வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

யாழ் முகாமையாளர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ”தமிழ் மக்களுக்கான வெளியில் உள்ள வழி” என்ற தொனியில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குமான இன்றைய 15.05.2015 பொது விவாதம் 4.30 மணித்தியாலங்கள் நீடித்தது. இருதரப்பும் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையினை வலியுறுத்துகின்றன. கஜேந்திரகுமார் ஒரு நாடு இரு தேசம் என்கிறார். சுமந்திரன் அது சமஷ்டியாக இருக்கலாம் என்கிறார். கூட்டமைப்புடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைவதற்கு ஆட்சேபனை இல்லை என்றும் கூறினார் ஆனால் கஜேந்திரகுமார் தற்போதய நிலையில் முடியாது என்கிறார். கலந்து கொண்டவர்கள் இணைய வேண்டும் என்றனர்

சுமந்திரன் சம்பந்தன் குறித்த சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு சுமந்திரன், தான் சட்டத்தரணி என்பதை நிரூபிக்கும் வகையில் பதில்களை முன் வைத்திருந்தார் .சம்பந்தனின் தேசியக்கொடி விவகாரம் தொடர்பில் கேட்ட கேள்விக்கு தேசிய கீதத்தினை தமிழில் பாடவேண்டும் என நாம் ஏன் கேட்கவேண்டும் அதைக்கேட்கிறோம் ? அதை ஏற்றுக்கொள்கின்றோம் அல்லவா அதேபோலத்தான் தேசியக்கொடியை ஏற்கத்தான் வேண்டும் என்று மடக்கினார் .அவர் எதிரியை மாற்றி நாங்கள் சென்றுகொண்டிருக்கும் படகினை கூத்தடித்து கவிழ்க்க வேண்டாம். என்று கேட்டுக்கொண்டார்.அரசியல் கைதிகள் பெரும்பாலானவர்கள் விரைவில் விடுதலை செய்யப்டபட உள்ளதாக தெரிவித்திருந்தார்.காணிகளில் ஒருபகுதி பொதுத்தேர்தலுக்குள் விடுவிக்கப்படும் பொதுத்தேர்தலின் பின் இதே அரசியல் நிலமை நீடித்தால் நிச்சயம் பெருமளவிலான காணிகள் விடுவிக்கப்படலாம் என்றார்.தண்ணீர்ப்பிரச்சனையில் கூட்டமைப்பு தலையிட விரும்பவில்லை என்று சுறிய அவர் அது அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனை அதில் அரசியல் கதைக்க விரும்பவில்லை என்றார்

சுமந்திரன் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தற்போதைய தேசியக்கொடியில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்து எனினும் தேசியக்கொடி மாற்றம் ஏற்படும் வரை .இது தான் தேசியக்கொடி அதற்குரிய மதிப்பினை கொடுக்கத்தான் வேண்டும் அதில் தவறில்லை என்ற வாதத்தினை முன்வைத்தார்.தேசிய கொடியில் தங்கள் இனத்துவங்களை பிரதிபலிக்கும் அடையாளங்கள் ஏற்படுத்த வேண்டும் என தமிழ், முஸ்லிம் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.தேசிய கொடியில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பாக எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க, ஜீ. ஜீ. பொன்னம்பலம், ஜே.எல். கொத்தலாவல, டி.பி. ஜாயா, எல்.ஏ. ராஜபக்ச, எஸ். நடேசன், ஜே. ஆர். ஜயவர்தன என்போர் அடங்கிய நாடாளுமன்றக்குழு ஏற்படுத்தப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைக்கமைய தேசிய கொடியில் சமஅளவு அகலம் கொண்ட மஞ்சள், பச்சை நிறமான இரண்டு நிலைகுத்தான பட்டைகள் உருவாக்கப்பட்டது ஜீ. ஜீ. பொன்னம்பலம் (கஜேந்திரகுமாரின் பேரன்) கூட அதனை ஏற்றுக்கொண்டிருந்தார் என சுமந்திரன் போட்டுடைத்தார்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உத்தியோக பூர்வ கருத்தாக யாருடையதை ஏற்பது என்ற கேள்விக்கு பதிலாக ” அரசியல் தீர்வு விடயத்தில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன கூறப்பட்டுளே்ளதோ அதுதான் என்றும் மற்றைய விடயங்களில் கூடடமைப்புக்குள் முரண்பாடான கருத்துக்கள் வருவதை தவிர்க்கமுடியாது என்றும் கட்சிக்குள்ளேயே வேறுபட்ட கருத்துக்கள் உள்ள நிலையில் கூட்டமைப்புக்குள் வருவதை ஒன்றும்செய்யமுடியாது தானே என்றார்.

