வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.


இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தான் ஆட்சியைக்குறிவைக்கும் அரசியல் கூட்டமைப்புக்கள் உள்ளன .அவை நிரந்தரமானவையல்ல. கொள்கைப்பிடிப்புள்ள முற்றிலும் நிறுவனமயப்படுத்தப்பட்ட கட்டமைப்புடன் கூடிய கட்சிஅமைப்பு கட்டியமைக்கப்படவேண்டும்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் எந்த ஒரு நிரந்தரமான கொள்கைகளையும் கொண்டிராத ஒரு குழு. முதலில் ஒரு கட்சி அமைப்புக்கு அவர்கள் வரவேண்டும் . அதன் பெயர் கூட்டமைப்பாக இருந்தால் அதற்கு நிரந்தரமான கொள்கைத்திட்டங்கள் இருக்கவேண்டும். தலைவர் சரி இல்லாவிடில் கூட நீக்கக்கூடிய சிறந்த யாப்பு தேவை!

ஒவ்வொரு பங்காளிக்கட்சியும் தமது கட்சிகளையும் வளப்படுத்தக்கூடிய நிலை இருக்கக்கூடாது இது நிறுவனத்தின் பாதையினை ஒருநிலையில் கட்டாயம் சீர்குலைக்கும். இதயசுத்தி இருக்காது. ஒன்றுபட முடியாது என்றால் விலகி ஒரு புதிய நிறுவனமயப்படுத்தப்பட்ட கட்சியை உருவாக்கவேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரே உண்மையில் மாயையானது இன்று யாரும் அதன் தலைவர் என்று கூறமுடியும் சட்டச்சிக்கல் எதுவும் இல்லை.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என தேர்தல் திணைக்களத்தில் பதிவு இல்லை பத்திரிகை செய்திகள் அறிக்கைகள் மாத்திரமே இதனை கூறி வருகின்றன இன்றுவரை தமிழரசுக்கட்சிதான் தமிழ் கூட்டமைப்பாக முன்னிலைப்படுத்தப்படுகிறது. வாக்குச்சீட்டில் கூட தமிழரசுக்கட்சிதான். வீடுதான் அதன் சின்னம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் என்று ஏதாவது ஆவணம் உண்டா ?இந்த மாயையினை பலர் வில்லங்கமாக மறைக்கின்றனர் இதற்கு முடிவுகட்டப்படவேண்டும்.இல்லாத ஒன்றை கட்சியாக உருவகித்து வரும் நாம் ஒருவகையில் மன நோயாளிகள் தான்.

இங்கு எமது மனதுக்குள் உணர்வு இருந்தாலும் எமக்கான தீர்வு ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் அமையமுடியும் இதுதான் சாத்தியமானதும் கூட. இந்நிலையில் வெறுமனே புலம்பெயர் சமூகத்திற்கு ஒரு முகமும் அரசுக்கு ஒரு முகமும் எமக்கு ஒரு முகமும் காட்டும் இந்த கூட்டமைப்பின் பழுத்த கோமாளிகள் முதலில் தமது கொள்கைகளினை விளக்கி தமிழ் தேசிய அரசியல் கட்சியொன்றை பதிவுசெய்யவேண்டும்.

ஒன்றுமில்லாத ஒன்றை வைத்து பூச்சாண்டி காட்டக்கூடாது. தேர்தலுக்குமட்டும் எமது உணர்வுகைளை விலைபேசி மடையர்களாக்கமுடியாது. சங்கரி போன்ற வெளியிலே உள்ள அரசியல்வாதிகளும் இவர்களை விட வித்தியாசமானவர்கள் இல்லை என்பதையும் நினைவுபடுத்த விரும்புகின்றேன். வீட்டுச்சின்னத்தில் வெற்றிபெற்றவர்கள் அனைவரும் தாங்கள் புலிகளால் அங்கீகரிக்கப்பட்ட புனிதர்கள் என்று கூற விளைவது சுத்த முட்டாள்தனம். காலம் மாறிவிட்டது இனி புதுசா சிந்திக்கவேண்டும் பழைய பதிப்புக்கு பக்கவாத்தியம் பாட நாம் முட்டாள்கள் இல்லை.

நாம் எல்லாம் தெரிந்துகொண்டு ஏதோ ஒரு மாயைக்குட்பட்டு ஒன்றின்பின் தொடர்ந்து சென்று கொண்டிருப்பது தான் சரியாகப்படவில்லை.மாற்றத்தினை உள்வாங்க வேண்டும் அல்லது மாற்றப்படவேண்டும் சரிவராவிடில் மாற்று அணிதான் வழி!

எம்மில் பலர் புதிய மாற்றத்திற்கு தயாரற்றவர்களாக தமிழ் தேசிய அரசியலின் பழைய பதிப்பொன்றுக்கு பின் நின்று கூவிக்கொண்டிருக்கின்றோம். அதில் பிழைகள் இருக்கும் தருணங்களில் எல்லாம் விடுவோம் என்று அலட்சியமாக இருந்து வருகின்றோம். புதிய ஒன்றினை தெரிவு செய்ய தயக்கம் காட்டுகின்றோம். தொழில்நுட்பத்தில் மாத்திரம் தான் புதியனவற்றை தேடுகின்றோம்.அந்த நிலை மாற்றவேண்டும்.

ஒவ்வொரு தேர்தலிலும் ஆணை கேட்டுகொண்டு வெறும் சூதாட்டமாக நடைபெறும் தேர்தல் அரசியலில் நமது வாக்குரிமை ஜோக்கராக பயன்படுத்தப்படுவதை ஏற்கமுடியாது.சர்வதேசத்திற்கு ஒற்றுமையினைக்காட்டுகிறோம் என்று கூறி பல இறுதிச்சந்தர்ப்பங்களை வழங்கியும் மாற்றம் எதுவும் இல்லை. சாதாரண அபிவிருத்தி மட்டும்தான்.கிழக்கு மாகாணம் சில செய்திகளை சொல்லிவிட்டது. வடக்குமாகாணமும் சொல்லபோகிறது.

தேசியம் வாக்கு சிதறடிப்பு அது இது என்று ஏதேதோ பிதற்றுகின்றோம். மக்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்கவும் அவர்களுக்கான தெரிவுகளை போதியளவு வழங்கவும் நமது தமிழர் அரசியல் வளரவில்லை. ஆனால் தென்னிலைங்கையில் நிலமை வேறு. இங்கே அரசுக்கும் தமிழ்த்தேசியம் பேசுவேருக்குமான மாற்று அணி வலுவான நிலையில் இல்லாமையே அதற்கு காரணம். தொடர்ந்து பாராளுமன்ற ஆசனம் என்ற கனவுதான் தமிழ்த்தேசிய சந்தர்ப்ப வாத அரசியலில் இருக்கிறது. மக்களுக்கான தீர்வு குறித்து யாரும் சிந்திக்கவில்லை.

மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று ஒரு கட்டமைப்பு நிஜமாக உள்ளதா? ஒருமுடிவை கலந்து பேசி வாக்கெடுப்பு நடத்தி எடுக்கிறார்களா? அது ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் குரலாக இருக்கிறதா? விஞ்ஞான முறையில் புள்ளிவிபரங்களை எடுத்து நோ்க்கின் தேர்தலை புறக்கணிப்போர் வாக்களிப்போர் வாக்களித்தவர்களில் எத்தனைபேர் கொள்கைக்கு எத்தனைபேர் கட்சிக்கு எத்தனைபேர் சின்னத்துக்கு எத்தனைபேர் எழுந்தமானமாக வாக்களித்தார்கள் என்றால் அரச அரச சார்பற்ற தமிழ் கட்சிகள் எதுவும் தேறாது! தென்னிலங்கை நிலை முற்றிலும் வேறுபட்டது

முதலில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் சீரமைப்பு கூட்டம் கூட்டப்படவேண்டும் அதில் சகல தமிழ் தேசியத்ததினை ஆதரிக்கும் கட்சிகளின் அரசியல் தலைவர்கள் பிரதிநிதிகள் அழைக்கப்பட்வேண்டும் அதில் ஒவ்வொரு கட்சியும் குழுக்களும் தமது கொள்கைகளினை வெளிப்படுத்தவேண்டும் அதில் இடைக்கால நிர்வாகம் தெரியப்பட்டு கட்சி யாப்பு உருவாக்கவேண்டும் அதன்படி புதிய நிர்வாகம் தொழிற்படவேண்டும் அது பதிவுசெய்யப்படவேண்டும் தேர்தலுக்கான தற்காலிக ஏற்பாடுகள் எதுவும் சரிவராது. உடனடி புனருத்தானம் இப்போது தேவை! காலம் பொன்னானது

இந்த மாற்றத்திற்கு யாரும் தயாராகாது விடில் உடன்படும் உணர்வுள்ள அரசியல் வாதிகளை ஒன்று சேர்த்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்றே புதிய கட்சியை உருவாக்கவும் முடியும் அதன்போது சில கட்சிகள் ஒதுக்கப்படும் வாய்ப்புக்களும் உள்ளன. அதன்போது சின்னம் பிரச்சனை வரும்! என்னைப்பொறு்த்தவரை சின்னம் மாற்றினால் பிரித்தறிய முடியாத முட்டாள்களாக மக்களை கருத முடியாது! என்றே நினைக்கின்றேன்

நாம் 60 ஆண்டுகளாக அடைய முடியாததை இனியும் அடையலாம் என்று கனவுகாண முடியாது . அதற்கான அரசியல் களநிலை இனி ஒருபோதும் அமையப்போவதில்லை. அதற்கான வெளிக்கள நிலைகளும் இல்லை.அதனின்றும் விலகி ஒரு ஒன்றுபட்ட தீர்வினை அடைவது சாத்தியமே. சரித்திரப்புத்தகத்தில் தான் படையெடுப்புக்கள் வெற்றிகள் பற்றி படித்திருக்கின்றோம் அவற்றின் காலப்பகுதிகள் மிக மிக குறைவு இங்கு நடைபெற்றது நீண்ட காலம். இவ்வளவு பலத்துடன் கட்டுக்கோப்புடன் இருந்த நம்மால் முடியாமல் போன விடயத்தினை இந்த கட்டுக்கோப்பில்லா பழைய கோமாளிகளைக்கொண்டு அடைந்துவிடலாம் என்று எண்ணுவது தவறு. மீண்டும் ஒரு 60 வருடம் தேவையா?

