வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

வெருண்டவன் கண்ணுக்கு ...

Posted by Thava வெள்ளி, 5 டிசம்பர், 2008 0 comments

"நான்  இதை நம்பத்தயாராக இல்லை. சுனாமி வந்த பின்பு தான் நமக்கு சுனாமி என்றால் என்ன என்பதே தெரியவந்தது. அதன் பிறகு ஒவ்வொருமாதமும் சுனாமி வதந்திகள் அது போலத்தான் நிசா சூறாவளி பீதிகளும் வெருண்டவன் கண்ணுக்கு அருண்டதெல்லாம்  பேய் என்று சொல்வார்கள் இதுபோலத்தான் இதுவும் இப்படி எச்சரிக்கை தருவதாக இருந்தால் நிசா வரமுதலே சொல்லியிருக்கலாமே!"

இப்படி எனது கருத்தை ஃபேஸ்புக்கில் நண்பா் ஒருவரின் சூறாவளி எதிர்வு கூறலுக்கு பதிலாக வழங்கியிருக்கிறேன். இந்தக்கருத்தை ஏற்கனவே பதிவு செய்ய எண்ணினேன் இப்போது பதிகிறேன் நான் பொதுவாக எதிர்வு கூறல்களை மறுக்கின்றேன் இந்த உலகம் அழியப்போகிறது என்று பலவாறான எதிர்வு கூறல்கள் கூறப்பட்டன. இது வரை எதுவும் நடைபெறவில்லை. நாம் வாழ்வது அறிவியல் முன்னேற்றம் அடைந்த உலகில் என்பதை மனதில் கொள்ளவேண்டும் நாம் எதிர்பாராமல் பல நடந்தேறிவிட்டன இவற்றை யாரும் எதிர்வு கூறினார்களா அதற்கான தடுப்பு ஏதும் செய்யமுடிந்ததா? ஆயினும் சில விடயங்களை நமது அறிவியல் சாதித்திருக்கிறது எம்முலகை மோத வந்த வால் நட்சத்திரத்தை விண்ணிலேயே கபளீகரம் செய்த அமரிக்க ஏவுகணை தாக்குதலை இதற்கு உதாரணமாக கூறலாம்.

அணுகுண்டுத்தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத்தான் தெரியும் அதன் தாக்கம் அவர்களிடம் போய் இன்னொருமறை உங்கள் மீது அணுகுண்டு போடப்போகிறார்கள் என்று சொன்னால் எப்படி இருக்கும்? நிச்சயம் இரண்டு மடங்கு கலக்கமடைவார்கள் தான்.இது போலத்தான் சாதாரணமாக சூறாவளி மழை பற்றி அன்றாடம் விடுக்கப்படும் எச்சரிக்கைகள் யாவும் சுனாமி புகம்பம் நிசா வகை சூறாவளிக்கான எதிர்வு கூறல்களாக மாறிவிடுகின்றன. முன்பு சாதாரணமாக விடுக்கப்படுகின்ற எச்சரிக்கைகளை அசட்டை செய்வதில்லை இப்போது சிறு மழைக்கான எச்சரிக்கைகளும் பருவமழை பருவக்காற்றுக்களும் சுனாமிக்கான எதிர்வு கூறல்களாகிவிடுகின்றன.

நமது ஆசியநாடுகளில் சமய நம்பிக்கை சம்பிரதாயங்களில் மக்கள் கூடிய நம்பிக்கை  வைப்பதை பலருடய வாய்க்கரிசியாகிவிடுகிறது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் பகுத்தறிந்து உண்மையான தகவல்களை பரப்புரை செய்யவேண்டும் இதுவிடயத்தில் அதிகாரிகளும் ஊடகங்களும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் தமது பெயா்கள் ஊடகங்களில் அடிபடவேண்டும் என்பதற்காக உணா்வு புர்வ தகவல்களை வெளியிடக்கூடாது சரியான விளக்கத்தினை வழங்கவேண்டும்.நவம்பர் 26 இல் விசியது 80கிமீ வேக சூறாவளி ஈனால் இப்போது எதிர்பார்க்கப்படுவது 50-60 மட்டுமே URL: http://www.meteo.slt.lk

யாழ்ப்பாணத்தில் யாரோ சொல்லிவிட்டார்கள் வரும் 12ம் திகதி மீண்டும் வெள்ளப்பெருக்கு வரும் என்று அவ்வளவுதான் பலர் அழுக்கு நீரால் நிரம்பிய தமது கிணறுகளை இறைக்காமல் காத்திருக்கிறரா்கள் நம்ம சனம் எல்லாத்துக்கும் கணக்கு பார்க்கிறதுகள் என்பது யாவரும் அறிந்ததே. (எமது கிணறு வெள்ளநீர் புகுந்த காரணத்தினால் 4 இயந்திரம் கொண்டு இறைக்க 4000 ரூபா செலவானது)

