வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

மகிந்த இராஜபக்ச ,கருணாநிதி, காந்தி குடும்ப அரசியல்களினை பெரும்பாலும் மக்கள் பொதுவாக எதிர்த்தே வருகின்றனர். ஆண்ட பரம்பரை மீள ஆள நினைப்பதில் தவறேது என்று கேட்பது தமது இனத்தின் பரப்பரையினை குறித்தா அல்லது குடும்பங்களைக்குறித்தா என்ற கேள்விகள் காலத்துக்கு காலம் மக்களை சிந்தனையில் உதித்தவண்ணம் இருந்தாலும் ஏதோ சாட்டுக்களை முன்வைத்து அல்லது இயலாமையின் வெளிப்படையாக இது தொடர்ந்த வண்ணம் உள்ளமை கண்கூடு.

இந்த வகையில் தமிழ்த்தேசிய அரசியலிலும் விமர்சனங்களை எதிர்கொண்டு பயணிக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்குள்ளும் நாம் விரும்பாத குடும்ப அரசியல் முளைவிடத்தொடங்கிவிட்டதை மறுக்கமுடியாது. ஈழத் தமிழர் அரசியலில் குடும்ப அரசியல் புதிதல்ல என்ற பொழுதிலும் குறிப்பிடும் படியாக இருக்கவில்லை.மேலும் அரசாளும் சந்தர்பங்கள் கிடைக்காதிருந்தமை உணர்ச்சி அரசியலுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டடிருந்தமை தமிழ்த்தேசிய அரசியலில் விடுதலைப்புலிகளின் பங்களிப்பு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடாக முக்கிய பங்கை செலுத்தியிருந்தமை போன்ற காரணிகளால் மறைந்து போயிருந்த இந்த வெறுப்பிற்குரிய குடும்ப அரசியல் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் அணியினரால் அறிமுகப்படுத்தபபடுவது அவ்வளவு ஆரோக்கியமானதாக படவில்லை.

வடக்கு மாகாணசபைத்ததேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவின் போது அரசல் புரசல்களாக பேசப்பட்ட விடயம் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவின்பின் வெளிச்சத்துக்கு வந்தது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி முதலமைச்சர் வேட்பாளர் தெரிவின் போது ஒரு எழுதப்படாத உடன்படிக்கையினை செய்து கொண்டதாக தகவல்கள் கசிந்தது. அதாவது விக்கினேஸ்வரனை ஆதரிப்பதற்காக வேட்பாளர் தெரிவில் தனது தம்பியான கந்தையா சர்வேஸ்வரனை வேட்பாளராக களமிறக்க கொள்கையளவில் கூட்டமைப்பின் தலைமையினை இணைங்கச்செய்ததாக அந்த செய்தி இருந்தது. கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான விரிவுரையாளர். அவருக்கு யாழ்ப்பாணத்தில் மக்களுடனான எந்த விதமான பின்புலமும் இருந்ததில்லை. ஈபி.ஆர் எல். எவ் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட 4 இடங்களில் ஒன்றின் ஊடாக வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கப்பட்டு பத்திரிகைகளில் விளம்பரம் போடப்படும் வரை அவரை இங்கு பலருக்கு தெரியாது என்பதே உண்மை.

இந்நிலையில் செல்வாக்கு மற்றும் தகுதிவாய்ந்த வேட்பாளர் பலம் கொண்ட ஈ..பி.ஆர்.எல் எவ் கட்சியின் வேட்பளர் பட்டியிலில் தனது தம்பியான சர்வேஸ்வரனை இணைப்பதில் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு அதிக சிக்கல் இருக்கவில்லை. அவரது சொந்த வாக்கு வங்கியினை நம்பியே தம்பியை களமிறக்கினார் என்று கூறுகின்றார்கள். நிறுத்தியவுடனேயே வென்றால் அமைச்சு ஒன்று அவருக்குத்தான் என்ன கதையும் கட்டிவிடப்பட்டிருந்தது.

அவரது கட்சியின் கோட்டாவில்  சுழலியலாளர் ஐங்கரநேரசன், கடற்றொலிலாளர் சமாசத்தினை சேரந்த சுப்பிரமணியம், யாழ் வணிகர் கழக தலைவர் ஜெயசேகரம் ஆகியோர் களமிறக்கப்பட்டிருந்தனர்.தேர்தலில் அவர்களில் அதிகம் கல்விச்சமூகத்தில் பிரபல்யமான ஐங்கரநேசன் கூடிய விருப்பு வாக்குகளை பெற்று வெற்றிபெற்றிருந்தார் கலாநிதி கந்தையா சர்வேஸவரன் ஆரம்பத்தில் வெற்றிபெறவில்லை என்று கூறப்பட் போதிலும் இறுதி முடிவில் வெற்றியாளராக வந்தார்.விருப்பு வாக்குகள் தொடர்பில் வழமை போல சில கட்டுக்கதைகளும் உலாவருகின்றது. மற்றைய இருவரும் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். அந்த நான்குபேர்களில்  தம்பியார் சர்வேஸ்வரன் தவிர்ந்த ஏனைய 3 பேரும் நேரடியாக ஈ.பி.ஆர். எல்.எவ் கட்சியுடன் சம்பந்தப்படாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்நிலையில் இவ் வடமாகாணத்தேர்தலில் சுரேஸ் எம்பியின் கட்சிக்குரிய செல்வாக்கு சரிந்துள்ளது என்றே கூறமுடியும். இதற்கு அவரது குடும்ப அரசியலும் முக்கிய காரணமாக கூறப்படுகின்றது. எனவே கூட்டமைப்பில் குடும்ப அரசியலினை அறிமுகப்படுத்தியதன் மூலம் தனது கட்சிக்கான செல்வாக்கினை குறைத்துக்கொண்டுள்ள சுரேஸ் தொடர்ந்து அதனை சரியவிடாது பாதுகாக்க என்ன செயற்பாடுகளை செய்யப்போகின்றார் என்பதே கேள்விக்குறி. ஆரம்பத்தில் தேர்தலில் சுயேட்சையாக நின்று தோல்வியுற்றிருந்த இவர் கூட்டமைப்பின் ஊடாகவே எம்பியாக முடிந்தமை குறிப்பிடத்தக்கது. விடுதலைப்புலிகளின் மன்னிப்பின் ஊடாக ஈ.பி.ஆர் எல்.எவ் என்பது மண்டையன் குழு என்று மக்களிடம் பேசப்பட்ட நிலை மாறி தனக்கு கிடைத்த அங்கீகாரத்தினை குடும்ப அரசியலின் மூலம் குழப்பிவிடுவாரா அல்லது தன்னை மீளாய்வு செய்து சரியான வழி பயணிப்பார என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்

தர்மலிங்கத்தின் புண்ணியத்தால் அவரது மகன் சித்தார்த்தன் கூடிய செல்வாக்கினை யாழ்ப்பாணத்தில் பெற்றதன் மூலம் கூடிய விருப்பு வாக்குகளைப்பெற்று மாகாண சபைத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்கின்றார்.அதன் மூலம் புளொட் முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அரசியலில் செல்வாக்கு செலுத்த தொடக்கியிருக்கின்றமையும் இங்கு குறிப்பிட வேண்டியிருக்கின்றது. இந்த புளொட் அமைப்பு பல விமர்சனங்களுக்குள்ளானதும் இறுதியாக வந்திணைந்த பங்காளிக்கட்சி என்பதும், வவுனியா மக்களிடம் சற்று வெறுப்பை சந்தித்த கட்சி என்பதுவும் கவனிக்கத்தக்கது. சித்தார்த்னின் அரசுக்கு வக்காளத்து வாங்கும் செயற்பாடுகள் ,போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கியதான சில செய்திகள் ,போர் முடிவுற்றதன் பின்னரான பேட்டிகள் சங்கரிக்கு ஏற்பட்ட நிலைபோல சலசலப்பை ஏற்படுத்தியிருந்தமையும் மறுக்கமுடியாது.இருந்தும் அவரை தகப்பனாரின் புண்ணியம் காப்பாற்றியுள்ளது.