நாம் அடைய எத்தனிக்கின்ற எமக்கான சமாதான தீர்வுக்கான பாதையில் கட்டுக்கோப்பான ஜனநாயக கட்சி ஒன்றினை உருவாக்கி அதன் கீழ் போகவேண்டிய தேவையில் உள்ளோம். ஒருவருக்கும் சோரம்போகாமல் எந்த வொரு சலுகைக்கும் விலைபோகாமல் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் போது குரல்கொடுக்கக்கூடிய தாக அக்கட்சி அமையவேண்டும். பழையது வரலாறு அதை மாற்றமுடியாது.புதியதை புதிய வழியில் எழுதவேண்டும்.

புலம்பெயர்ந்தவர்கள் அரசு மற்றும் இங்குவாழும் மக்கள் ஆகிய 3 பிரிவினரும் செல்லும் பாதைகள் வித்தியாசமாக உள்ளன அவை ஒருமுகப்படுத்தப்பட்டு உண்மையில் எது சாத்தியமோ அதனை அடைவதற்கு நாம் பாடுபடவேண்டும். இளைஞர்கள் நேர்மையானவர்கள் எதுவும் உண்மையாக இருக்கவேண்டும் என எண்ணுபவர்கள் அவர்களை உசுப்பேத்தி உணர்ச்சி அரசியலுக்குள் விழுத்தி எம்மை நாம் சிதைக்க கூடாது என வலம்புரி ஆசிரியர் தலையங்கத்தில் எழுதப்பட்ட கருத்து மிகப்பொருத்தமானது. நாமே நமது மக்களின் குரல்களை அவர்களுடைய கருத்து தெரிவிக்கும் உரிமையினை முடிவுகளை எடுக்கும்போது அவர்களின் பங்கினை மறுக்கும் போது இன்னொரு இனத்தின் கட்சி யிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது.

ஒன்று மட்டும் தெரிகிறது ஏன் இவர்கள் இப்படி ? கட்சிப்பதிவுக்கான ஆவணங்களை தயார் செய்ய முடியாத அளவுக்கு தலைவர்கள் இயலாதவர்களா? போன்ற கேள்விகள் பங்காளிகட்சிகள் பலரிடம் எழுந்திருந்தும் கட்சித்தலைமைக்கு கட்டுப்படுகின்றோம் என்று வாழாவிருக்கிறீர்கள். பல இடங்களில் இப்படி அனைவரும் வாழவிருந்ததன் விளைவு இப்போது சுமந்திரன் மற்றும் சம்பந்தனின் தனிப்பட்ட முடிவுகளில் கட்சி செல்கிறது

அரசியல்கட்சியாக பதிவுசெய்ய ஆவணங்களை தயார் பண்ணமுடியாதவர்கள் எப்படி தீர்வுத்திட்டத்திற்கான ஆவணங்களை தயாரிப்பார்கள் .அவதானித்த பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் எங்கே இதைக்கேட்கப்போய் அடுத்தமுறை நமக்கு நமது சிபார்சுகளுக்கு இவர்கள் ஆப்புவைத்து விடுவார்களோ என்ற பயத்தில் தாமுண்டு தம்பாடுண்டு என்று இருக்கின்றனர் இந்த நிலை மாறவேண்டும் மக்களுக்கு பதில்சொல்லக்கூடிய கட்சித்தலைமை வேண்டும் எங்களுக்கு ஒருமுகம் தமிழீழம் கோருவோருக்கு ஒருமுகம் அரசுக்கு ஒரு முகம் காட்டக்கூடாதல்லவா?

சும்மா வாக்கு வங்கி கூட்டுதல் பற்றி சிந்திப்பதற்கு முதல் அந்த வாக்குகளுக்கான பதிலையும் கூற கட்சி தயாராக இருக்கவேண்டும் வாக்கு வங்கிக்கு மட்டும் பாராளுமன்ற ஆசனங்களுக்கு வலுசேர்க்க மட்டும் மக்கள் இல்லை. தெரிவுசெய்யப்படும் வேட்பாளர்கள் தேசியப்பட்டியல் வேட்பாளர்கள் நிறுவன கட்டமைப்பின் ஊடாக தெரிவுசெய்யப்பட்டிருக்கவேண்டும். இப்போது தெரிவுசெய்யபட்டருக்கும் பெரும்பாலான உறுப்பினர்கள் இதயசுத்தியுடன் தொழிற்படவில்லை.அவர்களி்ன் தெரிவு கூட்டமைப்பு என்ற உருவகிக்கப்பட்ட அமைப்புக்கு கட்டுப்பட்டு மக்கள் வாக்களித்ததன்பேரில் நடைபெற்றதே விர வேறொன்றும் இல்லை

கூட்டமைப்பினை உருவாக்கியபோது பின்புலத்தில் புலிகள் இருந்தனர் அவர்கள் சொன்னதை இவர்கள் கேட்டார்கள் . அப்போதும் சில தவறுகள் இடம்பெற்றிருந்தது அதனாலேயே இராஜதந்திர அரசியல் தோற்றது இப்போதும் தோற்கிறது. எப்போது போராட்டம் மற்றும் அரசியல் மக்கள் மயப்படுத்தப்படுகிறதோ அப்போதுதான் வெல்லும்.

விடுதலைப்புலிகளால் கூட குறுகியகாலத்தில் தீர்வுத்திட்டம் ஒன்றை தயாரிக்க முடிந்திருக்கிறது. பழுத்த அரசியல்வாதிகளால் அது முடியாமல் இருப்பது வியப்பிற்குரியது.மகிந்தவிடம் எப்படி தீர்வுத்திட்டம் இல்லையோ இவர்களிடமும் தீர்வுத்திட்டம் இல்லை.

இந்த வகையில் நாம் எம்மை சுய பரிசீலனை செய்யவேண்டும்.கட்டமைப்புள்ள கட்சி சின்னம் யாப்பு தலைமைச்செயலகம் என வளர்ச்சியடைய வேண்டும். பாரம்பரிய சுதந்திரக்கட்சி வெற்றிலையில் ஒன்றிணைந்து வெற்றிபெறமுடியும் எனில் தமிழரசுகட்சி கூட்டமைப்புக்குள் முழுமையாக இணைந்துகொள்வதில் தடையில்லை.
தவறின் மக்களின் தேர்தல் புறக்கணிப்பு மற்றும் தமிழ் அரசியல் தோல்வி என்பன தவிர்க்கப்பட முடியாது. புதிய மாற்றுக் கட்சி ஒன்றுக்கான ஏது நிலையினையும் அதிகரிக்கும்.மக்கள் விழித்துவிட்டனர் வடக்கு தேர்தலை நிறுவன கட்டமைப்புடன் எதிர்கொள்ள வேண்டும். இல்லாவிடில் தோல்வி தவிர்க்க முடியாது! தேர்தல் மட்டும் அரசியல் இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது!


