வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.


நான் ஒரு தீவிர தமிழ் இன விடுதலை ஆதரவாளன் தமிழ் கலாச்சார பிரியன் என்பதை பயமின்றி தெரிவித்துக்கொண்டு மேலும் தொடர்கின்றேன். இல்லையென்றால் என்னை அரசாங்கத்தின் ஆள் அல்லது நிகழ்வினை ஒழுங்குசெய்தவரின் ஆள் என்று சொல்லி விடுவார்கள் :-) மேலும் இந்நிகழ்வில் எந்தவகையிலும் பங்கு எடுக்காதவன் என்ற வகையிலும் பழையமாணவன் என்ற வகையிலும் துடுப்பாட்டம்பற்றி அதிகம் அறிவில்லாத பொதுசனம் என்ற வகையிலும் கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

நிகழ்வினை ஒழுங்குசெய்த நபர் முற்று முழுதாக துடுப்பாட்ட வளர்ச்சியை நோக்காகக்கொண்டு இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்யவில்லை என்பது வெளிப்படையான ஒன்று .அவரை கல்லுாரியின் பழைய மாணவன் என்ற வகையில் தெரியும் என்றாலும் அவரது எல்லா நடவடிக்ககைகளையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன அதில் முக்கியமான ஒன்று நுண்ணரசியல். அதை விடுவோம்..அதற்காக அவருக்காக இந்நிகழ்வினை எதிர்ப்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அப்படிப்பார்த்தால் பல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் வாதிகள் கூட தமது இருப்புக்காகத்தான் பலதை செய்கின்றனர். யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடந்த பொது நிகழ்வு ஒன்றில் நடனமங்கையர் ஆபாசம் இல்லாமல் ஆடியது கூட குற்றமில்லை என்பதை தப்பு என்று பலர் கூறுகின்றனர். அதற்காக ஒழுங்கு செய்தவர்களை இப்படி கட்டம் கட்டி அடிப்பது அநியாயமாக படுகிறது. நானும் சொல்கின்றேன் அது ஒரு பொது நிகழ்வு அதில் ஒரு வித்தியாசமாக நடனமங்கையர் ஆடினர் ஆபாசம் இருக்கவில்லை உடுப்பை கழற்றிவிட்டும் ஆடவில்லை. இதில் என்ன கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று நானும் கேட்கின்றேன்.

முதலில் இதுபற்றி முகப்புத்தகத்தில் ஆங்காங்கே விமர்சனங்களை முன்வைக்கும்  உங்கள் அனைவரிடமும் கேட்பது ஒன்று தான். தமிழ் கலாச்சாரம் தமிழ் இன விடுதலை என்றெல்லாம் பேசுகிறீர்க்ள் உங்கள் யாருக்காவது தமிழர்களுடன் தமிழி்ல் உரையாடி மொழி வளர்க்கவேண்டும் என்று ஆர்வம் இருக்கிறதா? மனதைதொட்டுச்சொல்லுங்கள் உங்கள் வியாக்கினங்களை ஆங்கிலத்தில் பிதற்றி யாரை ஏமாற்றுகின்றீர்கள்.? உங்களுக்கு உங்கள் சொந்த திறமையினை பறைசாற்றவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருக்கின்றதே தவிர தமிழ் உணர்வு மேலோங்கவில்லை. துணிந்து தமிழில் பதிலளியுங்கள் பார்க்கலாம் இப்படி தமிழில் முடியாவிட்டால் நீங்கள் தமிழர்களாக இருப்பதே  மடமை.தமிழில் தட்டச்சிட தெரியாது . ஆங்கிலத்தில் கேட்டால் ஆங்கிலத்தில் தான் பதிலளிப்போம் என்பதெல்லாம்  ஏற்க முடியாத வாதங்கள். உணர்வு இருப்பின் தமிழ் தடையல்ல. எங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்றுமட்டும் எண்ணிவிடவேண்டாம். வெள்ளைக்காரனுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் கொடுப்பது வேறு தமிழர்களுக்கு ஏன் இந்த வரட்டுகௌரவம்?

