வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

(21-02-2011 யாழ் உதயன்பத்திரிகையின் 14ம் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த விளம்பரத்தினை பார்த்ததும் ஏற்பட்ட உந்துதலால் என்னால் அன்றிரவு வரையப்பட்ட கட்டுரை)

ஏமாற்றுவதற்குப் பல வழிகள். அதுபோல ஏமாறுவதற்கும் பல வழிகள் இருக்கின்றன. தகவல் தொழில்நுட்பம் நமக்குத் தந்து கொண்டிருக்கும் நன்மைகள் ஏராளம். அதே போல் அதனால் நமக்கு ஏற்படுகின்ற தீமைகளும் ஏராளம். எதனையும் பகுத்தறிந்து நல்லவற்றுக்காக பயன்படுத்த முனைவதே அறிவுள்ள மனிதனுக்கு அழகு.நாம் நீண்டதொரு போராட்டக்களத்திலிருந்து சற்று விலகி புதிய பாதையில் காலடி வைத்திருக்கின்றோம்.

இந்நிலையில் எமது எண்ணங்கள், செயற்பாடுகள் யாவும் எமது எதிர்காலம் வளமான வாழ்வு மகிழ்ச்சியாயிருத்தல் ஆகிய விடயங்களை நாடிச்செல்வது இயல்பே. இந்நிலையில் பல வேளைகளில் செய்ய முற்படும் விடயங்களது நன்மை, தீமைகள் அல்லது அதன் வெளியீட்டு விளைவின் இறுதி வடிவம் பற்றிய சரியான புரிதல் நம்மிடத்தில் ஏற்படுவதற்கு எமது சிற்றறிவு தடைபோட்டு விடுகிறது. அதனது விளைவுகள் தான் சமூக கலாசார சீரழிவுகள் மற்றும் பிழையான வழிமுறைகளில் செல்வதன் மூலமான உடல் உள சொத்து இழப்புக்கள் எனலாம்.

நம்மில் பலருக்கு கணினி, இன்ரநெற், கைத்தொலைபேசி, கமெரா இவையெல்லாம் கடவுளாகத் தெரிகின்றன. அதனைப் பயன்படுத்துபவர்களையும் அறிமுகப்படுத்துபவர்களையும் சிலவேளைகளில் கடவுளின் தூதர்களாகவும் கருதத் தலைப்படுகின்றோம். இங்கு தான் நாம் தவறு செய்து விடுகின்றோம். எந்தவொரு செயற்பாட்டினையும் செய்ய முன்னரும் அதனால் விளையப் போகின்ற நன்மைகளுக்கு அப்பால் விளையக் கூடிய தீமைகள் பற்றியும் ஓரளவுக்கேனும் தெரிந்து கொண்டு தான் களத்தில் இறங்க வேண்டும். உதாரணமாக வீதியில் வாகனம் செலுத்தத் தொடங்கும் போது விபத்து பற்றிய முன்னெச்சரிக்கை இன்றி இறங்கினால் விளைவு விபரீதமாகலாம்.

எதற்காக இந்த முன்னோட்டம் என்று நீங்கள் தலையினைப் பிய்த்துக் கொண்டிருப்பீர்கள். எல்லாம் காரணத்துக்காகத்தான் என்பதைக் கட்டுரை முடிவில் காண்பீர்கள்.வீட்டுக்கொரு தொலைக்காட்சிப் பெட்டி என்ற நிலை மருவி வீட்டுக்கொரு கணினி என்ற நிலையிருக்க வீட்டில் உங்கள் பிள்ளைகள் கணினி பயன்படுத்துகின்றார்கள் எனில் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருப்பது அவசியம். அவர்கள் என்ன காரியங்கள் கணினியில் செய்கின்றார்கள். என்ன வகையான கணினி விளையாட்டுக்களை கணினியில் தேர்வு செய்கின்றார்கள். இன்ரநெற்றில் எப்படியான இணையத்தளங்களைப் பார்வையிடுகின்றார்கள். என்ற விடயங்களை அவதானிக்க வேண்டும்.

