வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

சூறாவளிக்குபின்-01

Posted by Thava செவ்வாய், 2 டிசம்பர், 2008

மழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில் நீயோ இங்கு வருவதில்லை...

என்ற பாடல் வரிகள் தான் எனக்கு இதை எழுத முனையும் போது தோன்றுகின்றது. ஆம் நவம்பர் 26 அதிகாலை எனது இளைய தங்கை விழித்து அண்ணா! நிலத்தை கொஞ்சம் தொட்டுப்பார் என கூற சலிப்புடன் நித்திரை கலக்கத்துடன் கட்டிலிருந்தவாறே கையினை நிலத்தில் விட்டேன் அதிர்ந்து விட்டேன் அறைக்குள் வெள்ளம். சுதாரித்து எழுந்து காலை ஊன்றினேன் தட்டுத்தடுமாறி வெளியே வந்து பார்த்தேன் அந்தோ பரிதாபம் வீடெல்லாம் வெள்ளம். வீட்டுக்குள் வெள்ளம் என்று எழுத்துக்களில் கேள்விப்பட்டிருக்கிறேன் படங்களில் பார்த்திருக்கின்றேன் .ஆனால் நேரில் இதுவரை உணர்ந்ததில்லை.

படிக்குமேல வெள்ளம் இனி சாண் என்ன முழம் என்ன? வீடே பரபரப்பானது ஓடும் பொருட்கள் மிதக்கும்பொருட்கள் அமிழ்ந்தபொருட்கள் நாய்க்குட்டி என தேடி எடுத்து மேலே வைத்தோம் வெளியில் வந்து பார்த்தால் கேற் அரைவாசி நீருக்குள் அமிழ்ந்திருந்ததது. துாரத்தே மனோன்மணி அம்மன் கோயில் வரை ஒரே வெள்ளக்காடு கிணறும் அதற்குள் சங்கமம். எமது வீடு நல்லுார் முருகன் கோயில் பின் வீதியில்  வடக்கு வீதி வந்து ஏறும் மூலையில் துர்க்காமணிமண்டபத்திற்கு வலது புறமாக மனோன்மணி அம்மன் கோயிலை பார்த்தவண்ணம் இருக்கிறது. ஆம் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது விட்டுக்குள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களின் சில்லுகள் கால்வாசிக்கு நீருக்குள் அமிழ்ந்திருந்தன. குசினியில் புனை கதிரையில் ஏறி இருந்தது. மலசலக்கூட குழிக்குள் நீர் நிரம்பியிருந்தது.

இதற்கு முதல் இரண்டுநாட்களாக விடாத அடைமழை பெய்தவண்ணம் இருந்தது. பேஸ்புக்கில் யாழில் அடைமழை கொட்டுது என எழுதிவிட்டிருந்தேன் விட்டு விட்டு வருகின்ற மின்சாரமும் விட்டு விட்டு வந்தது.வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் சென்றுவருகையில் இரண்டு நாட்களும் உடை நனைந்தே போயிருந்தது வேலையும் டல்லாகவே போனது. எடுக்க இருந்த வகுப்புக்கள் யாவும் இரத்துச்செய்திருந்தேன். இணையவசதி கூட மட்டுப்படுத்தப்பட்டிருந்தது காரணம் ரெலிக்கொம் இனது பாரிவர்த்தனை கோபுரத்தில் ஏற்பட்ட கோளாறுகாரணமாக தொலைபேசி இணைப்பு வெளிச்செல்கை பாதிக்கப்பட்டிருந்தது  சீடிஎம்ஏ பீ கார்ட் இணைப்பில் இருந்துதான் மெதுவான இணைய வசதியை பெறக்கூடியதாக இருந்தது. எது எப்படியோ டயலொக் இணைப்பு மட்டும் இருந்தது.

யாழ் மிட்டவுண் றோட்டரகட் கழகத்தினரின் அமெரிக்கன் கிறீன்கார்ட் விசாவுக்கான விண்ணப்பங்களை இவ்வளவுகாலமும் வேலைப்பழு காரணமாக வைத்திருந்து விட்டு கடந்த இரண்டுநாட்களாகத்தான் அனுப்பத்தொடங்கியிருந்தேன் மழைக்குளிரையும் பொருட்படுத்தாமல் மெல்லமெல்ல அனுப்பிக்கொண்டிருந்தேன்..இதுக்குள்ள இளையதங்கைக்கு கொழும்பிலுருந்து ஈரோ விமான பொதி சேவை(சேவையா இது?) ஊடாக தம்பி அனுப்பிய புத்தகங்களை வந்திட்டுதா என நாளுக்கு இரண்டுதரம்  சென்று விசாரித்து விட்டு வரவேண்டிய துர்ப்பாக்கிய நிலை வேறு. மறந்தும் உங்கட பொருட்களை அவர்களிடம் கொடுக்காதீங்க  இரண்டு நாளில அனுப்பிறம் எண்ட சொல்லி வாங்கினவங்கள் ஒருமாதமாக அனுப்பி இன்று(டிசம்பர் 2) தான் கிடைத்தது.இப்படியே மழைக்குள் எனது சோகப்பயணம் சென்றுகொண்டிருந்தது.

முதல் நாள் இரவு மூத்த தங்கை தனது நண்பிகளின் வீட்டுக்கு வெளியே நின்ற இடுப்பளவு வெள்ளக்காட்சிகளின் நிழல் படங்களை கணினியில் போட்டுக்காட்டியபோது வியந்த எமக்கு  பாதம் மறைக்கும்  வரை நின்றிருந்த வெள்ளம் படிதாண்டி வீட்டுக்குள் பாய்ந்திருந்தபோது என்ன சொல்வது? வெள்ளத்தில் சலம் கழிப்பது எனக்கொன்றும் புதிதல்லவே! ஒருவாறு காலைக்கடன் தவிர சகலதையும் முடித்து பைப் தண்ணியில் முகத்தை கழுவியபின் கட்டிலில் ஏறி மீண்டும் நித்திரை செய்ய முயற்சித்தோம். என்னிடமிருந்த கைத்தொலைபேசி மட்டும் நல்ல மின்சாரத்துடன் இருந்தது இணைப்பு பெயருக்கு மட்டுமே இருந்தது தொலைபேசி வெளியிடத்துக்கு எடுக்க முடியவில்லை தம்பியுடன் மட்டும் 9 மணிக்கு இணைப்பு கிடைத்தது. மூத்த தங்கை எஸ்எம்எஸ் ஊடாக தகவல் பாரிமாறிக்கொண்டிருந்தாள் தேனீா் அருந்தவில்லை சாப்பாடு இல்லை காலை சாப்பிட்ட பிஸ்கட் தாக்குப்பிடிக்கவில்லை வயிறு கிளறியது மதியம் மீண்டும் கண்விழித்தோம். சாப்பாட்டுக்கு ஏதாவது வழி செய்ய வேண்டும் என இளையவள் கூறினாள் நானும் வெளியில் போக முடிவெடுத்தேன்.(தொடரும்)

0 comments

கருத்துரையிடுக