ரெலோ அமைப்பு மன்னாரில் கூடிய செல்வாக்கு செலுத்தி தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் ஒரு பேரம் பேசும்க ட்சியாக உருவெடுத்துள்ளது. அதனால் அக்கட்சிக்கு வடமாகாண அமைச்சில் ஒரு அமைச்சு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய அழுத்தத்தினை அது கொடுத்துவருகின்றது. அதன் முன்னணி செயற்பாட்டாளராக மன்னார் மாவட்ட எம்பி செல்வம் அடைக்கலநாதன் தொழிற்பட்டு வருகின்றார். யாழில் சிவாஜிலிங்கம் தொழிற்படுகின்றார்.

ஆனந்த சங்கரியின் தமிழர்விடுதலைக்கூட்டணியைப்பொறுத்தவரை அது தற்போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அரசியலில் மக்களால் ஓரங்கட்டப்பட்டுவிட்டது. கிளிநொச்சியை தமிழரசுக்கட்சியின் சிறீதரன் எம்பி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததன் மூலம் இது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.

தற்போது தனிப்பெரும் கட்சியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சி கோலோச்சி வருகின்றது. அந்நிலையில் போனஸ் ஆசனப்பங்கீடு விடயத்தில் அமைச்சரவை விடயத்தில் இந்த செல்வாக்குகள் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன செலுத்தும் என்பதை எவராலும் மறுக்கமுடியாது. இந்நிலையில் அமைச்சரவையில் தமிழரசுக்கட்சி 2 இனை அபகரித்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை ரெலோ ஒன்றினை பெற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கின்றது. எனவே அது மன்னாருக்கு கிடைக்கலாம். அது கூடுதலாக சுகாதார அமைச்சாகவே இருக்கக்கூடும் என கூறப்படுகின்றது. 

தமிழரசுக்கட்சி தனக்கு எடுக்கவுள்ள அமைச்சுக்கள் 2 இல் ஒன்றை கிளிநொச்சியில் குருகுலராஜாவுக்கே வழங்கும் என கூறப்படுகின்றது . அதில் சிறீதரன் எம்பி பிடியாக இருக்கிறாராம்.மற்றையது யாழ்ப்பாணத்திற்கு கிடைக்கலாம். அடுத்த ஒன்று யாருக்கு என்பதை சுரேசின் நடவடிக்கைகள் தீர்மானிக்க போகின்றன என்றே தெரிகின்றது. இருப்பினும சுரேஸ் அவர்கள் தம்பிக்காக வாதாடுவாரா அல்லது வெற்றிபெற்ற தனது மற்றைய வேட்பாளருக்காக வாதாடுவாரா என்று அவருக்குதான் வெளிச்சம். தம்பிக்குத்தான் வாதாடுவார் எனில் குடும்ப அரசியலினை மேலும் உறுதிப்படுத்தி தனது கட்சி செல்வாக்கினை மக்களிடத்திலும் கூட்டமைப்பின் தலைமையிடத்திலும் குறைத்துக்கொள்ளவே வாய்ப்பிருக்கின்றது என கூறலாம். தமிழரசுக்கட்சி உயர்பீடம் தமது நெருங்கிய வட்டாரங்களிடையே அந்த ஆதங்கத்தினை ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கின்றனராம்.

புளொட் சித்தார்த்தனுக்கு அமைச்சு அவழங்கப்படவெண்டுமென்ற குரல்களை அவைத்தலைவர் பதவி கொடுத்து ஆசுவாசப்படுத்த முயற்சிகள் நடைபெற்றுவரும் நிலையில் சுரேசின் முடிவு பலத்த எதிர்பார்ப்புகளை பெற்றிருக்கிறது. இதேவேளை தேர்தலில் கூட்டமைப்புக்கு கிடைத்த 2 போனசில் ஒன்று முல்லிம் வேட்பாளருக்கும் மற்றையது முல்லைத்தீவில் பெண்வேட்பாளருக்கும் என கூறப்படுகின்றது.இறுதி முடிவு நாளை தெரியவரும்

எது எப்படியோ அமைச்சுப்பதவிகள் துறைசார்ந்தவர்களிடம் செல்லவேண்டும். அந்த பதவிகள் பொதுநலன் சாரந்ததாகவேயன்றி தனிப்பட்ட நலன்களுக்கானதாக இருக்ககூடாது . இந்த போனஸ் அமைச்சரவைத்தெரிவுகள் கூட்டமைப்புக்குள் குழப்பத்தினை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கவேண்டும்.

எமது மக்கள் விக்கிரமாதித்தன்கள் தான்!

Posted by Thava வெள்ளி, 27 செப்டம்பர், 2013 0 comments

வடக்கு மாகாகாண தேர்தலை புறக்கணித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் .அதன் தலைவரான பொருளியல் ஆசிரியர் வரதராஜன் தான் அக்கட்சியில் இருந்து விலகி அறிக்கை விட்டதன் பின்னணியில் கூட்டமைப்பிற்கெதிரான விமர்சனங்களை முடுக்கி விட்டிருக்கின்றனர்.அவரது அறிக்கை மீதான விமர்சனத்திற்கு அப்பால் கூட்டமைப்பின் உள் வீட்டு விவகாரங்களுக்கு அப்பால் ,பொதுவாக நோக்கின் யாரும் புனிதர்கள் கிடையாது! ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவதில் பலனில்லை. மற்றவர்கள் அப்படி செய்திருக்கலாம் இப்படிச்செய்திருக்கலாம் என்று கூறுவது இலகு .

ஏன் அதனை தாமே செய்திருக்கலாமே? பிறகெதற்கு கட்சி, கொள்கை. எல்லோருக்கும் தெரியும் மக்கள் இந்த கட்சிகளின் தற்போதைய கொள்கைகளை ஏற்கவில்லை என்றும் அவர்கள் வெறுமனே அரச எதிர்ப்புக்கொள்கையில் தான் இருக்கிறார்கள் என்றும் இந்த மக்களுக்கு தலைமை தாங்கக்கூடிய ,அந்த மக்களது உண்மையான உரிமைக்குரலுக்கு வடிகாலாய் அரசியல் செய்யக்கூடிய எவனும் இங்கு இல்லை என்றும் எல்லோருக்கும் தெரியும். தற்போது இலங்கையில் அதற்கான சாத்தியப்பபாடுடைய சூழலும் இல்லை. அது வெளியில் இருந்துதான் செய்யமுடியும்.

அதற்காக அரசுக்கட்சிக்கு வாக்களிக்கவும் மக்கள் ஒருபோதும் தயாரில்லை.எனவே உங்கள் சந்தர்ப்பவாத அரசியலுக்கு வீழச்சி இல்லை என்றும் நம்பலாம்.