நான் ஒரு தீவிர தமிழ் இன விடுதலை ஆதரவாளன் தமிழ் கலாச்சார பிரியன் என்பதை பயமின்றி தெரிவித்துக்கொண்டு மேலும் தொடர்கின்றேன். இல்லையென்றால் என்னை அரசாங்கத்தின் ஆள் அல்லது நிகழ்வினை ஒழுங்குசெய்தவரின் ஆள் என்று சொல்லி விடுவார்கள் :-) மேலும் இந்நிகழ்வில் எந்தவகையிலும் பங்கு எடுக்காதவன் என்ற வகையிலும் பழையமாணவன் என்ற வகையிலும் துடுப்பாட்டம்பற்றி அதிகம் அறிவில்லாத பொதுசனம் என்ற வகையிலும் கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

நிகழ்வினை ஒழுங்குசெய்த நபர் முற்று முழுதாக துடுப்பாட்ட வளர்ச்சியை நோக்காகக்கொண்டு இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்யவில்லை என்பது வெளிப்படையான ஒன்று .அவரை கல்லுாரியின் பழைய மாணவன் என்ற வகையில் தெரியும் என்றாலும் அவரது எல்லா நடவடிக்ககைகளையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன அதில் முக்கியமான ஒன்று நுண்ணரசியல். அதை விடுவோம்..அதற்காக அவருக்காக இந்நிகழ்வினை எதிர்ப்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அப்படிப்பார்த்தால் பல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் வாதிகள் கூட தமது இருப்புக்காகத்தான் பலதை செய்கின்றனர். யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடந்த பொது நிகழ்வு ஒன்றில் நடனமங்கையர் ஆபாசம் இல்லாமல் ஆடியது கூட குற்றமில்லை என்பதை தப்பு என்று பலர் கூறுகின்றனர். அதற்காக ஒழுங்கு செய்தவர்களை இப்படி கட்டம் கட்டி அடிப்பது அநியாயமாக படுகிறது. நானும் சொல்கின்றேன் அது ஒரு பொது நிகழ்வு அதில் ஒரு வித்தியாசமாக நடனமங்கையர் ஆடினர் ஆபாசம் இருக்கவில்லை உடுப்பை கழற்றிவிட்டும் ஆடவில்லை. இதில் என்ன கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று நானும் கேட்கின்றேன்.

முதலில் இதுபற்றி முகப்புத்தகத்தில் ஆங்காங்கே விமர்சனங்களை முன்வைக்கும்  உங்கள் அனைவரிடமும் கேட்பது ஒன்று தான். தமிழ் கலாச்சாரம் தமிழ் இன விடுதலை என்றெல்லாம் பேசுகிறீர்க்ள் உங்கள் யாருக்காவது தமிழர்களுடன் தமிழி்ல் உரையாடி மொழி வளர்க்கவேண்டும் என்று ஆர்வம் இருக்கிறதா? மனதைதொட்டுச்சொல்லுங்கள் உங்கள் வியாக்கினங்களை ஆங்கிலத்தில் பிதற்றி யாரை ஏமாற்றுகின்றீர்கள்.? உங்களுக்கு உங்கள் சொந்த திறமையினை பறைசாற்றவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருக்கின்றதே தவிர தமிழ் உணர்வு மேலோங்கவில்லை. துணிந்து தமிழில் பதிலளியுங்கள் பார்க்கலாம் இப்படி தமிழில் முடியாவிட்டால் நீங்கள் தமிழர்களாக இருப்பதே  மடமை.தமிழில் தட்டச்சிட தெரியாது . ஆங்கிலத்தில் கேட்டால் ஆங்கிலத்தில் தான் பதிலளிப்போம் என்பதெல்லாம்  ஏற்க முடியாத வாதங்கள். உணர்வு இருப்பின் தமிழ் தடையல்ல. எங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்றுமட்டும் எண்ணிவிடவேண்டாம். வெள்ளைக்காரனுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் கொடுப்பது வேறு தமிழர்களுக்கு ஏன் இந்த வரட்டுகௌரவம்?

அடுத்த விடயம் தமிழ்காலாச்சாரம் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளும் நீங்கள் எப்பொழுதும் வேட்டியும் சால்வையும் போட்டுக்கொண்டு வேலைக்கு போகலாமே! நாகரீகத்துடன் நாமும் மாறவேண்டும் என்று கூறுவீர்கள் அதைத்தான் நானும் சொல்கின்றேன். ஆபத்தில்லாத விடயங்களை அனுமதிப்பதில் தவறில்லை. உண்மையில் இது மேற்கத்தைய விளையாட்டு அதில் சேலையுடன் நடன மங்கைகளை ஆடவிடுவது இயலாத காரியம் ஆடினாலும் வடிவா இருக்காது .அதற்கு இந்த வகையில் ஆபாசமில்லாமல் ஒரு நடனக்குழுவை இறக்கியதில் தப்பில்லையெனவே தோன்றுகின்றது.விடுதலைப்புலிகள் காலத்தில் கூட தெருக்கூத்துகளின் போது பெண்கள் நீளக்காற்கட்டை அணிந்த வாறுதான் நடனமாடுவார்கள் எல்லாப்பக்கத்திலும் இருந்து பார்கக்கூடிய நிகழ்வுகளுக்கு அதுதான் பொருந்தும் உள்ளக மேடை நிகழ்வுகளுக்குத்தான்  பரத நாட்டியம் பொருந்தும். 


இதுக்கும் கலாச்சார சீர்கேட்டுக்கும் என்ன சம்பந்தம் எண்டு தெரியல. தொலைக்காட்சியில் மானாட மயிலாட போகேக்க குடும்பமா இருந்து வாயில ஈ மொய்க்கிறது தெரியாம ஆவென்று கொண்டு இருக்கிறதுகள் சும்மா எதுக்கெடுத்தாலும் விமர்சிக்கினம் போல இருக்கு. எல்லா விசயத்தினையும் நடுநிலையோடு சுய சிந்தனையோடு ஆய்ந்து விமர்சிக்கவேணும். பெண்ணடிமைத்தனம் குறுகிய மனப்பான்மை பிழையான கண்ணோட்டம் காழ்ப்புணர்ச்சி தாழ்வு மனப்பான்மை இதுகளின் ஒட்டுமொத்த வடிவம் இதனை விமர்சிக்கிறவர்களின் கருத்துக்களில் தொனிக்கிறது

இதை விமர்சிப்பவர்கள் பெண்கள் ஆடும் IPL காட்சிகளையும் தென்னிந்திய நடனக்காட்சிகளையும் தமது வீட்டு தொலைக்காட்சிப்பெட்டிகளிலாவது தடைசெய்வார்களா? அல்லது வீட்டில் உள்ளவர்களை பார்க்கவிடாமல் தடுப்பார்களா?

இதுக்கும் விடுதலைப்போடாட்டத்துக்கும் கூட சம்பந்தம் இல்லை இதை அனுமதித்தவர்கள் விடுதலைப்போராட்டத்திற்கு எதிரானவர்கள் என்று வேறு சில இடங்களில் கதை கட்டுகிறார்கள்.விடுதலையினை இங்கு யார் எதிர்க்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.விடுதலையினை சுதந்திரத்தினை எந்த சராசரி துாய மனிதனும் எதிர்ப்பதில்லை.தலைவரை மதித்தோம் போராட்டத்தினை மதித்தோம் இனியொரு விடுதலை நம் இனத்திற்கு கிடைத்தால் துள்ளிக்குதிப்போம் அதுக்காக ஏன் இப்பிடி சம்பந்தமில்லாம.. ?

முகப்புத்தகத்தில் சில இடங்களில் விமர்சனம் செய்வோர் சகோதர சகோதரிகளை மல்லுக்கு அழைப்பதை பார்க்கும்போது தெரிகிறது அவர்களின் விரசம். அந்தக்காலத்தில் சின்னமேளம் கொண்டுவந்து ஊர்க்கோயில்ல ஆட்டம் போடேக்க இவர்களின் பெற்றோர்கள் கைகொட்டி ஆர்ப்பரித்ததை அவர்கள் கண்டிருக்க வாய்ப்பில்லை. அது கலாச்சார சீர்கேடு இல்லையா? அதேபோல மாணவிகளை பரதநாட்டியம் ஆடவிட்டு 5 யார் இடவெளியில் இருந்து அங்க அசைவுகளை ஆவென்று பார்த்துக்கொண்டு கொண்டு இருக்கிற கலாச்சார காவலர்களையும் நாம் அறிவோம். விடுதலை பற்றி பேசுவோர் அதை வைத்து இணையத்தளங்கள் நடத்துவோர் பெரும்பாலானவர்கள் சினிமா மற்றும் கிளுகிளுப்பு செய்திகளை முன்னிலைப்படுத்தி வருகையாளர்களை அதிகரிப்பதையும் அறிவோம்!


இது பாடசாலை விளையாட்டுபோட்டியும் இல்லை பாடசாலை துடுப்பாட்ட போட்டியும் இல்லை என்பதைக்கூட விமர்சிப்பவர்கள் உணர வேண்டும். யார் குத்தினாலும் அரிசியானால் சரி என்ற மனநிலையினை வளர்க்கவேண்டும். அதை விட்டுவிட்டு வேண்டாப்பெண்டாட்டி கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என்ற மனநிலையில் விமர்சிக்க கூடாது. எங்களுக்கு இப்போது துடுப்பாட்ட வளர்ச்சி கண்ணுக்கு தெரியவேண்டுமே தவிர நடனமங்கை தெரியக்கூடாது. அருச்சுனன் அம்பு விடும்போது இலக்குமட்டுமே தெரிந்தது மற்றொன்றும் தெரியவில்லை என இலக்கியம் கூறுகிறது.

யாழ்ப்பாணத்தில் ஒரு நிகழ்வு நடாத்துவதாயின் எவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்று எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஊடகங்கள் கூட தமது நிகழ்வுக்கு இராணுவத்தினை அழைப்பதை கண்ணுற்றிருக்கின்றேன். மனதுக்குள் நெருடல் இருந்தாலும் செய்வதற்கு ஒன்றுமில்லை.