உங்கள் பிள்ளைகள் கைத்தொலைபேசி வைத்திருக்கின்றார்களா? ஆம் எனில் அவர்களுடைய பாவனை எப்படி போகிறது. எவ்வாறான நபர்களுடன் அவர்கள் தொடர்புகளைப் பேணுகின்றார்கள். எவ்வகையான ஒளிப்படங்களை ஒலிப்பாடல்களினை உபயோகிக்கின்றனர். பரிமாறுகின்றனர். எவ்வகையான குறுஞ்செய்திகளைப் பரிமாறுகின்றனர். என்ற விடயங்களை ஓரளவுக்கேனும் தெரிந்து கொள்ள வேண்டும்.நமது அன்றாட நடவடிக்கைகளின் போது எமக்கு அருகில் நிற்பவர்கள், நாம் வேலை செய்யும் இடம், செல்லும் இடங்கள், பொது இடங்கள், பொது கழிப்பறைகள் போன்றவற்றில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். கடவுள் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார் இல்லையா? அப்படியாயின் நாம் கடவுளாக ( ? ) நினைக்கும் இந்தத் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், இங்கும் ஒளிந்திருக்கலாம் இல்லையா?

பக்கத்தில் நிற்கும் போது வீடீயோ வசதியுள்ள கைத்தொலைபேசியின் உதவியுடன் எந்த நிலையிலும் எந்தக் கோணத்திலும் நீங்கள் படம் பிடிக்கப்படலாம். பின்னர் அவை இணையத்தளங்களில் பலரின் கண்களுக்கு விருந்தாகலாம். குறிப்பாகப் பெண்கள் இது விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். அதே போல் அந்தரங்கமான விடயங்களை மிகவும் நெருங்கியவர்களிடமின்றி வேறு எவரிடமும் ஒப்புவிக்கக் கூடாது. ஒருவருக்கும் சொல்லக்கூடாது. பரிமாறக்கூடாது என்று வாக்குறுதி வாங்கப்பட்டு சொல்லப்பட்டவைகளும் பரிமாறப்பட்டவைகளும் தான் இன்று இணையத்தளங்களில் பரிமாறப்பட்டுக்கிடக்கின்றன. மற்றவர்களிடம் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றின் காரணமாக பலரின் உயிர்கள் கூட காவு கொள்ளப்பட்டிருக்கின்றன.

இன்றைய உலகில் எதுவுமே இரகசியமில்லை. என்ற நிலையினைத் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் ஏற்படுத்தி விட்டன என்றால் அது மிகையாகாது. எனவே எமது பாதுகாப்புக்கான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டியது நமது கடமையாகும். ஒரு அரசியல் பிரமுகர் குறித்த இடத்திற்கு வருகை தருவதற்கு முன்னர் ஒரு பாதுகாப்பு அதிகாரி எவ்வாறு இடத்தினது பாதுகாப்பினை உறுதிப்படுத்துகின்றாரோ அதனையொத்த ஏற்பாட்டினை ஒவ்வொரு தனிநபரும் செய்ய வேண்டிய நிலை தற்போது எழுந்திருக்கின்றது.

இலங்கையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படாவிட்டாலும் நாம் ஒழுங்கையில் சலம் கழிப்பதைக் கூட படம் பிடித்து செய்மதி ஊடாக இணையத்தளங்களில் காட்டிவிடக்கூடிய வசதியை மிகப்பெரிய இணைய நிறுவனமான கூகிள் செய்து விட்டது. இது இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டால் ஒழுங்கையில் குப்பை கொட்டியவர்கள் யார் என்பதை பொலீஸார் இன்ரநெற்றில் கண்டுபிடித்து விடுவார்கள். இது நடைமுறைக்கு வரத்தான் போகிறது. இச்செய்தியை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

இணையத்தளங்களிலும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் தமது சொந்த விபரங்களைப் பகிர்ந்து கொள்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் இதில் மிக மிக மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். நீங்கள் எந்தக் கணத்திலும் ஏமாற்றப்படலாம்.

