வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

வெருண்டவன் கண்ணுக்கு ...

Posted by Thava வெள்ளி, 5 டிசம்பர், 2008 0 comments

"நான்  இதை நம்பத்தயாராக இல்லை. சுனாமி வந்த பின்பு தான் நமக்கு சுனாமி என்றால் என்ன என்பதே தெரியவந்தது. அதன் பிறகு ஒவ்வொருமாதமும் சுனாமி வதந்திகள் அது போலத்தான் நிசா சூறாவளி பீதிகளும் வெருண்டவன் கண்ணுக்கு அருண்டதெல்லாம்  பேய் என்று சொல்வார்கள் இதுபோலத்தான் இதுவும் இப்படி எச்சரிக்கை தருவதாக இருந்தால் நிசா வரமுதலே சொல்லியிருக்கலாமே!"

இப்படி எனது கருத்தை ஃபேஸ்புக்கில் நண்பா் ஒருவரின் சூறாவளி எதிர்வு கூறலுக்கு பதிலாக வழங்கியிருக்கிறேன். இந்தக்கருத்தை ஏற்கனவே பதிவு செய்ய எண்ணினேன் இப்போது பதிகிறேன் நான் பொதுவாக எதிர்வு கூறல்களை மறுக்கின்றேன் இந்த உலகம் அழியப்போகிறது என்று பலவாறான எதிர்வு கூறல்கள் கூறப்பட்டன. இது வரை எதுவும் நடைபெறவில்லை. நாம் வாழ்வது அறிவியல் முன்னேற்றம் அடைந்த உலகில் என்பதை மனதில் கொள்ளவேண்டும் நாம் எதிர்பாராமல் பல நடந்தேறிவிட்டன இவற்றை யாரும் எதிர்வு கூறினார்களா அதற்கான தடுப்பு ஏதும் செய்யமுடிந்ததா? ஆயினும் சில விடயங்களை நமது அறிவியல் சாதித்திருக்கிறது எம்முலகை மோத வந்த வால் நட்சத்திரத்தை விண்ணிலேயே கபளீகரம் செய்த அமரிக்க ஏவுகணை தாக்குதலை இதற்கு உதாரணமாக கூறலாம்.

அணுகுண்டுத்தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத்தான் தெரியும் அதன் தாக்கம் அவர்களிடம் போய் இன்னொருமறை உங்கள் மீது அணுகுண்டு போடப்போகிறார்கள் என்று சொன்னால் எப்படி இருக்கும்? நிச்சயம் இரண்டு மடங்கு கலக்கமடைவார்கள் தான்.இது போலத்தான் சாதாரணமாக சூறாவளி மழை பற்றி அன்றாடம் விடுக்கப்படும் எச்சரிக்கைகள் யாவும் சுனாமி புகம்பம் நிசா வகை சூறாவளிக்கான எதிர்வு கூறல்களாக மாறிவிடுகின்றன. முன்பு சாதாரணமாக விடுக்கப்படுகின்ற எச்சரிக்கைகளை அசட்டை செய்வதில்லை இப்போது சிறு மழைக்கான எச்சரிக்கைகளும் பருவமழை பருவக்காற்றுக்களும் சுனாமிக்கான எதிர்வு கூறல்களாகிவிடுகின்றன.

நமது ஆசியநாடுகளில் சமய நம்பிக்கை சம்பிரதாயங்களில் மக்கள் கூடிய நம்பிக்கை  வைப்பதை பலருடய வாய்க்கரிசியாகிவிடுகிறது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் பகுத்தறிந்து உண்மையான தகவல்களை பரப்புரை செய்யவேண்டும் இதுவிடயத்தில் அதிகாரிகளும் ஊடகங்களும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் தமது பெயா்கள் ஊடகங்களில் அடிபடவேண்டும் என்பதற்காக உணா்வு புர்வ தகவல்களை வெளியிடக்கூடாது சரியான விளக்கத்தினை வழங்கவேண்டும்.நவம்பர் 26 இல் விசியது 80கிமீ வேக சூறாவளி ஈனால் இப்போது எதிர்பார்க்கப்படுவது 50-60 மட்டுமே URL: http://www.meteo.slt.lk