திரண்ட மக்கள் மாணவர் ஆதரவை பயன்படுத்தி ஒரு அரசியல் போராட்டம் நடாத்த திராணியற்றவர்கள் சிறைசெல்ல பயந்தவர்கள் வெறும் ஏட்டுச்சுரக்காய் அரசியல் செய்யும் கையாலாகதவர்களிடம் நமது இன அரசியல் பணி  வழங்கப்பட்டு இருப்பதே உண்மை.தமிழ்த்தேசியம் பேசுபவர்கள் இன்று தொடங்கி இன்று வரை நமக்கு அல்வா கொடுத்துக்கொண்டிருப்பதையும் அறிவோம் இருந்தும் அவர்களுக்கே வாக்களிக்க நாம் தவறுவதும் இல்லை எமது கொள்கைகளில் இருந்து பின்வாங்குவதும் இல்லை. முதுகெலும்பில்லாத பலர் இன்று அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. தமிழ் தேசியக்கொள்கைகளை வைத்து தம்மை மேல் நிலைப்படுத்த எண்ணுகிறார்களே தவிர எமக்கு ஒன்றும் கிடைத்ததில்லை.

பலாலியில் வெற்றி விழாவில் மாணவர்களைக் கொண்டு படையினருக்கு சின்னம்சூட்டவைத்தார்கள் அதற்கு இந்த தமிழினக்காவலர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் இதுவரை என்ன செய்திருக்கிறார்கள்.? வெற்றிவிழாவில் எமது நடனமங்கையரை பரதநாட்டியம் ஆடவைத்தார்கள் அதையெல்லாம் யார் தட்டிக்கேட்டார்கள்.பாடசாலைபற்றியும் அதன் பெருமைபற்றியும் அலட்டிக்கொள்ளும் இந்த அபிமானிகளில் எத்தனை பேர் பாடசாலை விலகிய பின் பாடசாலை நடவடிக்ககைகளில் பங்ககெடுத்தார்கள் உதவியுள்ளார்கள்.? அல்லது குறைந்த பட்சம் பழையமாணவர் சங்கத்தில்  இணைந்து குரல் கொடுத்திருக்கிறார்கள்.? வெளியில் இருந்துகொண்டு கர்ணபரம்பரைக்கதைகளை கேட்டு சொல்பவர்கள்போல் யாரோ சொல்லும் புனைகதைகளினை கேட்டு விமர்சனம் செய்வது அழகல்ல.

பொதுவாக சொல்கின்றேன். சிலர் அர்பணிப்புடன் இயங்கி வருவதை மறுப்பதற்கில்லை. ஆயினும் வாங்குவது அரச சம்பளம் பேசுவது தேசியம். அரச சம்பளம் மக்கள் பணம் என்றால் அதனை எல்லாம் மக்களுக்கே அர்ப்பணித்துவிட்டு சாதாரண பொதுமகன் போல இவர்களால் வாழ முடியுமா?. என்னைப்பொறுத்தவரை அவர்கள் அனைவரிடமும் துாய அரசியல் கிடையாது.  அறிக்ககைகளிலும் வீரவசனங்களில்மட்டும் மட்டும் அரசியல் செய்வதையும் பொதுசனம் அறியும். முன்புறம் தேசியம் பேசிக்கொண்டு பின்புறம் சலுகைகள் பெற்றுக்கொண்டிருக்கின்றனர். இன்று தமிழ் அரசியலில் ஈடுபடுபவர்களின் முழுக்கதையும் நமக்கு தெரியும்.இருந்தாலும் காரியம் உங்களைக்கொண்டுதான் ஆகவேண்டியுள்ளதால் பொறுத்துக்கொண்டிருக்கிறார்கள் மக்கள். இந்த துடுப்பாட்ட நிகழ்வு குறித்து அரசியல் பற்றியும் கதைக்கிறார்கள் என்பதால் இங்கு அதனை சொல்லவேண்டியுள்ளது.

துடுபாட்டநிகழ்வு பற்றி ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால் பவ்வியமாக இப்படிச்செய்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் அப்படி செய்யாமமைக்கு காரணம் என்ன என்று ஒழுங்கமைப்பாளர்களை நேரடியாக கேட்டிருக்கலாம்.அதைவிட்டுவிட்டு காலாச்சாரம் சீரழிந்துவிட்டது என்று ஆர்பாட்டம்போடுவதால் பலன் எதுவும் இல்லை. அதன் மூலமாக எவரும் கலாச்சார காவலர்களாக மாறிவிடவும் முடியாது.

இறுதியாக சொல்வது என்னவென்றால் ஒவ்வொருவரும் தம்மால் இயன்றவரை தமிழையும் தமிழ் கலாச்சாரத்தினையும் இனத்தினையும் மீட்கும் வகையில் தூய மனதுடன் ஏதாவது செய்துகொண்டிருந்தால் நிச்சயம் நம்மினம் விடுதலைபெறும். கலாச்சாரம் பாதுகாக்கப்படும்.அதைவிடுத்து தனிப்பட்ட அரசியல் கோபதாபங்கள் விருப்புவெறுப்புக்களை எல்லா விடயங்களிலும் பிரயோகித்தால் நிச்சயம் நாம் பிளவுற்றுக்கொண்டே போவோம்!.எத்தனையோ நல்லவிசயங்கள் நடைபெற வேண்டியுள்ளது அதைவிடுத்து காசுக்கு வந்து ஆடிவிட்டுபோகும் அந்த நடனமாதுக்கள் பற்றி இப்படி ஆளாளுக்கு அடிபட்டுக்கொண்டிருந்தால் அவர்களுக்கான மவுசு கூடுமே தவிர தமிழ் கலாச்சார மவுசு கூடாது.அந்தப்பொண்ணுகள் இப்ப வேறு ஏதாவது நிகழவுக்கு முற்பணம் வாங்கியிருபாளவை இங்க நாங்க அவையப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறம். எனது கருத்துக்கள் துாய மனதுடன் அரசியல் செய்யும் அல்லது சேவைசெய்யும் எவரையேனும் குறித்துநிற்கவில்லை என்பதை மீண்டும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளலாம்.

நன்றி

எனது சட்டத்தில்.....

Posted by Thava சனி, 19 மே, 2012 0 comments


ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தனக்கென சிறப்பான கொள்கைகளும் இலட்சியங்களும் இருக்கும். அதேபோல தனித்திறமைகளும் இருக்கும். அவனுக்கென பிடித்தவைகள் பிடிக்காதவைகள் என பல விடயங்கள் இருக்கும். இருந்தபோதிலும் வாழ்க்கைச்சக்கரத்தில் விரும்பியோ விரும்பாமலோ அன்றி சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாகவோ இவற்றினின்றும் விட்டுக்கொடுக்க வேண்டிய தேவை ஏற்படலாம். எது எப்படியோ தனிமனிதனின் பலவிடயங்கள் மாற்றதற்குட்படாதவைகள் என்பதை யாவரும் அறிவோம்

எனக்கு கல்லுாரியில் கல்விகற்பித்த ஆசிரியர் எமக்கு அறிவுரை கூறும் வேளைகளில் சொல்வது எனக்கு ஞாபகம் வருகிறது ”இந்த விசயம் உன்னுடைய சட்டத்தில் சரியாகலாம் ஆனால் என்னுடைய சட்டத்தில் பிழையானது” என்று. அவருடைய கருத்துக்களை பகுத்தாய்ந்து பார்க்கும் பக்குவம் எனக்கு அன்று இருந்ததில்லை. இன்று இருக்கிறது அது முற்றிலும் உண்மையானது என்று எனக்கு இன்று புரிகிறது. குறித்த ஒரு விடயம் சம்பந்தமாக ஒவ்வொருவருடைய நோக்கும் வேறுபடுகின்றது சிலவேளைகளில் ஒத்துப்போகிறது.

இந்தவகையில் வாழ்கையின் அரைவாசிப்பகுதியை அண்மித்திருக்கும் என்னுடைய பார்வையில் ஒவ்வொரு விடயங்களும் எப்படிப்படுகின்றன அவற்றை நான் எதிர்கொள்ளும் விதத்தினையும் நேரமுள்ள நேரங்களில்(?) இங்கு பதிவுசெய்யலாம் என நினைக்கிறேன்.அவை என்னைவிட இளையவா்களுக்கும் ஏன் பெரியவர்களில் சிலருக்கும் தம்மை மீள சரிசெய்ய அல்லது சிந்திக்க வழிவகுக்கலாம்.அதேவேளை என்னை சுயபரிசீலணை செய்யவும் இது உதவக்கூடும்


இத்தனைக்கும் நான் ஒரு ஞானியோ யோகியோ முற்றுமுழுதான யோக்கியன் என்றோ கூறவிரும்பவில்லை. சில பல வி்டயங்களில் நான் (நான் எனும் ஆணவம்கூட என்னை விட்டு போகவில்லை பாருங்கள்) தவறுகள் தப்புக்கள் செய்திருக்கின்றேன். தண்டிக்கப்படிருக்கிறேன் பிராயச்சித்தம் செய்திருக்கின்றேன்(சமய சடங்கல்ல).அதற்காக வருந்தியிருக்கிறேன்.சிலவற்றுக்காக அலட்டிக்கொள்ளாமலும் இருந்திருக்கிறேன்.

