வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

நன்றும் தீதும் பிறர் தர வாரா!

Posted by Thava வெள்ளி, 11 ஜனவரி, 2013


சவூதியில் பணிப்பெண்ணாக கடமையாற்றி சிசுவொன்றை கொலை செய்ததாகத் தெரிவித்து மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையின் ரிசானா நபிக்கிற்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டடது இன்று சமூகவலைத்தளங்களில் அதிகமாக பேசப்படும் விடயமாக உள்ளது. பல்வேறு தரப்பினராலும் கண்டணத்திற்குள்ளாகிய விடயமாகவும் உள்ளது.

2005 ஆம் ஆண்டு தனது வேலைதருனர்களின் குழந்தையை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு சவுதி அரேபியாவின் தவாத்மி பிரதேசத்தில் சிறை வாசம் அனுபவித்து வந்த ரிசானாவின் விடுதலைக்காக பல தன்னார்வ சமூக சேவை நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு கோரிக்கைகளை முன்வைத்த போதும் 9.1.2013  காலை ரிசானா நபீக்கிற்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

.இவ்விடத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மன்னிப்பு மட்டுமே அவரைக்காப்பற்றியிருக்கக்கூடிய விடயமாக இருந்தது. சிசுவின் தந்தை மன்னித்திருந்தபோதிலும் தாய் மன்னிக்கவில்லையாம் உண்மையில் அந்த தாயின் கல்நெஞ்சமே அந்த தண்டனை நிறைவேற்றத்திற்கு முழுமுதல் காரணம் ஆகும் என கூறப்படுகிறது

ஷரியா சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ரிசானா விடயத்தில் சந்தர்ப்பங்களும் சாட்சியங்களும் அவரைக் குற்றவாளியாகியுள்ளது. அதனால் அவருக்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது . ஒரு குழந்தை மரணிப்பதற்கு உண்மையில் ரிஸானா காரணமாக இருந்திருந்தால் இந்தத் தண்டனை மூலம் அவர் இவ்வுலகிலேயே தூய்மைப்படுத்ப்பட்டு இறை சந்நிதானத்தை அடைந்துள்ளார். அவரின் எண்ணத்தின் அடிப்படையில் அவர் நிச்சயமாக உயர்ந்த சுவர்க்கத்தை அடைவார்.அவர் எந்தக் குற்றமும் செய்யாமல் அநியாயமாகத் தண்டிக்கப்படிருந்தால் அதுவும் அவருக்கு நன்மையே, அல்லாஹ்விடத்தில் அதற்கான சிறந்த கூலியைப் பெற்றுக்கொள்வார் என முஸ்லிம் அடிப்படை வாதிகள் கூறுகின்றனர்

அறிந்து கொண்டே அவருக்கு யாரும் அநீதி இழைத்திருந்தால் நிச்சயம் அவர்கள் அநியாயக்காரர்கள். அல்லாஹ்வின் கடுமையான தண்டனையிலிருந்து அவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது.என்று அவர்கள் ஆறுதல் சொல்கிறார்கள்

18 வயதை அடைந்த ஒருவர்தான் குற்றவாளியாகக் கருதப்படுவார் என்பது இஸ்லாமியச் சட்டம் கிடையாது. அது உலகச் சட்டம். பருவ வயதுதான் இஸ்லாத்தின் அளவுகோல்  என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.

காட்டுச் சட்டங்கள் ஆளும் நாடுகளில் வாழ்த்துகொண்டு முஸ்லிம் அல்லாதவர்கள் இதுதான் சந்தர்ப்பம் என்று இஸ்லாமிய ஷரியா சட்டத்தை விமர்சிக்க முற்படக்கூடாது. உலகிலேயே பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை, அனாச்சாரங்கள், கீழ்சாதிக் கலாச்சாரங்கள் குறைந்த நாடுகள் அரபு நாடுகளாகும் என அந்த முஸ்லிம் அடிப்படைப்படைவாதிகள் கருத்துத்தெரிவிக்கின்றனர். 

வேதனையும் வெட்கமும் என்னவென்றால் பரிதாபப்படும் பலர் இப்படியான ரிசானாக்களை உருவாக்கியவர்களாகவும், கொலைக்களம் ஏற்றியவர்களாகவும் உள்ளனர் எனஅவர்கள் கர்ஜிக்கின்றனர்.

இது இப்படியிருக்க


முஸ்லிம்களின் சட்டம் என்ன சொல்கிறது ? கொலைக்குற்றத்திற்கு மரணதண்டணை என்று தானே! அத்துடன் மன்னிப்பினை பாதிக்கப்பட்டவர் வழங்குவதையும் வரவேற்கிறது என்பதும் புலனாகின்றது. இந்நிலையில் சட்டம் தவறிழைக்கவில்லை அது தவறாக பிரயோகிக்கப்பட்டுள்ளது என்பதே இங்கு வெளிப்படை.