எனவே நான்சொல்வது என்னவென்றால் சும்மாதானும் பிழையான செய்திகள் பரவுவதற்கு ஊடகமாக இருக்கக்கூடாது என்பததான் இது அந்த நண்பருக்கு எதிரான கருத்தல்ல நண்பர் ஊடகத்ததில் படித்த செய்தியினைத்தான் சொல்லியிருந்தார். ஊடகம் செய்தியை வெளியிட்ட விதம் தான் பிழையாக இருக்கக்கூடும் அல்லது மக்களின் பீதியின் வெளிப்பாடாக இருக்கலாம்..

இலங்கை மக்களே நீங்கள் வானிலை எதிர்வு கூறல் சம்பந்தமான தகவல்களை அரசாங்க வானிலை அவதானிப்பு நிலைய இணையத்தளத்தில் பார்வையிடலாம் URL: http://www.meteo.slt.lk

சூறாவளிக்குபின்-01

Posted by Thava செவ்வாய், 2 டிசம்பர், 2008 0 comments

மழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில் நீயோ இங்கு வருவதில்லை...

என்ற பாடல் வரிகள் தான் எனக்கு இதை எழுத முனையும் போது தோன்றுகின்றது. ஆம் நவம்பர் 26 அதிகாலை எனது இளைய தங்கை விழித்து அண்ணா! நிலத்தை கொஞ்சம் தொட்டுப்பார் என கூற சலிப்புடன் நித்திரை கலக்கத்துடன் கட்டிலிருந்தவாறே கையினை நிலத்தில் விட்டேன் அதிர்ந்து விட்டேன் அறைக்குள் வெள்ளம். சுதாரித்து எழுந்து காலை ஊன்றினேன் தட்டுத்தடுமாறி வெளியே வந்து பார்த்தேன் அந்தோ பரிதாபம் வீடெல்லாம் வெள்ளம். வீட்டுக்குள் வெள்ளம் என்று எழுத்துக்களில் கேள்விப்பட்டிருக்கிறேன் படங்களில் பார்த்திருக்கின்றேன் .ஆனால் நேரில் இதுவரை உணர்ந்ததில்லை.

படிக்குமேல வெள்ளம் இனி சாண் என்ன முழம் என்ன? வீடே பரபரப்பானது ஓடும் பொருட்கள் மிதக்கும்பொருட்கள் அமிழ்ந்தபொருட்கள் நாய்க்குட்டி என தேடி எடுத்து மேலே வைத்தோம் வெளியில் வந்து பார்த்தால் கேற் அரைவாசி நீருக்குள் அமிழ்ந்திருந்ததது. துாரத்தே மனோன்மணி அம்மன் கோயில் வரை ஒரே வெள்ளக்காடு கிணறும் அதற்குள் சங்கமம். எமது வீடு நல்லுார் முருகன் கோயில் பின் வீதியில்  வடக்கு வீதி வந்து ஏறும் மூலையில் துர்க்காமணிமண்டபத்திற்கு வலது புறமாக மனோன்மணி அம்மன் கோயிலை பார்த்தவண்ணம் இருக்கிறது. ஆம் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது விட்டுக்குள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களின் சில்லுகள் கால்வாசிக்கு நீருக்குள் அமிழ்ந்திருந்தன. குசினியில் புனை கதிரையில் ஏறி இருந்தது. மலசலக்கூட குழிக்குள் நீர் நிரம்பியிருந்தது.

இதற்கு முதல் இரண்டுநாட்களாக விடாத அடைமழை பெய்தவண்ணம் இருந்தது. பேஸ்புக்கில் யாழில் அடைமழை கொட்டுது என எழுதிவிட்டிருந்தேன் விட்டு விட்டு வருகின்ற மின்சாரமும் விட்டு விட்டு வந்தது.வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் சென்றுவருகையில் இரண்டு நாட்களும் உடை நனைந்தே போயிருந்தது வேலையும் டல்லாகவே போனது. எடுக்க இருந்த வகுப்புக்கள் யாவும் இரத்துச்செய்திருந்தேன். இணையவசதி கூட மட்டுப்படுத்தப்பட்டிருந்தது காரணம் ரெலிக்கொம் இனது பாரிவர்த்தனை கோபுரத்தில் ஏற்பட்ட கோளாறுகாரணமாக தொலைபேசி இணைப்பு வெளிச்செல்கை பாதிக்கப்பட்டிருந்தது  சீடிஎம்ஏ பீ கார்ட் இணைப்பில் இருந்துதான் மெதுவான இணைய வசதியை பெறக்கூடியதாக இருந்தது. எது எப்படியோ டயலொக் இணைப்பு மட்டும் இருந்தது.