என்னுடைய சட்டத்தில் எது சரியென்று படுகின்றதோ அதனை செய்துவிட தயங்கமாட்டேன். இன்னொருவருடைய அறிவுறுத்தல்களை முற்றுமுழுதாக நம்பிவிட நான் தயாராக இல்லை. அதேவேளை அவருடைய அறிவுத்தல் அல்லது தகவல் நுாற்றுக்கு நுாறு சரியென என்னால் உறுதிப்படுத்தப்படுமிடத்து என்னுடைய முனைப்பு பிழையென நான் கண்டுகொண்டால் நிச்சயம் என்னை சரிசெய்ய தவறுவதில்லை.

வாழ்வில் பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் பிழையான புரிந்துகொள்ளல் தான் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆயினும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை சாட்டாக சொல்லி இதற்கான பொறுப்பிலிருந்து பலரும் விலக நினைக்கிறார்கள். ஏன் தென்னிந்திய தொலைக்காட்சித்தொடர்களில் நுாறுவீதமானவை இந்த கருப்பொருளை மையமாககொண்டே நகர்த்தப்படுகின்றன. 

என்னைப்பொறுத்தவரையில் மற்றவர்களினுாடு கிடைக்கும் தகவல்கள் யாவும் முதலில் என்பார்வையில் பொய்யானவையாக அல்லது சந்தேகப்புள்ளி இடப்பட்டதாகவே இருக்கும் எனது அறிவிற்கு எட்டியவரையில் தேடுதல்கள் உறுதிப்படுத்தல்கள் போன்றசெயற்பாடுகளை மேற்கொள்வேன் அதில் தேறி வருவனவே உண்மையென கருதுகின்றேன்.

சிறுவயதில் இருந்தே எனக்கு துப்பறிதல் மற்றும் ஆய்வுசெய்தல் போன்றவற்றில் மிகுந்த விருப்பம் உண்டு.அப்படிச்சொன்னவுடன் என்னைப்பற்றி சிலா் ”இவன் சரியான சந்தேகப்பிராணியோ” என எண்ணக்கூடும். அவர்கள் நினைப்பது தவறு.அப்படி அவர்கள் நினைத்தால் எனக்கு அதைப்பற்றி கவலையும் இல்லை. காரணம் எனக்குத்தான் என்னைப்ற்றி நன்றாகத் தெரியுமே. நமது சந்தேகத்தினால் பிறரது மனம் புண்படாதவகையில் அது பாரதுாரமானதாக இருக்காது. 

நமது சந்தேகம் வெளிப்படுத்தப்படாமல் இருக்கவேண்டும். சந்தேகம் என்பது எப்போது வெளிப்படுத்தப்படுகின்றதோ அப்பொழுதே பிரச்சனை ஆரம்பமாகி விடுகிறது. சந்தேகம் இரண்டுவகையானது ஒன்று குறித்த தகவலை சந்தேகப்படுவது மற்றது மூலத்தினையே சந்தேகிப்பது.இரண்டாவது தான் பிரச்சனைளை உருவாக்கக்கூடியது.

ஒரு தம்பதியரிடையே தோன்றும் சந்தேகம் சம்பந்தமான சம்பவத்தினை நோக்குவோம் (நான் இப்பத்தியெழுதும்வரை திரமணமாகாதவன் என்பது குறிப்பிடத்தக்கது) . கணவன் வீடு திரும்புகின்ற நேரம் சிலகாலமாக வித்தியாசமானதாக இருக்கிறது. மனைவி அதனை கண்டும் காணாமல் இருப்பது அழகல்ல. மனைவி எப்படி அணுகலாம். என்ன வழியில ஏதும் பிரச்சனையோ? என்று கேட்காமல் ஏன் தாமதம் என கோபமாகவோ அதட்டலாகவோ கேட்பதன் மூலம் பதிலை சொல்வதற்கான ஏது நிலையினை இல்லாமல் செய்து விடக்கூடாது. 

அதேவேளை கணவனும் முதல்கேள்வி கேட்கப்படும்போது தடுமாற்றத்துடன் பதிலளிக்காமல் சிறு விடயமாக இருந்தால் நிதானமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதிலளிக்கணே்டும். அல்லது பெரிய விடயமாயின் ஓரளவுக்கேனும் விளங்கிக்கொள்ளகூடிய வகையில் சுருக்கமாக விளங்கப்படுத்தணே்டும் பின்னர் தெளிவான விளக்கம் வழங்கலாம்.

இப்படிச்சொன்னால் அப்படி ஆகிவிடுமோ என கற்பனைசெய்து ஒருபொய்யினை எடுத்து விட்டு அதனை காப்பாற்ற இன்னொரு பொய்யினை எடுத்து விட்டு இசகுபிசகாக மாட்டி முழிக்கக்கூடாது.அவை சந்தேகத்தினை வலுப்படுத்துமே தவிர நீக்காது. மேலும் மனைவியினைப்பொறுத்த வரையிலும் சற்று நிதானம் வேண்டும் ஆதாரமில்லாமல் கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கக்கூடாது. தீரவிசாரித்து உண்மையறிந்தபின்னா் நம்புதலை கடைப்பிடிக்கவேண்டும்

கூடியவரையில் நல்லமனிதா்களாக வாழப்பழகவேண்டும் ஒளிவுமறைவு இன்றி சகலவற்றையும் ஒப்புவிக்கவேண்டும். அநேக விடயங்களில் வெளிப்படையாக இருந்துவிடுதல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்காது.

சில விடயங்களை மறைக்கத்தான் வேண்டும் அவை எங்கே பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பதை குறித்த விடயம் தான் நிர்ணயிக்கும். நிச்சயம் அந்தரங்கமானதாக எவையாவது ஒவ்வொருவருக்கும் இருக்கும் இதையும் கொட்டித்தீர்த்து விட்டவர்கள் தன்னாலே கெட்டவா்களாகிறார்கள் அல்லது துரோகமிழைத்தவா்களாகிறா்கள்.. இங்கு அதற்கு உதாரணமாக அரசவிசுவாசம் சம்பந்தப்பட்ட தகவல்களினை குறிப்பிடலாம்.

எனது சட்டத்தில் அனைத்தையும் வெளிப்படையாக மேற்கொள்வதையே விரும்புகின்றேன். ஆயினும் இரகசியம் காக்க வேண்டியிருப்பின் அவை எந்நிலையிலும் என்னிடமிருந்து வெளியில் வராது.

(21-02-2011 யாழ் உதயன்பத்திரிகையின் 14ம் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த விளம்பரத்தினை பார்த்ததும் ஏற்பட்ட உந்துதலால் என்னால் அன்றிரவு வரையப்பட்ட கட்டுரை)

ஏமாற்றுவதற்குப் பல வழிகள். அதுபோல ஏமாறுவதற்கும் பல வழிகள் இருக்கின்றன. தகவல் தொழில்நுட்பம் நமக்குத் தந்து கொண்டிருக்கும் நன்மைகள் ஏராளம். அதே போல் அதனால் நமக்கு ஏற்படுகின்ற தீமைகளும் ஏராளம். எதனையும் பகுத்தறிந்து நல்லவற்றுக்காக பயன்படுத்த முனைவதே அறிவுள்ள மனிதனுக்கு அழகு.நாம் நீண்டதொரு போராட்டக்களத்திலிருந்து சற்று விலகி புதிய பாதையில் காலடி வைத்திருக்கின்றோம்.

இந்நிலையில் எமது எண்ணங்கள், செயற்பாடுகள் யாவும் எமது எதிர்காலம் வளமான வாழ்வு மகிழ்ச்சியாயிருத்தல் ஆகிய விடயங்களை நாடிச்செல்வது இயல்பே. இந்நிலையில் பல வேளைகளில் செய்ய முற்படும் விடயங்களது நன்மை, தீமைகள் அல்லது அதன் வெளியீட்டு விளைவின் இறுதி வடிவம் பற்றிய சரியான புரிதல் நம்மிடத்தில் ஏற்படுவதற்கு எமது சிற்றறிவு தடைபோட்டு விடுகிறது. அதனது விளைவுகள் தான் சமூக கலாசார சீரழிவுகள் மற்றும் பிழையான வழிமுறைகளில் செல்வதன் மூலமான உடல் உள சொத்து இழப்புக்கள் எனலாம்.

நம்மில் பலருக்கு கணினி, இன்ரநெற், கைத்தொலைபேசி, கமெரா இவையெல்லாம் கடவுளாகத் தெரிகின்றன. அதனைப் பயன்படுத்துபவர்களையும் அறிமுகப்படுத்துபவர்களையும் சிலவேளைகளில் கடவுளின் தூதர்களாகவும் கருதத் தலைப்படுகின்றோம். இங்கு தான் நாம் தவறு செய்து விடுகின்றோம். எந்தவொரு செயற்பாட்டினையும் செய்ய முன்னரும் அதனால் விளையப் போகின்ற நன்மைகளுக்கு அப்பால் விளையக் கூடிய தீமைகள் பற்றியும் ஓரளவுக்கேனும் தெரிந்து கொண்டு தான் களத்தில் இறங்க வேண்டும். உதாரணமாக வீதியில் வாகனம் செலுத்தத் தொடங்கும் போது விபத்து பற்றிய முன்னெச்சரிக்கை இன்றி இறங்கினால் விளைவு விபரீதமாகலாம்.

