வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

வெல்லப்போவது யார்

Posted by Thava சனி, 14 செப்டம்பர், 2013

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இன்னும் சில நாட்களில் அதாவது எதிர்வரும் 21 ம் திகதி நடைபெறவுள்ள வடமாகாணசபைத்தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற கேள்வி பலரால் கேட்கப்படுகிறது. வடக்கு மகாணத்தில் உள்ளவர்களை விட அதற்கு வெளியில் உள்ளவர்களாலேயே இந்த வினா பெரிதும் எழுப்பப்படுகின்றது.

வடக்குமாகாணத்தினைபொறுத்தவரை அவதானிக்கப்பட்ட மக்கள் அலைகள் மற்றும் கருத்துக்கணிப்புக்களின் பிரகாரம் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பெரு வெற்றி பெறும் என்பது உறுதியாகி வருகின்றது. வெளியில் உள்ளவர்களுக்கு இச்செய்தி 22ம் திகதிக்கு பின்னர்தான் உறுதிசெய்யக்கூடியதாக உள்ளது எனினும் இங்குள்ளவர்களுக்கு அது தெரிந்த முடிவாயிருக்கின்றது.

அரசதரப்பு வேட்பாளர்கள் அமைச்சர்கள் பலர் இதனை தமது ஆதரவாளர்களிடத்திலும் ஏன் சில கூட்டங்களிலும் தாமே கூறிவருகின்றனர். சனாதிபதி மகிந்த இராஜபக்ச கூட ,அவர்கள் வெற்றிபெற்றாலும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்ற முடியாது என்ற கருத்து தெரிவித்திருப்பதன் மூலம் இதனை ஒத்துக்கொள்கின்றார். அவற்றை எல்லாம் தாண்டி அரசு அமைச்சர் நிமால் சிறிபால்டி சில்வா  கூட்டமைப்பினரின் விஞ்ஞாபனத்திற்கு தம்மிடம் நல்ல மருந்துகள் இருப்பதாகவும் கூட்டமைப்பினரால் அதை நிறைவேற்ற முடியாதென்றும் கூறியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக்கட்சியும் அதன் தலைவர் பங்குபற்றியிருந்த கூட்டத்தில் விக்கினேஸ்வரன் தான் முதலமைச்சர் என் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சில வெளிப்படை உண்மைகளை தேர்தல் வைத்துத்தான் தெரியவேண்டுமென்பதில்லை .மக்கள் எளிதில் பழையதை மறக்கத்தயாரில்லை என்பதே யதார்த்தம் என நமது சுற்றுவட்டாரத்தில் சில வீட்டுக்கட்சி ஆதரவாளர்கள் கூறிக்கொள்கின்றனர்.

இந்த தேர்தலை பொறுத்தவரை  இங்குள்ள வாக்காளர்களில் கணிசமானவர்கள் இம்முறை தான் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தினை முதற் தடவையாக பயன்படுத்த உள்ளனர். பலர் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தேர்தல்களை புறக்கணித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இடம்பெயர்வின் காரணமாக வாக்களிப்பு நிலையங்கள் அவர்களது சொந்த இடங்களில் இருந்த நிலை மாறி தற்போது அனைவரும் தமது வாக்காளர் இடாப்பினை திருத்தி சரியான தொகுதிகளை மாற்றியிருக்கின்றனர்.அதோடு வடக்கு மாகாணசபை என்பதை பல வாக்காளார்கள் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கின்றார்கள் அதை புதிய ஒன்றாகவும் நோக்குகின்றனர். தீர்வுக்கான ஆரம்பமாகவும் நோக்குகின்றனர்.

பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நடைபெற்ற தேர்தல்களில் அரச தரப்புக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினருக்கும் மாறிமாறி அவர்கள் கேட்ட ஆணைகளுக்கு பதில் வழங்கி தமது நிலையினை தெரிவித்து வந்திருந்தனர்.அதன் போது  எதிலும் கணிசமான அதிகாரங்களுடன் ஆட்சியை அமைக்கக்கூடிய ஒரு அரசியல் கட்டமைப்புக்குரிய தேர்தல்களாக இவை அமைந்திருக்கவில்லை. சனாதிபதித்தேர்தலாக இருந்தால் என்ன பாராளுமன்ற தேர்தல்களாக இருந்தால் என்ன உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலாக இருந்தால் என்ன அவற்றில் இடங்களை கைப்பற்றுவதன் மூலம் சாதிக்கக்கூடிய ஆட்சி எதனையும் ஏற்படுத்திவிடமுடியாது  என்பதே அதற்கு காரணம். கடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் பலர் ஈடுபாடே காட்டியிருக்கவில்லை அவ்வளவுக்கு அது அரசியல் முக்கியத்துவம் கொண்டிருக்கவில்லை.

