வளர்ந்த
நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் வேலையில்லா பிரச்சனை
முக்கிய பிரச்சனையாக உள்ளது. தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பாரம்பரிய வேலைகளுக்கான
கேள்வி குறைந்து தொழில்நுட்பங்கள் அந்த இடத்தை பிடித்துக்கொண்டதால் பாரம்பரிய வேலைவாய்ப்புக்கள்
மேலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும்
தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக தொழில்நுட்பத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைவாய்ப்புக்கள்
திறந்து விடப்பட்டிருக்கின்றது.இந்த நிலையில் உண்மையில் வேலைவாய்ப்புக்களுக்குரிய தகுதி
வாய்ந்த வேலையாட்கள் இல்லாமை இலங்கை போன்ற
வளர்ந்து வரும் நாடுகளில் ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. வேலை தேடுவோருக்கும் வேலைதருநர்களுக்கும்
இடையிலான இடைவெளி அதிகரித்துக்கொண்டிருப்பதனை அனுமதித்துக்கொண்டிருக்க முடியாது. அதற்குரிய
காரணிகளை ஆராய்ந்து வேலைதேடுவோரின் திறமைகளை வளர்த்து அவர்களுக்குரிய வேலைவாய்ப்பினை
உறுதிசெய்யவேண்டிய கடமை சகல தரப்பினருக்கும் உள்ளது. அது அவர்களின் சுயதொழில் முயற்சியாண்மையினை
வளர்ப்பதாக கூட இருக்கலாம்.
வேலைவாய்ப்பு
குறைவுக்கு வெறுமனே ஒரு தரப்பினை மட்டும் காரணமாக்கிவிட்டு இருக்கமுடியாது. இந்த நிலையில்
மேலே நான் குறிப்பிட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறையினை பொறுத்தவரை வாய்ப்புக்கள் கொட்டிக்கிடக்கின்றன.
தகவல் தொழில்நுட்பம் எந்தளவுக்கு பாரம்பரிய வேலைவாய்ப்புக்களை குறைத்ததோ அதற்கு நிகராக
அத்துறைசார்ந்த வேலைவாய்ப்புக்களை அதிகரித்து விட்டிருக்கின்றது.
இந்நிலையில்
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த இளைஞர்களையும் யுவதிகளையும் தயார்படுத்த தனியார் துறை ஊடாக எவ்வாறு பங்களிப்புக்களை மேற்கொள்ள
முடியும் என்பதை இங்கு நோக்கலாம். தகவல்தொடர்பாடல் தொழில்நுட்பம் எளிதில் எல்லா தரப்பினராலும்
அணுகப்படக்கூடிய துறையாக இருக்கின்றது. இருப்பினும் இத்துறையில் எம்நாட்டில் தங்களை
வேலைவாய்ப்புக்காக தயார்படுத்துபவர்களின் எண்ணிக்கை திறமையின் அடிப்படையில் மிகக்குறைவாக
உள்ளது. அதிலும் பெண்களின் பங்கு மிக மிக குறைவாக உள்ளது.அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன
அவற்றிற்கு நடைமுறைச்சாத்தியமான தீர்வுகளை வழங்குவதன் மூலம் ஓரளவுக்கேனும் முன்னேற்றலாம்
தனியார்துறையினர்
தகவல்தொழில்நுட்பத்துறை தொழில் வாய்ப்புக்கள்
ஊடாக இந்த வீழ்ச்சியினை குறைப்பதற்கும்,
பயிற்சிகளை வழங்குவதற்கும் இத்துறைசார்ந்த மேம்பாடுகளை மேற்கொள்வதற்கும் எந்த வகையில்
உதவலாம் என்று இங்கு சிந்திப்பது சாலச்சிறந்தது. வடக்கில் இத்துறையில் ஒரு தொழில்முயற்சியாளனாய்
14 வருட அனுபவத்தின் அடிப்படையில் எனது கருத்துக்கள் அமைகின்றன.
தகவல்தொடர்பாடல்
துறைசார்ந்த தனியார் துறையினர் தமது வருடாந்த சமூக பணிகளுக்கான ஒதுக்கீட்டில் தகவல்
தொடர்பாடல் தொழில்நுட்ப விழிப்புணர்வு நிகழ்வுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதன்மூலமும்,அவ்வாறான
நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் பொதுநிறுவனங்களுக்கு அனுசரணை வழங்குவதன் மூலமும் சமூகத்தில்
உள்ள தகவல் தொடர்பாடல் தொடர்பிலான அறியாமை மற்றும் தெளிவின்மை தயக்கம் போன்றவற்றை போக்குவதற்கு
வழிசமைக்கலாம்.