எதற்காக இந்த முன்னோட்டம் என்று நீங்கள் தலையினைப் பிய்த்துக் கொண்டிருப்பீர்கள். எல்லாம் காரணத்துக்காகத்தான் என்பதைக் கட்டுரை முடிவில் காண்பீர்கள்.வீட்டுக்கொரு தொலைக்காட்சிப் பெட்டி என்ற நிலை மருவி வீட்டுக்கொரு கணினி என்ற நிலையிருக்க வீட்டில் உங்கள் பிள்ளைகள் கணினி பயன்படுத்துகின்றார்கள் எனில் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருப்பது அவசியம். அவர்கள் என்ன காரியங்கள் கணினியில் செய்கின்றார்கள். என்ன வகையான கணினி விளையாட்டுக்களை கணினியில் தேர்வு செய்கின்றார்கள். இன்ரநெற்றில் எப்படியான இணையத்தளங்களைப் பார்வையிடுகின்றார்கள். என்ற விடயங்களை அவதானிக்க வேண்டும்.

உங்கள் பிள்ளைகள் கைத்தொலைபேசி வைத்திருக்கின்றார்களா? ஆம் எனில் அவர்களுடைய பாவனை எப்படி போகிறது. எவ்வாறான நபர்களுடன் அவர்கள் தொடர்புகளைப் பேணுகின்றார்கள். எவ்வகையான ஒளிப்படங்களை ஒலிப்பாடல்களினை உபயோகிக்கின்றனர். பரிமாறுகின்றனர். எவ்வகையான குறுஞ்செய்திகளைப் பரிமாறுகின்றனர். என்ற விடயங்களை ஓரளவுக்கேனும் தெரிந்து கொள்ள வேண்டும்.நமது அன்றாட நடவடிக்கைகளின் போது எமக்கு அருகில் நிற்பவர்கள், நாம் வேலை செய்யும் இடம், செல்லும் இடங்கள், பொது இடங்கள், பொது கழிப்பறைகள் போன்றவற்றில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். கடவுள் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார் இல்லையா? அப்படியாயின் நாம் கடவுளாக ( ? ) நினைக்கும் இந்தத் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், இங்கும் ஒளிந்திருக்கலாம் இல்லையா?

பக்கத்தில் நிற்கும் போது வீடீயோ வசதியுள்ள கைத்தொலைபேசியின் உதவியுடன் எந்த நிலையிலும் எந்தக் கோணத்திலும் நீங்கள் படம் பிடிக்கப்படலாம். பின்னர் அவை இணையத்தளங்களில் பலரின் கண்களுக்கு விருந்தாகலாம். குறிப்பாகப் பெண்கள் இது விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். அதே போல் அந்தரங்கமான விடயங்களை மிகவும் நெருங்கியவர்களிடமின்றி வேறு எவரிடமும் ஒப்புவிக்கக் கூடாது. ஒருவருக்கும் சொல்லக்கூடாது. பரிமாறக்கூடாது என்று வாக்குறுதி வாங்கப்பட்டு சொல்லப்பட்டவைகளும் பரிமாறப்பட்டவைகளும் தான் இன்று இணையத்தளங்களில் பரிமாறப்பட்டுக்கிடக்கின்றன. மற்றவர்களிடம் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றின் காரணமாக பலரின் உயிர்கள் கூட காவு கொள்ளப்பட்டிருக்கின்றன.

இன்றைய உலகில் எதுவுமே இரகசியமில்லை. என்ற நிலையினைத் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் ஏற்படுத்தி விட்டன என்றால் அது மிகையாகாது. எனவே எமது பாதுகாப்புக்கான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டியது நமது கடமையாகும். ஒரு அரசியல் பிரமுகர் குறித்த இடத்திற்கு வருகை தருவதற்கு முன்னர் ஒரு பாதுகாப்பு அதிகாரி எவ்வாறு இடத்தினது பாதுகாப்பினை உறுதிப்படுத்துகின்றாரோ அதனையொத்த ஏற்பாட்டினை ஒவ்வொரு தனிநபரும் செய்ய வேண்டிய நிலை தற்போது எழுந்திருக்கின்றது.

இலங்கையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படாவிட்டாலும் நாம் ஒழுங்கையில் சலம் கழிப்பதைக் கூட படம் பிடித்து செய்மதி ஊடாக இணையத்தளங்களில் காட்டிவிடக்கூடிய வசதியை மிகப்பெரிய இணைய நிறுவனமான கூகிள் செய்து விட்டது. இது இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டால் ஒழுங்கையில் குப்பை கொட்டியவர்கள் யார் என்பதை பொலீஸார் இன்ரநெற்றில் கண்டுபிடித்து விடுவார்கள். இது நடைமுறைக்கு வரத்தான் போகிறது. இச்செய்தியை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

இணையத்தளங்களிலும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் தமது சொந்த விபரங்களைப் பகிர்ந்து கொள்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் இதில் மிக மிக மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். நீங்கள் எந்தக் கணத்திலும் ஏமாற்றப்படலாம்.

இதற்கு சான்றுகள் ஒன்று இரண்டல்ல பல்லாயிரக்கணக்கில் உள்ளன.சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் பல குற்றங்களுக்கு வழிவகுத்து விடுகின்றன. சம்பவம் சம்பவித்த பின்பு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர்களும் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தியவர்களும் இணைந்தே பொறுப்புக் கூற வேண்டும். பகுத்தறிவுடன் நாம் செல்லும் இடங்களிலும் வாழும் இடங்களிலும் செயற்பட வேண்டும். எல்லாம் முடிந்த பின் அழுவதில் ஆகப்போவது ஒன்றுமில்லை. தகவல் தொழில்நுட்பம் நன்மை செய்வதற்கு எப்படி மிகக்குறுகியளவு நேரத்தை எடுத்துக் கொள்கின்றதோ, அதேபோல தீமை செய்வதற்கும் எடுத்துக்கொள்கின்றது என்பதை உணர வேண்டும்.


மின்னஞ்சல் பாவனையின் போது மிகவும் கவனமாயிருக்க வேண்டும். பலருக்கு புதிதாக ஒரு மின்னஞ்சல் வந்தால் போதும் எல்லையில்லாத மகிழ்ச்சி. அது யாரிடமிருந்து வந்தது? உள்ளடக்கம் என்ன? நோக்கம் என்ன? என்றெல்லாம் சிந்திக்க மாட்டார்கள். ஏதோ இந்த உலகில் எல்லாரையும் விடுத்து தன் மீது மட்டும் அக்கறை கொண்டு எழுதப்பட்ட மின்னஞ்சலாகக் கருதி பதிலனுப்பத் துடிக்கிறார்கள். நாங்கள் ஏதும் இடையில் சொல்லப்போனால் ஏதோ பராக் ஒபாமாவுக்கும் தங்களுக்கும் இடையிலான தொடர்பைத் தடுப்பதாகக் கோபம் கொள்வார்கள்.

இப்படியானவர்களுக்கென்றே அமெரிக்கன் விசாக்களும் இங்கிலாந்து விசாக்களும் ஏன் வாங்கப்படாத அதிஷ்டலாபசீட்டுகளுக்கான பரிசுகளும் மின்னஞ்சல்களும் தேடிவருவது இன்னொரு இரகசியம் எத்தனை தடவை சொன்னாலும் நம் பேச்சை நம்ப மறுக்கிறார்கள். இவருக்கு நான் அமெரிக்கா போறது விருப்பமில்லை. அல்லது பொறாமை என்றோ நான் கோடீஸ்வரனாகி விடுவது இவருக்கு எரிச்சல் என்று இவர்கள் உள்ளுக்குள் புழுங்குவதை நாம் அறிவோம்.

அன்று நண்பர் ஒருவருக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. விமான விபத்து ஒன்றில் குடும்பத்துடன் காலியான கோடீஸ்வரர் ஒருவரின் வங்கிக்கணக்கில் இருந்து உங்களை வாரிசாக பாவனை செய்து பணத்தினை எடுக்கும் வசதி வாய்த்திருக்கிறது. அதை எடுக்க தாங்கள் உதவலாம். அதற்குக் கைமாறாக அரைவாசிப்பணத்தை தமக்குத் தருமாறும், இந்த செயற்பாடுகளுக்காக கொஞ்ச பணம் செலவாகும் எனவும் அதனைத் தற்போது அனுப்பி வைக்குமாறும் அந்த மின்னஞ்சல் கூறியது. நண்பன் விவரமானவனாயிருந்ததால் “நீங்கள் எனக்குச் சேரும் பணத்தில் அதைக் கழித்து விட்டு மிகுதியை அனுப்பி வையுங்கள்”. என எழுதிய கடிதத்தக்கு இதுவரை பதில் இல்லையாம்.

