் ஏன் கண்டுபிடிப்புக்களை செய்த விஞ்ஞானிகள் அனைவரும் தமது சொந்த தாய்மொழியில்தான் தொடக்க கல்விபயின்றவர்கள். அவர்கள் எவரும் கெட்டலைந்துபோகவில்லை. 

தமிழ்மொழிக்கல்வியை வற்புறுத்துபவர்களை நாம் பிரித்துப்பார்க்கமுடியாது.குறிப்பாக அரசியல்வாதிகளை நாம் கணக்கில் எடுக்கவே தேவையில்லை அவர்கள் மக்களின் எண்ணஅலைகளுக்காக பேசுகின்றவர்களே தவிர அவர்களின் சொந்த வாழக்கைக்கும் பேசுவதற்கும் சம்பந்தம் இருப்பதில்லை. எதையும் நாம் பகுத்தறியும் போக்கும் இருக்கவேண்டும். அவர்கள் ஆங்கிலமூல கல்வியை கற்றுவிட்டு பேசுகின்றார்கள் என்பதற்காக உண்மைகளை நாம் மறைக்கமுடியாது.

ஒரு தமிழராக உங்கள் மனச்சாட்சியை தொட்டுச்சொல்லுங்கள். ஆங்கிலத்தில் ஒன்றைப்பற்றி ஒரு வல்லுனர் எங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் அதனையே தமிழிலும் அழகாக விளங்கப்படுத்துகின்றார் எனில் எது உங்களுக்கு கூடுதலாக புரியும் ?

 நான் கணினி படித்தேன் தொடக்கத்தில் ஆசிரியா் தமிழில் கற்பித்தார் மேற்படிப்புக்கு வரும்போது ஆங்கில மூலம் தான் கற்பிக்கப்பட்டது. எனக்கு நான் தமிழில் கற்றதை வித ஆங்கிலத்தில் கற்றதில் புரிதல் குறைவாக இருந்தது. அதேவேளை நான் சிறுவயதில் கற்ற ஆங்கில மொழி ஆங்கில மூலம் பின்னர் கற்க வழிசெய்தது. இப்போதும் தமிழில் நான் எனது மாணவர்களுக்கு விளங்கப்படுத்தும்போது அவர்களுக்கு புரிகிறது. ஆங்கில மொழி மூலத்தில் பலருக்கு பரீட்சைக்கு விடை எழுதும்போது தெரிந்ததை எழுத முடியாமல் திணறுகின்றனர் இதேபோல தெரிந்ததை சொல்லமுடியாமல் திணறுகின்றனர். எல்ல வகையிலும் தாய்மொழி தவிர்ந்த மொழிகளில் கற்றல் நடவடிக்ககைகள் செய்யும்போது மனப்பாடம் தான் முன்னிலை வகிக்கின்றது. புரிதலுடன் கூடிய பிரயோகம் பின்னிற்கிறது.

சிறந்த வளவாளர்கள் இருந்தால் தாய்மொழிக்கல்வி சிறப்புப்பெறும்.அதற்கு தாய்மொழிப்புலமையுள்ள வளவாளர்கள் இல்லாமல் போவது தான் காரணம் ஆகமொத்தத்தில் தாய்மொழிக்கல்வி தரம் குறைவதற்கு வேற்றுமொழிக்கல்விதான் காரணமாகின்றது. அதற்கு தமிழர்களின் வரட்டு கௌரவம் வழிசெய்கிறது.

தமிழ்மொழிமூலக்கல்வி என்று சொல்வதை விட தாய்மொழிமூலக்கல்வி என்று கூறுவதே சிறந்தது. இன்று எமது மொழி சிதைக்கப்படுவதற்கு ஊடங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவைகள்தான் பல்வேறுவழிகளிலும் மனங்களை மாற்றி ஏதோ ஆங்கிலம் மற்றும் ஆங்கிலமொழிக்கல்வி தான் எதிர்காலம் என்ற எண்ணத்தினை மாற்றாமல் விதைக்கின்றன. அவைமாறினால் தான் மனங்கள் மாறும்.இந்த நிலமை இந்தியாவில் கூடியதாக்கத்தினை ஏற்படுத்திவிட்டது நீண்டதூரம் பயணித்தும் விட்டது. இலங்கையில் அப்படிஒரு நிலை வரும் என்று நான் எண்ணவில்லை.

இது நிற்க ஆங்கிலமோழிமூலக்கல்வியை தெரிவுசெய்பவர்களது உரிமையினை மறுப்பதிற்கில்லை இது அவர்களின்விருப்பம். ஆனால் அது தான் இனி எதிர்காலம் அது அன்றி சாதிக்கமுடியாது என்பது ஏற்கமுடியாத வாதம்.


தொடக்ககல்வியின் தரம் பேண நவீனம் புகுத்தப்படவேண்டும். அந்த நவீனம் ஆங்கிலமல்ல! தொழில்நுட்பம் மற்றும் பௌதீகவளம் ஆகியவற்றில் தான் அந்த தேவை உள்ளது இதை செய்யுங்கள். தரம் மேலோங்கும் . அதை விடுத்துஆங்கிலம் தான் வாழ்க்கையிலும் கல்வியிலும் நவீனம் என்பது சுத்த மடத்தனம்!

ஒரு கற்கைநெறியினை எந்த மொழியில் கற்றோம் என்பதல்ல பிரச்சனை அதை எந்தளவுக்கு புரிதலுடன் கற்று அந்த கற்கைநெறியின் இலக்கினை அடைந்தோம் என்பதுதான் பிரச்சனை இதனை ஒவ்வொருமட்டத்திலும் இருக்கின்றவர்கள் உணராதவகையில் ஆங்கில மோகத்தினை தடுக்கமுடியாது. இசைக்கு போல அறிவுக்கும் மொழி கிடையாது என்பதை நாம் உணரவேண்டும். இலகுவாக அறிவைப்பெருக்க வழியிருக்கையில் ஏன் இந்த மேட்டிமை மொழி மோகமோ!