மேலும் 2010 இல் சரத்பொன்சேகா வை ஆதரிக்கும் விடயத்தில் முடிவு எடுக்கையில் கஜேந்திரகுமர் உள்ளே தான் இருந்திருந்தார் அவர் எதிர்த்த பொழுதிலும் தேர்தல் நடைபெறும்போது கூட்டமைப்பின் முடிவுக்கு கட்டுப்பட்டிருந்தார் என்று சுட்டிக்காட்டினார்.எனவே முரண்பாடுகள் அமைப்புக்குள் தவிர்க்கமுடியாது என விவரித்தார்.

தேர்தல் வேளை யாழ்ப்பாணத்தில் மாவை. சேனாதிராஜா மைத்திரி தரப்புடன் எமக்கு உடன்படிக்கை இருக்கு அது எழுதப்படவில்லை அதை நாங்கள் தான் விரும்பவில்லை என்று கூற மைத்திரி ஆம்  எல்லாவற்றுக்கும் மேலாக இதயங்களில் ஒப்பந்தம் எழுதப்பட்டிருக்கு என்று சொல்லி சென்றதை சுமந்திரன் ஞாபகப்படுத்தினார். எழுதிய ஒப்பந்தமே நிறைவேற்றப்படாத இந்த இலங்கையில் இதய ஒப்பந்தம் எந்தவகையில் சரியாகும் என  பல்கலைக்கழக விரிவுரையாளர் உதயன் கேள்வி எழுப்பினார்

இதயங்களுக்கிடையில் பேசப்பட்ட அந்த ஒப்பந்தத்தினை மக்களுக்கு வெளியிட்டால் அது நிறைவேற்றப்பட்டதா என்ன பின்னாளில் சரிபார்க்கமுடியும் என்றும் இல்லாவிடில் தோ்தல் முடிய ஏதோ ஒன்றை கூறி அது தான் இதய ஒப்பந்த விடயங்கள் என மழுப்ப முடியும் என விரிவுரையாளர் உதயன் சாடினார் அதற்கு சுமந்திரன் அது அதற்கு முன்னர் வெளியிடப்படும் என்றார்

சுமந்திரன் தன்மீது தனிப்பட்ட ரீதியில் நிறைய விமர்னங்கள் இருப்பதாக ஒத்துக்கொண்டார் ஆனால் அவற்றுக்காக அவர் வருத்தபட்டிருக்கவில்லை. பெரும்பாலான மக்கள் தனது செயலை விரும்புவதாகவே கருதுகின்றார். மேலும் ஊடகங்கள் தான் தனது கருத்துக்களை திரித்து கூறுவதாகவும் உண்மையில் தான்கூறிய கருத்துக்கள் சரியான முறையில் தான் அமைந்திருந்தன என்றும் .சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் ஒரே விதமாகவே தான் கருத்து தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்

மகிந்த யாழ்ப்பாணம் வந்திருந்தால் மாகாணசபை உறுப்பினர்கள் அவரின் முன் சத்தியப்பிரமாணம் எடுத்திருக்கலாம் என்று கூறிய சுமந்திரன் அப்படி செய்வதில் என்ன தப்பு என்று வினவினார்

