வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

தென்னிலங்கை நிறுவனங்களுக்கு யாழ்ப்பாணம் என்பதே ஒரு விற்பனைப்பொருளாகிவிட்டது! அதற்கு இங்குள்ள யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்றமும் துணைபோவது வருத்தத்திற்குரியது

சர்வதேச நிறுவனம் எதுவுமும் பங்கேற்கவில்லை பெயின்ற் தொடங்கி சவர்காரம் வரை வழமையாக நாங்கள் கேள்விப்பட்ட நுகர்ந்துகொண்டிருக்கின்ற பொருட்களையும் சேவைகளையும் வழங்கும் தென்னிலங்கை நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளன 

ஒரு ஓரமாக உள்ளூர் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது அந்தப்பகுதியில் நடந்து செல்லும் போது கல்லும் மண்ணுமாக இருந்தது.ஆனால் அதற்குள்ளும் இந்தியன் உடுப்புக்கடைகள் இடம்பிடிந்த்திருந்தன.உண்மையில்  யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்ற தலைவர் கூறுவதுபோல இங்குள்ளவர்களின் வணிகத்தினை மேம்படுத்துவது இது நோக்கமில்லை அவர்கள் (வெளியார்) கடையினை திறப்பதற்கான அல்லது மேலும் காலுான்றுவதற்கான நுழைவாயில் தான் இந்த கண்காட்சி. 

யாழ்ப்பாண மக்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கவனத்தில் கொண்டு கல்வி  என்ற ஒரு பிரிவை வெளிநாட்டு கல்வியை மையப்படுத்தி ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.எப்படி எங்கட ஆட்களை கண்காட்சிக்கு அழைக்கவேண்டும் என்பதை தெரிந்தே வைத்திருக்கின்றார்கள்

பார்வையாளரிடம் 25 ரூபா (பெரும்பாலானவர்கள் 30 ரூபா செலுத்திச்சென்றனர்) அறவிடுகின்றனர். அவர்கள் காட்சிப்படுத்த பார்வையாளர் ஏன் பணம்செலுத்தவேண்டும்? மக்களுக்கு சிறு ஆறுதல் சில நடனங்களும் வீதியை இடைமறித்த மோட்டார் வண்டி சாகசமும் மட்டுமே. மிக்சர் கடை (100g 60/=)கூட தென்னிலங்கையில் இருந்து இறக்குமதி. எங்கே போனது நமது சுயம்? பல வருடங்களாக தொடரும் இந்த கண்காட்சி மாற்றம் காணப்படவேண்டும்

நானும் யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் ஒரு உறுப்பினர் என்ற வகையில் இதனை  எதிர்க்கின்றேன்.இந்த கண்காட்சியினை தென்னிலங்கை நிறுவனம் ஒன்று தனது வர்த்தக நோக்கில் ஒழுங்குபடுத்துகின்றது. ஆரம்பத்தில் 2009 யுத்த வெற்றியினை பதிவுசெய்யவும் தமது அரசியல் பயணத்திற்காகவும் மகிந்த அரசினால் உள்ளுர் அரசியல்வாதிகளால் அது ஆரம்பிக்கப்பட்டது இதனால் கூடுதலாக பயன்பெறுகின்ற தரப்பு அந்த நிறுவனமும் தென்னிலங்கை உற்பத்தியாளர்களும் தான்.கடந்த வருடம் வர்த்தக தொழிற்துறை மன்றம் உறுப்பினர்களாக இது குறித்து எதிர்ப்புக்கைளை நாம் பதிவு செய்திருந்தோம் அப்போது உபதலைவராக இருந்த தற்போதைய தலைவர் அடுத்த முறை ஒப்பந்தத்தினை நிறுத்துவதாக கூறியிருந்தார் ஆனால் அவர் தற்போது தலைவர் ஆனால் அதை கவனத்தில் எடுக்கவில்லை.

இந்தவருடம் உள்ளே என்ன நடந்தது எனறு யாருக்கு தெரியும். ஆகக்குறைந்தது விலகியாவது இருந்திருக்கலாம். யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்றம் உள்ளுர் ஆட்களுக்கு சரியான சந்தைவாய்ப்பினை ஏற்படுத்துவதில் தவறியிருக்கிறது.அதேநேரம் மேலும் அவர்களை பாதிக்கும் வகையில் தான் தொழிற்படுகின்றது.யாழ்ப்பாணத்தில் ரில்கோ விடுதியில் மகிந்தவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மன்றத்தின் பெயர் மறைமுகமாக உபயோகிக்கப்பட்டதை மறவோம். 

கடந்த முறை எனது நிறுவனம் கூட பிழையான வகையில் அணுகப்பட்டதால் கலந்துகொள்வதையே தவிர்த்திருந்தேன். இம்முறை திரும்ப திரும்ப அழைத்திருந்தனர் நான் கலந்து கொள்ளவில்லை எனக்கு தெரியும் சரியான வகையில் உள்ளுர் ஆட்களை அவர்கள் கையாளமாட்டார்கள் என்று அதுவே இம்முறையும் நடைபெற்றிருக்கிறது. இவர்கள் தென்னிலங்கை பொருட்களை காசு கொடுத்து எங்கட ஆட்களை பார்க்க வைத்திருக்கிறார்கள்.உள்ளுர் பகுதிக்கு நிலவிரிப்பு இல்லை.

இவற்றினை கண்டறிய நான் இன்று செலவழித்தது 10+25+60= 95/-  + 1 மணித்தியாலம்

வடக்கு மற்றும்  கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய தென்னிலங்கை மற்றும் சர்வதேச வருகையாளர்களையும் கவர்ந்து இழுக்கக்கூடிய வகையிலான உள்ளுர் சகல துறை உற்பத்திகள் சேவைகளுக்காக சர்வதேச சந்தையினை ஏற்படுத்திக்கொடுக்கக்கூடியதும் எமது கலை கலாச்சாரங்களை வெளிப்படுத்தக்கூடியதுமான மாபெரும் கண்காட்சி Carnivel ஒன்றை நடாத்தவேண்டிய தேவை எமது வடமாகாண அரசுக்கு உள்ளது. தென்னிலங்கை நிறுவனங்களின் பொருட்களையோ சேவைகளையோ மீள்விற்பனை செய்பவர்களை இதனுள் அனுமதிக்ககூடாது.செய்யுமா ? முடியாதது என்று எதுவும் இல்லை! 

என்னவளம் இல்லை இத்திருநாட்டில் ஏன் நம்பி வாழவேண்டும் தென்நாட்டை?