தமிழை வாழ வைப்பதற்கும் தமிழில்(தாய்மொழி) கல்விகற்பதற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது  மாணவர்களுக்கு ஆங்கிலக்கல்வி அவசியம் எ்னபது உண்மை அதற்கு ஆங்கில மொழியை நன்றாக கற்பிக்கக்கூடிய ஆசான்களை நியமியுங்கள் அதை விடுத்து பைத்தியக்காரத்தனமாக கருத்து தெரிவிக்கவேண்டாம்.உங்களுக்கு ஆங்கில வழி கல்வி வேண்டும் என்றால் வரவேற்றுக்கொள்ளுங்கள் .அது உங்கள் உரிமை இரண்டு மொழிக்கல்வியியும் அறிமுகப்படுத்தலாம் அதற்காக இப்படி தாய்மொழிக்கல்வியை கேவலப்படுத்தாதீர்கள்


ஊடகங்கள் என்று சொல்லிகொள்வன முதலில் விபச்சாரம் என்பதற்கான வரைவிலக்கணத்தினை தெரிந்து கொள்ளவேண்டும். தமது தளத்தினையோ ஊடகத்தினையோ பிரபல்யப்படுத்துவதற்காக யாழ் பெண்கள் குறிப்பாக மாணவிகளை அனைவரையும் விபச்சாரிகளாக சித்தரிக்கும் முயற்சியில் சில இணையத்தளங்கள் செய்தி வெளியிடுகின்றன.தமிழ்தேசிய ஒருமைப்பாடுகுறித்த குளறும் இணைய ஊடகம் கூட அதைத்தான் செய்கிறது. அதை ஊடக விபச்சாரமாக கொள்ளலாம்.

தவறான உடலுறவுகள் தவிர்க்கப்படவேண்டும் என்பது உண்மையே! மன்மதராசாக்கள் மற்றும் மயங்கும் பெண்கள் தண்டிக்கப்படவேண்டும் அவர்களுக்கு சரியான பாலியல் கல்வி ,விழிப்புணர்வுக் கல்வி வழங்கப்படவேண்டும் .தவறான உறவுகளை காதல் வயப்படுதல்களை தடுக்கும் வகையிலான ஆக்கங்களையோ ,ஆய்வுகளையோ விழிப்புணர்வுப்பிரச்சாரங்களையோ அவைகள் சரியான முறையில் முன்னெடுப்பதில்லை . உதாரணங்களை பட்டியல்படுத்தும் கட்டுரைகளை தான் வெளியிடுகின்றன.

மைனர்களின் லீலைகள் இன்றுமட்டுமல்ல இங்குமட்டுமல்ல அன்றும் எங்கும் நடந்தவை நடப்பவைதான் அதை குறைக்க நிறைய வழிகள் உள்ளன.  கலாச்சாரம் கலை என்பன வேறு பதங்கள் இவற்றினை இங்கு கொண்டுவந்து குழப்பிக்கொள்ளக்கூடாது. ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப மட்டத்தில் சமூக மட்டத்தில் விழிப்புணர்வுகளை செய்து வர படிப்படியாக தவறான நடத்தைகள் குறையும். மனித சமூகத்தில் அதனை அறவே அழிக்கமுடியாது.

ஒன்றை நடவாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் நடந்தபின் இன்னொருமுறை நடாவாமல் இருப்பதற்குரிய வழிசெய்யப்படவேண்டும் தவிர இப்படியெல்லாம் செய்யலாம் என்ற தகவலை வழங்குவதாக அமையக்கூடாது.

ஆனால் ஒ்ன்றை அறிந்தவுடன் அனைத்தையும் செய்தியாக்குவதில் குறியாக உள்ளன.பாதிக்கப்படுபவர்கள் குறித்து துளியேனும் கவலைப்படுவதில்லை. மாணவி அல்லது மாணவன் என்று அடைமொழி வேறு போடுவார்கள்.படங்களையும் போடுகிறார்கள். கமெரொ தூக்கியவன் எல்லாம் ஊடகவியலாளன் அல்ல.ஊடகவியலாளர்களின் போக்கை பாரக்கும் போது செய்தி ஒன்றை வெளியிடும் நேர்த்தி குறித்து எந்த ஊடக பயிற்சிமையமும் பயிற்சிவழங்குவதாக உணரமுடியவில்லை!.

வடமாகாணதேர்தலுக்காக  தயவுசெய்து தமிழினைத்தின் கற்பை விற்காதீர்கள். உண்மையில் எங்கு  இனி நடக்கும் என்று அலைவதை விடுத்து அப்படி நடக்காமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று சிந்தியுங்கள். காவல்துறையும் அதைத்தான் செய்கிறது.கலாச்சார(?) காவலர்களும் கண்டுபிடிப்பதற்காகத்தான் அலைகிறார்கள் . குற்றங்கள் காணாமல்போவதற்கு வழிசெய்யவில்லை. அதை யாராவது செய்தார்களா? செய்வார்களா? தண்டணைகளும் அவமரியாதைகளும் ஒரு போதும் குற்றங்களை குறைக்கப்போவதில்லை!

நன்றும் தீதும் பிறர் தர வாரா!

Posted by Thava வெள்ளி, 11 ஜனவரி, 2013 0 comments


சவூதியில் பணிப்பெண்ணாக கடமையாற்றி சிசுவொன்றை கொலை செய்ததாகத் தெரிவித்து மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையின் ரிசானா நபிக்கிற்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டடது இன்று சமூகவலைத்தளங்களில் அதிகமாக பேசப்படும் விடயமாக உள்ளது. பல்வேறு தரப்பினராலும் கண்டணத்திற்குள்ளாகிய விடயமாகவும் உள்ளது.