திருக்குமரன் என்பவர் சம்பந்தன் விநாயகமூர்த்தி போன்ற அறளை தலைவர்களை அகற்றவேண்டும் என தெரிவித்த கருத்து பலராலும் கண்டணத்திற்கு உள்ளானது .சுமந்திரன் கொதித்து எழுத்தார் பின்னர் திருக்குமரன் அதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டார். பின்வரிசையில் இருந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இளைய ஆதரவாளர்கள் சுமந்திரனுக்கு எதிரான கருத்துக்களுக்கு மட்டும் கைத்தட்டலிலும் இடக்கு முடக்காக உணர்ச்சி வசப்பட்டு சுமந்திரனை கலாய்ப்பதிலும் ஈடுபட்டமை வரவேற்கப்பட்டிருக்கவில்லை. சுமந்திரன் ஒரு சமயம் கைதட்ட கூட்டிவரப்பட்ட கூட்டம் அமைதிகாக்கவேண்டும் என்று கடிந்தார்.

கஜேந்திரகுமார் ஈபிடிபி தவராசா அவர்களையும் கலாய்க்க தவறவில்லை உங்கட கட்சி இணக்க அரசியல் என்று குறிப்பிட்டார். அதன்போது தவராசா கடுப்பாகிவிட்டார். கஜேந்திரகுமார் வாதம் நிறைய வெளிநாட்டு கதை சொல்வதிலேயே கழிந்தது.அவரது வாதம் கூட்டமைப்பினை விமர்சிப்பதிலும் இருந்தது. சாதாரண மக்களுக்கு புரியாத அரசியல் தீர்வு குறித்து அரசியல் தலைவர்கள்தான் எடுத்துரைக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.சாதரண மக்கள வாழ்கைப்பிரச்சனைக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள் அதனை கூட்டமைப்பும் செய்யக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

கஜேந்திரகுமார் மேலும் உரையாற்றுகையில் தமிழ்மக்களுக்கான பிரச்சனையிக்குரிய தீர்வினை இலங்கைக்குள் மட்டும் வைத்து சிந்திப்பது முட்டாள் தனமானது மீண்டும் ஏமாற்றத்தினையே தரும் என்றும் அது உலாகளாவிய ரீதியில் பூகோள அரசியல் மா்ற்றத்திற்குட்பட்டு நகர்த்தவேண்டும் என்றும் அதற்கு அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும் என்றும் , கிடைக்கின்ற ஆட்சிமாற்றங்களை தமிழர் நலன்களுக்குரிய பேரம் பேசும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்தியா ஒருபோதும் தனிநாட்டினை விரும்பவில்லை என்றும் இது போராளி இயக்கங்களுக்கு ஆதரவு தரப்படும் சமயத்திலேயே சொல்லப்பட்டு விட்டதாகவும் கூறினார்

ஜெனிவா தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா செயற்பட கூட்டமைப்பே காரணம் என்று குற்றம்சுமத்தினார். இந்தியாவை நாங்கள் பார்த்துக்கொள்ளுவோம் என அமெரிக்காவுக்கு கூட்டமைப்பு வாக்குறுதியளித்திருந்ததாக கூறினார். ஆனால் அதனை மறுத்த சுமந்திரன் இந்தியாவின் ஜெனிவா தீர்மானம் தொடர்பிலான முடிவு மாற்றத்திற்கு புலம்பெயர்ந்த சிலரதும் தமிழ் நாட்டு எதிர்ப்பு நடவடிக்கைகளும் தான் காரணம் என தெரிவித்தார். தாங்கள் தான் இந்தியப்பிரதமர் சமஸ்டி தான் தீர்வு என கூறவைத்ததாக பெருமைப்பட்டுக்கொண்டார்