இதற்கு சான்றுகள் ஒன்று இரண்டல்ல பல்லாயிரக்கணக்கில் உள்ளன.சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் பல குற்றங்களுக்கு வழிவகுத்து விடுகின்றன. சம்பவம் சம்பவித்த பின்பு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர்களும் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தியவர்களும் இணைந்தே பொறுப்புக் கூற வேண்டும். பகுத்தறிவுடன் நாம் செல்லும் இடங்களிலும் வாழும் இடங்களிலும் செயற்பட வேண்டும். எல்லாம் முடிந்த பின் அழுவதில் ஆகப்போவது ஒன்றுமில்லை. தகவல் தொழில்நுட்பம் நன்மை செய்வதற்கு எப்படி மிகக்குறுகியளவு நேரத்தை எடுத்துக் கொள்கின்றதோ, அதேபோல தீமை செய்வதற்கும் எடுத்துக்கொள்கின்றது என்பதை உணர வேண்டும்.


மின்னஞ்சல் பாவனையின் போது மிகவும் கவனமாயிருக்க வேண்டும். பலருக்கு புதிதாக ஒரு மின்னஞ்சல் வந்தால் போதும் எல்லையில்லாத மகிழ்ச்சி. அது யாரிடமிருந்து வந்தது? உள்ளடக்கம் என்ன? நோக்கம் என்ன? என்றெல்லாம் சிந்திக்க மாட்டார்கள். ஏதோ இந்த உலகில் எல்லாரையும் விடுத்து தன் மீது மட்டும் அக்கறை கொண்டு எழுதப்பட்ட மின்னஞ்சலாகக் கருதி பதிலனுப்பத் துடிக்கிறார்கள். நாங்கள் ஏதும் இடையில் சொல்லப்போனால் ஏதோ பராக் ஒபாமாவுக்கும் தங்களுக்கும் இடையிலான தொடர்பைத் தடுப்பதாகக் கோபம் கொள்வார்கள்.

இப்படியானவர்களுக்கென்றே அமெரிக்கன் விசாக்களும் இங்கிலாந்து விசாக்களும் ஏன் வாங்கப்படாத அதிஷ்டலாபசீட்டுகளுக்கான பரிசுகளும் மின்னஞ்சல்களும் தேடிவருவது இன்னொரு இரகசியம் எத்தனை தடவை சொன்னாலும் நம் பேச்சை நம்ப மறுக்கிறார்கள். இவருக்கு நான் அமெரிக்கா போறது விருப்பமில்லை. அல்லது பொறாமை என்றோ நான் கோடீஸ்வரனாகி விடுவது இவருக்கு எரிச்சல் என்று இவர்கள் உள்ளுக்குள் புழுங்குவதை நாம் அறிவோம்.

அன்று நண்பர் ஒருவருக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. விமான விபத்து ஒன்றில் குடும்பத்துடன் காலியான கோடீஸ்வரர் ஒருவரின் வங்கிக்கணக்கில் இருந்து உங்களை வாரிசாக பாவனை செய்து பணத்தினை எடுக்கும் வசதி வாய்த்திருக்கிறது. அதை எடுக்க தாங்கள் உதவலாம். அதற்குக் கைமாறாக அரைவாசிப்பணத்தை தமக்குத் தருமாறும், இந்த செயற்பாடுகளுக்காக கொஞ்ச பணம் செலவாகும் எனவும் அதனைத் தற்போது அனுப்பி வைக்குமாறும் அந்த மின்னஞ்சல் கூறியது. நண்பன் விவரமானவனாயிருந்ததால் “நீங்கள் எனக்குச் சேரும் பணத்தில் அதைக் கழித்து விட்டு மிகுதியை அனுப்பி வையுங்கள்”. என எழுதிய கடிதத்தக்கு இதுவரை பதில் இல்லையாம்.

இவ்வாறே தடுமாற்றமுள்ள இளையவர்களைத் தேடியும் பல மின்னஞ்சல்கள் வரும். “நான் மிகுந்த மோகத்தில் உள்ளேன் ஆர்வமிருந்தால் அஞ்சலிடவும்” என்றிருக்கும். இவர் அனுப்பினால் கடைசியில் காசை இழக்கும் நிலை வரை கொண்டு சென்று விடுவார்கள். இதே போல இந்த மின்னஞ்சலை இன்னும் 10 பேருக்கு அனுப்பினால் உங்களுக்கு இவ்வளவு தொகை கிடைக்கும் என ஒருவகை மின்னஞ்சல் வரும். இவர்களும் தங்கள் நண்பர்களுக்கும் அனுப்பியவருக்கும் அதைத் திருப்பி அனுப்ப அனுப்பிய மின்னஞ்சல் திருடருக்கு 10 மின்னஞ்சல் முகவரிகளை வழங்கிய வள்ளலாக நமது ஆள் இருப்பார். இதுவெல்லாம் இணையத்தில் நடக்கிற கூத்து.