பயிற்சிகளை
பொறுத்தவரை தொழில்தேடும் இளையவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சிறப்பு பயிற்சிகளுக்கு
தமது அனுபவங்களை நுட்பரீதியாகவும் வழிகாட்டல் போதனைகள் மூலமாகவும் வழங்க முடியும்.
பொதுவாகவே
பயிற்சி என்றவுடன் கல்விசார் ஆளணியினர் மூலமாகவே பெரும்பாலும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
அதை விடுத்து கல்வித்தகுதிக்கு அப்பால் அனுபவம் துறைசார்ந்த வல்லமை திறன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட தனியார் துறை நிறுவனங்களின் ஆளணியினைரை
சர்வதேச உள்ளுர் தொழிற்துறை வல்லுனர்களை இந்த பயிற்சிகளில் உள்வாங்குவதன் ஊடாக அர்த்தமுள்ள
தொழில் சார் பயிற்சிகளை வழங்கலாம். இதன் மூலம் தொழிற்சந்தையில் உள்ள சவால்களை எதிர்கொள்ளக்கூடியவர்களாக
அல்லது சுயதொழில் முயற்சியாண்மையில் ஈடுபடக்கூடியவர்களாக இளைஞர் யுவதிகள் மாற்றப்படலாம்.
இதைவிடவும்
உள்ளகப்பயிற்சிகளை நிறுவனங்களில் வழங்குவதன் மூலமும் தனியார் துறை பங்களிக்க முடியும்.
ஆனால் தனியார்துறை எப்போதும் இலாபத்தினை முன்னிலைப்படுத்துவதால் அவர்களின் வணிகரீதியான
செயற்பாடுகளுக்கு இவ்வாறான உள்ளக பயிற்சிகள் வழங்குகை பாதிப்பை ஏற்படுத்துவதை அவர்கள்
விரும்ப மாட்டார்கள். அதற்கு பரஸ்பரம் நன்மை கிடைக்கும் வகையில் பயிற்சிக்காலக்கொடுப்பனவையும் அவர்களுக்கு தேவையான
உபகரணங்களையும் , பயிற்சி பெறுவோருக்காக நிறுவனங்கள் தங்களை தயார் செய்யவேண்டிய வசதிகளுக்கான
வளங்களையும் நிபந்தனையின் அடிப்படையில் தொண்டு நிறுவனங்களோ அரசாங்கமோ வழங்குவதன் மூலம்
உள்ளக பயிற்சியின் ஊடாக உலகத் தரமான திறன்மிக்க மனித வலுவை வெளியீடாக பெறமுடியும்.
இதைவிட
அரசாங்கமானது , தனியார்துறையினருக்கான வசதிகளை அதிகரிப்பதன் மூலமும், தொழில்பாதுகாப்பினை
அனைவருக்கும் சமமானதாக்குவதன் மூலமும் , தனியார்துறைக்கும் அரசதுறைக்குமான வசதிகளில்
இடைவெளியினை இல்லாதொழிப்பதற்கான சட்டங்களை இயற்றுவதன்மூலமும் , தங்கள் திறனை வளர்த்தால்
தான் தங்களுக்கான வேலைவாய்பு உறுதிசெய்யப்படும் என்பதை இளையவர்களுக்கு உண்ர்த்துவதற்கு
முன்வரவேண்டும்
அத்துடன்
தொழில்திணைக்களம் அரச கட்டமைப்புக்கள் மற்றும் சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கான திணைக்களங்களின்
கட்டமைப்புக்கள் வணிக முயற்சிகளுக்கான அரச ஆதரவுகள் கடன் திட்டங்கள் அவற்றின் சேவைகள் இன்னும் இலகுவாக்கப்படவேண்டும்.
அரச கட்டமைப்புக்கள் யாவும் கணினிமயப்படுத்துவதன் மூலம் அரசிற்குள்ளும் தனியார்தறையிலும்
தகவல்தொழில்நுட்பத்துறைசார் வேலைவாய்ப்புக்கள் மேலும் வலுப்பெறும்.
இதன்மூலம்
தனியார்துறையின் பங்களிப்பு மேலும் அதிகரிக்கப்படும். தனியார்துறையினரும் உற்சாகமாக
வேலைவாய்ப்புக்களை அதிகரித்து தங்களை மேம்படுத்தும் அதே வேளை வேலைவாய்ப்புக்களையும்
உறுதிசெய்து கொள்ள வழிசமைக்கலாம்.