2005 ஆம் ஆண்டு தனது வேலைதருனர்களின் குழந்தையை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு சவுதி அரேபியாவின் தவாத்மி பிரதேசத்தில் சிறை வாசம் அனுபவித்து வந்த ரிசானாவின் விடுதலைக்காக பல தன்னார்வ சமூக சேவை நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு கோரிக்கைகளை முன்வைத்த போதும் 9.1.2013  காலை ரிசானா நபீக்கிற்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

.இவ்விடத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மன்னிப்பு மட்டுமே அவரைக்காப்பற்றியிருக்கக்கூடிய விடயமாக இருந்தது. சிசுவின் தந்தை மன்னித்திருந்தபோதிலும் தாய் மன்னிக்கவில்லையாம் உண்மையில் அந்த தாயின் கல்நெஞ்சமே அந்த தண்டனை நிறைவேற்றத்திற்கு முழுமுதல் காரணம் ஆகும் என கூறப்படுகிறது

ஷரியா சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ரிசானா விடயத்தில் சந்தர்ப்பங்களும் சாட்சியங்களும் அவரைக் குற்றவாளியாகியுள்ளது. அதனால் அவருக்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது . ஒரு குழந்தை மரணிப்பதற்கு உண்மையில் ரிஸானா காரணமாக இருந்திருந்தால் இந்தத் தண்டனை மூலம் அவர் இவ்வுலகிலேயே தூய்மைப்படுத்ப்பட்டு இறை சந்நிதானத்தை அடைந்துள்ளார். அவரின் எண்ணத்தின் அடிப்படையில் அவர் நிச்சயமாக உயர்ந்த சுவர்க்கத்தை அடைவார்.அவர் எந்தக் குற்றமும் செய்யாமல் அநியாயமாகத் தண்டிக்கப்படிருந்தால் அதுவும் அவருக்கு நன்மையே, அல்லாஹ்விடத்தில் அதற்கான சிறந்த கூலியைப் பெற்றுக்கொள்வார் என முஸ்லிம் அடிப்படை வாதிகள் கூறுகின்றனர்

அறிந்து கொண்டே அவருக்கு யாரும் அநீதி இழைத்திருந்தால் நிச்சயம் அவர்கள் அநியாயக்காரர்கள். அல்லாஹ்வின் கடுமையான தண்டனையிலிருந்து அவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது.என்று அவர்கள் ஆறுதல் சொல்கிறார்கள்

18 வயதை அடைந்த ஒருவர்தான் குற்றவாளியாகக் கருதப்படுவார் என்பது இஸ்லாமியச் சட்டம் கிடையாது. அது உலகச் சட்டம். பருவ வயதுதான் இஸ்லாத்தின் அளவுகோல்  என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.

காட்டுச் சட்டங்கள் ஆளும் நாடுகளில் வாழ்த்துகொண்டு முஸ்லிம் அல்லாதவர்கள் இதுதான் சந்தர்ப்பம் என்று இஸ்லாமிய ஷரியா சட்டத்தை விமர்சிக்க முற்படக்கூடாது. உலகிலேயே பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை, அனாச்சாரங்கள், கீழ்சாதிக் கலாச்சாரங்கள் குறைந்த நாடுகள் அரபு நாடுகளாகும் என அந்த முஸ்லிம் அடிப்படைப்படைவாதிகள் கருத்துத்தெரிவிக்கின்றனர். 

வேதனையும் வெட்கமும் என்னவென்றால் பரிதாபப்படும் பலர் இப்படியான ரிசானாக்களை உருவாக்கியவர்களாகவும், கொலைக்களம் ஏற்றியவர்களாகவும் உள்ளனர் எனஅவர்கள் கர்ஜிக்கின்றனர்.

இது இப்படியிருக்க


முஸ்லிம்களின் சட்டம் என்ன சொல்கிறது ? கொலைக்குற்றத்திற்கு மரணதண்டணை என்று தானே! அத்துடன் மன்னிப்பினை பாதிக்கப்பட்டவர் வழங்குவதையும் வரவேற்கிறது என்பதும் புலனாகின்றது. இந்நிலையில் சட்டம் தவறிழைக்கவில்லை அது தவறாக பிரயோகிக்கப்பட்டுள்ளது என்பதே இங்கு வெளிப்படை.

றிசானா கொலை செய்யவில்லை என அப்பட்டமாக தெரிகிறது. அவள் கொலை செய்யவேண்டிய அவசியமும் இல்லையே!   இப்படியிருக்க ஏன் முஸ்லிம்களின் சட்டம் முஸ்லிம் பெண்ஒருவர் மீது பிழையாக பிரயோகிக்கப்பட்டுள்ளது என எனக்கு இன்னும் புரியவில்லை.மனதைக்குடைகிறது. திட்டமிட்ட கொலைக்கும் தற்செயலான கொலைக்கும் வித்தியாசம் காணமுடியாத ஒரு சட்டமாக இவர்களின் சட்டம் இருக்கிறன்றதா என்பது எனது கேள்வி!

ஆரம்பத்தில் நான் அவள் ஒரு சிசுவை கொன்றுவிட்டாளே என எண்ணியதுண்டு. வைத்து இழுத்தடிக்காமல் உரிய தண்டணையினை வழங்கிவிடவேண்டியதுதானே என எண்ணியதும் உண்டு. ஆனால் எல்லாவற்றினையும் ஆராய்ந்து பார்க்கும் போது மிகவும் வேதனையளிக்கிறது. மரணதண்டனை அளிக்கும் விதம் அதன் பின்புல பாடல் மற்றும் அவளது கைப்பட எழுதிய கடிதம் என்பன கோபத்தினையே வரவழைக்கிறது!

இந்த விடயத்தில் சமூக அக்கறையானது மிகவும் காலம்தாமதமாக எழுப்ப்பட்டுவிட்டதோ எனவும் எண்ணத்தோன்றுகிறது.