யாழ் மிட்டவுண் றோட்டரகட் கழகத்தினரின் அமெரிக்கன் கிறீன்கார்ட் விசாவுக்கான விண்ணப்பங்களை இவ்வளவுகாலமும் வேலைப்பழு காரணமாக வைத்திருந்து விட்டு கடந்த இரண்டுநாட்களாகத்தான் அனுப்பத்தொடங்கியிருந்தேன் மழைக்குளிரையும் பொருட்படுத்தாமல் மெல்லமெல்ல அனுப்பிக்கொண்டிருந்தேன்..இதுக்குள்ள இளையதங்கைக்கு கொழும்பிலுருந்து ஈரோ விமான பொதி சேவை(சேவையா இது?) ஊடாக தம்பி அனுப்பிய புத்தகங்களை வந்திட்டுதா என நாளுக்கு இரண்டுதரம்  சென்று விசாரித்து விட்டு வரவேண்டிய துர்ப்பாக்கிய நிலை வேறு. மறந்தும் உங்கட பொருட்களை அவர்களிடம் கொடுக்காதீங்க  இரண்டு நாளில அனுப்பிறம் எண்ட சொல்லி வாங்கினவங்கள் ஒருமாதமாக அனுப்பி இன்று(டிசம்பர் 2) தான் கிடைத்தது.இப்படியே மழைக்குள் எனது சோகப்பயணம் சென்றுகொண்டிருந்தது.

முதல் நாள் இரவு மூத்த தங்கை தனது நண்பிகளின் வீட்டுக்கு வெளியே நின்ற இடுப்பளவு வெள்ளக்காட்சிகளின் நிழல் படங்களை கணினியில் போட்டுக்காட்டியபோது வியந்த எமக்கு  பாதம் மறைக்கும்  வரை நின்றிருந்த வெள்ளம் படிதாண்டி வீட்டுக்குள் பாய்ந்திருந்தபோது என்ன சொல்வது? வெள்ளத்தில் சலம் கழிப்பது எனக்கொன்றும் புதிதல்லவே! ஒருவாறு காலைக்கடன் தவிர சகலதையும் முடித்து பைப் தண்ணியில் முகத்தை கழுவியபின் கட்டிலில் ஏறி மீண்டும் நித்திரை செய்ய முயற்சித்தோம். என்னிடமிருந்த கைத்தொலைபேசி மட்டும் நல்ல மின்சாரத்துடன் இருந்தது இணைப்பு பெயருக்கு மட்டுமே இருந்தது தொலைபேசி வெளியிடத்துக்கு எடுக்க முடியவில்லை தம்பியுடன் மட்டும் 9 மணிக்கு இணைப்பு கிடைத்தது. மூத்த தங்கை எஸ்எம்எஸ் ஊடாக தகவல் பாரிமாறிக்கொண்டிருந்தாள் தேனீா் அருந்தவில்லை சாப்பாடு இல்லை காலை சாப்பிட்ட பிஸ்கட் தாக்குப்பிடிக்கவில்லை வயிறு கிளறியது மதியம் மீண்டும் கண்விழித்தோம். சாப்பாட்டுக்கு ஏதாவது வழி செய்ய வேண்டும் என இளையவள் கூறினாள் நானும் வெளியில் போக முடிவெடுத்தேன்.(தொடரும்)

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்

Posted by Thava செவ்வாய், 18 நவம்பர், 2008 2 comments

எனது வலைப்பதிவுக்கு வரும் விருந்தினர்களே எனது பதிவுகள் சம்பந்தமான உங்கள் கருத்துக்களையும் விட்டுச்செல்லுங்கள்!

பசுமை நினைவுகள்:அது ஒரு கனாக்காலம்…..