கஜேந்திரகுமார் கூறுகையில் ஒருநாடு பலதேசம் என்ற கொ்ள்கையில் முஸ்லிம்கள் மலையக மக்கள் தங்களுக்கென தேசங்களை வகுத்தால் அதிலும் தனக்கு ஆட்சேபனையில்லை என்றார்.இருப்பினும் தற்போது தமிழர் மட்டுமே தேசத்தினை கோருகின்றனர் என்றார்
மகிந்த ஏன் கொடுமையானவர் என்று நீண்ட பட்டியிலை சுமந்திரன் வெளியிட கஜேந்திரகுமார் அதனை மறுப்பின்றி ஏற்றுக்கொண்ட அதேவேளை மகிந்த மட்டுமா கொடுமையானவர் சந்திரிகா சரத்பொன்சேகா ரணில் அனைவரும் கொடுமையானவர்களே அவர்களும் எமக்கு எதிராகவே செய்பட்டனர் ஏன் அவர்களை கூட்டமைப்பு ஆதரிக்க முற்படுகிறது என தனக்கு தெரியவில்லை என்றார்
தமிழர் குறித்த ஆயிரக்கணக்கிலான ஆண்டுகளாகவே சிங்களவர் பயங்கொண்டுள்ளதாகவும் இவர்களது இலக்கு தமிழ் தேசத்தினை இல்லாதொழிப்பதொன்றே என்று கஜேந்திரகுமார் விளக்கினார்


டில்லியில் நடந்த அனைத்துகட்சி கூட்டத்தில் 13வது திருத்தத்தினை மையப்படுத்தியே தீர்வுதிட்டம் அமையவேண்டும் என சுதர்சன நாச்சியப்பன் வலியுறுத்தியதின் விளைவாகவே அக்கூட்டம் தோல்வியடைந்துவிட்டதாக குறிப்பிட்டார் அவர். அங்கே சுமந்திரனும் கஜேந்திரகுமாரும் இணைந்து வழங்கிய ஒரு உத்தேச தீர்வு வரைபினை  நாச்சியப்பன் நிராகரித்து விட்டதாகவும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.அவர்கள் டெல்கி செல்ல முதலேயே சில தரப்புகளின் ஏற்பாட்டில் இருவரும் சந்தித்து ஒரு பொது இணக்கப்பட்டிற்கு வந்திருந்தனர், அதையே அங்கு இருவரும் இணைந்து 3 பந்திகளில் எழுதி இருந்தனர் என்றும் குறிப்பிட்டார்,

நாச்சியப்பன், அன்றாட பிரச்சினை, அபிவிருத்தி சம்பந்தமான முதல் இரண்டு பந்திகளையும் ஏற்றுக்கொண்டு, அரசியல் தீர்வு சம்பந்தமான 3ம் பந்தியை, 13 ம் திருத்ததின் அடிப்படையிலான தீர்வு என எழுதுபடி கூற, ENDLF,PLOTE சங்கரி,போன்ற 4 கட்சிகள் அதனை ஒத்துக்கொண்டு, ஆமோதித்தன. எதிர்ப்பதும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டும் தானே,, எனவே கூட்டமைப்பும் தம்முடன் சேர்ந்து இதில் கையெழுத்து வைக்குமாறு கூட்டமைப்பை கேட்டிருந்தன.அதே நேரம் 13 ம் திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வு என்பதை நிராகரித்த தாம், தமிழரின் நலன் கருதி,கொள்கை ரீதியிலான முடிவை எடுத்து தம்முடன் இணைந்து கையெழுத்து வைக்குமாறு கூட்டமைப்பை அழைத்திருந்ததாகவும், கூட்டமைப்பு  எல்லோரும் ஒற்றுமையாக போனால் தாம் கையெழுத்து வைப்பதாக கூறினர் என்றும் குறிப்பிட்டார்.

சுமந்திரனின் குற்றச்சாட்டான இணைவதற்கு மக்கள்முன்னணிக்கு உள்ள பிரச்சனை தலைமைத்துவம்தான் என்பதற்கு பதிலளிக்கையில்  , நீதிபதி விக்கினேஸ்வரன் ஒருநாடு இருதேசம் கொள்கையினை ஆதரிப்பதாகவும் அதனாலேயே அவரின் தலைமையில் கூட்டமைப்பு வந்தால் தாங்கள் இணையமுடியும் என தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.தந்தைசெல்வா ஆரம்பத்தில் தமிழீழ கோரிக்கைக்கு எதிராக அறிக்கையிட்டு தேர்தலில் நின்றவரென்றும் பின்னர் அவரே அந்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்டதையும் நினைவு கூர்ந்தார்