றிசானா கொலை செய்யவில்லை என அப்பட்டமாக தெரிகிறது. அவள் கொலை செய்யவேண்டிய அவசியமும் இல்லையே!   இப்படியிருக்க ஏன் முஸ்லிம்களின் சட்டம் முஸ்லிம் பெண்ஒருவர் மீது பிழையாக பிரயோகிக்கப்பட்டுள்ளது என எனக்கு இன்னும் புரியவில்லை.மனதைக்குடைகிறது. திட்டமிட்ட கொலைக்கும் தற்செயலான கொலைக்கும் வித்தியாசம் காணமுடியாத ஒரு சட்டமாக இவர்களின் சட்டம் இருக்கிறன்றதா என்பது எனது கேள்வி!

ஆரம்பத்தில் நான் அவள் ஒரு சிசுவை கொன்றுவிட்டாளே என எண்ணியதுண்டு. வைத்து இழுத்தடிக்காமல் உரிய தண்டணையினை வழங்கிவிடவேண்டியதுதானே என எண்ணியதும் உண்டு. ஆனால் எல்லாவற்றினையும் ஆராய்ந்து பார்க்கும் போது மிகவும் வேதனையளிக்கிறது. மரணதண்டனை அளிக்கும் விதம் அதன் பின்புல பாடல் மற்றும் அவளது கைப்பட எழுதிய கடிதம் என்பன கோபத்தினையே வரவழைக்கிறது!

இந்த விடயத்தில் சமூக அக்கறையானது மிகவும் காலம்தாமதமாக எழுப்ப்பட்டுவிட்டதோ எனவும் எண்ணத்தோன்றுகிறது.


இந்த விடயத்தில் அசமந்தமாக தொழிற்பட்டுவிட்டதாக இலங்கையரசினை குறைகூறுவதில் பல் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவள் வேலைக்கு செல்ல வேண்டிய சந்தர்ப்பத்தினை நாட்டியில் ஏற்படுத்தியிருந்ததை தவிர விடுதலை மற்றும் மன்னிப்பு விடயத்தில் தன்னாலான முயற்சிகளை அது எடுத்திருந்தது என்றே அறியமுடிகிறது. சவுதி அரசின் சட்டதிட்டங்களுக்கு அப்பால் அவர்களால் செல்லமுடியாது என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

எந்த தண்டனையும் கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் வழங்கப்படுவது,அதை நியாயப்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. இந்து மதத்தில் கூட சில மூடர்களால் மிருகபலிகள் செய்யப்படுகின்றன. ஆனால் அது மதத்தில் அறிவுறுத்தப்படாதவை. அதற்காகாக இந்து மதத்தினை குறை சொல்ல முடியாது.

நாகரீகமடைந்த இந்த உலகில் இன்னும் மதத்தின் பெயரால் நடைபெறும் காட்டுமிராண்டித்தனங்கள் கண்டிக்கப்படவேண்டியவை! இந்நிலையில் நாம் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான சட்டங்களை பிரயோகிப்பவர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பது மேல் !. என்னைப்பொறுத்தவரை சட்டம் பிழையாக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றதே தவிர சட்டத்தினை குறைகூற முடியாது என்பதேயாகும். இருந்தபோதிலும் அப்படி சட்டம் பிழையாக பிரயோகிக்கப்பட்டதிற்கு அந்நாடும் நாட்டு மக்களும் பொறுப்பாகிவிட்டமையினையும் மறுக்கமுடியாது!

பணம் என்ற ஒன்றுக்கானத்தான் எல்லாம் இங்கு அரங்கேறியிருக்கிறது. அளவுக்கதிகமாக ஆசைப்படாமல்  கிடைப்பதை கொண்டு சிறந்த வாழ்க்கையினை வாழப்பழகிக்கொள்ள வேண்டும். என்னவளம் இல்லை நம் திருநாட்டில்? என்பதுதான் என் கேள்வி இப்போது. 

நாம் பொருளாதாரத்தில் தன்னிறைவு சிறந்த கல்வி இவற்றினை நோக்கி பயணித்தால் நிச்சயம் இவ்வாறான பொறிகளுக்குள் செல்லவேண்டிய அவசியம் இருக்காது!. நாம் நாடு நமக்கு என்ன செய்தது என்று கேட்டுக்கொண்டிருப்பதை விட்டு நாட்டுக்கு என்ன செய்தோம் என எண்ணினால் பல கேள்விகளுக்கு விடை பிறக்கும் 

சகோதரி றிசானாவின் ஆத்மா சாந்தியடையட்டும் அவள் கண்ட கனவு நனவாகட்டும்! அததற்கு நாம் அனைவரும் எம்மாலான முயற்சிகளை எடுத்து இனிவரும் காலங்களில் இப்படியான உயிரிழப்புக்களை தவிர்ப்போம்!

நன்றும் தீதும் பிறர் தர வாரா!றிசானாவின் கடிதம்


சவுதி அரேபியாவில் மரண தண்டனை வழங்கப்படும் முறை
(இது 2011 ம் ஆண்டு இந்தோனேசிய பெண்மணிக்கு வழங்கப்பட்ட காட்சி)
றிசானா பற்றிய மேலதிகவிபரங்கள் இக்பால் செல்வன் அவர்களால் தொகுக்கப்பட்ட விடயங்கள் அவரது வலைப்பதிவில் 

0 comments

கருத்துரையிடுக