வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

எதிர்ப்பரசியல் எதையும் தராது!

Posted by Thava வியாழன், 28 மார்ச், 2013


தி.மு.க அரசியில் இருந்து விலகியிதால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிட்டது என்று கேட்கும் கருணாநிதியின் கருத்துக்களில் சில நியாயங்களும் இருக்கத்தான் செய்கிறது. எவரும் இதய சுத்தியுடன் ஒன்றையும் செய்யவில்லை என்பதையும் நாம் அறிவோம். யதார்த்தங்களை உணர மறுப்பதையும் நாம் அறிவோம். எமது பிரச்சனையினை தமது அரசியலுக்கு தேவையான அளவுக்கு இந்தியாவும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் பயன்படுத்திவருகின்றமைதான் கண்கூடு. இதையே நாம் தொடர்ந்து வலியுறுத்துகின்றோம்

எது எப்படியிருப்பினும் 2009 இல் தி.மு.க வெளியேறியிருந்தால் ஒரு அழுத்தம் கிடைத்திருக்கும் என்பதுதான் உண்மையே தவிர இந்திய நடுவண் அரசு கவிழ்ந்திருக்கும் என்பது உண்மையில்லை.அதுதான் இம்முறையும் நடந்திருக்கின்றது.

ஆனால் இங்கு முகப்புத்தகங்களில் இந்திய ஊடகங்களில் எமக்கு தரப்படும் தகவல்கள் தி.மு.க விலகியிருந்தால் ஈழத்தில் கொடூரம் நடந்திருக்காது என்று கூறமுனைந்திருந்தன இந்த கருத்துக்களால் ஒருவகையில் நானும் ஈர்க்கப்பட்டிருந்தேன். இது நடுவண் அரசில் தி.மு.க வின் பலம்  குறித்தான எமது அறியாமையின் வெளிப்பாடாகவும் கொள்ளலாம். ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கும் அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கும் இது தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை இக்கருத்துக்களில் பல , கட்சி எதிர்ப்பரசியலை மையமாககொண்டவை என்பதே உண்மை.

இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு அதனை வெளிப்படுத்தாமல் தமிழ்நாட்டுக்கட்சிகள் இன்றும் தமிழீழ உணர்வலைகளை தேர்தலை நோக்கிய தமது  கட்சியரசியலுக்கு தாரளமாக பயன்படுத்திவருகின்றன. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் இருந்து தமக்கான ஆதரவுத்தளத்தினை வலுப்படுத்தி வருகின்றன.

இன்னும் ஒருநாட்டில் தனிநாடு அமைக்க அயல்நாட்டில் இருக்கும் மக்களால் முடியாது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.இதற்கு தற்போதுள்ள உலக அரசியல் போக்கு இடம்கொடாது என்பதுதான் உண்மை. ஒருவேளை  எங்களுக்கு ஒரு அரசியல்தீர்வினை பெற்றுக்கொள்ள இவர்களின் போராட்டங்கள் வழிவகுக்கலாம்.

இதை உணராமல் மேலெழுந்தவாரியாக எல்லாவற்றையும் எதிர்ப்போம் என இறங்கக்கூடாது என்பது என்கருத்து. எதையும் ஒன்றுக்கு பலதடவை சிந்தித்தபின்னர் முடிவெடுக்கவேண்டும். யாரோ சொன்னார்கள் என்பதற்காக Airtel நிறுவனத்திற்கு எதிராகவும் போராட்டம் நடாத்தப்படுகிறது. அப்படிப்பார்த்தால் இந்தியாவில் முக்கால்வாசி நிறுவனங்களையும் எதிர்க்கவேண்டும் இங்கு நாம் சகல தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் எதிர்க்கவேண்டியிருக்கும். அதன்காரணமாக நாம் தொலைபேசி சேவையினை புறக்கணிக்க வேண்டியிருக்கும். அது எந்தவகையில் எமக்கு நன்மையினை தரப்போகிறது என சிந்தித்தால் ஒன்றும் இல்லை என்றே பதில் கிடைக்கும்.