அடுத்த விடயம் தமிழ்காலாச்சாரம் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளும் நீங்கள் எப்பொழுதும் வேட்டியும் சால்வையும் போட்டுக்கொண்டு வேலைக்கு போகலாமே! நாகரீகத்துடன் நாமும் மாறவேண்டும் என்று கூறுவீர்கள் அதைத்தான் நானும் சொல்கின்றேன். ஆபத்தில்லாத விடயங்களை அனுமதிப்பதில் தவறில்லை. உண்மையில் இது மேற்கத்தைய விளையாட்டு அதில் சேலையுடன் நடன மங்கைகளை ஆடவிடுவது இயலாத காரியம் ஆடினாலும் வடிவா இருக்காது .அதற்கு இந்த வகையில் ஆபாசமில்லாமல் ஒரு நடனக்குழுவை இறக்கியதில் தப்பில்லையெனவே தோன்றுகின்றது.விடுதலைப்புலிகள் காலத்தில் கூட தெருக்கூத்துகளின் போது பெண்கள் நீளக்காற்கட்டை அணிந்த வாறுதான் நடனமாடுவார்கள் எல்லாப்பக்கத்திலும் இருந்து பார்கக்கூடிய நிகழ்வுகளுக்கு அதுதான் பொருந்தும் உள்ளக மேடை நிகழ்வுகளுக்குத்தான்  பரத நாட்டியம் பொருந்தும். 


இதுக்கும் கலாச்சார சீர்கேட்டுக்கும் என்ன சம்பந்தம் எண்டு தெரியல. தொலைக்காட்சியில் மானாட மயிலாட போகேக்க குடும்பமா இருந்து வாயில ஈ மொய்க்கிறது தெரியாம ஆவென்று கொண்டு இருக்கிறதுகள் சும்மா எதுக்கெடுத்தாலும் விமர்சிக்கினம் போல இருக்கு. எல்லா விசயத்தினையும் நடுநிலையோடு சுய சிந்தனையோடு ஆய்ந்து விமர்சிக்கவேணும். பெண்ணடிமைத்தனம் குறுகிய மனப்பான்மை பிழையான கண்ணோட்டம் காழ்ப்புணர்ச்சி தாழ்வு மனப்பான்மை இதுகளின் ஒட்டுமொத்த வடிவம் இதனை விமர்சிக்கிறவர்களின் கருத்துக்களில் தொனிக்கிறது

இதை விமர்சிப்பவர்கள் பெண்கள் ஆடும் IPL காட்சிகளையும் தென்னிந்திய நடனக்காட்சிகளையும் தமது வீட்டு தொலைக்காட்சிப்பெட்டிகளிலாவது தடைசெய்வார்களா? அல்லது வீட்டில் உள்ளவர்களை பார்க்கவிடாமல் தடுப்பார்களா?

இதுக்கும் விடுதலைப்போடாட்டத்துக்கும் கூட சம்பந்தம் இல்லை இதை அனுமதித்தவர்கள் விடுதலைப்போராட்டத்திற்கு எதிரானவர்கள் என்று வேறு சில இடங்களில் கதை கட்டுகிறார்கள்.விடுதலையினை இங்கு யார் எதிர்க்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.விடுதலையினை சுதந்திரத்தினை எந்த சராசரி துாய மனிதனும் எதிர்ப்பதில்லை.தலைவரை மதித்தோம் போராட்டத்தினை மதித்தோம் இனியொரு விடுதலை நம் இனத்திற்கு கிடைத்தால் துள்ளிக்குதிப்போம் அதுக்காக ஏன் இப்பிடி சம்பந்தமில்லாம.. ?

