- பத்ரி சேசாத்திரி . உதயன் நாளிதழ் 19-9-2010 -
(யாழ்பாணத்தில் நடைபெறும் கல்விகண்காட்சி சம்பந்தமான விளம்பர விவரணத்தில் இருந்து)
(-என்னைக் கவர்ந்ததால் இங்கே தருகிறேன் நான் 100 வீதம் நம்புகிறேன் பின்பற்றுகிறேன் - தவா)
எதிர்காலம் நம் கையில்
வளர்ந்த மேலைநாடுகளைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். எப்படி இந்த நாடுகளில் பெரும்பான்மை மக்களுக்கு வேண்டிய எல்லாம் கிடைக்கின்றன. சாலைகள் நன்றாகப் போடப்பட்டு வண்டிகள் வழுக்கிச் செல்கின்றன. வீடுகள் பெரும்பாலும் பார்க்க அழகாக இருக்கின்றன. சிறு பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் வேண்டிய உணவு கிடைக்கின்றது. அவர்கள் நன்கு உண்டு, நன்கு வளர்ந்து மகிழ்ச்சியில் ஆடிப்பாடுகின்றனர். வீடுகளில் குழாயைத் திருகினால் நீர் கொட்டுகிறது.
பள்ளிக்கூடங்களில் அனைவருக்கும் கல்வி கிடைக்கிறது. பொதுச்சுகாதார வசதிகள் எங்கும் கிடைக்கின்றன. சிறுசிறு ஊர்களிலும் மருத்துவமனைகள் உள்ளன. பலநாடுகளில் அரசு மருத்துவ வசதிகளைத் தருகிறது. பிற நாடுகளில் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் மருத்துவச் செலவுகளைச் சரிக்கட்ட முடிகிறது.
மனமகிழ்ச்சிக்கு என்று லட்சம் விஷயங்கள் உள்ளன. கொண்டாட்டங்களில் மக்கள் கூட்டமாகக் கலந்து கொள்கின்றனர். தொலைக்காட்சி பார்க்கின்றனர், புத்தகங்களை படிக்கின்றனர், இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.ஆனால் நம் நாடுகளில் நிலைமை அப்படியில்லையே? ஏழ்மை உள்ளது, படிப்பறிவின்மை உள்ளது. உணவுக்குத் திட்டாட்டம் உள்ளது, நாட்டின் உள்கட்டமைப்புகளில் எக்கச்சக்க குறைபாடுகள் உள்ளன. இன்னும் எண்ணற்ற பிரச்சனைகள். அடிப்படையில் எல்லாமே பணம் சார்ந்த பிரச்சனைகள் தான்.
இந்தப்பிரச்சனைகளைப் பற்றி ஆராய விருப்பமில்லாத பலரும், பேசாமல், நாம் வசதி படைத்த இந்த மேலை நாடுகளுக்குச் சென்றுவிட்டால் என்ன என்று கூட யோசிக்கிறார்கள். நம் உறவினர்கள் பலரும் பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, அமெரிக்கா போன்ற இடங்களில் இருப்பதை நாம் அறிவோம்.
ஆனால் இது ஒன்று தான் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வா? அப்படி எத்தனை பேர் தான் வேறு ஒரு நாட்டில் போய் வசித்துவிடமுடியும்? அப்படிப் போகமுடியாதவர்கள் காலாகாலத்துக்கும் ஏழ்மையில் சிக்கி மோசமான உள் கட்டமைப்புகளுடன் போராடிக் கொண்டே இருக்க வேண்டுமா? முடிவான தெளிவான தீர்வு நம் நாட்டையே வளப்படுத்துவது தான் அல்லவா? அப்படித்தான் அந்த மேலைநாட்டைச் சேர்ந்தவர்களும் ஒரு காலத்தில் செய்துள்ளனர். அவர்கள் நாடும் ஏழ்மையில் உள்நாட்டுச் சிக்கல்களில் மோசமான உள்கட்டமைப்புகளில் எழன்ற ஒன்று தானே?