யாழ்ப்பாணத்தில் யாரோ சொல்லிவிட்டார்கள் வரும் 12ம் திகதி மீண்டும் வெள்ளப்பெருக்கு வரும் என்று அவ்வளவுதான் பலர் அழுக்கு நீரால் நிரம்பிய தமது கிணறுகளை இறைக்காமல் காத்திருக்கிறரா்கள் நம்ம சனம் எல்லாத்துக்கும் கணக்கு பார்க்கிறதுகள் என்பது யாவரும் அறிந்ததே. (எமது கிணறு வெள்ளநீர் புகுந்த காரணத்தினால் 4 இயந்திரம் கொண்டு இறைக்க 4000 ரூபா செலவானது)

எனவே நான்சொல்வது என்னவென்றால் சும்மாதானும் பிழையான செய்திகள் பரவுவதற்கு ஊடகமாக இருக்கக்கூடாது என்பததான் இது அந்த நண்பருக்கு எதிரான கருத்தல்ல நண்பர் ஊடகத்ததில் படித்த செய்தியினைத்தான் சொல்லியிருந்தார். ஊடகம் செய்தியை வெளியிட்ட விதம் தான் பிழையாக இருக்கக்கூடும் அல்லது மக்களின் பீதியின் வெளிப்பாடாக இருக்கலாம்..

இலங்கை மக்களே நீங்கள் வானிலை எதிர்வு கூறல் சம்பந்தமான தகவல்களை அரசாங்க வானிலை அவதானிப்பு நிலைய இணையத்தளத்தில் பார்வையிடலாம் URL: http://www.meteo.slt.lk

சூறாவளிக்குபின்-01

Posted by Thava செவ்வாய், 2 டிசம்பர், 2008 0 comments

மழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில் நீயோ இங்கு வருவதில்லை...

என்ற பாடல் வரிகள் தான் எனக்கு இதை எழுத முனையும் போது தோன்றுகின்றது. ஆம் நவம்பர் 26 அதிகாலை எனது இளைய தங்கை விழித்து அண்ணா! நிலத்தை கொஞ்சம் தொட்டுப்பார் என கூற சலிப்புடன் நித்திரை கலக்கத்துடன் கட்டிலிருந்தவாறே கையினை நிலத்தில் விட்டேன் அதிர்ந்து விட்டேன் அறைக்குள் வெள்ளம். சுதாரித்து எழுந்து காலை ஊன்றினேன் தட்டுத்தடுமாறி வெளியே வந்து பார்த்தேன் அந்தோ பரிதாபம் வீடெல்லாம் வெள்ளம். வீட்டுக்குள் வெள்ளம் என்று எழுத்துக்களில் கேள்விப்பட்டிருக்கிறேன் படங்களில் பார்த்திருக்கின்றேன் .ஆனால் நேரில் இதுவரை உணர்ந்ததில்லை.

படிக்குமேல வெள்ளம் இனி சாண் என்ன முழம் என்ன? வீடே பரபரப்பானது ஓடும் பொருட்கள் மிதக்கும்பொருட்கள் அமிழ்ந்தபொருட்கள் நாய்க்குட்டி என தேடி எடுத்து மேலே வைத்தோம் வெளியில் வந்து பார்த்தால் கேற் அரைவாசி நீருக்குள் அமிழ்ந்திருந்ததது. துாரத்தே மனோன்மணி அம்மன் கோயில் வரை ஒரே வெள்ளக்காடு கிணறும் அதற்குள் சங்கமம். எமது வீடு நல்லுார் முருகன் கோயில் பின் வீதியில்  வடக்கு வீதி வந்து ஏறும் மூலையில் துர்க்காமணிமண்டபத்திற்கு வலது புறமாக மனோன்மணி அம்மன் கோயிலை பார்த்தவண்ணம் இருக்கிறது. ஆம் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது விட்டுக்குள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களின் சில்லுகள் கால்வாசிக்கு நீருக்குள் அமிழ்ந்திருந்தன. குசினியில் புனை கதிரையில் ஏறி இருந்தது. மலசலக்கூட குழிக்குள் நீர் நிரம்பியிருந்தது.