இருப்பினும் நடைபெற்ற கிழக்கு மாகாண தேர்தலில் கூட்டமைப்பு வெற்றியை நழுவ விட்டிருந்ததை மறப்பதற்கில்லை.தமிழ்மக்கள் பலரால் அதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை அத்தேர்தலில் முஸ்லிம்களும் முக்கிய தீர்மானிக்கும் சக்தியாக இருந்தமையும் கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவுகளும் அவர்களால் கிழக்கு மாகாணசபையினை கைப்பற்றமுடியாமல் போனமைக்கு முக்கிய காரணங்களாக அமைந்திருந்தது. இருப்பினும் நடைபெற உள்ள வடமாகாணசபைத் தேர்தலானது முற்றிலும் வேறுபட்டதாக காணப்படுகின்றது. சர்வதேசத்தின் கவனம் கூட இந்த தேர்தலில் மிகவும் இறுக்கமாக பதிந்திருக்கின்றது.இந்தியாவின் ஆதிக்கம் நிறையவே உள்ளது. இந்நிலையில் தமிழ்த்தேசிய அரசியலின் முதுகெலும்பாக கணிக்கப்படக்கூடிய யாழ்ப்பாண அரசியல் இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையில் இன்று நேற்றல்ல அன்று தொடக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

எனவே அது சார்ந்துள்ள வடமாகாணசபை தேர்தலில் மக்கள் கூடிய அக்கறையுடன் இருப்பதில் வியப்பேதுமில்லை. இந்த தேர்தலில் கூட்டமைப்பின் வெற்றியினை உறுதிசெய்யக்கூடிய நிறைய காரணிகள் முன்னரே தென்படத் தொடங்கியிருந்தன. அதற்கு அரசாங்கமே பலவழிகளில் வழிகோலியிருந்தது. மனித உரிமை குறித்த சர்வதேச நெருக்கடி, காணி சுவீகரிப்பு ,காணாமல்போனோர் விவகாரம் இறுதிப்போரில் சரணடைந்தவர்கள் நிலை குறித்த தெளிவின்மை போன்ற காரணிகளை இங்கு குறிப்பிடலாம்.

இது தெரிந்தோ என்னவோ அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் செய்கின்ற முதலமைச்சராக தானே வருவேன் என கூறிக்கொண்டிருந்த அமைச்சர் கூட இத்தேர்தலில் தான் போட்டியிடாது ஒதுங்கி தன் கட்சியின் மற்றவர்களுக்கு வழி விட்டிருந்தார்.அது அவரது சாணக்கியம் என பலரும் பேசிக்கொள்கின்றனர். அரசாங்கத்தினைப்பொறுத்தவரை வெற்றிலைச்சின்னத்தில் போட்டியிடுகின்றவர்களில் குறிப்பிட்ட தொகையினரேனும் வெற்றி பெறவேண்டும் என்ற அவாவிலேயே தொழிற்படுகின்றது. அதற்கு அரச தலைவர் தொடங்கி அமைச்சர்கள் வரை தனது முழு வளங்களையும் எந்தவித மட்டுப்பாடுகளுமின்றி பயன்படுத்திவருகின்றனர். அவர்களைப்பொறுத்தவரை ஆட்சியைப்பிடிப்பதல்ல முக்கிய நோக்கம். தமது தரப்பிலும் மக்கள் ஆதரவு இருக்கின்றது என்பதை காட்டுவதே ஆகும்.  தற்செயலாக வெற்றிலை அணி ஆட்சியை பிடித்தால் அது அவர்கள் எதிர்பாராத ஒன்றாக இருக்கும்.

இறுதி நேரத்தில் வெற்றிலை அணியினரின் உள்வீட்டுச்சண்டைகள் கூட வெற்றிவாய்பினை குறைத்திருக்கின்றது அத்துடன் கட்சிகளுக்கிடையிலும் ஒற்றுமை இருக்கவில்லை வெற்றிலைக்குள்ளும் அழுகினது வாடினது இருக்கும் என்று கூறியதன் மூலம் அமைச்சர் அதனை சூசகமாக கூறியிருந்தார். நவநீதம்பிள்ளையின் வருகையின் பின்னரான அம்மையாரின் இறுதிப்பேச்சு கூட அரச தரப்புக்கான ஒரு பின்னடைவே.