அவர்களால் தமது நாட்டை மீட்டெடுக்க முடிந்த போது, நம்மால் முடியாதா? முடியும் என்றால் எப்படி முடியும்?
என் கருத்தில் இந்த முடியும் என்ற மனப்பான்மையை நமக்குத் தருவது புத்தகங்களே. வரலாற்றுப் புத்தகங்களைப் படிக்கும் போது தான் பிறர் பட்டுள்ள துயரங்களும் அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டுள்ளனர். என்பதும் நமக்குத் தெரிகிறது.
அறிவியல், தொழில்நுட்பப் புத்தகங்களைப் படிக்கும் போது தான், நம் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு அறிவியல், தொழில்நுட்பம் கொண்டு தீர்வுகளை எப்படி உருவாக்குவது என்று நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. நமக்குத் தேவையான தன்னம்பிக்கையைத் தலைமைப் பண்பை, விடாமுயற்சியை, பொறுமையை, வீரத்தை மன உரத்தை பல தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளிலிருந்தே தெரிந்து கொள்கிறோம்.
நமக்குத் தேவையான நற்பண்புகளை, நற்செயல்களை, நல் அறத்தை பல புத்தகங்களிலிருந்து தான் தெரிந்து கொள்கின்றோம். உலக மக்களை, அவர்களது கலாசாரத்தை, அவர்களது சாதனைகளை, அவர்களது போராட்டங்களை, அவர்களது உயிர்த்துடிப்பை அவர்களது இலக்கியப் புத்தகங்கள் தான் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறது.
நம் தமிழில், நம் மொழியில் இது போன்ற புத்தகங்களைக் கொண்டு வருவது தான் கிழக்குப் பதிப்பகத்தின் நோக்கம். அறிவார்ந்த நூல்களை அருமையான மொழிபெயர்ப்புகளை, உலகத்தரம் வாய்ந்த புத்தகங்களை கிழக்குப் பதிப்பகம் வாயிலாக நாங்கள் கொண்டு வருகிறோம். ப்ராடிஜி புக்ஸ் என்ற பதிப்பின் மூலம் இதே போன்ற புத்தகங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கிறோம். பள்ளி மாணவர்கள் தான் நாளைய உலகின் நம்பிக்கை என்பதை நாங்கள் தீர்மானமாக நம்புகின்றோம். நம் இலட்சியத்துக்கும் நம் இன்றைய நிதர்சனத்துக்கும் இடையில் பெரும் இடைவெளி இருப்பது உண்மையே. ஆனால் இந்த உண்மையை யார் யார் நிரப்பப் போகிறார்கள்? நம் இளைய சமுதாயம் தான். அவர்களது நம்பிக்கைக்கு உரம் போட, அவர்களது அடங்காத ஆர்வத்துக்கு வழிகாட்ட எங்கள் புத்தகங்களால் முடிந்தது என்றால், நாங்கள் உள்ளார மகிழ்வோம். எங்கள் நோக்கம் நிறைவேறிவிட்டது என்று சந்தோசப்படுவோம்.
உலகிலுள்ள முன்னேறிய நாடுகள் அனைத்துமே அறிவு வளர்ச்சி மூலமாகவே முன்னேறின. படிப்பறிவு தர பள்ளிக்கூடங்கள், அந்தப் பள்ளிக்கூடங்களில் எண்ணற்ற புத்தகங்கள், ஊரெங்கும் நூலகம், அந்த நூலகம் முழுக்க நிறைந்திருக்கும் அறிவுக் கருவூலங்கள், இவையே அந்த நாடுகளின் முன்னேற்றத்திற்குக் காரணங்கள். அதே காரணங்களை நாங்கள் அப்படியே நகல் எடுத்தாலே போதும். நம் நாட்டையும் உயர்த்திவிடலாம்.