Posted by Thava திங்கள், 17 நவம்பர், 2008 0 comments

இக்கட்டுரை இலண்டன் பழையமாணவர் சங்கத்தின் ஒன்றுக்காக 2006 இல் நான் அனுப்பி வைத்தது. மின்னஞ்சலில் சேமிக்கப்பட்டிருந்தது என்கண்ணில் இன்று பட்டது இங்கே பதிவு செய்கிறேன்.
எனது வாழ்கையில் என்றும் பெருமை கொள்வது யாழ்பாணம் இந்தக்கல்லூரியில் கல்வி கற்றேன் என்பதுதான். எந்த ஒரு மாணவனோ பழையமாணவனோ தான் யாழ் இந்துக்கல்லூரியில் கற்றிராமல் வேறிடத்தில் கற்றிருந்தால் வாழ்க்கையில் உயர்ந்திருப்பேன் என்று ஒருபோதும் மனம் வெதும்பியதில்லை மாறாக யாழ் இந்துவில் கற்கமுடியாமல் போய்விட்டதே என வெதும்புபவர்கள் ஏராளம். கல்வி என்பது வெறும் ஏட்டுக்கல்வியை மாத்திரம் குறிப்பதல்ல என்பது யாவருமறிந்தது. இலங்கை போன்ற நாடுகளின் பரீட்சையினை மட்டுமே மையமாகக்கொண்ட கல்வித்திட்டம் இதனை உணர்த்துவதற்கு தடங்கலாகத்தான் இருக்கின்றது. எனினும் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகளும் சூழலும் இந்த இடைவெளியினை நிரப்ப பெரிதும் பங்காற்றுகின்றன. தனியார் கல்வி நிலையங்கள் வெறுமனே பரீட்சையினை நோக்கமாகக்கொண்டவை. இவை மாணவர்களின் சிந்தனைத்திறனை புடம்போடுவதற்கு மறுக்கின்றன. மாறாக அதனை மழுங்கடிக்கின்றன. ஆனால் கல்லூரிகளும் பாடசாலைகளும் பல்கலைக்கழங்களும் அவ்வாறல்ல அவை பரீட்சைக்கான கல்வியை விடவும் வாழ்க்கைக்கான கல்வியை வழங்குவதில் கூடிய கவனம் செலுத்துகின்றன. வாழ்கைக்கான கல்வி சரியாக வழங்குமிடத்து பாட்சைக்கான கல்வியில் மாணவர்களின் சிந்தனைத்திறன் விருத்தியடைகின்றது என்பது என் கருத்து. இந்த வகையில் மாணவனை நாட்டுக்கு நல்லதொரு பிரசையாக வளத்தெடுப்பதில் எமது கல்லூரிக்கு நிகர் எமது கல்லூரிதான். எமது கல்லுரியின் பழைய மாணவர்கள் பல்துறை வல்லுனர்களாக உலகளாவிய ரீதியில் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் சளைத்தவர்கள் அல்லர். ஆளுமையுடையவர்கள் முற்போக்கு சிந்தனையுடையவர்கள். கல்லூரி வாழ்கையில் ஒவ்வொரு விதமாக இருந்தவர்கள் இன்று ஏதோ ஒருதுறை வல்லுனர்களாக இருக்கின்றார்கள். இதற்கெல்லாம் காரணகர்த்தா யார்? யாழ் இந்து அன்னை என்கின்ற ஒரு “வேர்ச்சுவல் மதர்” என்றுதான் கூறவேண்டும் அதற்கு வரைவிலக்கணம் கொடுக்கமுடியாது அவள் ஒருவகையில் தாய் ஒருவகையில் சமூகம் என ஒவ்வொருவகையில் ஒவ்வொரு வடிவமாக நின்று எம்மை வழிநடத்தினாள். வகுப்பறையில் கற்றவைகள் பாடப்புத்தகங்களாக இருக்கலாம்.ஆனால் கல்லுரி மண்ணில் கற்றவைகள் ஏராளம் ஏராளம். இப்படித்தான் இதைச்செய்யவேண்டும் என்று கரும்பலகையில் எழுதிக்காட்டப்படவில்லை மாறாக செய்து காட்டப்பட்டது.அதனை காட்டியவர்கள் பலர். இவர்களில் அதிபர்கள் ஆசிரியர்கள் சக மாணவர்கள் பழையமாணவர்கள் நலன்விரும்பிகள் என எமது கல்லுரிச்சமூகமே எடுத்துக்காட்டுக்காட்டுகளாக திகழ்ந்ததன் விளைவு இன்று இந்த இதழில் என் வரிகள்…. இவை பேனா மை சிந்திய எழுத்துக்களல்ல நவீன கணினி ஒன்றில் எனது விரல்களின் அழுத்தல்களில் இருந்து வெளிவந்தவை.