சர்வாதிகார ஆட்சியில் இங்கு எவராலும் எதனாலும் எதையும் சாதிக்கமுடியாது என்பதை நிரூபித்துக்கொண்டு , நமக்கு பிரச்சனை இருக்கிறது. தீர்வு தேவை என்று தெரியப்படுத்தி நமது மக்களின் இருப்பையும் எதிர்காலத்திற்கான அடிப்படை விடையங்களையும் முன்கொண்டு செல்வதே தற்போதைக்கு முடியும். அதை இந்தக்கட்சிகள் தம் தம் வழியில் செய்யலாம். அதை விடுத்து ஒருத்ததரை ஒருத்தர் பிடுங்கித்தின்ன நினைக்கும் சந்தர்ப்பவாத அரசியலை தவிர்க்க வேண்டும்

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பாயிருந்தால் என்ன தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியாக இருந்தால் என்ன இரு கட்சிகளாலும் தமது இலக்கினை அடைவதற்கான தெளிவான வழிமுறைகளை முன்வைக்க முடியவில்லை.இவர்களிடம் ஒரு உத்தேச தீர்வுத்திட்டம் கூட இல்லை. வெறுமனே தாம் துறை சார்ந்தவர்கள் சட்டவாளர்கள் என்று இருகட்சிகளிலும் சிவில் சமூகக்குழுக்களிலும் இருந்து அறிக்கைளை விடுகிறார்கள் . ஆலோசனைகளை அள்ளி வீசுகின்றனர். அது மக்களுக்கு ஏற்கனவே தெரிந்த விடயங்கள். எல்லாம் மாயை. அவர்கள் முடிந்தால் சாத்தியமான ஒரு தீர்வுத்திட்டத்தினை வரைவு செய்யட்டும் பார்ப்போம்.தனிநாடு தான் என்று இலகுவாக கூறி தப்பிக்கொள்வார்கள்.

தேர்தல் புறக்கணிப்புக்கு பலர் கூறியகாரணம் வேறு உண்மைக்காரணம்வேறு. மாகாகாணசபை எப்படியோ அது மாதிரியே பாராளுமன்றமும். இதிலும் இவர்கள் சென்று கிழித்தது எதுவும் இல்லை தமது உறவினர்களுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்ததும் அதனால் கிடைத்த வசதி வாய்ப்புக்களை பெற்று அனுபவிப்பதுதான் இன்று வரை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நடைபெறுகிறது. ஒதுக்கீடுகளை கூட தமது அடுத்த வெற்றிக்கான வாக்கு வங்கி பலப்படுத்தல்களுக்காக தான் பயன்படுத்துகின்றனர் பயன்படுத்தினர். ஏன் இன்னும் பலர் அந்தப்பாராளுமன்றக்கதிரைகளுக்காக ஏங்கி இருக்கின்றனர். அதற்கான வேலைத்திட்டங்களில் இறங்கி இருக்கின்றனர்.முன்னர் இறங்கி தோற்றிருந்தாலும் கூட காத்திருக்கின்றனர்.

ஆக மொத்தத்தில் மக்களின் மனதை வெல்ல பாருங்கள் வெறுமனே ஊடகங்களை நம்பி அரசியல் செய்யாதீர்கள். கொள்கை ,தெளிவான பார்வை ,நோக்கு ,இலக்கை அடைவதற்கான முறையான வழி ,இதய சுத்தி இருந்தால் மக்கள் கூட்டம் வைக்காமலே வாக்கு போடுவார்கள்.

அதை இங்கு எவராலும் செய்ய முடியாது! அதற்கான திட்டம் எவரிடமும் இல்லை. சர்வதேசம் பார்த்து ஏதும் செய்தால்தான் உண்டு . அதைவிட வேறு ஒன்றும் இப்போதைக்கு இல்லை.இலக்குடன் இறுதிவரை பயணிக்க தலைவர் போல இங்கெவரும் இல்லை. அவர் வழியில் செல்லக்கூடிய தலைவர்களும் இல்லை.எனவே அப்படி ஒரு போராட்டத்தினை நாம் எதிர்பார்க்க முடியாது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரே! உங்கள் திட்டத்தினை மக்களிடம் முன்வைத்து அவர்களின் ஆதரவுடன் (அது கிடைத்தால்) அதை செயற்படுத்துங்கள்.ஏன் பகிரங்கமாக அரசிடமும் மக்களிடமும் சர்வதேசத்திடமும் அத்திட்டத்தினை அறிக்கையாக ஆவணமாக வெளியிடுங்கள் பார்ப்போம். தீர்வை அடையும் வழி ,மாதிரி தீர்வு திட்டம் தொடர்பாக கூட்டமைப்பிடமும்  ஒரு திட்டமும் இல்லை உங்களிடமும் ஒரு திட்டமும் இல்லை. உங்கள் திட்டத்திற்கான இணைப்பு ஏதாவது இருந்தால் தெரியப்படுத்துங்கள் பார்ப்போம் . விடுதலைப்புலிகளின் இடைக்கால நிர்வாக சபைத்திட்டங்கூட இன்று பொதுவெளியில் கிடக்கிறது. உங்கட ஒருத்தருடையதும் இல்லை. சும்மா விளங்காதமாதிரி உரைகளை நிகழ்த்துவதால் பலனில்லை.

அன்ரன் பாலசிங்கம் ஒருமுறை கிளிநொச்சியில் சந்திரன் பூங்காவில் உரையாற்றிய போது சொன்னார் ” சந்திரிகா அம்மா தன்னட்ட ஒரு திட்டப்பொதி இருக்கு அதை இந்தா திறந்து காட்டுறன் பொங்கலுக்கு காட்டுறன் என்டு சொல்லிக்கொண்டிருக்க சிவசிதம்பரம் ஐயா இப்பவே காட்டுங்க என்று காலில விழாக்குறையா சுத்திக்கொண்டு திரியிறார் ” என்று .அது போல நாமும் கேட்கின்றோம் அதை நீங்க இப்பவே காட்டுங்க எண்டு. கூட்டமைப்பு தங்கள் வழியால் செல்லட்டும். நீங்கள் உங்கள் வழியால் செல்லுங்கள். யாரால் முடிகிறது என்று பார்க்கலாம். சுத்தி சுத்தி இருதரப்பும் ஒரே விடயத்தினைத்தான் கூறுகின்றனர் .இருதரப்பும் தனிநாட்டுக்கோரிக்ககையினை கைவிட்டு கனகாலமாகிவிட்டது.கைவிட்ட திகதிகள் தான் வேறு.

தேர்தலில் பங்குபற்ற முடிவுசெய்தால் அது சுயேட்சையாயிருந்தால் என்ன , கட்சியில் ஊடாக என்றால் என்ன இரண்டும் ஒன்றுதான் சர்வதேசம் அதனை ஒன்றாகத்தான் நோக்கும். அதில் சுயேட்சையாக போட்டியிடுங்கள் என்று கேட்பது ,வேறு ஒரு நுண் அரசியல். உள்நோக்கம் கொண்டது .விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்பது உங்கள் வாதம். நீங்கள் வேலை செய்தாலும் வேலைசெய்யாவிட்டாலும் கொதித்திருந்த மக்கள் அரசுக்கு எதிராகத்தான் வாக்களித்திருப்பர்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு -இது தலைவர் பிரபாகரன் அவர்களால் தலைமை தாங்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆசியுடன் உருவாக்கப்பட்டது அவர்களால் வேட்பாளர்கள் தெரியப்பட்டிருந்தனர் , அப்படியென்றால் தலைவர் அவர்களையும்(கூட்டமைப்பில் புலிகளால் நிறுத்தப்பட்டு வென்றவர்களை ) நிராகரிக்கிறார் , கேவலப்படுத்துகின்றார் என்று அர்த்தமா ? தமிழர் விடுதலைக்கூட்டணி உதய சூரியன் சின்னத்தில் போட்டிட்ட ஒரு கட்சி இரண்டையும் விளங்கிக்கொள்ளாமல் சிலர் இளைவர்களை எப்போதோ வெளிவந்த வெட்டி எடுக்கப்பட்ட காணொளி மூலம் குழப்ப முயற்சிக்கின்றனர். வீட்டுக்கும் சூரியனுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களல்ல நம்மக்கள். தலைவரால் வெளியிடப்பட்ட இக்கருத்து வெளிவந்த காலப்பகுதி வேறு சந்தர்ப்பங்களும் வேறு. புரிந்துகொள்ளுங்கள்.