அரசாங்க
துறையுடன் ஒப்பிடும்போது இலங்கையினை பொறுத்தவரை சவால்கள் மிக அதிகம். இதனால் தொழில்பாதுகாப்பினை
உறுதி செய்வதற்கும் வேலைவாய்ப்பினை அதிகரிப்பதற்கும் உள்ளகப்பயிற்சிகளுக்கான சந்தர்ப்பங்களை
வழங்குவதற்கும் தனியார் துறை பின்னடிக்கின்றது. அத்துடன் வருகின்ற வேலையாட்கள் திறன்
குறைந்தவர்களாகவும் அடிப்படை தகவல் தொழில் நுட்ப அறிவினை மட்டும் கொண்டவர்களே அதிகமானவர்களாகவும்,
சான்றிதழ்களில் தெரியப்படுத்தப்பட்டிருக்கும் விடயங்களுக்கும் அவர்களின் உண்மையான தொழிற்திறனுக்கும்
மிகப்பெரிய இடைவெளி இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
தொழில்நுட்பக்கல்லுாரிகளில்
வழங்கப்பட்ட தொழிற்பயிற்சிகள் கூட பரீட்சைகளை மையமாக கொண்ட பெறுபேறுகளை கொண்டவையாகவும்
தற்போதுள்ள தொழிற்சந்தையினை எதிர்கொள்ள முடியாதனவாகவும்
உள்ளன. அந்தப்பயிற்சிகள் குறிப்பாக தகவல் தொடர்பாடல்
தொழில்நுட்ப பயிற்சிகள் தமது தரத்தினை மீளாய்வு செய்யவேண்டிய கட்டாயத்திலும் உள்ளன.
தகுந்த
பயிற்சிகள் தனியார் துறையின் ஒத்துழைப்புடன் வழங்கப்படும் பட்சத்தில் நிச்சயம் வேலைவாய்ப்பினை
அதிகரிக்க முடியும்.நாட்டின் பொருளாதாரமும் கட்டியெழுப்பப்படமுடியும்.
இலங்கையின்
வடக்கினை பொறுத்தவரை போரினால் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்டு மீண்டெழுகின்ற
பிராந்தியமாக உள்ளது. அத்துடன் தனக்கே உரிய பாரம்பரிய மனநிலையான அரச பணி செய்ய வேண்டும்
என்பதை நோக்காககொண்ட சமூககட்டமைப்பாகவும் காணப்படுகின்றது.
தற்போது
உட்கட்டமைப்புக்கள் ஓரளவுக்கு சரிசெய்யப்பட்டு விட்டாலும் இன்னும் முடிவுறுத்தப்படாத
சில அடிப்படைப்பிரச்சனைகளும் உள்ளன. இவற்றுக்கிடையில் தமது வேலையில்லாப்பிரச்சனைக்கும்
இளையவர்கள் முகம் கொடுத்தவண்ணம் இருக்கின்றனர். அத்துடன் போரில் பாதிக்கபட்ட பலர் தொழில்வாய்ப்பினை
தேடியவண்ணம் உள்ளனர் இவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு தகவல் தொழில்நுட்பத்துறையில்
உள்ள தயக்கத்தை நீக்கி அவர்களுக்கும் ஏனைய இளைஞர் யுவதிகளுக்கும் தகுந்த தொழிற்பயிற்சியினை
வழங்குவதில் கவனம் செலுத்தவேண்டிய தேவை உள்ளது.
நிறைய
நிறுவனங்கள் இங்கேயே ஆரம்பிக்கப்பட்டு அடுத்தநிலைக்கு செல்ல முடியாமல் உள்ளன. புதிய
முதலீடுகளை வெளியில் இருந்து தருவிக்கும் அதேவேளை ஏற்கனவே உள்ள நிறுவனங்களை மேம்படுத்தவேண்டிய
தேவையும் உள்ளது.அவற்றுக்கான திறன் மேம்மாட்டு பயிற்சிகள் மூலதன நிதி மற்றும் வளங்களை
அதிகரிப்பதற்கான உபகரண உதவிகள் தேவைப்படுகின்றன அதன்மூலம் அவற்றினை மேம்படுத்தி உலகத்தரம்வாய்ந்த
சேவைகளை வழங்கக்கூடியவர்களாக மாற்றலாம். அவர்களுக்கான சந்தையினை விரிவாக்கலாம் அதன்மூலம்
நம்பகரமான நீண்டகால வேலைவாய்பினை உறுதி செய்யமுடியும். அதை விட படிப்படியாக சமூகக்கட்டமைப்பில்
உள்ள வேலைவாய்ப்பு தொடர்பிலான பாரம்பரிய மனநிலைகளை
மாற்றவும் வேண்டிய தேவை உள்ளது.