1990 ம் ஆண்டு சனவரி 9 ம் திகதி யாழ் இந்துக்கல்லுரியில் நான் புதியமாணவனாக அப்பாவுடன் உள்நுழைந்த போது எழுந்த உணர்வுகளை எந்தப்பேனாகொண்டோ எந்தக்கணினி கொண்டோ எழுத்துருவாக்கம் செய்யமுடியாது. இது திரு பொன்னம்பலம் அதிபராக இருந்த காலப்பகுதி திரு மகேந்திரன் உப அதிபராக இருந்தார். கல்லுரியின் விடுதியில் சேர்த்து விடடார்கள் நானோ சின்னப்பயைன் உருவத்திலும் கூட. கல்லுாரி விடுதியின் நுழைவாயில் எனக்கு உண்மையிலேயே பென்னம்பெரியதாக தோன்றியது. ஏன் அரசகாலச்சிறை போலவும் தோன்றியது. எனது கண்ணில் கண்ணீர் குழமாகி தெரிந்த பயத்தை உபஅதிபர் தேற்றி நான் பார்த்துக்கொள்கிறேன் என அப்பாவிடம் கூறியது நெஞ்சைவிட்டகலவில்லை. எனது விடுதிவாழ்க்கை கற்றுத்தந்தவைகள் நிறைய இருக்கின்றன. அங்கு எனக்கு வழங்கப்பட்ட “சிறுசு” என்ற பட்டப்பெயரை மறக்கவில்லை. நான் எந்த ஒருசின்னப்பிரச்சனைக்கும் அழுதுவிடுவேன் இது எனது ஆரம்ப கல்லூரிவாழ்கை ஆனால் இன்று துன்பம் வரும்போதும் சிரிக்கின்றேன் இது கல்லூரி எனக்கு கற்று;த்தந்தது. என்னுடன் பழகியவர்கள் பலர். இருப்பவர்கள் சிலர். என் கல்லுாரி வாழ்க்கையில் பழகிய மூத்த ,சக மாணவர்கள் சிலர் உயிருடன் கூட இல்லை தம்மையே அவர்கள் தியாகம் செய்துவிட்டார்கள். கற்பித்த ஆசிரியர்களில்,மாணவர்களில் சிலர் எனது அழுகைக்கு காரணமாயிருந்தார்கள் அவர்களின் மீது எனக்கு அன்று வெறுப்பாயிருந்தது. அப்போது நினைத்தேன் வளர்ந்து பெரியவனாகியதும் அவர்களை ஒருவழிபார்க்க வேண்டும் என்று. ஆனால் இன்று பெரியவனாகிவிட்டேன். இவர்களைக் காண்கிறேன். வெறுப்புவரவில்லை.இனம்புரியாத அன்பு ,பணிவு பெருகுகிறது இதற்கு காரணம் எனது கல்லூரி வாழ்க்கை தான்.

விளையாட்டுத்திடலுக்கு சென்றால் என்ன ஆய்வுகூடத்துக்கு சென்றால் என்ன நூலகத்துக்கு சென்றால் என்ன கல்லூரி மண்ணில் எமது வகுப்பு மாணவர்கள் ஒழுங்கு வரிசையில் செல்லும் ஒவ்வொரு கணத்திலும் நான் முதல் மாணவனாக சென்ற கணத்தை நினைத்துப்பார்க்கின்றேன் ஆம் இந்த சம்பவத்தை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது .எனது பழைய நண்பர்களுடன் கதைக்கும்போது நினைவு கூருவேன். வயிறு குலுங்க சிரிப்பார்கள். ஆண்டு 11 படித்துக்கொண்டிருந்த காலம் எமக்கு சமூகக்கல்வியும் வரலாறும் கற்பித்தவர் திரு ஜெயபாலன் அவர்கள்.(இப்பொழுதும் கற்பிக்கிறார்)அவர் உருவத்தில் சிறியவர் அதனால் முதல்வரிசை மேசையில் நடுவில் இருந்த சேயோன் என்ற மாணவனின் மேசையில் ஏறி உட்கார்ந்து பாடம்சொல்லுவார். ஒருநாள் மேசையில் ஏறிஇருந்து கற்பித்துக்கொண்டிருக்கையில் மேசையில் பேனா மையினை சேயோன் சாதுர்ஜயமாக கொட்டிவிட அது ஆசிரியரின் காற்சட்டையினை பாழாக்கிவிட்டது. அதனை ஒழுக்கவிதி மீறாத நண்பன் ஜெயமதன் காட்டிக்கொடுத்தது விட சேயோன் வாங்கிஅடியை சேயோன் மறந்தானோ என்னவோ என்னால் மறக்கமுடியாது.

