ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தனக்கென சிறப்பான கொள்கைகளும் இலட்சியங்களும் இருக்கும். அதேபோல தனித்திறமைகளும் இருக்கும். அவனுக்கென பிடித்தவைகள் பிடிக்காதவைகள் என பல விடயங்கள் இருக்கும். இருந்தபோதிலும் வாழ்க்கைச்சக்கரத்தில் விரும்பியோ விரும்பாமலோ அன்றி சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாகவோ இவற்றினின்றும் விட்டுக்கொடுக்க வேண்டிய தேவை ஏற்படலாம். எது எப்படியோ தனிமனிதனின் பலவிடயங்கள் மாற்றதற்குட்படாதவைகள் என்பதை யாவரும் அறிவோம்
எனக்கு கல்லுாரியில் கல்விகற்பித்த ஆசிரியர் எமக்கு அறிவுரை கூறும் வேளைகளில் சொல்வது எனக்கு ஞாபகம் வருகிறது ”இந்த விசயம் உன்னுடைய சட்டத்தில் சரியாகலாம் ஆனால் என்னுடைய சட்டத்தில் பிழையானது” என்று. அவருடைய கருத்துக்களை பகுத்தாய்ந்து பார்க்கும் பக்குவம் எனக்கு அன்று இருந்ததில்லை. இன்று இருக்கிறது அது முற்றிலும் உண்மையானது என்று எனக்கு இன்று புரிகிறது. குறித்த ஒரு விடயம் சம்பந்தமாக ஒவ்வொருவருடைய நோக்கும் வேறுபடுகின்றது சிலவேளைகளில் ஒத்துப்போகிறது.
இந்தவகையில் வாழ்கையின் அரைவாசிப்பகுதியை அண்மித்திருக்கும் என்னுடைய பார்வையில் ஒவ்வொரு விடயங்களும் எப்படிப்படுகின்றன அவற்றை நான் எதிர்கொள்ளும் விதத்தினையும் நேரமுள்ள நேரங்களில்(?) இங்கு பதிவுசெய்யலாம் என நினைக்கிறேன்.அவை என்னைவிட இளையவா்களுக்கும் ஏன் பெரியவர்களில் சிலருக்கும் தம்மை மீள சரிசெய்ய அல்லது சிந்திக்க வழிவகுக்கலாம்.அதேவேளை என்னை சுயபரிசீலணை செய்யவும் இது உதவக்கூடும்
இத்தனைக்கும் நான் ஒரு ஞானியோ யோகியோ முற்றுமுழுதான யோக்கியன் என்றோ கூறவிரும்பவில்லை. சில பல வி்டயங்களில் நான் (நான் எனும் ஆணவம்கூட என்னை விட்டு போகவில்லை பாருங்கள்) தவறுகள் தப்புக்கள் செய்திருக்கின்றேன். தண்டிக்கப்படிருக்கிறேன் பிராயச்சித்தம் செய்திருக்கின்றேன்(சமய சடங்கல்ல).அதற்காக வருந்தியிருக்கிறேன்.சிலவற்றுக்காக அலட்டிக்கொள்ளாமலும் இருந்திருக்கிறேன்.
என்னுடைய சட்டத்தில் எது சரியென்று படுகின்றதோ அதனை செய்துவிட தயங்கமாட்டேன். இன்னொருவருடைய அறிவுறுத்தல்களை முற்றுமுழுதாக நம்பிவிட நான் தயாராக இல்லை. அதேவேளை அவருடைய அறிவுத்தல் அல்லது தகவல் நுாற்றுக்கு நுாறு சரியென என்னால் உறுதிப்படுத்தப்படுமிடத்து என்னுடைய முனைப்பு பிழையென நான் கண்டுகொண்டால் நிச்சயம் என்னை சரிசெய்ய தவறுவதில்லை.
வாழ்வில் பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் பிழையான புரிந்துகொள்ளல் தான் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆயினும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை சாட்டாக சொல்லி இதற்கான பொறுப்பிலிருந்து பலரும் விலக நினைக்கிறார்கள். ஏன் தென்னிந்திய தொலைக்காட்சித்தொடர்களில் நுாறுவீதமானவை இந்த கருப்பொருளை மையமாககொண்டே நகர்த்தப்படுகின்றன.
என்னைப்பொறுத்தவரையில் மற்றவர்களினுாடு கிடைக்கும் தகவல்கள் யாவும் முதலில் என்பார்வையில் பொய்யானவையாக அல்லது சந்தேகப்புள்ளி இடப்பட்டதாகவே இருக்கும் எனது அறிவிற்கு எட்டியவரையில் தேடுதல்கள் உறுதிப்படுத்தல்கள் போன்றசெயற்பாடுகளை மேற்கொள்வேன் அதில் தேறி வருவனவே உண்மையென கருதுகின்றேன்.