தேசம் நாடு மற்றும் சுயநிர்ணயம் சமஸ்டி போன்றவை பற்றி கருத்துக்கள் அங்கே பகிரப்பட்டிருந்தது .சுமந்திரன் கூறுகையில் ” தேசம் என்பது குறித்து தனக்கும் கஜேந்திரகுமாருக்கும் இடையில் நிறைய வாதங்கள் இடம்பற்றுள்ளதாகவும் ஆனால் சுயநிர்ணயம் வரையறுக்கப்பட்ட சமஸ்டியானது தேசத்தினை ஒத்தது தான் என்று பொருள் பட வாதம் முன்வைத்தார் மேலும் தேசம் என்னும் போதும் அது கருத்தியல் ரீதியாகமட்டுமே உள்ளதாகவும் அங்கே சுயநிர்ணயம் வரையறுக்கப்பட்டிருப்பதாக தான் பார்க்கவில்லை என்றும் எனவே சம்பந்தன் சொல்வது போல தேசம் வெற்றுக்கோசம் தான் என்றார். கூட்டமைப்பு அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய சமஸ்டிக்கு தான் தாம் இணங்குவோம் என்றும் கூறினார்

இருவரும் இதுவரை வெளியில் பகிராத நிறைய உள் வீட்டுத்தகவல்களை எடுத்துக்கொள்ளக்கூடியதாக இருந்தது.
மைத்திரி அரசாங்கத்துடன் பேச்சளவில் செய்யப்பட்ட உடன்படிக்கை குறித்து தேர்தலுக்கு முன்பாக கூட்டமைப்பு வெளியிடும் என்று சுமந்திரன் கூறினார்.

சில விருப்பத்தகாத வாதங்களும் நடவடிக்கைகளும் இடம்பெற்றிருந்த போதிலும் இனிதே நிறைவுபெற்றது. இருதரப்பும் மல்லுக்கு நிற்காமல் இணைந்து தீர்வு குறித்து விரிவாக சிந்திக்கவேண்டும்.

இறுதியில் ஒரு இளைஞர் ”வாக்குறுதிகள் உடன்படிக்கைகள் என்று தலைவர்கள் கதைக்கையில் எதிர்கால சந்ததியினருக்கு தீர்வு குறித்த என்ன செய்தியினை தமிழ் தேசியக்கட்சிகள் விட்டுச்செல்ல விரும்புகின்றன என்ற இளைஞர்களின் அச்சத்தினை போக்கவேண்டும் ” என்ற கருத்து முத்தானதாக இருந்தது!

சில வினாக்கள் கேட்கப்பட்டன நிறைய வினாக்கள் என்ற பெயரில் கருத்துகளாக கூறப்பட்டன. நிதானம் கேள்விக்குள்ளாக்கப்பட்ட உணர்ச்சிக்கொந்தளிப்பு நிலவிய அந்த கூட்டத்தில் நான் எந்த கேள்வியும் கேட்பதை தவிர்த்து விட்டேன். இறுதியில் போகும் போது தனிப்பட சுமந்திரனிடம் ஒன்றை மட்டும் சொல்லிவிட்டு வந்தேன் ”சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவிப்பதை தவிர்த்தால் நல்லது” கவனத்தில் கொள்கின்றேன் என்றார்!

என்னைப்பொறுத்தவரை இருதரப்பிடமும் கருத்தியல் ரீதியாக தவிர பொதுமக்கள் முன்னிலையில் முன் வைக்கக்கூடிய உத்தேச தீர்வுத்திட்டம் இருப்பதாக தெரியவில்லை. ஒவ்வொரு கட்சியும் தாம் சொல்வது செய்வது சரி என்றே கூற வருகின்றன. ஒருவகையில் இருகட்சிகளும் கொழுக்கட்டையும் மோதகமும் போன்றதே. எனவே இன்றைய நிலையில் தேர்தல் தான் பதில் சொல்லப்போகின்றது.
ஒருசிலரின் நடவடிக்கைகளுக்காக மக்கள் அவ்வளவு விரைவில் வீட்டில் இருந்து சைக்கிளுக்கு மாறி விடுவார்கள் என்று நான் கருதவில்லை.

முழுமையான காணொளி0 comments

கருத்துரையிடுக