இது தவிர தவமணிதாசன் ஆசிரியரின் அடிகளுடன்கூடிய கற்பித்தல்கள், மனோரஞ்சன் ஆசானின் கராட்டி குத்துக்களுடன்கூடிய ஆங்கிலம், என்னை கணிதபாடத்தை விரும்ப வைத்த சிறீதரன் மற்றும் சபாநாயகம் ஆசான்களின் கண்டிப்புடன் கூடிய கணிதபாட வகுப்புக்கள், ச.வே.பஞ்சாட்சரம் ,சிவராஜா ஆசான்களின் தேசியப்பற்றுடனான தமிழ் வகுப்புக்கள், கஜன் ஆசிரியரின் அறிவியலுடன் கூடிய விஞ்ஞானம், புண்ணியலிங்கம் ,தர்மகுலசிங்கம் ஆசிரியர்களின் இந்துமதத்தை உணரவைத்த பிரார்த்தனை வழிபாடுகள்,சண் தயாளன் ஆசிரியரின் சகோதரத்துவமான விளையாட்டுப்பயிற்சிகள், செல்வி செல்லத்துரை மற்றும் பத்மநாதன் ஆகியோரின் இனிமையான சங்கீத வகுப்புக்கள், வகுப்பறையில் நுழையும்போதே ”31.12 ஆயிரத்து தொளாயிரத்து...” என வியாபார இலாபநட்டகணக்கினை ஆரம்பித்து விடும் சிவஞானசுந்தரம்பிள்ளை அவர்களின் வர்த்தகமும் கணக்கியலும் வகுப்புக்கள் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. அதிபர் பஞ்சலிங்கம் அவர்களின் மாணவர்களின் ஆக்கத்திறன் விருத்தியின் மீது கவனம் செலுத்திய நிருவாகம் நினைவகலாதது, அதிபர் சிறீகுமரன் அவர்களின் கண்டிப்பான அணுகுமுறைகளும் எம்மை வியக்கவைத்தவைகளே. இதேபோல உயர்தரவகுப்பில் எனது லியோக்கழக சாதனைகளுக்கு முன்னோடியாக இருந்தவரும் வகுப்பாசிரியராக இருந்து பிரயோக கணிதம் கற்பித்த கொஸ்அல்பா என்றே மாணவரால் அறியப்பட்ட ஞானப்பிரகாசம் ஆசிரியரின் பயனள்ள அறிவுரைகள் பயனுள்ளவை. இரசாயனவியலில் சுருக்கமானதும் காட்டமானதுமான கற்பித்தலை செய்த குட்டி மக்கர் என்று செல்லமாக அழைக்கும் மகேஸ்வரன் அவர்களின் கற்பித்தல் .என்னை லியோக்க கழகம் சார்பாக அழைக்க கழகத்தில் இருந்து யாரேனும் வந்தால் அவர்கள் கேட்காமலேயே என்னை நக்கலுடன் அனுப்பிவைப்பதன் மூலம் என்னை சிந்திக்கவைத்தவரும் இவரே. அத்துடன் உயர்தர மாணவர்களின் ஒழுக்க நலன்களில் பெரிதும் பங்காற்றிய பிரதி அதிபா மகேஸ்வரனும் மறக்க முடியாத ஒருவர்.

இவ்வாறு என் வாழ்கையில் மாத்திரமல்ல பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய கல்லுரிச்சமூகத்தில் இன்று பல புதியவர்கள் வந்து இணைந்திருக்கிறார்கள்.அவர்களில் பலர் எமக்கு புதியவர்களாயிருக்கலாம் ஆனால் கல்லுரிக்கு அவர்கள் பழையவர்களே. இன்று நான் பழையமாணவனாக கல்லூரிக்கு செல்லும்போது உலகளாவிய பழைய மாணவர்களின் ஆதரவுகளின் வெளிப்பாடுகளும் புதிய துடிப்பான அதிபரின் நிர்வாக திறமையும் எமது கல்லூரிக்கு புதிய மெருகூட்டிக்கொண்டிருப்பதை உணர்கின்றேன். பழையமாணவர்சங்க பிரதிநிதியாக இருப்பதன் மூலம் எனது கல்லூரிச்சமூகத்துக்கு நிறையவே பங்களிக்கக்கூடியதாக இருப்பதையும் உணர்கிறேன்
“வாழிய யாழ் நகர் இந்துக்கல்லூரி