இதற்கு முதல் இரண்டுநாட்களாக விடாத அடைமழை பெய்தவண்ணம் இருந்தது. பேஸ்புக்கில் யாழில் அடைமழை கொட்டுது என எழுதிவிட்டிருந்தேன் விட்டு விட்டு வருகின்ற மின்சாரமும் விட்டு விட்டு வந்தது.வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் சென்றுவருகையில் இரண்டு நாட்களும் உடை நனைந்தே போயிருந்தது வேலையும் டல்லாகவே போனது. எடுக்க இருந்த வகுப்புக்கள் யாவும் இரத்துச்செய்திருந்தேன். இணையவசதி கூட மட்டுப்படுத்தப்பட்டிருந்தது காரணம் ரெலிக்கொம் இனது பாரிவர்த்தனை கோபுரத்தில் ஏற்பட்ட கோளாறுகாரணமாக தொலைபேசி இணைப்பு வெளிச்செல்கை பாதிக்கப்பட்டிருந்தது  சீடிஎம்ஏ பீ கார்ட் இணைப்பில் இருந்துதான் மெதுவான இணைய வசதியை பெறக்கூடியதாக இருந்தது. எது எப்படியோ டயலொக் இணைப்பு மட்டும் இருந்தது.

யாழ் மிட்டவுண் றோட்டரகட் கழகத்தினரின் அமெரிக்கன் கிறீன்கார்ட் விசாவுக்கான விண்ணப்பங்களை இவ்வளவுகாலமும் வேலைப்பழு காரணமாக வைத்திருந்து விட்டு கடந்த இரண்டுநாட்களாகத்தான் அனுப்பத்தொடங்கியிருந்தேன் மழைக்குளிரையும் பொருட்படுத்தாமல் மெல்லமெல்ல அனுப்பிக்கொண்டிருந்தேன்..இதுக்குள்ள இளையதங்கைக்கு கொழும்பிலுருந்து ஈரோ விமான பொதி சேவை(சேவையா இது?) ஊடாக தம்பி அனுப்பிய புத்தகங்களை வந்திட்டுதா என நாளுக்கு இரண்டுதரம்  சென்று விசாரித்து விட்டு வரவேண்டிய துர்ப்பாக்கிய நிலை வேறு. மறந்தும் உங்கட பொருட்களை அவர்களிடம் கொடுக்காதீங்க  இரண்டு நாளில அனுப்பிறம் எண்ட சொல்லி வாங்கினவங்கள் ஒருமாதமாக அனுப்பி இன்று(டிசம்பர் 2) தான் கிடைத்தது.இப்படியே மழைக்குள் எனது சோகப்பயணம் சென்றுகொண்டிருந்தது.

முதல் நாள் இரவு மூத்த தங்கை தனது நண்பிகளின் வீட்டுக்கு வெளியே நின்ற இடுப்பளவு வெள்ளக்காட்சிகளின் நிழல் படங்களை கணினியில் போட்டுக்காட்டியபோது வியந்த எமக்கு  பாதம் மறைக்கும்  வரை நின்றிருந்த வெள்ளம் படிதாண்டி வீட்டுக்குள் பாய்ந்திருந்தபோது என்ன சொல்வது? வெள்ளத்தில் சலம் கழிப்பது எனக்கொன்றும் புதிதல்லவே! ஒருவாறு காலைக்கடன் தவிர சகலதையும் முடித்து பைப் தண்ணியில் முகத்தை கழுவியபின் கட்டிலில் ஏறி மீண்டும் நித்திரை செய்ய முயற்சித்தோம். என்னிடமிருந்த கைத்தொலைபேசி மட்டும் நல்ல மின்சாரத்துடன் இருந்தது இணைப்பு பெயருக்கு மட்டுமே இருந்தது தொலைபேசி வெளியிடத்துக்கு எடுக்க முடியவில்லை தம்பியுடன் மட்டும் 9 மணிக்கு இணைப்பு கிடைத்தது. மூத்த தங்கை எஸ்எம்எஸ் ஊடாக தகவல் பாரிமாறிக்கொண்டிருந்தாள் தேனீா் அருந்தவில்லை சாப்பாடு இல்லை காலை சாப்பிட்ட பிஸ்கட் தாக்குப்பிடிக்கவில்லை வயிறு கிளறியது மதியம் மீண்டும் கண்விழித்தோம். சாப்பாட்டுக்கு ஏதாவது வழி செய்ய வேண்டும் என இளையவள் கூறினாள் நானும் வெளியில் போக முடிவெடுத்தேன்.(தொடரும்)