இந்நிலையில் முதலமைச்சர் தெரிவில் கூட்டமைப்பில் வெடித்த சண்டை மற்றும் அதற்கெதிரான விமர்சனங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை.அதனையே அரசதரப்பும் அடிக்கடி ஞாபகப்படுத்தி வருகின்றது. இருப்பினும் விக்கினேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்ட உடன் எழுந்த எதிர்ப்பு அலைகள் ஊடகங்களின் பார்வைகள் மெல்ல மெல்ல மறைந்து அநேக தமிழ் ஊடகங்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வெற்றிக்கு தமது பங்கினை செய்ய தொடங்கின செய்கின்றன என்பது உண்மை.அதற்காக கூட்டமைப்பினரை அவர்கள் முற்றுமுழுதாக ஆதரிக்கின்றார்கள் என்ற முடிவுக்கும் வர முடியாது.

கூட்டமைப்பு தொடர்பில் பலர் தெளிவாக புரிந்து வைத்துக்கொண்டுள்ளனர்  வாக்களிக்க முடிவுசெய்தவர்களிடம் உள்ள ஒரே காரணம் அவர்களுக்கு வழங்குவதற்குரிய இறுதி சந்தர்ப்பம் இது என்றும் அதற்கு பிறகும் வழிக்கு வரவில்லையென்றால் சிந்திப்போம் என்பதுவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருக்கு எதிரான சரியான தெரிவு அவர்களிடம் தற்போது இல்லை என்பதும் ஆகும்.

அவர்களில் பலர் கூட்டமைப்புக்குரிய பதிலீடாக அரச தரப்பினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். கூட்டமைப்புக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருக்ககூடிய கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் , முதலில் இருந்து கூட்டமைப்பினை ஆதரித்த சிவில் சமூகமும்   கூட்டமைப்பிற்கான மாற்று சக்தி ஒன்றை உருவாக்க பின்னின்றமையும் பலரால் விமர்சனக்கண்ணோட்டத்துடன் நோக்கப்படுகின்றது. விரும்பியோ விரும்பாமலோ அந்த மாற்று அணிக்கான தகுதிகாண் பரீட்சையாகக்கூட இந்த தேர்தல் மற்றும் அதன்பின்னரான ஆட்சி அமைப்போகின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை.

தமது தலைமைக்கு ஆப்பு வைத்துவிடக்கூடாது என்பதற்காக பல முக்கிய நபர்களை புறக்கணித்து அவர்களை ஆளும் கட்சிக்கு அனுப்பிவைத்த அல்லது ஆதரவு கொடுக்கவைத்த ,விலகி நிற்க வைத்த பெருமை தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு அதனை உள்வாங்கி மாற்றுவெளியை உருவாக்கத்தவறிய பெருமை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியையும் சிவில் சமூகத்தினையும் சாரும்!

கருத்துக்கணிப்புக்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வெற்றிபெறும் என்று கூறி நிற்கின்ற போதிலும் நியாயமான நேர்த்தியான இதய சுத்தியுடனான அரச எதிர்ப்புத்தளத்தினை நமது மக்கள் கொண்டிருக்கவில்லை என்ற கவலை பலரிடத்தில் இருக்கத்தான் செய்கிறது.வீட்டுக்கு புள்ளடியிடப்போகின்றவர்களில் பலரிடம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தொடர்பான நிறைய விமர்சனங்கள் உள்ளன.இந்த மாகாணசபையால் எதுவும் சாதித்துவிடமுடியாது என்ற போதிலும் நீதியரசர் தனது சட்ட நுணுக்கங்கள் ஊடாக ஏதாவது அதிசயங்கள் செய்வாரோ என்ற எதிர்பார்பிலும் பலர் உள்ளதை அறிய முடிகிறது. அதனை கட்டியம் கூறும் வகையில் தேர்தல் விஞ்ஞாபனம் இருந்தபோதிலும் இருதரப்பு மீதும் விசாரணைவேண்டும் என்பதை வேட்பாளர்களில் ஒருவரான அனந்தி சசிதரன்  (எழிலன்) எதிர்த்து நிராகரித்திருந்ததையும் இங்கு குறிப்பிட வேண்டும். காணாமல்போனவர்களின் உறவினர் மத்தியில் அவரது குரல் ஒங்கி ஒலிப்பதையும் காணமுடிகிறது.

