வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

எமது மக்கள் விக்கிரமாதித்தன்கள் தான்!

Posted by Thava வெள்ளி, 27 செப்டம்பர், 2013

வடக்கு மாகாகாண தேர்தலை புறக்கணித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் .அதன் தலைவரான பொருளியல் ஆசிரியர் வரதராஜன் தான் அக்கட்சியில் இருந்து விலகி அறிக்கை விட்டதன் பின்னணியில் கூட்டமைப்பிற்கெதிரான விமர்சனங்களை முடுக்கி விட்டிருக்கின்றனர்.அவரது அறிக்கை மீதான விமர்சனத்திற்கு அப்பால் கூட்டமைப்பின் உள் வீட்டு விவகாரங்களுக்கு அப்பால் ,பொதுவாக நோக்கின் யாரும் புனிதர்கள் கிடையாது! ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவதில் பலனில்லை. மற்றவர்கள் அப்படி செய்திருக்கலாம் இப்படிச்செய்திருக்கலாம் என்று கூறுவது இலகு .

ஏன் அதனை தாமே செய்திருக்கலாமே? பிறகெதற்கு கட்சி, கொள்கை. எல்லோருக்கும் தெரியும் மக்கள் இந்த கட்சிகளின் தற்போதைய கொள்கைகளை ஏற்கவில்லை என்றும் அவர்கள் வெறுமனே அரச எதிர்ப்புக்கொள்கையில் தான் இருக்கிறார்கள் என்றும் இந்த மக்களுக்கு தலைமை தாங்கக்கூடிய ,அந்த மக்களது உண்மையான உரிமைக்குரலுக்கு வடிகாலாய் அரசியல் செய்யக்கூடிய எவனும் இங்கு இல்லை என்றும் எல்லோருக்கும் தெரியும். தற்போது இலங்கையில் அதற்கான சாத்தியப்பபாடுடைய சூழலும் இல்லை. அது வெளியில் இருந்துதான் செய்யமுடியும்.

அதற்காக அரசுக்கட்சிக்கு வாக்களிக்கவும் மக்கள் ஒருபோதும் தயாரில்லை.எனவே உங்கள் சந்தர்ப்பவாத அரசியலுக்கு வீழச்சி இல்லை என்றும் நம்பலாம்.

சர்வாதிகார ஆட்சியில் இங்கு எவராலும் எதனாலும் எதையும் சாதிக்கமுடியாது என்பதை நிரூபித்துக்கொண்டு , நமக்கு பிரச்சனை இருக்கிறது. தீர்வு தேவை என்று தெரியப்படுத்தி நமது மக்களின் இருப்பையும் எதிர்காலத்திற்கான அடிப்படை விடையங்களையும் முன்கொண்டு செல்வதே தற்போதைக்கு முடியும். அதை இந்தக்கட்சிகள் தம் தம் வழியில் செய்யலாம். அதை விடுத்து ஒருத்ததரை ஒருத்தர் பிடுங்கித்தின்ன நினைக்கும் சந்தர்ப்பவாத அரசியலை தவிர்க்க வேண்டும்

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பாயிருந்தால் என்ன தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியாக இருந்தால் என்ன இரு கட்சிகளாலும் தமது இலக்கினை அடைவதற்கான தெளிவான வழிமுறைகளை முன்வைக்க முடியவில்லை.இவர்களிடம் ஒரு உத்தேச தீர்வுத்திட்டம் கூட இல்லை. வெறுமனே தாம் துறை சார்ந்தவர்கள் சட்டவாளர்கள் என்று இருகட்சிகளிலும் சிவில் சமூகக்குழுக்களிலும் இருந்து அறிக்கைளை விடுகிறார்கள் . ஆலோசனைகளை அள்ளி வீசுகின்றனர். அது மக்களுக்கு ஏற்கனவே தெரிந்த விடயங்கள். எல்லாம் மாயை. அவர்கள் முடிந்தால் சாத்தியமான ஒரு தீர்வுத்திட்டத்தினை வரைவு செய்யட்டும் பார்ப்போம்.தனிநாடு தான் என்று இலகுவாக கூறி தப்பிக்கொள்வார்கள்.