இவ்வாறே தடுமாற்றமுள்ள இளையவர்களைத் தேடியும் பல மின்னஞ்சல்கள் வரும். “நான் மிகுந்த மோகத்தில் உள்ளேன் ஆர்வமிருந்தால் அஞ்சலிடவும்” என்றிருக்கும். இவர் அனுப்பினால் கடைசியில் காசை இழக்கும் நிலை வரை கொண்டு சென்று விடுவார்கள். இதே போல இந்த மின்னஞ்சலை இன்னும் 10 பேருக்கு அனுப்பினால் உங்களுக்கு இவ்வளவு தொகை கிடைக்கும் என ஒருவகை மின்னஞ்சல் வரும். இவர்களும் தங்கள் நண்பர்களுக்கும் அனுப்பியவருக்கும் அதைத் திருப்பி அனுப்ப அனுப்பிய மின்னஞ்சல் திருடருக்கு 10 மின்னஞ்சல் முகவரிகளை வழங்கிய வள்ளலாக நமது ஆள் இருப்பார். இதுவெல்லாம் இணையத்தில் நடக்கிற கூத்து.

இப்படி நாளாந்தம் நம் கண் முன்னால் கூட நிறையச் சம்பவங்கள் நடந்தேறிய வண்ணம் உள்ளதைப் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. கற்பு தொடங்கி காசு வரை காணாமல் போகின்ற பெரும் கைங்கரியங்களுக்கு நம்மில் பலர் நாமே காரணமாகி விடுகின்றோம். ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். கல்வியாகிலும் காசாகிலும் கடின உழைப்பின்றி அடைய முடியாது. உழைப்பினூடாகக் கிடைப்பதே நிலைக்கும். இதைத்தான் பழைய முதுமொழி ஒன்று “நனையாமல் நண்டு பிடிக்க முடியாது” என கூறுகிறது.

ஒரு வருடத்தில் ஓ.எல் உடன் டிகிறி தருகிறோம். இரண்டு வருடத்தில் இங்கிலீசு இல்லாமல் இங்கிலாந்தில் டிகிறி என்று விளம்பரப்படுத்துவார்கள். இந்தப் பசப்பு வார்த்தைகளை நம்பி எமது எதிர்காலத்தினை ஒப்படைக்கலாமா? அதே போல கற்கைநெறி முடிவில் கட்டாயம் வேலை எனக் கூறியதற்காக காசைக் கட்டிவிட்டு பின்பு கல்வி நிலையத்தினைக் காணவில்லையென முறைப்படுவதில் என்ன நியாயம்? இவர்களைப் பார்த்துப் பரிதாபப்படலாமே தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. ஒரு கிழமையில் ஆங்கிலம் பேசலாம் ஓடிவாங்கோ என ஒரு விளம்பரம் போட்டால் ஓடிப்போக ஒரு கூட்டம் எம்மிடையெ இருக்குமென்றால் நாம் எப்படி முன்னேற முடியும்?

வீட்டில் இருந்தபடி இணையத்தினூடாக ஒன்றுமே செய்யாமல் ஒரு தொகை உழைக்கலாம்! இதை நான் சொல்லவில்லை சமீபத்தைய யாழ் உதயன் பத்திரிகை விளம்பரம் ஒன்று சொன்னது. இணையத்தில் இத்தனை நாள் குப்பை கொட்டிய நமக்குத் தெரியாத இரகசியத்தை இவர்கள் கண்டு பிடித்து சொல்லப்போகிறார்களாம்.இப்படி யோசித்தால் இலங்கையின் தனிநபர் வருமானம் இந்த ஆண்டே அதிகரித்து விடுமே. புpறதெற்கு மகிந்த சிந்தனை?. மத்தியவங்கியில் இருப்பவர்களுக்கு இது தெரியாமல் போய்விட்டதோ?.

இதேபோல் விளம்பரம்போட்ட ஒரு இந்திய குழுதான் தெகிவளையில் பலகோடிகளைச் சுருட்டிக் கொண்டு கொழும்பிலிருந்த நமது ஆட்களுக்கு நாமம் போட்டது.இன்னும் அவர்களை பிடிக்க முடியவில்லை. இதில் பாதிக்கப்பட்டவர்களில் நமது நண்பரும் ஒருவர். அவர் மட்டுமல்ல அவரது நண்பரும் பணத்தை இழந்தார். என்னையும் கேட்ட பொழுது நான் மறுத்ததனால் தப்பித்துக்கொண்டேன். யாழ்ப்பாணத்தில் இல்லத்தரசிகள் பாவம் என்று நினைத்து அவர்களது மாதாந்த வருமானத்தினை கூட்டுவதற்காக ஒரு கூட்டம் சேவை செய்யப் புறப்பட்டிருக்கிறார்கள் போலும்.நாங்கள் தான் அவதானமாயிருக்கவேண்டும்

இப்போது சிலர் எங்கள் பிழைப்பில் ( ? ) அல்லது உழைப்பில்(?) மண்போட நினைக்கின்றனர். நாங்கள் சும்மா இருந்து உழைக்கிறது இவருக்குப் பொறாமை என்று புழுங்குவதும் எனக்கு உணர முடிகின்றது. பரவாயில்லை.நீங்கள் இனியும் தயார் எனில் நூறுபேர் சேர்ந்து சென்று “இணையத்தில் இருந்து கொண்டே செலவின்றி நுங்கு பருகலாம் வாருங்கள். வகுப்புக்குக் கட்டுங்கள் நான்காயிரம்” என கூறுபவர்களிடம் பணம் கொடுத்தால் மாதாந்தம் நாற்பதாயிரம் உழைக்கிறீர்களோ இல்லையோ தெரியாது, ஆனால் அவர்கள் ஒரே நாளில் நான்கு லட்சம் உழைப்பது உறுதி!



Sharing 3G Dongle Internet Connection

Posted by Thava சனி, 25 டிசம்பர், 2010 0 comments

# If you want to Share your Connection via Wi-Fi then you should have Wi-fi enabled computers.Please On Wi-Fi

1) First Insert your Dongle into one computer

2)

Allowing Dongle Connection to Share

a)(If Windows 7 ) Go to by Clicking on Control panel-----> Network and Sharing Center-->Change Adapter Setting

a)(If Windows xp ) Go to by Clicking on Control panel-----> Network Connection-->View Connections

b)Select on Your Dongle Connection name and Right Click On itClick on "Sharing" Tap

d)Tick only in "Allow other network users to connect through this computer's Internet connection" and tick off others. Also select Home Network which you would like to use (LAN/Wireless)

e)Click Ok(It will ask to confirm .you click on yes)

3)Now Connect Internet using your Dongle

4)Download the "Connectify" Software from

http://download.cnet.com/Connectify/3000-18508_4-75024171.html?part=dl-10061477&subj=dl&tag=button

5)Install the software

6)Configer it by Clicking next

a)Give a Network Name which you want then Click next eg:thavanet

b)Give a good password then Click next eg: abcd8765

c)Select Your Shared Dongle Connection from List then Click next

d)Click Finish

Configer Conectify

Giving Hotspot Name

Selecting Shared Connection

7)A Small Window will Appear in Bottom Corner which will show the status and available other computers

Viewing Hotspot Information

8)In other Computer You Select your Network name from the list by clicking Wifi Icon eg: thavanet

9)Click on Connect.It will ask the password then give it which you already gave

10) Now You can Access the Internet

I will write it in tamil later

எதிர்காலம் நம் கையில்

Posted by Thava திங்கள், 20 செப்டம்பர், 2010 0 comments

- பத்ரி சேசாத்திரி . உதயன் நாளிதழ் 19-9-2010 -
(யாழ்பாணத்தில் நடைபெறும் கல்விகண்காட்சி சம்பந்தமான விளம்பர விவரணத்தில் இருந்து)

(-என்னைக் கவர்ந்ததால் இங்கே தருகிறேன் நான் 100 வீதம் நம்புகிறேன் பின்பற்றுகிறேன் - தவா)

எதிர்காலம் நம் கையில்
வளர்ந்த மேலைநாடுகளைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். எப்படி இந்த நாடுகளில் பெரும்பான்மை மக்களுக்கு வேண்டிய எல்லாம் கிடைக்கின்றன. சாலைகள் நன்றாகப் போடப்பட்டு வண்டிகள் வழுக்கிச் செல்கின்றன. வீடுகள் பெரும்பாலும் பார்க்க அழகாக இருக்கின்றன. சிறு பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் வேண்டிய உணவு கிடைக்கின்றது. அவர்கள் நன்கு உண்டு, நன்கு வளர்ந்து மகிழ்ச்சியில் ஆடிப்பாடுகின்றனர். வீடுகளில் குழாயைத் திருகினால் நீர் கொட்டுகிறது.

பள்ளிக்கூடங்களில் அனைவருக்கும் கல்வி கிடைக்கிறது. பொதுச்சுகாதார வசதிகள் எங்கும் கிடைக்கின்றன. சிறுசிறு ஊர்களிலும் மருத்துவமனைகள் உள்ளன. பலநாடுகளில் அரசு மருத்துவ வசதிகளைத் தருகிறது. பிற நாடுகளில் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் மருத்துவச் செலவுகளைச் சரிக்கட்ட முடிகிறது.