இப்படி நாளாந்தம் நம் கண் முன்னால் கூட நிறையச் சம்பவங்கள் நடந்தேறிய வண்ணம் உள்ளதைப் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. கற்பு தொடங்கி காசு வரை காணாமல் போகின்ற பெரும் கைங்கரியங்களுக்கு நம்மில் பலர் நாமே காரணமாகி விடுகின்றோம். ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். கல்வியாகிலும் காசாகிலும் கடின உழைப்பின்றி அடைய முடியாது. உழைப்பினூடாகக் கிடைப்பதே நிலைக்கும். இதைத்தான் பழைய முதுமொழி ஒன்று “நனையாமல் நண்டு பிடிக்க முடியாது” என கூறுகிறது.

ஒரு வருடத்தில் ஓ.எல் உடன் டிகிறி தருகிறோம். இரண்டு வருடத்தில் இங்கிலீசு இல்லாமல் இங்கிலாந்தில் டிகிறி என்று விளம்பரப்படுத்துவார்கள். இந்தப் பசப்பு வார்த்தைகளை நம்பி எமது எதிர்காலத்தினை ஒப்படைக்கலாமா? அதே போல கற்கைநெறி முடிவில் கட்டாயம் வேலை எனக் கூறியதற்காக காசைக் கட்டிவிட்டு பின்பு கல்வி நிலையத்தினைக் காணவில்லையென முறைப்படுவதில் என்ன நியாயம்? இவர்களைப் பார்த்துப் பரிதாபப்படலாமே தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. ஒரு கிழமையில் ஆங்கிலம் பேசலாம் ஓடிவாங்கோ என ஒரு விளம்பரம் போட்டால் ஓடிப்போக ஒரு கூட்டம் எம்மிடையெ இருக்குமென்றால் நாம் எப்படி முன்னேற முடியும்?

வீட்டில் இருந்தபடி இணையத்தினூடாக ஒன்றுமே செய்யாமல் ஒரு தொகை உழைக்கலாம்! இதை நான் சொல்லவில்லை சமீபத்தைய யாழ் உதயன் பத்திரிகை விளம்பரம் ஒன்று சொன்னது. இணையத்தில் இத்தனை நாள் குப்பை கொட்டிய நமக்குத் தெரியாத இரகசியத்தை இவர்கள் கண்டு பிடித்து சொல்லப்போகிறார்களாம்.இப்படி யோசித்தால் இலங்கையின் தனிநபர் வருமானம் இந்த ஆண்டே அதிகரித்து விடுமே. புpறதெற்கு மகிந்த சிந்தனை?. மத்தியவங்கியில் இருப்பவர்களுக்கு இது தெரியாமல் போய்விட்டதோ?.

இதேபோல் விளம்பரம்போட்ட ஒரு இந்திய குழுதான் தெகிவளையில் பலகோடிகளைச் சுருட்டிக் கொண்டு கொழும்பிலிருந்த நமது ஆட்களுக்கு நாமம் போட்டது.இன்னும் அவர்களை பிடிக்க முடியவில்லை. இதில் பாதிக்கப்பட்டவர்களில் நமது நண்பரும் ஒருவர். அவர் மட்டுமல்ல அவரது நண்பரும் பணத்தை இழந்தார். என்னையும் கேட்ட பொழுது நான் மறுத்ததனால் தப்பித்துக்கொண்டேன். யாழ்ப்பாணத்தில் இல்லத்தரசிகள் பாவம் என்று நினைத்து அவர்களது மாதாந்த வருமானத்தினை கூட்டுவதற்காக ஒரு கூட்டம் சேவை செய்யப் புறப்பட்டிருக்கிறார்கள் போலும்.நாங்கள் தான் அவதானமாயிருக்கவேண்டும்