அலங்கார வளைவுகளைத்தாண்டிய பின்னும்அரங்கிற்குள் நுழையத்தயங்கி நின்றது கவிதை!''
உன்னைப்பற்றித்தான்பேசுகிறார்கள்!உள்ளே போ''உபசரித்தார் ஒருவர்!
உள்ளேநிற்கவும் இடமில்லாநெருக்கடி!
அலட்டிக் கொள்ளத் தெரியாதமேடைவரை நடந்துபோய்மீண்டும் திரும்பிஇருக்கை தேடிஏமாற்றமடைந்தது!
சாகித்ய மண்டலசண்ட மாருதங்கள்..ஞானபீடவாணவேடிக்கைகள்..
இசங்களைக் கரைத்துரசங்களாய் குடித்தவர்கள்..த
மிழ்செத்துப் போய்விடக்கூடாதேஎன்றகருணையால்பேனாவைப் பிடித்திருக்கும்பிரும்மாக்கள்...
ஒருவர் கூடகவிதையைஉட்காரச் சொல்லவில்லை!
இடம் தேடும் கவிதையைஏறிட்டும் பார்க்கவில்லை!சுற்றிச் சுற்றிப் பார்த்துசோர்ந்த கவிதைஅரங்கிலிருந்துவெளியே வந்தது!
விமர்சனத்தின்கிழக்கு மேற்கு அறியாதகிராமத்து ரசிகர் ஒருவர்கேட்டார்:''உன்னைப் பற்றித்தான்விவாதம் நடக்கிறது..
நீயே வெளியேறுவதுநியாயமா?''
கவிதை அவரிடம்கனிவுடன் உரைத்தது:''அவர்களின் நோக்கமெல்லாம்என்னைப் பற்றிவிவாதிப்பது அல்ல..தம்மைப் பற்றித்தம்பட்டம் அடிப்பதே!''
- மு.மேத்தா

கோயிங் டவுண்

Posted by Thava ஞாயிறு, 16 நவம்பர், 2008 0 comments

நான் நினைப்பதுபோலவே எனது செயல்கள் போலவே என்னைச்சார்ந்தவர்களும் நான் நேசிக்கின்றவர்களும் நினைக்கவேண்டும் செய்யவேண்டும் என விரும்புவது நியாயமில்லை என்பது எனக்கு தெரியும் ஆனால் சில நேரங்களில் இவற்றினை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.அதற்கு வடிகால் வலைப்பதிவு தான் போலும்.யாழ் பல்கலைக்கழகத்தில் ”கோயிங் டவுண்” மகிழ்வு கொண்டாட்ட நிகழ்வு சம்பந்தமான உரையாடல் என்னை கோபத்தின் எல்லைக்கே கொண்டு சென்றுவிட்டது நான் இப்படியான நிகழ்வுகளில் என்ன நடைபெற்றது என விலாவாரியாக விசாரிப்பதுண்டு அப்படி சென்று கொண்டிருந்த உரையாடல் ”இன்றும் மது அருந்தி கூத்தடித்தார்களா” என விரிந்தது ”ஆம்” இது பதில் ”இது எல்லாம் தேவைதானா பாடுங்கள் ஆடுங்கள் கதையுங்கள் சிரியுங்கள் அதைவிடவும் இப்படியான மது அடித்து கூத்தடிக்கும் போதையில் உழலும் நடவடிக்கைகளும் அவசியம்தானா? ஒருபகுதியினர் (விரிவுரையாளர்கள்) பார்த்திருக்க முடியாது செல்லும் அளவுக்கு நடைபெறும் இப்படியான நிகழ்வுகள் எந்த அடிப்படையில் நடைபெறுகின்றன ” என நீண்டு சென்றது எனது வாதம்.எதுவித பங்களிப்புமின்றி வெறும் பார்வையாளராகவே இருந்து விட்டு வந்த எனது எதிர்வாதி சொன்னது தான் என்னை பாதித்து விட்டது ”இது எனக்கு தப்பாகப்படவில்லை” என்று இச்செயல்களை நியாயப்படுத்துகிறார் இவர்.பார்ட்டி ஒன்று நடந்தால் எல்லாம் இருக்கும் என்று இவர் பார்டிகள் பற்றி எனக்கு படிப்பிக்கின்றார்.


இவ்வாறான நிகழ்வுகள் எந்த மரபுமுறைகளின் கீழ் முன்னெடுத்தச்செல்லப்படுகின்றன. பெற்றோரின் பணத்தில் இவர்களின் கூத்து எந்தவகையில் நியாயமாகமுடியும் மகழ்வுடன் உங்கள் பிரிவை சந்திக்க மக்கள் வரிப்பணத்தில் படிக்கும் நீங்கள் தெரிவுசெய்யும் வழிமுறைகள் தான் நாளை பல இடங்களில் கீழ்த்தரமான முறையில் பார்ட்டிகளை கொண்டாடும் சமூக சீரளிவுகளாக பரிணமிக்கின்றது என்பது உங்களுக்கு தெரியாதா? முன்னையவர்கள் செய்தார்கள் அதனால் செய்கிறோம் என்றும் சொல்வீர்கள் இப்படித்தான் இராக்கிங் என்ற பகிடி வதைக்கும் நியாயம் கற்பிக்கிறீர்கள் இதனால் மற்றவர்களின் மனங்களை புண்படுத்தி அதிலே சுகம் காண்கிறீர்கள்.