இலங்கையின் அரசியலமைப்பில் தமிழர்களுக்கு எந்த ஒரு இடத்திலும் தீர்வு இல்லை இது மாகாணசபையில் மட்டும் தான் இல்லை என்று மட்டும் கூறவேண்டாம்.முடிந்தால் அடுத்த பாராளுமன்றதேர்தலையும் தொடர்ந்து புறக்கணியுங்கள். புறக்கணிப்பு சரிவராது என்பதே என் நிலைப்பாடு.

இன்னும் இங்கு வடமாகாணசபை ஊடாக அதிசயம் ஏதும் நடைபெறும் என்று மக்கள் நம்புவதில் தப்பேதும் இல்லை! இன்று பத்திரிகை வாசித்த பின்னும் தீர்ப்புக்கள் மாற்றப்படலாம் என்று கூறும் பெரியவர்கள் நிறையப்பேர் உள்ளனர். எமது மக்கள் விக்கிரமாதித்தன்கள் தான்!

வெண்ணை திரண்டுவர தாழியை உடைத்துவிடாதீர்

Posted by Thava செவ்வாய், 24 செப்டம்பர், 2013 0 comments

அட இணையத்தளங்களில் கட்டுரை எழுதுறன் என்று காழ்ப்புணர்ச்சிகளை கக்குகின்றவர்கள் , வெளியில் தனிநாட்டு ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொண்டு தங்களது வெளிநாட்டு உள்நாட்டு இருப்பை காத்துக்கொள்ள பாடுபடுபவர்கள், விக்கி கல்லறை கட்டுறன் என்று கருத்து சொல்லிப்போட்டார் என பொய்ச்செய்தி பரப்புறவங்கள் , அவர் இவற்ற ஆள் அவா அவங்கட ஆள் என்று விக்கி , அனந்தி மற்றும் வேட்பாளர் பற்றி அவதூறு பரப்புறவங்கள் எல்லாரும் கொஞ்ச நாளைக்கு பொத்திக்கொண்டு இருந்தா நமக்கு ஏதாவது நல்லது நடக்கும்.

இப்பவே விமல் வீரவன்ச சவால் விடத்தொடங்கிவட்டார். வெண்ணை திரண்டுவர தாழியை உடைத்துவிடாதீர் உறவுகளே!

இன்னும் பதவியே அவங்கள் ஏற்கவில்லை அதுக்குள்ள ஆயிரம் புரளிகளும் விமர்சனங்களும் விடுறாங்கள். விக்கி பேட்டி கொடுக்குறத்துக்கு முதலும் கருத்து தெரிவிக்கிறத்துக்கும் ஏன் தும்முறத்துக்கும் முதல் உங்களைதான் கேட்கவேணும்போல! சுயாதீனமா அந்தாளை செயற்பட விடுங்க.உங்கட இணையத்தளங்களில் நீங்க மசாலா செய்திகள் போட்டு உழைக்கிறது காணாதா ஏன் எமது மக்களின் எதிர்கால இருப்பை பாழாக்குறீங்க.

மக்கள் என்ன ஆணை கொடுத்தவர்கள் என்று மக்களுக்கு தெரியும். வேட்பாளர்களு்க்கும் தெரியும் இதை மீண்டும் மக்களுக்கு நீங்கள் சொல்லிக்காட்டவேண்டிய அவசியமில்லை.உங்கட ஆய்வுகளை நிறுத்திவிட்டு வேறு ஏதாவது கதையுங்க. FB திறந்தா உங்கட குற்றச்சாட்டுக்களாலயும் கூட்டமைப்பு பற்றிய விமர்சனங்களினாலும் நிரம்பி வழியுது.எங்களிடமும் விமர்சனங்கள் உள்ளது . கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும். அதிலயும் மக்கள் கொதிப்புடன் உள்ளனர் என்று வேறு செய்தி போடுகினம். இங்க தாயகத்தில் மக்கள் வெற்றிக்களிப்பில் உள்ளனர் . அடுத்த கட்ட நகர்வுக்காக ஆறுதலாக அமைதியா உள்ளர் . சில வாக்காளர்கள் இதற்காக கிராமங்களில் அடிவாங்கியும் உள்ளனர். நீங்க ஒருத்தரும் ஆணிய புடுங்க வேணாம்...

அரசியலில் கதைக்க ஆயிரம் இருக்கு!அதை செய்யுங்க! வேணும் என்றால் எமது வெற்றியை கொண்டாடுங்கள் உலகமெங்கும் எடுத்துச்சொல்லுங்கள்! பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களாலால ஏதாவது புதிய வடக்கு அரசின் ஊடாக என்ன செய்யலாம் என சிந்தியுங்கள்.அடுத்த நகர்வுகள் குறித்து சாத்தியமான முன்மொழிவுகளை முன்வையுங்கள்.

வெற்றிக்கு உழைத்துவிட்டு அடுத்த நகர்வுகளுக்காக இருக்கும் உண்மையான அமைதியான உணர்வாளர்கள் நிறைய பேர் உலகமெங்கும் உள்ளர் உள்ளனர் அவர்களை இப்பதிவு குறிக்கவில்லை! பொறுத்தருளவும்.

நடந்து முடிந்த வடமாகாணசபை தேர்தலில் வரலாற்று வெற்றிக்காக கிராமங்கள் தோறும் மிகவும் அர்பணிப்புடன் தொழிற்பட்டு வாக்களிப்பு வேகத்தினை கூட்டியும் விழிப்புணர்வினையும் ஏற்படு்த்திய இளைஞர்களுக்கு இந்நாளில் நன்றிகூறவேண்டும்.தள்ளாத வயதிலும் வாக்களித்த பெரியவர்களின் விருப்பையும் மதிக்கவேண்டும்.

இளைஞர்களின் பங்கின்றி எதுவும் இல்லை என்பதை இது எடுத்துகாட்டியிருந்தது.அதற்காக அவர்கள் எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள் நிறைய.

எப்படியிருப்பினும் வடக்கு தேர்தல் நடைபெற பல தரப்புக்கள் உதவி செய்திருக்கையில் வெற்றியை தீர்மானித்தது நமது வடமாகாணத்தில் வாக்களித்த மக்களே! வாக்குரிமையினால் கிடைத்த வெற்றியான அதில் எவரும் உரிமை கோர முடியாது! இறுதி பாதைக்கான கொள்கை மாறியிருப்பின் அல்லது மக்களின் கோரிக்கைக்கு மாறானதாக இருந்திருப்பின் இந்த ஆணையினை மக்கள் வழங்கியிருக்கமாட்டார்கள்! தேர்தல் விஞ்ஞாபனம் என்ன சொன்னதோ அந்த ஆணையுடன் வேறு நீங்கள் விரும்பும் ஆணைகளை இணைத்து அடுத்த கட்ட அரசியல் நகர்வினை யாரும் குழப்பிவிடவேண்டாம்!