இப்போது சிலர் எங்கள் பிழைப்பில் ( ? ) அல்லது உழைப்பில்(?) மண்போட நினைக்கின்றனர். நாங்கள் சும்மா இருந்து உழைக்கிறது இவருக்குப் பொறாமை என்று புழுங்குவதும் எனக்கு உணர முடிகின்றது. பரவாயில்லை.நீங்கள் இனியும் தயார் எனில் நூறுபேர் சேர்ந்து சென்று “இணையத்தில் இருந்து கொண்டே செலவின்றி நுங்கு பருகலாம் வாருங்கள். வகுப்புக்குக் கட்டுங்கள் நான்காயிரம்” என கூறுபவர்களிடம் பணம் கொடுத்தால் மாதாந்தம் நாற்பதாயிரம் உழைக்கிறீர்களோ இல்லையோ தெரியாது, ஆனால் அவர்கள் ஒரே நாளில் நான்கு லட்சம் உழைப்பது உறுதி!



1 Responses to நீங்கள் எந்தக்கணத்திலும் ஏமாற்றப்படலாம்!!!

  1. Kiruthigan Says:
  2. Sir...
    அன்றிரவே இந்த விளம்பரம் கண்ணில் பட்டது.
    சட்டென அந்த இலக்கங்களுக்கு அழைப்பேற்படுத்தியபோது 2 நம்பர்களும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன...
    மறுநாள் நண்பர்களிடம் இது பற்றி கதைத்தபோது அவர்கள் கூகிள் அட்சென்ஸ பற்றி கருத்தரங்கில் சொல்வார் என எதிர்வுகூறினர்.. மறுநாளும் இந்த இலக்கத்திற்கு அழைத்தபோது மறுமுனையில் பதிலில்லை..
    Lan lineக்கு அழைத்தபோது பேசினார்கள்.. கூகிள் பற்றியா கூறப்போகிறீாகள் என கேட்டபோது அதைவிட Click Bankபற்றி கூட கூறுவேன். பெயரை பதிவு செய்து விட்டு பணத்தோடு கருத்தரங்குக்கு வாருங்கள் என்றார்.

    இந்தியாவிலுள்ள சிலர் பணம் வாங்கிகொண்டு அட்சென்ஸ் கணக்கு உருவாக்கி தருகிறார்கள் (இவ்வாறு செய்வது கூகிள் கொள்கைபடி தப்பு ஆனால் கூகிள் விளம்பரத்திலேயே இதற்கான விளம்பரங்கள் தோன்றுவதுண்டு) அவ்வாறு செய்ய முடியுமா என கேட்டபோது அது தம்மால் முடியாது என்றார்கள்.

    இங்கு சிறப்பாக நடாத்தப்படும் ஆங்கில தளங்களின் அடசென்ஸ் கணக்குகளே முடிக்கப்படுவதுண்டு..( பணம் 86$ தாண்டிய பிறகும்கூட..)
    அப்படியிருக்க வீட்டிலிருந்தபடி பில்கேட்ஸை முந்தும் ஜீவராசி ஒன்றையாவது காட்டுமாறு அவர்களை கேட்கவேண்டும்..

    இன்று கருத்தரங்குக்கு சென்று வந்த ஒருவரின் உறவினர் கூறியது “அவர்கள் தெரியாத பல விசயங்களை சொன்னாராம்... அதோடு இப்படி தான் கொளும்பில் பலர் பணமீட்டுகிறார்கள்.. ஆனால் யாரும் வெளியில் சொல்வதில்லையாம் தான் யாழ்ப்பாணத்திலிருந்த அக்கறையில் இதை சொற்ப பணத்துக்கு கற்று தருகிறாராம்..

    இணையத்தில் அரட்டையை தவிர வேறேதும் செய்யதெரியாத நல்லுள்ளங்களுக்கு பல புதிய விடையங்களை கற்றுக்கொண்டதில் ஆச்சரியமில்லை...

    இவ்வளவும் கற்றுக்கொடுக்கும் அம்பாணிக்கு அலுவலக விலாசம் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை சொந்த இணையத்தளம் கூட இலலாதது சாதாரண விடையம் என விட்டுத்தள்ளக்கூடியதா?

    (இவர்கள் யாழ்ப்பாணத்தார் எதிர்பார்க்காத இன்னொரு தகவல் தொழிநுட்ப வியாபாரத்திலுமீடுபடுவதாக ஊகிக்கிறேன் சந்தேகம் தீர்ந்தால் அது பற்றி உறுதிப்படுத்துகிறேன்..)

     

கருத்துரையிடுக