இந்த விடயத்தில் அசமந்தமாக தொழிற்பட்டுவிட்டதாக இலங்கையரசினை குறைகூறுவதில் பல் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவள் வேலைக்கு செல்ல வேண்டிய சந்தர்ப்பத்தினை நாட்டியில் ஏற்படுத்தியிருந்ததை தவிர விடுதலை மற்றும் மன்னிப்பு விடயத்தில் தன்னாலான முயற்சிகளை அது எடுத்திருந்தது என்றே அறியமுடிகிறது. சவுதி அரசின் சட்டதிட்டங்களுக்கு அப்பால் அவர்களால் செல்லமுடியாது என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

எந்த தண்டனையும் கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் வழங்கப்படுவது,அதை நியாயப்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. இந்து மதத்தில் கூட சில மூடர்களால் மிருகபலிகள் செய்யப்படுகின்றன. ஆனால் அது மதத்தில் அறிவுறுத்தப்படாதவை. அதற்காகாக இந்து மதத்தினை குறை சொல்ல முடியாது.

நாகரீகமடைந்த இந்த உலகில் இன்னும் மதத்தின் பெயரால் நடைபெறும் காட்டுமிராண்டித்தனங்கள் கண்டிக்கப்படவேண்டியவை! இந்நிலையில் நாம் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான சட்டங்களை பிரயோகிப்பவர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பது மேல் !. என்னைப்பொறுத்தவரை சட்டம் பிழையாக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றதே தவிர சட்டத்தினை குறைகூற முடியாது என்பதேயாகும். இருந்தபோதிலும் அப்படி சட்டம் பிழையாக பிரயோகிக்கப்பட்டதிற்கு அந்நாடும் நாட்டு மக்களும் பொறுப்பாகிவிட்டமையினையும் மறுக்கமுடியாது!

பணம் என்ற ஒன்றுக்கானத்தான் எல்லாம் இங்கு அரங்கேறியிருக்கிறது. அளவுக்கதிகமாக ஆசைப்படாமல்  கிடைப்பதை கொண்டு சிறந்த வாழ்க்கையினை வாழப்பழகிக்கொள்ள வேண்டும். என்னவளம் இல்லை நம் திருநாட்டில்? என்பதுதான் என் கேள்வி இப்போது. 

நாம் பொருளாதாரத்தில் தன்னிறைவு சிறந்த கல்வி இவற்றினை நோக்கி பயணித்தால் நிச்சயம் இவ்வாறான பொறிகளுக்குள் செல்லவேண்டிய அவசியம் இருக்காது!. நாம் நாடு நமக்கு என்ன செய்தது என்று கேட்டுக்கொண்டிருப்பதை விட்டு நாட்டுக்கு என்ன செய்தோம் என எண்ணினால் பல கேள்விகளுக்கு விடை பிறக்கும் 

சகோதரி றிசானாவின் ஆத்மா சாந்தியடையட்டும் அவள் கண்ட கனவு நனவாகட்டும்! அததற்கு நாம் அனைவரும் எம்மாலான முயற்சிகளை எடுத்து இனிவரும் காலங்களில் இப்படியான உயிரிழப்புக்களை தவிர்ப்போம்!

நன்றும் தீதும் பிறர் தர வாரா!



றிசானாவின் கடிதம்


சவுதி அரேபியாவில் மரண தண்டனை வழங்கப்படும் முறை
(இது 2011 ம் ஆண்டு இந்தோனேசிய பெண்மணிக்கு வழங்கப்பட்ட காட்சி)




றிசானா பற்றிய மேலதிகவிபரங்கள் இக்பால் செல்வன் அவர்களால் தொகுக்கப்பட்ட விடயங்கள் அவரது வலைப்பதிவில் 


நான் ஒரு தீவிர தமிழ் இன விடுதலை ஆதரவாளன் தமிழ் கலாச்சார பிரியன் என்பதை பயமின்றி தெரிவித்துக்கொண்டு மேலும் தொடர்கின்றேன். இல்லையென்றால் என்னை அரசாங்கத்தின் ஆள் அல்லது நிகழ்வினை ஒழுங்குசெய்தவரின் ஆள் என்று சொல்லி விடுவார்கள் :-) மேலும் இந்நிகழ்வில் எந்தவகையிலும் பங்கு எடுக்காதவன் என்ற வகையிலும் பழையமாணவன் என்ற வகையிலும் துடுப்பாட்டம்பற்றி அதிகம் அறிவில்லாத பொதுசனம் என்ற வகையிலும் கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

நிகழ்வினை ஒழுங்குசெய்த நபர் முற்று முழுதாக துடுப்பாட்ட வளர்ச்சியை நோக்காகக்கொண்டு இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்யவில்லை என்பது வெளிப்படையான ஒன்று .அவரை கல்லுாரியின் பழைய மாணவன் என்ற வகையில் தெரியும் என்றாலும் அவரது எல்லா நடவடிக்ககைகளையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன அதில் முக்கியமான ஒன்று நுண்ணரசியல். அதை விடுவோம்..அதற்காக அவருக்காக இந்நிகழ்வினை எதிர்ப்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அப்படிப்பார்த்தால் பல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் வாதிகள் கூட தமது இருப்புக்காகத்தான் பலதை செய்கின்றனர். யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடந்த பொது நிகழ்வு ஒன்றில் நடனமங்கையர் ஆபாசம் இல்லாமல் ஆடியது கூட குற்றமில்லை என்பதை தப்பு என்று பலர் கூறுகின்றனர். அதற்காக ஒழுங்கு செய்தவர்களை இப்படி கட்டம் கட்டி அடிப்பது அநியாயமாக படுகிறது. நானும் சொல்கின்றேன் அது ஒரு பொது நிகழ்வு அதில் ஒரு வித்தியாசமாக நடனமங்கையர் ஆடினர் ஆபாசம் இருக்கவில்லை உடுப்பை கழற்றிவிட்டும் ஆடவில்லை. இதில் என்ன கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று நானும் கேட்கின்றேன்.