வேட்பாளர்களின் முரண்பாடான கருத்துக்களுக்கு மத்தியில் முதலமைச்சர் வேட்பாளரான முன்னாள் நீதியரசரான விக்கினேஸவரன் மீது புலம்பெயர் தமிழர்கள் மற்றும் இந்தியத்தமிழர்களிடம் அவரது பேட்டிகளினால் ஏற்பட்டு இருந்த வெறுப்புணர்வு மறைந்து புலிகளின் தலைவர் பிரபாகரனை மாவீரன் என்று கூறியதன் மூலம் வளர்ந்த நிலை மீண்டும் தமிழரும் சிங்களவரும் கணவன் மனைவி உறவுள்ளவர்கள் என்று சாரப்பட கூறியதன் மூலம் கேள்விக்குள்ளாகியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. விமர்சனங்களுக்கு அப்பால் வடமாகாண மக்களில் பலர் விரும்பியோ விரும்பாமலோ வீட்டுக்கு வாக்கு போடவேண்டும் என்ற நிலையில் இருப்பதை மறுக்கமுடியவில்லை

உணர்ச்சிக்கு ஆட்பட்ட சாதாரண மக்கள் எதற்கும் பதில் கூறாமல் கண்மூடித்தனமாக வீட்டுக்கு போட போகின்றார்கள் அடுத்த பக்கத்தில் நடுவு நிலமையுடன் நிற்பவர்கள் என்று தம்மை சொல்லுகின்றவர்களில் ஒருபகுதி கூட்டமைப்பினை விட வேறு தெரிவு இல்லை என்கிறார்கள். இன்னொரு தரப்பு சரி வெற்றிலைக்கே போடலாம் என்கிறது இன்னும் ஒன்று ஒன்றுமே வேண்டாம்  என்று ஒதுங்கி கொள்கிறது.

இன்றைய நிலையில் கருத்துக்கணிப்பிற்கமைவாக மக்களின் தெரிவாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பே இருக்கின்றது அடுத்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இருக்கிறது. ஆசனங்களைப்பொறுத்தவரை மொத்தம் உள்ள 36 இடங்களில் கூட்டமைப்பு 25 இடங்களை வெல்வது உறுதி என கூறலாம். ஏனைய  இடங்களில் 10 இனை அரசும் 1 இனை ஐக்கிய தேசிய கட்சியும் பெறலாம். கூட்டமைப்பில் விக்கினேஸ்வரன் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெறுவார் என்பதில் ஐயமில்லை. சுயேச்சைகள் அனைத்தும் தோல்வியை தழுவும் என்றே தெரிகிறது.சுயேட்சை வேட்பாளர்களில் பலர் வெளிநாட்டு அகதி அந்தஸ்த்தினை கோருவதற்கு முன்னேற்பாடாகவும் வாக்குகளை சிதைப்பதற்காகவுமே களமிறங்கியுள்ளனர் என்பது ஊரறிந்த விடயம்.

அரசதரப்பில் இளையவர் தரப்பில் அங்கஜன் இராமனாதனின் குரல் ஓங்கி இருப்பதாக தெரிகிறது. அது வேலைவாய்ப்பினை நோக்கி மையம்கொள்வதை அவதானிக்கமுடிகிறது. அதைவிட அரசதரப்பில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முதன்மை வேட்பாளரும்  தன்பங்கிற்கு தனது இடத்தினை உறுதிசெய்ய பெரிதும் முயன்று வருவதை காணமுடிகிறது.

குறிப்பிடக்கூடியளவு இல்லாது விடினும் ஒரளவுக்கு வேட்பாளர்கள் மக்களின் தெரிவுக்கு இருபக்கமும் இருப்பதாகவே தெரிகிறது.தேர்தல் வேட்புமனு தாக்கல்செய்தபோது இருந்த நிலையிலும் தற்போது வேட்பாளர் அறிமுகம் ஓரளவுக்கு முன்னேறியிருக்கிறது. எது எப்படியோ சின்னங்கள்தான் இங்கு முன்னிலையில் மக்களிடம் பேசப்படுகின்றது.

முற்கூட்டிய கருத்துக்கணிப்பு அலைகள் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று வெற்றி பெறுமென்று எதிர்பார்க்கின்ற போதிலும் கட்சிகளின் அமைதியான வாக்கு வங்கிகள் ஒருபுறம் காத்துக்கிடக்கின்றன. யாழ்தேவியை கிளிநொச்சிவரை அனுப்பி அரசு அபிவிருத்தியினை அறை கூவுகிறது. அரச தலைவர் வேறு களத்தில் இறங்கியிருக்கிறார். இவற்றுக்கு சளைக்காமால் மக்களை ஒருகணம் சிந்திக்க வைக்கின்ற வகையான அமைச்சர்களின் மற்றும் இராவணா சக்தி போன்ற அமைப்புக்களின் இனவாதக்கருத்துக்கள் , ஆட்கொணர்வு  மனு தொடர்பிலான நீதிமன்ற நடவடிக்கைககள் இவற்றையெல்லாம் தாண்டி தேர்தல் முடிவுகள் மூலம் வெல்லப்போவது யார் என்று சொல்லப்போவது மக்கள் தான் நான் மட்டும் அதனை தீர்மானிக்கமுடியாது.

0 comments

கருத்துரையிடுக