நீங்கள் பின்பு ஒன்றும்தெரியாத அப்பாவிகள் போல சமூகத்துக்குள் நுழைகிறீர்கள் மற்றவர்களை வழிநடத்த முனைகிறீர்கள்.உங்களை வித்தியாசப்படுத்தி காட்ட இப்படியான முகவரிகள் உங்களுக்கு தேவைப்படகின்றனவோ?. உங்களுக்காகவும் உங்கள் உறவுகளுக்காகவும் கமலகாசன் பிறந்தநாளை கொண்டாடமல் இருக்கிறார் விஜய் உண்ணாவிரதமிருக்கிறார் நீங்கள் ஏதோ பொங்கு கொண்டாடிக்களைத்தவர்களாக கூத்தடிக்கிறீர்களா? பிரகடணங்களுக்கு முன் நின்று புகைப்படங்கள் எடுப்பதால் நீங்கள் உணர்வுள்ளவர்கள் என்று நாம் நம்பவேண்டும்? நீங்கள் நிகழ்வுகளில் அப்படியெல்லாம் நடந்துகொள்வதன்மூலம் நீங்கள் செய்தவைகள் எல்லாம் வெறும் கேலிக்கூத்துத்தான் போட்டீர்களா என்று சந்தேகம் கொள்ள வைக்கிறது.உணர்வு புர்வமாக நடந்த நிகழ்வுகளை என்க்கு நன்றாக தெரியும் அதேபோல் கும்பலில் கோவிந்தா என நடந்தைவைகளையும் தெரியும் கடமை என்பதற்காய் கலந்துகொண்டவர்களையும் கேள்விப்பட்டிருக்கிறேன்.உணர்வு புர்வமாக நடந்த நிகழ்வுகளை கொச்சைப்படுத்தவிலை அவற்றை ஆராதிக்கிறேன். எது எப்படியோ உங்களில் அரைவாசிப்பேருக்கு சுயநலம் அதிகம் பத்தாம்பசலித்தனமான மரபுக்கொண்டாட்டங்களில் உங்களை பெரியவர்களாக காட்டவேண்டும் அல்லது முன்னிலைப்படுத்தவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கின்றது என்பது வெளிப்படை இந்நிலையில் எதிர்கால சமுதாயத்தினை நினைக்கும்போது பயமாக இருக்கிறது.


உங்களை போராடுங்கள் என்றோ பகிஸ்கரியுங்கள் என்றோ கூறவில்லை நல்லமுறையில் கொண்டாடுங்கள் என்று கூற முயற்சிக்கிறேன்.திருந்த முயற்சியுங்கள் துன்பத்திலும் மகிழ்வது நன்றேயாயினும் அர்த்தமுள்ள வகையில் மகிழுங்கள் நீங்கள் விட்டுச்செல்லும் எச்சங்களை பலர் பின்பற்ற போகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.இன்னும் என் கோபம் தணியவில்லை...

இங்கே தினம் தினம் உறவுகள் செத்தவண்ணமிருக்க கடல்கடந்து வாழும் பலா் போராட்டங்கள் உதவிகள் செய்துகொண்டிருக்க நேரடி உறவுகளான நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்? உதவி செய்ய முடியாது. போராட முடியாது கூத்து்களையாவது நிறுத்தலாமல்லவா? உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நாம் வழமையாக செய்வதெல்லாம் செய்கின்றோமல்லவா? புலம்பெயா்ந்து வாழும் எனது பள்ளி நண்பனின் இணையப்படங்களை பார்க்க முடிந்தது. அவன் ஒரு பத்திரிகையாளன் பல கட்டுரைகளை வரைந்திருக்கிறான் தமிழ்மக்கள் பற்றியெல்லாம் பிதற்றியிருக்கிறான்.ஆனால் அவனது கூத்ததுப்படங்களை பார்க்க ஆபாசமாகவல்லவா இருக்கிறது. யாருக்காக எதற்காக எழுதுகிறர்கள். இவா்களா நாளை நல்லதொரு சமுதாயத்தினை உருவாக்கப்போகின்றார்கள்? புலம்பெயர்ந்து வாழும் இளைய சமுதாயத்தின் 75 சதவீதம் நமது கலாச்சாரங்களை குழிதோண்டி புதைத்துவிட்டார்கள். தமது பொழுது போக்குக்காக எம்மை திரும்பிப்பார்க்கும் இவர்களுக்கு நம்நாட்டில் இருந்து Fresh Fish தேவைப்படுகிறது. அனுப்பி வைப்பதற்கு இங்கே பேராசைக்கார பெற்றோர் இருக்கும் வரை யாரை நோவது?