வடக்கினை
பொறுத்தவரை தகவல்தொழில்நுட்பத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பொறுத்தவரை இரண்டு
வரையான தேவைகள் உள்ளன. நடுத்தர நிறுவனங்களுக்கு சர்வதேசதரச்சந்தைக்கு உரிய சேவைகள்
தயாரிப்புக்களை வழங்குவதற்கு தகுதிவாய்ந்த தகவல் தொழில்நுட்ப வேலையாட்கள் பற்றாக்குறை
ஒருபுறமும் , புலம்பெயர்ந்து சென்று அங்குள்ள பெருநிறுவனங்களில் வேலை செய்து மீள தம் தாய்நிலத்தில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கோ
அல்லது தென்பகுதியில் பெருநிறுவனங்களில் வேலை
செய்தவர்கள் அதே சம்பள அளவுகளில் தொழில் வாய்ப்பினை இங்கு பெற்றுக்கொள்வதற்கோ உரிய பெருநிறுவனங்கள் போதுமானதாக
இல்லாமையும் காணப்படுகின்றது. இந்த இடைவெளி நீக்கப்படவேண்டும்.
தகவல்
தொழில்நுட்பத்துறை கல்வி நிறுவனங்கள் இன்னும் தங்கள் தரத்தினை மேம்படுத்தவேண்டிய தேவையில்
உள்ளன.அனைத்து பாடநெறிகளும் பொதுக்கட்டமைப்பின் ஊடாக சரியாக நெறிப்படுத்தப்படவேண்டும்.
பிரபல தனியார் தேசிய கல்வி நிறுவனங்கள் கூட தமது கிளைகளை இங்கு பரப்பினாலும் அவர்கள்
தங்கள் போதானாசிரியர்களின் தரத்தையோ பாடநெறிகளின் தரத்தினையோ சரியாக பேணுவதில்லை என்ற
குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
தனியார்
துறையினருக்காக திறன்விருத்தி பயிற்சிகள் பெரும்பாலும் தென்னிலங்கையில் அல்லது தலைநகரினை
மையப்படுத்தியே நடைபெறுவதால் தமது அலுவல்களை விட்டு அப்பயிற்சிகளுக்கு அங்கு பயணிக்கும்
நிலையில் இங்குள்ளவர்கள் இல்லை அவையனைத்தும் வடக்கிலும் நடாத்தப்படவேண்டும்.
வேலைவாய்ப்பிற்கான தேவையும் அதற்கான மனிதவலுவும் தேவையான அளவு இருந்தபோதிலும்
வேலையாட்களின் திறன் மற்றும் அவர்களை உள்வாங்கக்கூடியளவிலான சிறிய நடுத்தர நிறுவனங்கள் மீதான முதலீடுகளை கவரக்கூடிய
வகையிலான உட்கட்டுமானம் மேலும் வளப்படுத்தப்படவேண்டியுள்ளது.
குறிப்பாக.வடக்கில்
இருந்து வெளிப்பிராந்தியங்களுக்கான போக்குவரத்திற்கான நேரத்தை மிச்சப்படுத்த உள்ளுர்
விமானநிலையமோ சர்வதேச விமான நிலையமோ வடக்கில்
இயங்கவேண்டிய தேவை உள்ளது. அதன்மூலம் சர்வதேச வளவாளர்களின் வருகை மற்றும் முதலீட்டாளர்களை
மேலும் கவரக்கூடிய நிலை உருவாகும்.
சுயதொழில்முயற்சியாண்மை
, புதிய பிராந்திய ரீதியிலான மற்றும் உலகளாவிய வணிகத்திட்டங்களை உருவாக்கல் குழு முயற்சிகளை
எல்லாமட்டத்திலும் ஊக்குவித்தல் போன்றவற்றின் மூலம் வடக்கின் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு
சந்தையினை விரிவாக்கலாம்.
தனியார்
துறையில் தகவல்தொழில்நுட்பத்துறைசார்ந்த நிறுவனங்களின் பிராந்திய குழுமங்களை பலப்படுத்தி தரம் , வேலைவாய்ப்பு நடத்தை ஒழுங்குகள் , திறன்விருத்தி ,புதிய புத்தாக்கங்கள் ஆகியவற்றில் அவற்றின் நடவடிக்கைகளை ஊக்குவிக்கவேண்டிய தேவை உள்ளது.அத்துடன் தரமான தொழிற்கல்வியையும்
உறுதி செய்யவேண்டியுள்ளது.
சகல
தரப்பும் ஒன்றிணைந்தால் இது சாத்தியமே.
.முற்றும்.