முதலில் இதுபற்றி முகப்புத்தகத்தில் ஆங்காங்கே விமர்சனங்களை முன்வைக்கும்  உங்கள் அனைவரிடமும் கேட்பது ஒன்று தான். தமிழ் கலாச்சாரம் தமிழ் இன விடுதலை என்றெல்லாம் பேசுகிறீர்க்ள் உங்கள் யாருக்காவது தமிழர்களுடன் தமிழி்ல் உரையாடி மொழி வளர்க்கவேண்டும் என்று ஆர்வம் இருக்கிறதா? மனதைதொட்டுச்சொல்லுங்கள் உங்கள் வியாக்கினங்களை ஆங்கிலத்தில் பிதற்றி யாரை ஏமாற்றுகின்றீர்கள்.? உங்களுக்கு உங்கள் சொந்த திறமையினை பறைசாற்றவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருக்கின்றதே தவிர தமிழ் உணர்வு மேலோங்கவில்லை. துணிந்து தமிழில் பதிலளியுங்கள் பார்க்கலாம் இப்படி தமிழில் முடியாவிட்டால் நீங்கள் தமிழர்களாக இருப்பதே  மடமை.தமிழில் தட்டச்சிட தெரியாது . ஆங்கிலத்தில் கேட்டால் ஆங்கிலத்தில் தான் பதிலளிப்போம் என்பதெல்லாம்  ஏற்க முடியாத வாதங்கள். உணர்வு இருப்பின் தமிழ் தடையல்ல. எங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்றுமட்டும் எண்ணிவிடவேண்டாம். வெள்ளைக்காரனுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் கொடுப்பது வேறு தமிழர்களுக்கு ஏன் இந்த வரட்டுகௌரவம்?

அடுத்த விடயம் தமிழ்காலாச்சாரம் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளும் நீங்கள் எப்பொழுதும் வேட்டியும் சால்வையும் போட்டுக்கொண்டு வேலைக்கு போகலாமே! நாகரீகத்துடன் நாமும் மாறவேண்டும் என்று கூறுவீர்கள் அதைத்தான் நானும் சொல்கின்றேன். ஆபத்தில்லாத விடயங்களை அனுமதிப்பதில் தவறில்லை. உண்மையில் இது மேற்கத்தைய விளையாட்டு அதில் சேலையுடன் நடன மங்கைகளை ஆடவிடுவது இயலாத காரியம் ஆடினாலும் வடிவா இருக்காது .அதற்கு இந்த வகையில் ஆபாசமில்லாமல் ஒரு நடனக்குழுவை இறக்கியதில் தப்பில்லையெனவே தோன்றுகின்றது.விடுதலைப்புலிகள் காலத்தில் கூட தெருக்கூத்துகளின் போது பெண்கள் நீளக்காற்கட்டை அணிந்த வாறுதான் நடனமாடுவார்கள் எல்லாப்பக்கத்திலும் இருந்து பார்கக்கூடிய நிகழ்வுகளுக்கு அதுதான் பொருந்தும் உள்ளக மேடை நிகழ்வுகளுக்குத்தான்  பரத நாட்டியம் பொருந்தும். 


இதுக்கும் கலாச்சார சீர்கேட்டுக்கும் என்ன சம்பந்தம் எண்டு தெரியல. தொலைக்காட்சியில் மானாட மயிலாட போகேக்க குடும்பமா இருந்து வாயில ஈ மொய்க்கிறது தெரியாம ஆவென்று கொண்டு இருக்கிறதுகள் சும்மா எதுக்கெடுத்தாலும் விமர்சிக்கினம் போல இருக்கு. எல்லா விசயத்தினையும் நடுநிலையோடு சுய சிந்தனையோடு ஆய்ந்து விமர்சிக்கவேணும். பெண்ணடிமைத்தனம் குறுகிய மனப்பான்மை பிழையான கண்ணோட்டம் காழ்ப்புணர்ச்சி தாழ்வு மனப்பான்மை இதுகளின் ஒட்டுமொத்த வடிவம் இதனை விமர்சிக்கிறவர்களின் கருத்துக்களில் தொனிக்கிறது

இதை விமர்சிப்பவர்கள் பெண்கள் ஆடும் IPL காட்சிகளையும் தென்னிந்திய நடனக்காட்சிகளையும் தமது வீட்டு தொலைக்காட்சிப்பெட்டிகளிலாவது தடைசெய்வார்களா? அல்லது வீட்டில் உள்ளவர்களை பார்க்கவிடாமல் தடுப்பார்களா?

இதுக்கும் விடுதலைப்போடாட்டத்துக்கும் கூட சம்பந்தம் இல்லை இதை அனுமதித்தவர்கள் விடுதலைப்போராட்டத்திற்கு எதிரானவர்கள் என்று வேறு சில இடங்களில் கதை கட்டுகிறார்கள்.விடுதலையினை இங்கு யார் எதிர்க்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.விடுதலையினை சுதந்திரத்தினை எந்த சராசரி துாய மனிதனும் எதிர்ப்பதில்லை.தலைவரை மதித்தோம் போராட்டத்தினை மதித்தோம் இனியொரு விடுதலை நம் இனத்திற்கு கிடைத்தால் துள்ளிக்குதிப்போம் அதுக்காக ஏன் இப்பிடி சம்பந்தமில்லாம.. ?

முகப்புத்தகத்தில் சில இடங்களில் விமர்சனம் செய்வோர் சகோதர சகோதரிகளை மல்லுக்கு அழைப்பதை பார்க்கும்போது தெரிகிறது அவர்களின் விரசம். அந்தக்காலத்தில் சின்னமேளம் கொண்டுவந்து ஊர்க்கோயில்ல ஆட்டம் போடேக்க இவர்களின் பெற்றோர்கள் கைகொட்டி ஆர்ப்பரித்ததை அவர்கள் கண்டிருக்க வாய்ப்பில்லை. அது கலாச்சார சீர்கேடு இல்லையா? அதேபோல மாணவிகளை பரதநாட்டியம் ஆடவிட்டு 5 யார் இடவெளியில் இருந்து அங்க அசைவுகளை ஆவென்று பார்த்துக்கொண்டு கொண்டு இருக்கிற கலாச்சார காவலர்களையும் நாம் அறிவோம். விடுதலை பற்றி பேசுவோர் அதை வைத்து இணையத்தளங்கள் நடத்துவோர் பெரும்பாலானவர்கள் சினிமா மற்றும் கிளுகிளுப்பு செய்திகளை முன்னிலைப்படுத்தி வருகையாளர்களை அதிகரிப்பதையும் அறிவோம்!