தேர்தல் புறக்கணிப்புக்கு பலர் கூறியகாரணம் வேறு உண்மைக்காரணம்வேறு. மாகாகாணசபை எப்படியோ அது மாதிரியே பாராளுமன்றமும். இதிலும் இவர்கள் சென்று கிழித்தது எதுவும் இல்லை தமது உறவினர்களுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்ததும் அதனால் கிடைத்த வசதி வாய்ப்புக்களை பெற்று அனுபவிப்பதுதான் இன்று வரை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நடைபெறுகிறது. ஒதுக்கீடுகளை கூட தமது அடுத்த வெற்றிக்கான வாக்கு வங்கி பலப்படுத்தல்களுக்காக தான் பயன்படுத்துகின்றனர் பயன்படுத்தினர். ஏன் இன்னும் பலர் அந்தப்பாராளுமன்றக்கதிரைகளுக்காக ஏங்கி இருக்கின்றனர். அதற்கான வேலைத்திட்டங்களில் இறங்கி இருக்கின்றனர்.முன்னர் இறங்கி தோற்றிருந்தாலும் கூட காத்திருக்கின்றனர்.

ஆக மொத்தத்தில் மக்களின் மனதை வெல்ல பாருங்கள் வெறுமனே ஊடகங்களை நம்பி அரசியல் செய்யாதீர்கள். கொள்கை ,தெளிவான பார்வை ,நோக்கு ,இலக்கை அடைவதற்கான முறையான வழி ,இதய சுத்தி இருந்தால் மக்கள் கூட்டம் வைக்காமலே வாக்கு போடுவார்கள்.

அதை இங்கு எவராலும் செய்ய முடியாது! அதற்கான திட்டம் எவரிடமும் இல்லை. சர்வதேசம் பார்த்து ஏதும் செய்தால்தான் உண்டு . அதைவிட வேறு ஒன்றும் இப்போதைக்கு இல்லை.இலக்குடன் இறுதிவரை பயணிக்க தலைவர் போல இங்கெவரும் இல்லை. அவர் வழியில் செல்லக்கூடிய தலைவர்களும் இல்லை.எனவே அப்படி ஒரு போராட்டத்தினை நாம் எதிர்பார்க்க முடியாது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரே! உங்கள் திட்டத்தினை மக்களிடம் முன்வைத்து அவர்களின் ஆதரவுடன் (அது கிடைத்தால்) அதை செயற்படுத்துங்கள்.ஏன் பகிரங்கமாக அரசிடமும் மக்களிடமும் சர்வதேசத்திடமும் அத்திட்டத்தினை அறிக்கையாக ஆவணமாக வெளியிடுங்கள் பார்ப்போம். தீர்வை அடையும் வழி ,மாதிரி தீர்வு திட்டம் தொடர்பாக கூட்டமைப்பிடமும்  ஒரு திட்டமும் இல்லை உங்களிடமும் ஒரு திட்டமும் இல்லை. உங்கள் திட்டத்திற்கான இணைப்பு ஏதாவது இருந்தால் தெரியப்படுத்துங்கள் பார்ப்போம் . விடுதலைப்புலிகளின் இடைக்கால நிர்வாக சபைத்திட்டங்கூட இன்று பொதுவெளியில் கிடக்கிறது. உங்கட ஒருத்தருடையதும் இல்லை. சும்மா விளங்காதமாதிரி உரைகளை நிகழ்த்துவதால் பலனில்லை.