முகப்புத்தகத்தில் சில இடங்களில் விமர்சனம் செய்வோர் சகோதர சகோதரிகளை மல்லுக்கு அழைப்பதை பார்க்கும்போது தெரிகிறது அவர்களின் விரசம். அந்தக்காலத்தில் சின்னமேளம் கொண்டுவந்து ஊர்க்கோயில்ல ஆட்டம் போடேக்க இவர்களின் பெற்றோர்கள் கைகொட்டி ஆர்ப்பரித்ததை அவர்கள் கண்டிருக்க வாய்ப்பில்லை. அது கலாச்சார சீர்கேடு இல்லையா? அதேபோல மாணவிகளை பரதநாட்டியம் ஆடவிட்டு 5 யார் இடவெளியில் இருந்து அங்க அசைவுகளை ஆவென்று பார்த்துக்கொண்டு கொண்டு இருக்கிற கலாச்சார காவலர்களையும் நாம் அறிவோம். விடுதலை பற்றி பேசுவோர் அதை வைத்து இணையத்தளங்கள் நடத்துவோர் பெரும்பாலானவர்கள் சினிமா மற்றும் கிளுகிளுப்பு செய்திகளை முன்னிலைப்படுத்தி வருகையாளர்களை அதிகரிப்பதையும் அறிவோம்!


இது பாடசாலை விளையாட்டுபோட்டியும் இல்லை பாடசாலை துடுப்பாட்ட போட்டியும் இல்லை என்பதைக்கூட விமர்சிப்பவர்கள் உணர வேண்டும். யார் குத்தினாலும் அரிசியானால் சரி என்ற மனநிலையினை வளர்க்கவேண்டும். அதை விட்டுவிட்டு வேண்டாப்பெண்டாட்டி கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என்ற மனநிலையில் விமர்சிக்க கூடாது. எங்களுக்கு இப்போது துடுப்பாட்ட வளர்ச்சி கண்ணுக்கு தெரியவேண்டுமே தவிர நடனமங்கை தெரியக்கூடாது. அருச்சுனன் அம்பு விடும்போது இலக்குமட்டுமே தெரிந்தது மற்றொன்றும் தெரியவில்லை என இலக்கியம் கூறுகிறது.

யாழ்ப்பாணத்தில் ஒரு நிகழ்வு நடாத்துவதாயின் எவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்று எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஊடகங்கள் கூட தமது நிகழ்வுக்கு இராணுவத்தினை அழைப்பதை கண்ணுற்றிருக்கின்றேன். மனதுக்குள் நெருடல் இருந்தாலும் செய்வதற்கு ஒன்றுமில்லை.

திரண்ட மக்கள் மாணவர் ஆதரவை பயன்படுத்தி ஒரு அரசியல் போராட்டம் நடாத்த திராணியற்றவர்கள் சிறைசெல்ல பயந்தவர்கள் வெறும் ஏட்டுச்சுரக்காய் அரசியல் செய்யும் கையாலாகதவர்களிடம் நமது இன அரசியல் பணி  வழங்கப்பட்டு இருப்பதே உண்மை.தமிழ்த்தேசியம் பேசுபவர்கள் இன்று தொடங்கி இன்று வரை நமக்கு அல்வா கொடுத்துக்கொண்டிருப்பதையும் அறிவோம் இருந்தும் அவர்களுக்கே வாக்களிக்க நாம் தவறுவதும் இல்லை எமது கொள்கைகளில் இருந்து பின்வாங்குவதும் இல்லை. முதுகெலும்பில்லாத பலர் இன்று அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. தமிழ் தேசியக்கொள்கைகளை வைத்து தம்மை மேல் நிலைப்படுத்த எண்ணுகிறார்களே தவிர எமக்கு ஒன்றும் கிடைத்ததில்லை.

பலாலியில் வெற்றி விழாவில் மாணவர்களைக் கொண்டு படையினருக்கு சின்னம்சூட்டவைத்தார்கள் அதற்கு இந்த தமிழினக்காவலர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் இதுவரை என்ன செய்திருக்கிறார்கள்.? வெற்றிவிழாவில் எமது நடனமங்கையரை பரதநாட்டியம் ஆடவைத்தார்கள் அதையெல்லாம் யார் தட்டிக்கேட்டார்கள்.பாடசாலைபற்றியும் அதன் பெருமைபற்றியும் அலட்டிக்கொள்ளும் இந்த அபிமானிகளில் எத்தனை பேர் பாடசாலை விலகிய பின் பாடசாலை நடவடிக்ககைகளில் பங்ககெடுத்தார்கள் உதவியுள்ளார்கள்.? அல்லது குறைந்த பட்சம் பழையமாணவர் சங்கத்தில்  இணைந்து குரல் கொடுத்திருக்கிறார்கள்.? வெளியில் இருந்துகொண்டு கர்ணபரம்பரைக்கதைகளை கேட்டு சொல்பவர்கள்போல் யாரோ சொல்லும் புனைகதைகளினை கேட்டு விமர்சனம் செய்வது அழகல்ல.