எதனையும் நேரடியாக அடைந்துவிடமுடியாது சில நகர்வுகளின் ஊடாக படிபபடியாகவே பெறமுடியும்.

எமது மக்கள் தற்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை ஒரு பதில் சொல்ல வேண்டிய அமைப்பாக மாற்றிவிட்டிக்கின்றார்கள். விக்கினேஸ்வரனின் கையில் முக்கிய பொறுப்பினை ஒப்படைத்திருக்கிறார்கள். ஐயாவின் இலக்கம் என்ன என்று கேட்டு கேட்டு வாக்கு போட்டதை நான் நேரில் அவதானித்தேன்.

ஒரு இனத்தின் தலைவிதியை அவ்வினத்தின் ஒருதலைமுறை மட்டும் நிர்ணயித்து விடமுடியாது. வயது வந்தவர்களை முற்றாக ஒதுக்கிவிடவும் முடியாது என்பதையும் இத்தேர்தலின் ஆணை எமக்கு எடுத்தியம்புகின்றது.அதை இளைஞர்கள் உணர்ந்துவிட்டார்கள் என்றே தோன்றுகின்றது.எம்மை நாம் சுயமீளாய்வு செய்யவும் வேண்டிய தேவையினை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த அடுத்தகட்ட அரசியல் நகர்வுக்கு எம்மை கொண்டுவந்து விட்ட பெருமை நிச்சயமாக நாங்கள் நேசித்த அந்த தியாகிகளையே சாரும்.அதற்கான நாம் கொடுத்த விலை கணிப்பிடமுடியாதது. வெண்ணை திரண்டு வருகையில் யாரும் தாழியை உடைக்க மாட்டார்கள் என நம்புவோம்.

என்னைப்பொறுத்தரை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எடுத்தார் கைப்பிள்ளையாக இருக்கமாட்டார் என நம்புகின்றேன். அவருடைய சமீபத்தைய கூற்றுக்கள் செயற்பாடுகள் அதனையே எடுத்துக்காட்டுகின்றன.இறுதியாக கூறியிருந்தார் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளவேண்டும் என்று. அதனையும் கூட எம் மக்கள் ஏற்றிக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.காலம்காலமாக புறக்கணிப்புக்களின் ஊடாக நாம் பெற்ற உரிமைகளைவிட இழந்த உரிமைகள் ,நன்மைகள் கூட.

அரசும் அதனோடு இணைந்து இயங்கும் அரசியல்வாதிகளும் தமது நிலைப்பாட்டையும் செயற்பாடுகளையும் மீள்பரிசீலணை செய்யவேண்டிய கால கட்டத்தில் இருந்துகொண்டிருக்கின்றனர்.அவர்கள் தமது சலுகை மற்றும் அபிவிருத்தி அரசியலின் பதிப்பை மேம்படுத்தி அடுத்த தீர்வு அரசியலுக்கான புதிய பதிப்பினை வெளியிடவேண்டியதன் தேவையினை இது உணர்த்தியிருக்கிறது.சிந்திப்பார்களா? அரசு மட்டுல்ல நம்மவர்களும்! இது காலத்தின் தேவை! இவ்வுலகில் மாற்றம் ஒன்றே மாறாதது! -தவா

அப்பிளின் iOS 7 இயங்கு தளத்தில் தமிழ் விசைப்பலகைககள் இரண்டு  சேர்க்கப்பட்டுள்ளதும் இங்கு நான் உட்பட எனது நண்பர்கள் இந்த வரவால் மிக மிக மகிழ்வுக்குள்ளாகியிருக்கின்றோம். காலத்தின் தேவை கருதிய அமைதியான புரட்சி என்று கருதுகின்றேன். நண்பர்கள் அஞ்சல் பலகை தெரிவு செய்வதைவிடவும் தமிழ் 99 ஒட்டிய மேற்படி இலகுபடுத்தப்பட்ட விசைப்பலகையினை தெரிவுசெய்வதை பெரிதும் விரும்புகிறார்கள்.

Tamil 99 விசைப்பலகை தான் ஆனால் "ஐ" கீழிறக்கப்பட்டுள்ளது. சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது .தட்டச்சு செய்யும்போது விசைப்பலகைகள்  மாற்றும் முறை பிடித்திருக்கிறது. பாமினி எழுத்துரு கட்டமைப்பில் ஆங்கில விசைப்பலகையில பழகியது மாற கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது அவ்வளவுதான். பழகும்வரை அஞ்சல் விசைப்பலகை கைகொடுக்கும்.

செயற்படுத்தும் முறை

Setting பகுதியில் General  இல் Keyboard என்ற பிரிவுக்கு சென்றுஅங்கு காணப்படும் Keyboards தெரிவில் சென்று , Add New Keyboard தெரிவு செய்ய வருகின்ற பட்டியலில் , Tamil என்பதை தெரிவுசெய்தால் சரி .அதன்பின்னர் வேண்டுமானால் இங்கு காணப்படக்கூடிய Tamil என்ற விசைப்பகையின் உட் சென்று  ”Tamil 99” என்பதுடன் Anjal விசைப்பலகையினையும் மேலதிகமாக சேர்த்துக்கொள்ள முடியும். என்னைப் பொறுத்தவரை Tamil 99 சிபார்சு செய்கின்றேன்.

தட்டச்சு  செய்யும்போது விசைப்பலகையினை  மாற்ற ”உலகம்”  பட விசையினை பயன்படுத்த வேண்டும். வடமொழி எழுத்துக்களை மற்றும் தமிழ் இலக்கங்களை ,ஸ்ரீ ,ஓம் , குறியீகளை பெற மேல்நோக்கிய அம்புக்குறி விசையினை (Shift) பயன்படுத்தலாம்.

”மீள்” என்ற விசை அடித்தவற்றை அழித்துவிடுவதை  என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது எமக்கு வசதியீனமாக உணர்கின்றேன். அடுத்த பதிப்பில் அதை மாற்றவேண்டும்.

இது சிறியவர்களிடத்தில் மொழிப்புலமையினை வளர்க்கவும் உச்சரிப்பு சார்ந்த எழுத்துக்கொலையினை தவிர்க்கவும் பெரிதும் உதவப்போகிறது. உடனடியான மெய் எழுத்து பிரயோகம் தவிர்கப்பட்டு குற்று இடுவதன் மூலம் மெய் எழுத்து உருவாக்கும் முறை கொண்டு வந்தது நல்லது. நேரடியான கொம்புகள் பிரயோகம்  நீக்கியதை வரவேற்கின்றேன். இனி ஒருவரும் தமிழினை அடித்துக்கொல்ல (:-) ) முடியாது.  மெய்யெழுத்துகளுடன் உயிர் எழுத்துக்கள் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டமையும் வரவேற்கத்தக்கது.

இதற்காக உழைத்தவர்களுக்கு நன்றி கூற வேண்டும். அப்பிள் நிறுவனத்திற்கு முதலில் நன்றிகள். அப்பிளின் தமிழ்ப்பதிப்பு என நாங்கள் கருதும் முத்து (:-) ) அவர்களுக்கும் நன்றி

Android சொதனங்களில் தமிழில் தட்டச்சு செய்ய
https://www.youtube.com/watch?v=QEDBSp3gxw8

வெல்லப்போவது யார்

Posted by Thava சனி, 14 செப்டம்பர், 2013 0 comments

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இன்னும் சில நாட்களில் அதாவது எதிர்வரும் 21 ம் திகதி நடைபெறவுள்ள வடமாகாணசபைத்தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற கேள்வி பலரால் கேட்கப்படுகிறது. வடக்கு மகாணத்தில் உள்ளவர்களை விட அதற்கு வெளியில் உள்ளவர்களாலேயே இந்த வினா பெரிதும் எழுப்பப்படுகின்றது.