அன்ரன் பாலசிங்கம் ஒருமுறை கிளிநொச்சியில் சந்திரன் பூங்காவில் உரையாற்றிய போது சொன்னார் ” சந்திரிகா அம்மா தன்னட்ட ஒரு திட்டப்பொதி இருக்கு அதை இந்தா திறந்து காட்டுறன் பொங்கலுக்கு காட்டுறன் என்டு சொல்லிக்கொண்டிருக்க சிவசிதம்பரம் ஐயா இப்பவே காட்டுங்க என்று காலில விழாக்குறையா சுத்திக்கொண்டு திரியிறார் ” என்று .அது போல நாமும் கேட்கின்றோம் அதை நீங்க இப்பவே காட்டுங்க எண்டு. கூட்டமைப்பு தங்கள் வழியால் செல்லட்டும். நீங்கள் உங்கள் வழியால் செல்லுங்கள். யாரால் முடிகிறது என்று பார்க்கலாம். சுத்தி சுத்தி இருதரப்பும் ஒரே விடயத்தினைத்தான் கூறுகின்றனர் .இருதரப்பும் தனிநாட்டுக்கோரிக்ககையினை கைவிட்டு கனகாலமாகிவிட்டது.கைவிட்ட திகதிகள் தான் வேறு.

தேர்தலில் பங்குபற்ற முடிவுசெய்தால் அது சுயேட்சையாயிருந்தால் என்ன , கட்சியில் ஊடாக என்றால் என்ன இரண்டும் ஒன்றுதான் சர்வதேசம் அதனை ஒன்றாகத்தான் நோக்கும். அதில் சுயேட்சையாக போட்டியிடுங்கள் என்று கேட்பது ,வேறு ஒரு நுண் அரசியல். உள்நோக்கம் கொண்டது .விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்பது உங்கள் வாதம். நீங்கள் வேலை செய்தாலும் வேலைசெய்யாவிட்டாலும் கொதித்திருந்த மக்கள் அரசுக்கு எதிராகத்தான் வாக்களித்திருப்பர்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு -இது தலைவர் பிரபாகரன் அவர்களால் தலைமை தாங்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆசியுடன் உருவாக்கப்பட்டது அவர்களால் வேட்பாளர்கள் தெரியப்பட்டிருந்தனர் , அப்படியென்றால் தலைவர் அவர்களையும்(கூட்டமைப்பில் புலிகளால் நிறுத்தப்பட்டு வென்றவர்களை ) நிராகரிக்கிறார் , கேவலப்படுத்துகின்றார் என்று அர்த்தமா ? தமிழர் விடுதலைக்கூட்டணி உதய சூரியன் சின்னத்தில் போட்டிட்ட ஒரு கட்சி இரண்டையும் விளங்கிக்கொள்ளாமல் சிலர் இளைவர்களை எப்போதோ வெளிவந்த வெட்டி எடுக்கப்பட்ட காணொளி மூலம் குழப்ப முயற்சிக்கின்றனர். வீட்டுக்கும் சூரியனுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களல்ல நம்மக்கள். தலைவரால் வெளியிடப்பட்ட இக்கருத்து வெளிவந்த காலப்பகுதி வேறு சந்தர்ப்பங்களும் வேறு. புரிந்துகொள்ளுங்கள்.

இலங்கையின் அரசியலமைப்பில் தமிழர்களுக்கு எந்த ஒரு இடத்திலும் தீர்வு இல்லை இது மாகாணசபையில் மட்டும் தான் இல்லை என்று மட்டும் கூறவேண்டாம்.முடிந்தால் அடுத்த பாராளுமன்றதேர்தலையும் தொடர்ந்து புறக்கணியுங்கள். புறக்கணிப்பு சரிவராது என்பதே என் நிலைப்பாடு.

இன்னும் இங்கு வடமாகாணசபை ஊடாக அதிசயம் ஏதும் நடைபெறும் என்று மக்கள் நம்புவதில் தப்பேதும் இல்லை! இன்று பத்திரிகை வாசித்த பின்னும் தீர்ப்புக்கள் மாற்றப்படலாம் என்று கூறும் பெரியவர்கள் நிறையப்பேர் உள்ளனர். எமது மக்கள் விக்கிரமாதித்தன்கள் தான்!

0 comments

கருத்துரையிடுக