பொதுவாக சொல்கின்றேன். சிலர் அர்பணிப்புடன் இயங்கி வருவதை மறுப்பதற்கில்லை. ஆயினும் வாங்குவது அரச சம்பளம் பேசுவது தேசியம். அரச சம்பளம் மக்கள் பணம் என்றால் அதனை எல்லாம் மக்களுக்கே அர்ப்பணித்துவிட்டு சாதாரண பொதுமகன் போல இவர்களால் வாழ முடியுமா?. என்னைப்பொறுத்தவரை அவர்கள் அனைவரிடமும் துாய அரசியல் கிடையாது.  அறிக்ககைகளிலும் வீரவசனங்களில்மட்டும் மட்டும் அரசியல் செய்வதையும் பொதுசனம் அறியும். முன்புறம் தேசியம் பேசிக்கொண்டு பின்புறம் சலுகைகள் பெற்றுக்கொண்டிருக்கின்றனர். இன்று தமிழ் அரசியலில் ஈடுபடுபவர்களின் முழுக்கதையும் நமக்கு தெரியும்.இருந்தாலும் காரியம் உங்களைக்கொண்டுதான் ஆகவேண்டியுள்ளதால் பொறுத்துக்கொண்டிருக்கிறார்கள் மக்கள். இந்த துடுப்பாட்ட நிகழ்வு குறித்து அரசியல் பற்றியும் கதைக்கிறார்கள் என்பதால் இங்கு அதனை சொல்லவேண்டியுள்ளது.

துடுபாட்டநிகழ்வு பற்றி ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால் பவ்வியமாக இப்படிச்செய்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் அப்படி செய்யாமமைக்கு காரணம் என்ன என்று ஒழுங்கமைப்பாளர்களை நேரடியாக கேட்டிருக்கலாம்.அதைவிட்டுவிட்டு காலாச்சாரம் சீரழிந்துவிட்டது என்று ஆர்பாட்டம்போடுவதால் பலன் எதுவும் இல்லை. அதன் மூலமாக எவரும் கலாச்சார காவலர்களாக மாறிவிடவும் முடியாது.

இறுதியாக சொல்வது என்னவென்றால் ஒவ்வொருவரும் தம்மால் இயன்றவரை தமிழையும் தமிழ் கலாச்சாரத்தினையும் இனத்தினையும் மீட்கும் வகையில் தூய மனதுடன் ஏதாவது செய்துகொண்டிருந்தால் நிச்சயம் நம்மினம் விடுதலைபெறும். கலாச்சாரம் பாதுகாக்கப்படும்.அதைவிடுத்து தனிப்பட்ட அரசியல் கோபதாபங்கள் விருப்புவெறுப்புக்களை எல்லா விடயங்களிலும் பிரயோகித்தால் நிச்சயம் நாம் பிளவுற்றுக்கொண்டே போவோம்!.எத்தனையோ நல்லவிசயங்கள் நடைபெற வேண்டியுள்ளது அதைவிடுத்து காசுக்கு வந்து ஆடிவிட்டுபோகும் அந்த நடனமாதுக்கள் பற்றி இப்படி ஆளாளுக்கு அடிபட்டுக்கொண்டிருந்தால் அவர்களுக்கான மவுசு கூடுமே தவிர தமிழ் கலாச்சார மவுசு கூடாது.அந்தப்பொண்ணுகள் இப்ப வேறு ஏதாவது நிகழவுக்கு முற்பணம் வாங்கியிருபாளவை இங்க நாங்க அவையப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறம். எனது கருத்துக்கள் துாய மனதுடன் அரசியல் செய்யும் அல்லது சேவைசெய்யும் எவரையேனும் குறித்துநிற்கவில்லை என்பதை மீண்டும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளலாம்.

நன்றி

0 comments

கருத்துரையிடுக