இது பாடசாலை விளையாட்டுபோட்டியும் இல்லை பாடசாலை துடுப்பாட்ட போட்டியும் இல்லை என்பதைக்கூட விமர்சிப்பவர்கள் உணர வேண்டும். யார் குத்தினாலும் அரிசியானால் சரி என்ற மனநிலையினை வளர்க்கவேண்டும். அதை விட்டுவிட்டு வேண்டாப்பெண்டாட்டி கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என்ற மனநிலையில் விமர்சிக்க கூடாது. எங்களுக்கு இப்போது துடுப்பாட்ட வளர்ச்சி கண்ணுக்கு தெரியவேண்டுமே தவிர நடனமங்கை தெரியக்கூடாது. அருச்சுனன் அம்பு விடும்போது இலக்குமட்டுமே தெரிந்தது மற்றொன்றும் தெரியவில்லை என இலக்கியம் கூறுகிறது.

யாழ்ப்பாணத்தில் ஒரு நிகழ்வு நடாத்துவதாயின் எவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்று எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஊடகங்கள் கூட தமது நிகழ்வுக்கு இராணுவத்தினை அழைப்பதை கண்ணுற்றிருக்கின்றேன். மனதுக்குள் நெருடல் இருந்தாலும் செய்வதற்கு ஒன்றுமில்லை.

திரண்ட மக்கள் மாணவர் ஆதரவை பயன்படுத்தி ஒரு அரசியல் போராட்டம் நடாத்த திராணியற்றவர்கள் சிறைசெல்ல பயந்தவர்கள் வெறும் ஏட்டுச்சுரக்காய் அரசியல் செய்யும் கையாலாகதவர்களிடம் நமது இன அரசியல் பணி  வழங்கப்பட்டு இருப்பதே உண்மை.தமிழ்த்தேசியம் பேசுபவர்கள் இன்று தொடங்கி இன்று வரை நமக்கு அல்வா கொடுத்துக்கொண்டிருப்பதையும் அறிவோம் இருந்தும் அவர்களுக்கே வாக்களிக்க நாம் தவறுவதும் இல்லை எமது கொள்கைகளில் இருந்து பின்வாங்குவதும் இல்லை. முதுகெலும்பில்லாத பலர் இன்று அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. தமிழ் தேசியக்கொள்கைகளை வைத்து தம்மை மேல் நிலைப்படுத்த எண்ணுகிறார்களே தவிர எமக்கு ஒன்றும் கிடைத்ததில்லை.

பலாலியில் வெற்றி விழாவில் மாணவர்களைக் கொண்டு படையினருக்கு சின்னம்சூட்டவைத்தார்கள் அதற்கு இந்த தமிழினக்காவலர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் இதுவரை என்ன செய்திருக்கிறார்கள்.? வெற்றிவிழாவில் எமது நடனமங்கையரை பரதநாட்டியம் ஆடவைத்தார்கள் அதையெல்லாம் யார் தட்டிக்கேட்டார்கள்.பாடசாலைபற்றியும் அதன் பெருமைபற்றியும் அலட்டிக்கொள்ளும் இந்த அபிமானிகளில் எத்தனை பேர் பாடசாலை விலகிய பின் பாடசாலை நடவடிக்ககைகளில் பங்ககெடுத்தார்கள் உதவியுள்ளார்கள்.? அல்லது குறைந்த பட்சம் பழையமாணவர் சங்கத்தில்  இணைந்து குரல் கொடுத்திருக்கிறார்கள்.? வெளியில் இருந்துகொண்டு கர்ணபரம்பரைக்கதைகளை கேட்டு சொல்பவர்கள்போல் யாரோ சொல்லும் புனைகதைகளினை கேட்டு விமர்சனம் செய்வது அழகல்ல.

பொதுவாக சொல்கின்றேன். சிலர் அர்பணிப்புடன் இயங்கி வருவதை மறுப்பதற்கில்லை. ஆயினும் வாங்குவது அரச சம்பளம் பேசுவது தேசியம். அரச சம்பளம் மக்கள் பணம் என்றால் அதனை எல்லாம் மக்களுக்கே அர்ப்பணித்துவிட்டு சாதாரண பொதுமகன் போல இவர்களால் வாழ முடியுமா?. என்னைப்பொறுத்தவரை அவர்கள் அனைவரிடமும் துாய அரசியல் கிடையாது.  அறிக்ககைகளிலும் வீரவசனங்களில்மட்டும் மட்டும் அரசியல் செய்வதையும் பொதுசனம் அறியும். முன்புறம் தேசியம் பேசிக்கொண்டு பின்புறம் சலுகைகள் பெற்றுக்கொண்டிருக்கின்றனர். இன்று தமிழ் அரசியலில் ஈடுபடுபவர்களின் முழுக்கதையும் நமக்கு தெரியும்.இருந்தாலும் காரியம் உங்களைக்கொண்டுதான் ஆகவேண்டியுள்ளதால் பொறுத்துக்கொண்டிருக்கிறார்கள் மக்கள். இந்த துடுப்பாட்ட நிகழ்வு குறித்து அரசியல் பற்றியும் கதைக்கிறார்கள் என்பதால் இங்கு அதனை சொல்லவேண்டியுள்ளது.