வடக்குமாகாணத்தினைபொறுத்தவரை அவதானிக்கப்பட்ட மக்கள் அலைகள் மற்றும் கருத்துக்கணிப்புக்களின் பிரகாரம் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பெரு வெற்றி பெறும் என்பது உறுதியாகி வருகின்றது. வெளியில் உள்ளவர்களுக்கு இச்செய்தி 22ம் திகதிக்கு பின்னர்தான் உறுதிசெய்யக்கூடியதாக உள்ளது எனினும் இங்குள்ளவர்களுக்கு அது தெரிந்த முடிவாயிருக்கின்றது.

அரசதரப்பு வேட்பாளர்கள் அமைச்சர்கள் பலர் இதனை தமது ஆதரவாளர்களிடத்திலும் ஏன் சில கூட்டங்களிலும் தாமே கூறிவருகின்றனர். சனாதிபதி மகிந்த இராஜபக்ச கூட ,அவர்கள் வெற்றிபெற்றாலும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்ற முடியாது என்ற கருத்து தெரிவித்திருப்பதன் மூலம் இதனை ஒத்துக்கொள்கின்றார். அவற்றை எல்லாம் தாண்டி அரசு அமைச்சர் நிமால் சிறிபால்டி சில்வா  கூட்டமைப்பினரின் விஞ்ஞாபனத்திற்கு தம்மிடம் நல்ல மருந்துகள் இருப்பதாகவும் கூட்டமைப்பினரால் அதை நிறைவேற்ற முடியாதென்றும் கூறியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக்கட்சியும் அதன் தலைவர் பங்குபற்றியிருந்த கூட்டத்தில் விக்கினேஸ்வரன் தான் முதலமைச்சர் என் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சில வெளிப்படை உண்மைகளை தேர்தல் வைத்துத்தான் தெரியவேண்டுமென்பதில்லை .மக்கள் எளிதில் பழையதை மறக்கத்தயாரில்லை என்பதே யதார்த்தம் என நமது சுற்றுவட்டாரத்தில் சில வீட்டுக்கட்சி ஆதரவாளர்கள் கூறிக்கொள்கின்றனர்.

இந்த தேர்தலை பொறுத்தவரை  இங்குள்ள வாக்காளர்களில் கணிசமானவர்கள் இம்முறை தான் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தினை முதற் தடவையாக பயன்படுத்த உள்ளனர். பலர் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தேர்தல்களை புறக்கணித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இடம்பெயர்வின் காரணமாக வாக்களிப்பு நிலையங்கள் அவர்களது சொந்த இடங்களில் இருந்த நிலை மாறி தற்போது அனைவரும் தமது வாக்காளர் இடாப்பினை திருத்தி சரியான தொகுதிகளை மாற்றியிருக்கின்றனர்.அதோடு வடக்கு மாகாணசபை என்பதை பல வாக்காளார்கள் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கின்றார்கள் அதை புதிய ஒன்றாகவும் நோக்குகின்றனர். தீர்வுக்கான ஆரம்பமாகவும் நோக்குகின்றனர்.

பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நடைபெற்ற தேர்தல்களில் அரச தரப்புக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினருக்கும் மாறிமாறி அவர்கள் கேட்ட ஆணைகளுக்கு பதில் வழங்கி தமது நிலையினை தெரிவித்து வந்திருந்தனர்.அதன் போது  எதிலும் கணிசமான அதிகாரங்களுடன் ஆட்சியை அமைக்கக்கூடிய ஒரு அரசியல் கட்டமைப்புக்குரிய தேர்தல்களாக இவை அமைந்திருக்கவில்லை. சனாதிபதித்தேர்தலாக இருந்தால் என்ன பாராளுமன்ற தேர்தல்களாக இருந்தால் என்ன உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலாக இருந்தால் என்ன அவற்றில் இடங்களை கைப்பற்றுவதன் மூலம் சாதிக்கக்கூடிய ஆட்சி எதனையும் ஏற்படுத்திவிடமுடியாது  என்பதே அதற்கு காரணம். கடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் பலர் ஈடுபாடே காட்டியிருக்கவில்லை அவ்வளவுக்கு அது அரசியல் முக்கியத்துவம் கொண்டிருக்கவில்லை.

இருப்பினும் நடைபெற்ற கிழக்கு மாகாண தேர்தலில் கூட்டமைப்பு வெற்றியை நழுவ விட்டிருந்ததை மறப்பதற்கில்லை.தமிழ்மக்கள் பலரால் அதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை அத்தேர்தலில் முஸ்லிம்களும் முக்கிய தீர்மானிக்கும் சக்தியாக இருந்தமையும் கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவுகளும் அவர்களால் கிழக்கு மாகாணசபையினை கைப்பற்றமுடியாமல் போனமைக்கு முக்கிய காரணங்களாக அமைந்திருந்தது. இருப்பினும் நடைபெற உள்ள வடமாகாணசபைத் தேர்தலானது முற்றிலும் வேறுபட்டதாக காணப்படுகின்றது. சர்வதேசத்தின் கவனம் கூட இந்த தேர்தலில் மிகவும் இறுக்கமாக பதிந்திருக்கின்றது.இந்தியாவின் ஆதிக்கம் நிறையவே உள்ளது. இந்நிலையில் தமிழ்த்தேசிய அரசியலின் முதுகெலும்பாக கணிக்கப்படக்கூடிய யாழ்ப்பாண அரசியல் இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையில் இன்று நேற்றல்ல அன்று தொடக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

எனவே அது சார்ந்துள்ள வடமாகாணசபை தேர்தலில் மக்கள் கூடிய அக்கறையுடன் இருப்பதில் வியப்பேதுமில்லை. இந்த தேர்தலில் கூட்டமைப்பின் வெற்றியினை உறுதிசெய்யக்கூடிய நிறைய காரணிகள் முன்னரே தென்படத் தொடங்கியிருந்தன. அதற்கு அரசாங்கமே பலவழிகளில் வழிகோலியிருந்தது. மனித உரிமை குறித்த சர்வதேச நெருக்கடி, காணி சுவீகரிப்பு ,காணாமல்போனோர் விவகாரம் இறுதிப்போரில் சரணடைந்தவர்கள் நிலை குறித்த தெளிவின்மை போன்ற காரணிகளை இங்கு குறிப்பிடலாம்.