சிறுவயதில் இருந்தே எனக்கு துப்பறிதல் மற்றும் ஆய்வுசெய்தல் போன்றவற்றில் மிகுந்த விருப்பம் உண்டு.அப்படிச்சொன்னவுடன் என்னைப்பற்றி சிலா் ”இவன் சரியான சந்தேகப்பிராணியோ” என எண்ணக்கூடும். அவர்கள் நினைப்பது தவறு.அப்படி அவர்கள் நினைத்தால் எனக்கு அதைப்பற்றி கவலையும் இல்லை. காரணம் எனக்குத்தான் என்னைப்ற்றி நன்றாகத் தெரியுமே. நமது சந்தேகத்தினால் பிறரது மனம் புண்படாதவகையில் அது பாரதுாரமானதாக இருக்காது.
நமது சந்தேகம் வெளிப்படுத்தப்படாமல் இருக்கவேண்டும். சந்தேகம் என்பது எப்போது வெளிப்படுத்தப்படுகின்றதோ அப்பொழுதே பிரச்சனை ஆரம்பமாகி விடுகிறது. சந்தேகம் இரண்டுவகையானது ஒன்று குறித்த தகவலை சந்தேகப்படுவது மற்றது மூலத்தினையே சந்தேகிப்பது.இரண்டாவது தான் பிரச்சனைளை உருவாக்கக்கூடியது.
ஒரு தம்பதியரிடையே தோன்றும் சந்தேகம் சம்பந்தமான சம்பவத்தினை நோக்குவோம் (நான் இப்பத்தியெழுதும்வரை திரமணமாகாதவன் என்பது குறிப்பிடத்தக்கது) . கணவன் வீடு திரும்புகின்ற நேரம் சிலகாலமாக வித்தியாசமானதாக இருக்கிறது. மனைவி அதனை கண்டும் காணாமல் இருப்பது அழகல்ல. மனைவி எப்படி அணுகலாம். என்ன வழியில ஏதும் பிரச்சனையோ? என்று கேட்காமல் ஏன் தாமதம் என கோபமாகவோ அதட்டலாகவோ கேட்பதன் மூலம் பதிலை சொல்வதற்கான ஏது நிலையினை இல்லாமல் செய்து விடக்கூடாது.
அதேவேளை கணவனும் முதல்கேள்வி கேட்கப்படும்போது தடுமாற்றத்துடன் பதிலளிக்காமல் சிறு விடயமாக இருந்தால் நிதானமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதிலளிக்கணே்டும். அல்லது பெரிய விடயமாயின் ஓரளவுக்கேனும் விளங்கிக்கொள்ளகூடிய வகையில் சுருக்கமாக விளங்கப்படுத்தணே்டும் பின்னர் தெளிவான விளக்கம் வழங்கலாம்.
இப்படிச்சொன்னால் அப்படி ஆகிவிடுமோ என கற்பனைசெய்து ஒருபொய்யினை எடுத்து விட்டு அதனை காப்பாற்ற இன்னொரு பொய்யினை எடுத்து விட்டு இசகுபிசகாக மாட்டி முழிக்கக்கூடாது.அவை சந்தேகத்தினை வலுப்படுத்துமே தவிர நீக்காது. மேலும் மனைவியினைப்பொறுத்த வரையிலும் சற்று நிதானம் வேண்டும் ஆதாரமில்லாமல் கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கக்கூடாது. தீரவிசாரித்து உண்மையறிந்தபின்னா் நம்புதலை கடைப்பிடிக்கவேண்டும்
கூடியவரையில் நல்லமனிதா்களாக வாழப்பழகவேண்டும் ஒளிவுமறைவு இன்றி சகலவற்றையும் ஒப்புவிக்கவேண்டும். அநேக விடயங்களில் வெளிப்படையாக இருந்துவிடுதல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்காது.
சில விடயங்களை மறைக்கத்தான் வேண்டும் அவை எங்கே பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பதை குறித்த விடயம் தான் நிர்ணயிக்கும். நிச்சயம் அந்தரங்கமானதாக எவையாவது ஒவ்வொருவருக்கும் இருக்கும் இதையும் கொட்டித்தீர்த்து விட்டவர்கள் தன்னாலே கெட்டவா்களாகிறார்கள் அல்லது துரோகமிழைத்தவா்களாகிறா்கள்.. இங்கு அதற்கு உதாரணமாக அரசவிசுவாசம் சம்பந்தப்பட்ட தகவல்களினை குறிப்பிடலாம்.
எனது சட்டத்தில் அனைத்தையும் வெளிப்படையாக மேற்கொள்வதையே விரும்புகின்றேன். ஆயினும் இரகசியம் காக்க வேண்டியிருப்பின் அவை எந்நிலையிலும் என்னிடமிருந்து வெளியில் வராது.
0 comments