துடுபாட்டநிகழ்வு பற்றி ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால் பவ்வியமாக இப்படிச்செய்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் அப்படி செய்யாமமைக்கு காரணம் என்ன என்று ஒழுங்கமைப்பாளர்களை நேரடியாக கேட்டிருக்கலாம்.அதைவிட்டுவிட்டு காலாச்சாரம் சீரழிந்துவிட்டது என்று ஆர்பாட்டம்போடுவதால் பலன் எதுவும் இல்லை. அதன் மூலமாக எவரும் கலாச்சார காவலர்களாக மாறிவிடவும் முடியாது.

இறுதியாக சொல்வது என்னவென்றால் ஒவ்வொருவரும் தம்மால் இயன்றவரை தமிழையும் தமிழ் கலாச்சாரத்தினையும் இனத்தினையும் மீட்கும் வகையில் தூய மனதுடன் ஏதாவது செய்துகொண்டிருந்தால் நிச்சயம் நம்மினம் விடுதலைபெறும். கலாச்சாரம் பாதுகாக்கப்படும்.அதைவிடுத்து தனிப்பட்ட அரசியல் கோபதாபங்கள் விருப்புவெறுப்புக்களை எல்லா விடயங்களிலும் பிரயோகித்தால் நிச்சயம் நாம் பிளவுற்றுக்கொண்டே போவோம்!.எத்தனையோ நல்லவிசயங்கள் நடைபெற வேண்டியுள்ளது அதைவிடுத்து காசுக்கு வந்து ஆடிவிட்டுபோகும் அந்த நடனமாதுக்கள் பற்றி இப்படி ஆளாளுக்கு அடிபட்டுக்கொண்டிருந்தால் அவர்களுக்கான மவுசு கூடுமே தவிர தமிழ் கலாச்சார மவுசு கூடாது.அந்தப்பொண்ணுகள் இப்ப வேறு ஏதாவது நிகழவுக்கு முற்பணம் வாங்கியிருபாளவை இங்க நாங்க அவையப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறம். எனது கருத்துக்கள் துாய மனதுடன் அரசியல் செய்யும் அல்லது சேவைசெய்யும் எவரையேனும் குறித்துநிற்கவில்லை என்பதை மீண்டும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளலாம்.

நன்றி

எனது சட்டத்தில்.....

Posted by Thava சனி, 19 மே, 2012 0 comments


ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தனக்கென சிறப்பான கொள்கைகளும் இலட்சியங்களும் இருக்கும். அதேபோல தனித்திறமைகளும் இருக்கும். அவனுக்கென பிடித்தவைகள் பிடிக்காதவைகள் என பல விடயங்கள் இருக்கும். இருந்தபோதிலும் வாழ்க்கைச்சக்கரத்தில் விரும்பியோ விரும்பாமலோ அன்றி சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாகவோ இவற்றினின்றும் விட்டுக்கொடுக்க வேண்டிய தேவை ஏற்படலாம். எது எப்படியோ தனிமனிதனின் பலவிடயங்கள் மாற்றதற்குட்படாதவைகள் என்பதை யாவரும் அறிவோம்

எனக்கு கல்லுாரியில் கல்விகற்பித்த ஆசிரியர் எமக்கு அறிவுரை கூறும் வேளைகளில் சொல்வது எனக்கு ஞாபகம் வருகிறது ”இந்த விசயம் உன்னுடைய சட்டத்தில் சரியாகலாம் ஆனால் என்னுடைய சட்டத்தில் பிழையானது” என்று. அவருடைய கருத்துக்களை பகுத்தாய்ந்து பார்க்கும் பக்குவம் எனக்கு அன்று இருந்ததில்லை. இன்று இருக்கிறது அது முற்றிலும் உண்மையானது என்று எனக்கு இன்று புரிகிறது. குறித்த ஒரு விடயம் சம்பந்தமாக ஒவ்வொருவருடைய நோக்கும் வேறுபடுகின்றது சிலவேளைகளில் ஒத்துப்போகிறது.

இந்தவகையில் வாழ்கையின் அரைவாசிப்பகுதியை அண்மித்திருக்கும் என்னுடைய பார்வையில் ஒவ்வொரு விடயங்களும் எப்படிப்படுகின்றன அவற்றை நான் எதிர்கொள்ளும் விதத்தினையும் நேரமுள்ள நேரங்களில்(?) இங்கு பதிவுசெய்யலாம் என நினைக்கிறேன்.அவை என்னைவிட இளையவா்களுக்கும் ஏன் பெரியவர்களில் சிலருக்கும் தம்மை மீள சரிசெய்ய அல்லது சிந்திக்க வழிவகுக்கலாம்.அதேவேளை என்னை சுயபரிசீலணை செய்யவும் இது உதவக்கூடும்


இத்தனைக்கும் நான் ஒரு ஞானியோ யோகியோ முற்றுமுழுதான யோக்கியன் என்றோ கூறவிரும்பவில்லை. சில பல வி்டயங்களில் நான் (நான் எனும் ஆணவம்கூட என்னை விட்டு போகவில்லை பாருங்கள்) தவறுகள் தப்புக்கள் செய்திருக்கின்றேன். தண்டிக்கப்படிருக்கிறேன் பிராயச்சித்தம் செய்திருக்கின்றேன்(சமய சடங்கல்ல).அதற்காக வருந்தியிருக்கிறேன்.சிலவற்றுக்காக அலட்டிக்கொள்ளாமலும் இருந்திருக்கிறேன்.

என்னுடைய சட்டத்தில் எது சரியென்று படுகின்றதோ அதனை செய்துவிட தயங்கமாட்டேன். இன்னொருவருடைய அறிவுறுத்தல்களை முற்றுமுழுதாக நம்பிவிட நான் தயாராக இல்லை. அதேவேளை அவருடைய அறிவுத்தல் அல்லது தகவல் நுாற்றுக்கு நுாறு சரியென என்னால் உறுதிப்படுத்தப்படுமிடத்து என்னுடைய முனைப்பு பிழையென நான் கண்டுகொண்டால் நிச்சயம் என்னை சரிசெய்ய தவறுவதில்லை.