இது தெரிந்தோ என்னவோ அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் செய்கின்ற முதலமைச்சராக தானே வருவேன் என கூறிக்கொண்டிருந்த அமைச்சர் கூட இத்தேர்தலில் தான் போட்டியிடாது ஒதுங்கி தன் கட்சியின் மற்றவர்களுக்கு வழி விட்டிருந்தார்.அது அவரது சாணக்கியம் என பலரும் பேசிக்கொள்கின்றனர். அரசாங்கத்தினைப்பொறுத்தவரை வெற்றிலைச்சின்னத்தில் போட்டியிடுகின்றவர்களில் குறிப்பிட்ட தொகையினரேனும் வெற்றி பெறவேண்டும் என்ற அவாவிலேயே தொழிற்படுகின்றது. அதற்கு அரச தலைவர் தொடங்கி அமைச்சர்கள் வரை தனது முழு வளங்களையும் எந்தவித மட்டுப்பாடுகளுமின்றி பயன்படுத்திவருகின்றனர். அவர்களைப்பொறுத்தவரை ஆட்சியைப்பிடிப்பதல்ல முக்கிய நோக்கம். தமது தரப்பிலும் மக்கள் ஆதரவு இருக்கின்றது என்பதை காட்டுவதே ஆகும்.  தற்செயலாக வெற்றிலை அணி ஆட்சியை பிடித்தால் அது அவர்கள் எதிர்பாராத ஒன்றாக இருக்கும்.

இறுதி நேரத்தில் வெற்றிலை அணியினரின் உள்வீட்டுச்சண்டைகள் கூட வெற்றிவாய்பினை குறைத்திருக்கின்றது அத்துடன் கட்சிகளுக்கிடையிலும் ஒற்றுமை இருக்கவில்லை வெற்றிலைக்குள்ளும் அழுகினது வாடினது இருக்கும் என்று கூறியதன் மூலம் அமைச்சர் அதனை சூசகமாக கூறியிருந்தார். நவநீதம்பிள்ளையின் வருகையின் பின்னரான அம்மையாரின் இறுதிப்பேச்சு கூட அரச தரப்புக்கான ஒரு பின்னடைவே.

இந்நிலையில் முதலமைச்சர் தெரிவில் கூட்டமைப்பில் வெடித்த சண்டை மற்றும் அதற்கெதிரான விமர்சனங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை.அதனையே அரசதரப்பும் அடிக்கடி ஞாபகப்படுத்தி வருகின்றது. இருப்பினும் விக்கினேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்ட உடன் எழுந்த எதிர்ப்பு அலைகள் ஊடகங்களின் பார்வைகள் மெல்ல மெல்ல மறைந்து அநேக தமிழ் ஊடகங்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வெற்றிக்கு தமது பங்கினை செய்ய தொடங்கின செய்கின்றன என்பது உண்மை.அதற்காக கூட்டமைப்பினரை அவர்கள் முற்றுமுழுதாக ஆதரிக்கின்றார்கள் என்ற முடிவுக்கும் வர முடியாது.

கூட்டமைப்பு தொடர்பில் பலர் தெளிவாக புரிந்து வைத்துக்கொண்டுள்ளனர்  வாக்களிக்க முடிவுசெய்தவர்களிடம் உள்ள ஒரே காரணம் அவர்களுக்கு வழங்குவதற்குரிய இறுதி சந்தர்ப்பம் இது என்றும் அதற்கு பிறகும் வழிக்கு வரவில்லையென்றால் சிந்திப்போம் என்பதுவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருக்கு எதிரான சரியான தெரிவு அவர்களிடம் தற்போது இல்லை என்பதும் ஆகும்.

அவர்களில் பலர் கூட்டமைப்புக்குரிய பதிலீடாக அரச தரப்பினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். கூட்டமைப்புக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருக்ககூடிய கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் , முதலில் இருந்து கூட்டமைப்பினை ஆதரித்த சிவில் சமூகமும்   கூட்டமைப்பிற்கான மாற்று சக்தி ஒன்றை உருவாக்க பின்னின்றமையும் பலரால் விமர்சனக்கண்ணோட்டத்துடன் நோக்கப்படுகின்றது. விரும்பியோ விரும்பாமலோ அந்த மாற்று அணிக்கான தகுதிகாண் பரீட்சையாகக்கூட இந்த தேர்தல் மற்றும் அதன்பின்னரான ஆட்சி அமைப்போகின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை.

தமது தலைமைக்கு ஆப்பு வைத்துவிடக்கூடாது என்பதற்காக பல முக்கிய நபர்களை புறக்கணித்து அவர்களை ஆளும் கட்சிக்கு அனுப்பிவைத்த அல்லது ஆதரவு கொடுக்கவைத்த ,விலகி நிற்க வைத்த பெருமை தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு அதனை உள்வாங்கி மாற்றுவெளியை உருவாக்கத்தவறிய பெருமை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியையும் சிவில் சமூகத்தினையும் சாரும்!

கருத்துக்கணிப்புக்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வெற்றிபெறும் என்று கூறி நிற்கின்ற போதிலும் நியாயமான நேர்த்தியான இதய சுத்தியுடனான அரச எதிர்ப்புத்தளத்தினை நமது மக்கள் கொண்டிருக்கவில்லை என்ற கவலை பலரிடத்தில் இருக்கத்தான் செய்கிறது.வீட்டுக்கு புள்ளடியிடப்போகின்றவர்களில் பலரிடம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தொடர்பான நிறைய விமர்சனங்கள் உள்ளன.இந்த மாகாணசபையால் எதுவும் சாதித்துவிடமுடியாது என்ற போதிலும் நீதியரசர் தனது சட்ட நுணுக்கங்கள் ஊடாக ஏதாவது அதிசயங்கள் செய்வாரோ என்ற எதிர்பார்பிலும் பலர் உள்ளதை அறிய முடிகிறது. அதனை கட்டியம் கூறும் வகையில் தேர்தல் விஞ்ஞாபனம் இருந்தபோதிலும் இருதரப்பு மீதும் விசாரணைவேண்டும் என்பதை வேட்பாளர்களில் ஒருவரான அனந்தி சசிதரன்  (எழிலன்) எதிர்த்து நிராகரித்திருந்ததையும் இங்கு குறிப்பிட வேண்டும். காணாமல்போனவர்களின் உறவினர் மத்தியில் அவரது குரல் ஒங்கி ஒலிப்பதையும் காணமுடிகிறது.

வேட்பாளர்களின் முரண்பாடான கருத்துக்களுக்கு மத்தியில் முதலமைச்சர் வேட்பாளரான முன்னாள் நீதியரசரான விக்கினேஸவரன் மீது புலம்பெயர் தமிழர்கள் மற்றும் இந்தியத்தமிழர்களிடம் அவரது பேட்டிகளினால் ஏற்பட்டு இருந்த வெறுப்புணர்வு மறைந்து புலிகளின் தலைவர் பிரபாகரனை மாவீரன் என்று கூறியதன் மூலம் வளர்ந்த நிலை மீண்டும் தமிழரும் சிங்களவரும் கணவன் மனைவி உறவுள்ளவர்கள் என்று சாரப்பட கூறியதன் மூலம் கேள்விக்குள்ளாகியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. விமர்சனங்களுக்கு அப்பால் வடமாகாண மக்களில் பலர் விரும்பியோ விரும்பாமலோ வீட்டுக்கு வாக்கு போடவேண்டும் என்ற நிலையில் இருப்பதை மறுக்கமுடியவில்லை

உணர்ச்சிக்கு ஆட்பட்ட சாதாரண மக்கள் எதற்கும் பதில் கூறாமல் கண்மூடித்தனமாக வீட்டுக்கு போட போகின்றார்கள் அடுத்த பக்கத்தில் நடுவு நிலமையுடன் நிற்பவர்கள் என்று தம்மை சொல்லுகின்றவர்களில் ஒருபகுதி கூட்டமைப்பினை விட வேறு தெரிவு இல்லை என்கிறார்கள். இன்னொரு தரப்பு சரி வெற்றிலைக்கே போடலாம் என்கிறது இன்னும் ஒன்று ஒன்றுமே வேண்டாம்  என்று ஒதுங்கி கொள்கிறது.