தமிழ்நாட்டு மாணவர்களின் உணர்ச்சிகளை மதிக்கத்தக்கவை அவர்களது போராட்ட அர்பணிப்பினை பாராட்டத்தக்கவை. தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டம் ஆரம்பத்தில் அமெரிக்க தீர்மானத்தினை ஒட்டியிருந்தபோதும் தற்போது ஒவ்வொரு முறையும் திசை திருப்பப்பட்டு புதிய புதிய இலக்குகள் நிர்ணயிக்கப்படுவது அவதானிக்கப்படக்கூடியதாக உள்ளது.அதனை அவர்களது ஒவ்வொரு தீர்மான அறிக்கைகளும் வெளிக்காட்டுகின்றன. இன்னமும் எது வரை அவர்களின் போராட்டம் தொடரும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டினை காணமுடியவில்லை. அவர்கள் எத்தனை காலம் தமது கல்வியை போராட்டத்திற்காக அர்ப்பணிக்கமுடியும் எனபதும் இங்கு கேள்விக்குறி. முழுமையான போராட்டமாக அமையாமல் பகுதியான போராட்டமாக இனி இது அமைவதே சிறப்பானதாக இருக்கும்.மாணவர்கள் சரியான வகையில் வழிநடத்தப்படவேண்டும் இல்லாவிடில் அதன் பிரதிபலன் பிரச்சினைக்குரியதாக இருக்கும்.

இறுதியாக ஒன்றை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இரண்டு தடவை இலங்கைக்கு எதிராக தீர்மானம் இயற்றிய அமெரிக்காவும் தெற்கு ஆதரவாக வாக்களித்த இந்தியாவும் இலங்கையில் மக்கள் கொல்லப்படுவதற்கும் புலிகளின் தலைமையினை அழித்து போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவருவதிலும் குறியாக இருந்தன. அதை யாராலும் மறுக்கமுடியாது. இலங்கையில் பிரச்சனை இருக்கவேண்டும் என விரும்பும் இந்த நாடுகள் உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகள் தனிநாட்டுக்கோரிக்ககையினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டா. யதார்தத்தினை உணர்ந்து தந்திரோபாய அரசியலை முன்னகர்த்தவேண்டும்.

ஈழத்தமிழரின் தனிநாட்டுக்கோரிக்கை உலக நாடுகளால் தோற்கடிக்கப்பட்ட நிலையில் இங்கு நாம் எமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கும் இன ரீதியான பாரபட்சங்களுக்கும் எதிராக குரல்கொடுத்து எமது உரிமைகளை பெற இயலுமான சாத்தியமான வழிகளில் முயற்சிக்கின்றோம். இனரீதியாக பல இடங்களில் நாம் சீண்டப்படுக்கின்றமையும் உண்மை. அது தற்போது இலங்கையில் முஸ்லிம்களின் பக்கம் கூடுதலாக திரும்பியிருக்கிறது.அதனை அந்தச்சமூகம் கூட விரைவில் உணரும்.இங்குள்ளவர்களின் மனதில் மட்டும் உள்ளதை அயல்நாட்டிலும் புலம்பெயர்ந்தும் வாழ்பவர்கள்  வெளிப்படையாக தனிநாட்டுக்கோரிக்கையாக முன்வைத்தவண்ணம் உள்ளனர். இதில் எதுவும் இறுதி இலக்கினை உடனடியாக அடையப்போவதில்லை என்பதே யதார்த்தம். மனிதரை மனிதன் மதிக்கும் மனப்பாங்கு சகலரிடமும் உருவாகும் வரை போராட்டங்கள் தொடரும்.வருடங்களும் நகரும்.ஆம் புன்னகை எங்கே மறுக்கப்படுகின்றதோ அங்கே போர் தொடங்குகிறது என்பதை சகல அரசுகளும் உணரவேண்டும்

எது எப்படியோ 2009 நடந்த துயரச்சம்பவங்கள் எம்மிடமிருந்து மறந்துபோக நிறைய வருடங்கள் எடுக்கும். அதை மறப்பதற்கு அரசு விடுமா என்பது தான் இப்போதுள்ள கேள்விக்குறி. அரசின் வெற்றிக்கொண்டாட்டங்கள் நினைவுச்சின்னங்களே எமக்கு அவற்றினை நினைவுபடுத்துகின்றன என்பதை அரசு உணர மறுக்கிறது.நாம் அதை மறந்தால் அரசு சீண்டுவதை நிறுத்தினால் நிச்சயம் நல்லிணக்கம் மலரும். இதனை போராட்டங்களை செய்வோர் முக்கியமாக வலியுறுத்தவேண்டும். அதற்காக முற்றுமுழுதான எதிர்ப்பரசியல் எதையும் தராது.

0 comments

கருத்துரையிடுக