மனமகிழ்ச்சிக்கு என்று லட்சம் விஷயங்கள் உள்ளன. கொண்டாட்டங்களில் மக்கள் கூட்டமாகக் கலந்து கொள்கின்றனர். தொலைக்காட்சி பார்க்கின்றனர், புத்தகங்களை படிக்கின்றனர், இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.ஆனால் நம் நாடுகளில் நிலைமை அப்படியில்லையே? ஏழ்மை உள்ளது, படிப்பறிவின்மை உள்ளது. உணவுக்குத் திட்டாட்டம் உள்ளது, நாட்டின் உள்கட்டமைப்புகளில் எக்கச்சக்க குறைபாடுகள் உள்ளன. இன்னும் எண்ணற்ற பிரச்சனைகள். அடிப்படையில் எல்லாமே பணம் சார்ந்த பிரச்சனைகள் தான்.


இந்தப்பிரச்சனைகளைப் பற்றி ஆராய விருப்பமில்லாத பலரும், பேசாமல், நாம் வசதி படைத்த இந்த மேலை நாடுகளுக்குச் சென்றுவிட்டால் என்ன என்று கூட யோசிக்கிறார்கள். நம் உறவினர்கள் பலரும் பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, அமெரிக்கா போன்ற இடங்களில் இருப்பதை நாம் அறிவோம்.

ஆனால் இது ஒன்று தான் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வா? அப்படி எத்தனை பேர் தான் வேறு ஒரு நாட்டில் போய் வசித்துவிடமுடியும்? அப்படிப் போகமுடியாதவர்கள் காலாகாலத்துக்கும் ஏழ்மையில் சிக்கி மோசமான உள் கட்டமைப்புகளுடன் போராடிக் கொண்டே இருக்க வேண்டுமா? முடிவான தெளிவான தீர்வு நம் நாட்டையே வளப்படுத்துவது தான் அல்லவா? அப்படித்தான் அந்த மேலைநாட்டைச் சேர்ந்தவர்களும் ஒரு காலத்தில் செய்துள்ளனர். அவர்கள் நாடும் ஏழ்மையில் உள்நாட்டுச் சிக்கல்களில் மோசமான உள்கட்டமைப்புகளில் எழன்ற ஒன்று தானே?
அவர்களால் தமது நாட்டை மீட்டெடுக்க முடிந்த போது, நம்மால் முடியாதா? முடியும் என்றால் எப்படி முடியும்?


என் கருத்தில் இந்த முடியும் என்ற மனப்பான்மையை நமக்குத் தருவது புத்தகங்களே. வரலாற்றுப் புத்தகங்களைப் படிக்கும் போது தான் பிறர் பட்டுள்ள துயரங்களும் அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டுள்ளனர். என்பதும் நமக்குத் தெரிகிறது.


அறிவியல், தொழில்நுட்பப் புத்தகங்களைப் படிக்கும் போது தான், நம் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு அறிவியல், தொழில்நுட்பம் கொண்டு தீர்வுகளை எப்படி உருவாக்குவது என்று நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. நமக்குத் தேவையான தன்னம்பிக்கையைத் தலைமைப் பண்பை, விடாமுயற்சியை, பொறுமையை, வீரத்தை மன உரத்தை பல தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளிலிருந்தே தெரிந்து கொள்கிறோம்.

நமக்குத் தேவையான நற்பண்புகளை, நற்செயல்களை, நல் அறத்தை பல புத்தகங்களிலிருந்து தான் தெரிந்து கொள்கின்றோம். உலக மக்களை, அவர்களது கலாசாரத்தை, அவர்களது சாதனைகளை, அவர்களது போராட்டங்களை, அவர்களது உயிர்த்துடிப்பை அவர்களது இலக்கியப் புத்தகங்கள் தான் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறது.

நம் தமிழில், நம் மொழியில் இது போன்ற புத்தகங்களைக் கொண்டு வருவது தான் கிழக்குப் பதிப்பகத்தின் நோக்கம். அறிவார்ந்த நூல்களை அருமையான மொழிபெயர்ப்புகளை, உலகத்தரம் வாய்ந்த புத்தகங்களை கிழக்குப் பதிப்பகம் வாயிலாக நாங்கள் கொண்டு வருகிறோம். ப்ராடிஜி புக்ஸ் என்ற பதிப்பின் மூலம் இதே போன்ற புத்தகங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கிறோம். பள்ளி மாணவர்கள் தான் நாளைய உலகின் நம்பிக்கை என்பதை நாங்கள் தீர்மானமாக நம்புகின்றோம். நம் இலட்சியத்துக்கும் நம் இன்றைய நிதர்சனத்துக்கும் இடையில் பெரும் இடைவெளி இருப்பது உண்மையே. ஆனால் இந்த உண்மையை யார் யார் நிரப்பப் போகிறார்கள்? நம் இளைய சமுதாயம் தான். அவர்களது நம்பிக்கைக்கு உரம் போட, அவர்களது அடங்காத ஆர்வத்துக்கு வழிகாட்ட எங்கள் புத்தகங்களால் முடிந்தது என்றால், நாங்கள் உள்ளார மகிழ்வோம். எங்கள் நோக்கம் நிறைவேறிவிட்டது என்று சந்தோசப்படுவோம்.
உலகிலுள்ள முன்னேறிய நாடுகள் அனைத்துமே அறிவு வளர்ச்சி மூலமாகவே முன்னேறின. படிப்பறிவு தர பள்ளிக்கூடங்கள், அந்தப் பள்ளிக்கூடங்களில் எண்ணற்ற புத்தகங்கள், ஊரெங்கும் நூலகம், அந்த நூலகம் முழுக்க நிறைந்திருக்கும் அறிவுக் கருவூலங்கள், இவையே அந்த நாடுகளின் முன்னேற்றத்திற்குக் காரணங்கள். அதே காரணங்களை நாங்கள் அப்படியே நகல் எடுத்தாலே போதும். நம் நாட்டையும் உயர்த்திவிடலாம்.

இன்று தமிழ் செய்தி தளமொன்றில் யாழ்பாணத்தில் நடந்த ஒரு சமூகசீர்கேட்டு சம்பவம் தொடர்பாக காணொளியுடன் கூடிய செய்தி வெளிடப்பட்டிருக்கிறது

பேட்டி எடுப்பவரின் வினாக்களும் பணிப்புக்களும் விரசமாக உள்ளது. பெண்ணின் எதிர்காலத்துடன் விளையாடுவது நல்லதல்ல. ஒரு ஊடகவியலாளன் கேட்கக்கூடாதவற்றினை கேட்பதாக படுகிறது. வீடியோ நீக்கப்படவேண்டும்.பெண்ணிற்கு பாதுகாப்பு தருவதற்கே பேட்டி எடுப்பதாக கூறுபவர் எந்தவகையிலான பாதுகாப்பினை அளித்திருக்கிறார்? அதை

இணையத்தில் போட்டு பாதுகாப்பு கொடுத்திருக்கிறாரா? குற்றவாளியை பயந்து இனம்காட்டாமல் பாதுகா்ப்புக்கொடுத்திருக்கிறாரா? பெண்கள் என்றால் எல்லோரும் இயலாதவர்களாக கருதி விட்டார்களா. உண்மைான ஊடகவியலாளன் குற்றவாளியையும் வீடியொவில் பேட்டி எடுத்திருப்பான் அதை விடுத்து அபலைப்பெண்னை அச்சுறுத்தி வீடியோ எடுப்பது ஊடகவியலாளர்களுக்கே அவமானம்

யாழ்பாணத்து பெண்கள் தங்கள் வாழ்க்கையினை பணயம் வைத்து ஒரு குற்றவாளியை இப்படி பிடிக்க ஒருபோதும் துணியமாட்டார்கள் என்பது எனது வாதம். அவர்கள் கோழைகள் அல்லர் ஆனால் அதற்கும் அவர்களிட்ம் ஒரு எல்லை உண்டு.சரி அந்தளவுக்கு பணயம் வைத்திருந்தால் நிச்சயம் பாராட்டுவேன் அதனை பொலிசுடன் இணைந்து செய்திருக்கலாம்

செய்தியை குற்றவாளி குறித்து மட்டும் மட்டுப்படுத்திருக்கலாம் ஆனால் அப்படிச்செய்யாமல் பெண்ணினது நடத்தை தற்போது கேள்விக்குறியாக்கப்பட்டு விட்டிருப்பது நண்பர்கள் அவளுக்கு செய்த துரோகம் ஆகும்

விடியோவில் சந்தேகம் இருக்கிறது குரலும் அசைவும் ஒத்து வரவில்லை.இப் பெண் இயலாமையினால் அல்லது பலவந்தமாக துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டால் தப்பிட பல வழிகள் இருந்திருக்கின்றன ஆனால் குளிக்கும் வரை சென்றிருப்பது சந்தேகத்தினை வலுப்படுத்துகிறது

கொஞ்சம் சிந்தித்தால் செய்தி குழப்பமாக இருக்கிறது.எல்லாம் அந்த கடவுளுக்குதான் வெளிச்சம்

மற்றப்படி விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளி அல்லது குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டு்ம் இவ்வாறான சமூக சீ்ர்கேடுகள் ஒழிக்கப்படவேண்டும். அதனை ஊடகபிரபல்யத்திற்கு பாவிப்பது கூடாது பெண்போராளிகளின் ஒளிப்படம் ஒன்று முன்பு வெளிடப்பட்டவேளை சர்ச்சசையினை கிளப்பியிருந்தமை நாமறிந்ததே.