இன்றைய நிலையில் கருத்துக்கணிப்பிற்கமைவாக மக்களின் தெரிவாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பே இருக்கின்றது அடுத்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இருக்கிறது. ஆசனங்களைப்பொறுத்தவரை மொத்தம் உள்ள 36 இடங்களில் கூட்டமைப்பு 25 இடங்களை வெல்வது உறுதி என கூறலாம். ஏனைய  இடங்களில் 10 இனை அரசும் 1 இனை ஐக்கிய தேசிய கட்சியும் பெறலாம். கூட்டமைப்பில் விக்கினேஸ்வரன் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெறுவார் என்பதில் ஐயமில்லை. சுயேச்சைகள் அனைத்தும் தோல்வியை தழுவும் என்றே தெரிகிறது.சுயேட்சை வேட்பாளர்களில் பலர் வெளிநாட்டு அகதி அந்தஸ்த்தினை கோருவதற்கு முன்னேற்பாடாகவும் வாக்குகளை சிதைப்பதற்காகவுமே களமிறங்கியுள்ளனர் என்பது ஊரறிந்த விடயம்.

அரசதரப்பில் இளையவர் தரப்பில் அங்கஜன் இராமனாதனின் குரல் ஓங்கி இருப்பதாக தெரிகிறது. அது வேலைவாய்ப்பினை நோக்கி மையம்கொள்வதை அவதானிக்கமுடிகிறது. அதைவிட அரசதரப்பில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முதன்மை வேட்பாளரும்  தன்பங்கிற்கு தனது இடத்தினை உறுதிசெய்ய பெரிதும் முயன்று வருவதை காணமுடிகிறது.

குறிப்பிடக்கூடியளவு இல்லாது விடினும் ஒரளவுக்கு வேட்பாளர்கள் மக்களின் தெரிவுக்கு இருபக்கமும் இருப்பதாகவே தெரிகிறது.தேர்தல் வேட்புமனு தாக்கல்செய்தபோது இருந்த நிலையிலும் தற்போது வேட்பாளர் அறிமுகம் ஓரளவுக்கு முன்னேறியிருக்கிறது. எது எப்படியோ சின்னங்கள்தான் இங்கு முன்னிலையில் மக்களிடம் பேசப்படுகின்றது.

முற்கூட்டிய கருத்துக்கணிப்பு அலைகள் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று வெற்றி பெறுமென்று எதிர்பார்க்கின்ற போதிலும் கட்சிகளின் அமைதியான வாக்கு வங்கிகள் ஒருபுறம் காத்துக்கிடக்கின்றன. யாழ்தேவியை கிளிநொச்சிவரை அனுப்பி அரசு அபிவிருத்தியினை அறை கூவுகிறது. அரச தலைவர் வேறு களத்தில் இறங்கியிருக்கிறார். இவற்றுக்கு சளைக்காமால் மக்களை ஒருகணம் சிந்திக்க வைக்கின்ற வகையான அமைச்சர்களின் மற்றும் இராவணா சக்தி போன்ற அமைப்புக்களின் இனவாதக்கருத்துக்கள் , ஆட்கொணர்வு  மனு தொடர்பிலான நீதிமன்ற நடவடிக்கைககள் இவற்றையெல்லாம் தாண்டி தேர்தல் முடிவுகள் மூலம் வெல்லப்போவது யார் என்று சொல்லப்போவது மக்கள் தான் நான் மட்டும் அதனை தீர்மானிக்கமுடியாது.

2009 இறுதி யுத்தத்தில் பலர் கண் முன் சரணடைந்தவர்களை நாம் பொறுப்பேற்கவே இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போல அரசு நீதி மன்றில் அறிக்கை சமர்ப்பித்திருப்பது மிக மிக தவறானது. 

போட்டுட்டம் என்று சொல்லி பிரச்சனையினை முடிவுக்கு கொண்டு வந்து பொதுமன்னிப்பு கேட்டிருந்தால் கூட மக்கள் மன்னித்திருக்கக்கூடும் . பொறுப்பு வாய்ந்த , தமிழ் மக்கள் மீது அக்கறையுள்ள இதயசுத்தியுடைய அரசு மனித உரிமைகளை மதிக்கின்ற அரசாக இருந்திருப்பின்

அந்த நாட்டின் அரச தலைவர் என்ற ரீதியில் மன்னர் மேதகு மகிந்த மக்களிடம் இறுதியு்த்தத்தில் தெரிந்தோ தெரியாமலோ கொல்லப்பட்ட மக்களுக்காக பொறுப்பேற்று மன்னிப்பு கோரியிருக்கலாம் அப்படி இருந்திருப்பின் அவரின் உயர்ந்த பண்பை எடுத்துக்காட்டி சர்வதேச சமூகத்தில் நன்மதிப்பினை ஏற்படுத்தியிருக்கும்.

அதிகுறைந்தது அமைச்சர்களின் பொறுப்பற்ற பேச்சுக்களையாவது அடக்கிவைத்திருக்கவேண்டும்.அவர்கள் எமது மக்களை மட்டுமல்ல நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளையும் கொச்சைப்படுத்துகின்றனர். இது நாட்டு மக்கள் என்றவகையில் எமக்கும் அபகீர்த்தியே!

இராவணா சக்தி போன்ற இனவாத அமைப்புக்களுக்கும் சம்பிக்க ரணவக்க போன்ற அமைச்சர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து அவர்கள் கூறியதற்காக நடவடிக்கை எடுக்கும் அரசு , அவர்கள் சார்பாக கருத்துக்களை தெரிவிக்கும் அரசுதலைவர் என இலங்கை நாட்டின் தேசிய நலன் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.

பொறுப்புக்கூறல் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் இனங்களுக்கிடையில் பாரபட்சம் போன்ற விடயங்களில் நமது நாடு இவ்வாறு நடந்து கொள்வது அந்த நாட்டின் வரிகளை செலுத்தும் குடிமக்கள் என்ற ரீதியில் எமக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதில் வியப்பில்லை .இதை அரசு புரிந்து கொள்ளுமா?

இந்த வகையிலான நாட்டின் தேசிய நலன் பற்றி கவனம் செலுத்த வழியற்ற தமது அன்றாட வாழ்க்கைக்கு அடுத்தவேளை உணவுக்கு தீர்வு தேடிக்கொண்டிருக்கும் ஒருதொகுதி மக்களுக்கு அரசின் உதவிகள் அபிவிருத்திகள் நிச்சயம் தேனாமிர்தமாக இருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை.இது ஒருபுறமிருக்க

எல்லாவற்றுக்கும் நீங்கள் தான் காரணம் நாங்கள் தான் காரணம் என்று அரசு தமது பொறுப்புக்களை தட்டிக்கழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரச்சனை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டு உடனடியாக அவற்றுக்கு முடிவுகட்டி அபிவிருத்திப்பாதையில் சென்றால் நிச்சயம் இலங்கை ஆசியாவின் ஆச்சரியமாகலாம் பொருளாதார வளர்ச்சி பெறலாம்.இல்லையெனில் அது உலக அதிசயமாகவே இருக்கும் . எந்த விடயத்தில் உலக அதிசயம் என்பது தான் கேள்விக்குறி. மன்னர் மனம் மாறுவாரா? மன்னிப்பு கேட்பாரா?

-யாழ்ப்பாணம் வரவுள்ள மன்னருக்கு ஒரு வாக்காளரின் பகிரங்க மடல்