வாழ்வில் பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் பிழையான புரிந்துகொள்ளல் தான் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆயினும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை சாட்டாக சொல்லி இதற்கான பொறுப்பிலிருந்து பலரும் விலக நினைக்கிறார்கள். ஏன் தென்னிந்திய தொலைக்காட்சித்தொடர்களில் நுாறுவீதமானவை இந்த கருப்பொருளை மையமாககொண்டே நகர்த்தப்படுகின்றன. 

என்னைப்பொறுத்தவரையில் மற்றவர்களினுாடு கிடைக்கும் தகவல்கள் யாவும் முதலில் என்பார்வையில் பொய்யானவையாக அல்லது சந்தேகப்புள்ளி இடப்பட்டதாகவே இருக்கும் எனது அறிவிற்கு எட்டியவரையில் தேடுதல்கள் உறுதிப்படுத்தல்கள் போன்றசெயற்பாடுகளை மேற்கொள்வேன் அதில் தேறி வருவனவே உண்மையென கருதுகின்றேன்.

சிறுவயதில் இருந்தே எனக்கு துப்பறிதல் மற்றும் ஆய்வுசெய்தல் போன்றவற்றில் மிகுந்த விருப்பம் உண்டு.அப்படிச்சொன்னவுடன் என்னைப்பற்றி சிலா் ”இவன் சரியான சந்தேகப்பிராணியோ” என எண்ணக்கூடும். அவர்கள் நினைப்பது தவறு.அப்படி அவர்கள் நினைத்தால் எனக்கு அதைப்பற்றி கவலையும் இல்லை. காரணம் எனக்குத்தான் என்னைப்ற்றி நன்றாகத் தெரியுமே. நமது சந்தேகத்தினால் பிறரது மனம் புண்படாதவகையில் அது பாரதுாரமானதாக இருக்காது. 

நமது சந்தேகம் வெளிப்படுத்தப்படாமல் இருக்கவேண்டும். சந்தேகம் என்பது எப்போது வெளிப்படுத்தப்படுகின்றதோ அப்பொழுதே பிரச்சனை ஆரம்பமாகி விடுகிறது. சந்தேகம் இரண்டுவகையானது ஒன்று குறித்த தகவலை சந்தேகப்படுவது மற்றது மூலத்தினையே சந்தேகிப்பது.இரண்டாவது தான் பிரச்சனைளை உருவாக்கக்கூடியது.

ஒரு தம்பதியரிடையே தோன்றும் சந்தேகம் சம்பந்தமான சம்பவத்தினை நோக்குவோம் (நான் இப்பத்தியெழுதும்வரை திரமணமாகாதவன் என்பது குறிப்பிடத்தக்கது) . கணவன் வீடு திரும்புகின்ற நேரம் சிலகாலமாக வித்தியாசமானதாக இருக்கிறது. மனைவி அதனை கண்டும் காணாமல் இருப்பது அழகல்ல. மனைவி எப்படி அணுகலாம். என்ன வழியில ஏதும் பிரச்சனையோ? என்று கேட்காமல் ஏன் தாமதம் என கோபமாகவோ அதட்டலாகவோ கேட்பதன் மூலம் பதிலை சொல்வதற்கான ஏது நிலையினை இல்லாமல் செய்து விடக்கூடாது. 

அதேவேளை கணவனும் முதல்கேள்வி கேட்கப்படும்போது தடுமாற்றத்துடன் பதிலளிக்காமல் சிறு விடயமாக இருந்தால் நிதானமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதிலளிக்கணே்டும். அல்லது பெரிய விடயமாயின் ஓரளவுக்கேனும் விளங்கிக்கொள்ளகூடிய வகையில் சுருக்கமாக விளங்கப்படுத்தணே்டும் பின்னர் தெளிவான விளக்கம் வழங்கலாம்.

இப்படிச்சொன்னால் அப்படி ஆகிவிடுமோ என கற்பனைசெய்து ஒருபொய்யினை எடுத்து விட்டு அதனை காப்பாற்ற இன்னொரு பொய்யினை எடுத்து விட்டு இசகுபிசகாக மாட்டி முழிக்கக்கூடாது.அவை சந்தேகத்தினை வலுப்படுத்துமே தவிர நீக்காது. மேலும் மனைவியினைப்பொறுத்த வரையிலும் சற்று நிதானம் வேண்டும் ஆதாரமில்லாமல் கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கக்கூடாது. தீரவிசாரித்து உண்மையறிந்தபின்னா் நம்புதலை கடைப்பிடிக்கவேண்டும்

கூடியவரையில் நல்லமனிதா்களாக வாழப்பழகவேண்டும் ஒளிவுமறைவு இன்றி சகலவற்றையும் ஒப்புவிக்கவேண்டும். அநேக விடயங்களில் வெளிப்படையாக இருந்துவிடுதல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்காது.

சில விடயங்களை மறைக்கத்தான் வேண்டும் அவை எங்கே பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பதை குறித்த விடயம் தான் நிர்ணயிக்கும். நிச்சயம் அந்தரங்கமானதாக எவையாவது ஒவ்வொருவருக்கும் இருக்கும் இதையும் கொட்டித்தீர்த்து விட்டவர்கள் தன்னாலே கெட்டவா்களாகிறார்கள் அல்லது துரோகமிழைத்தவா்களாகிறா்கள்.. இங்கு அதற்கு உதாரணமாக அரசவிசுவாசம் சம்பந்தப்பட்ட தகவல்களினை குறிப்பிடலாம்.

எனது சட்டத்தில் அனைத்தையும் வெளிப்படையாக மேற்கொள்வதையே விரும்புகின்றேன். ஆயினும் இரகசியம் காக்க வேண்டியிருப்பின் அவை எந்நிலையிலும் என்னிடமிருந்து வெளியில் வராது.