வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

புலம்பெயர்ந்தவர்களே முதலிடுங்கள்!

Posted by Thava புதன், 16 அக்டோபர், 2013 0 comments

வடக்கு கிழக்கில் மக்களின் வாழ்வாதாரம்அபிவிருத்தி கல்வி மேம்பாடு போன்ற வற்றில் அக்கறை செலுத்தும் புலம்பெயர் உறவுகளில் பெரும்பாலானவர்கள் குறுகிய கால நன்மை தரக்கூடிய உதவிகளில் தான் நிறைய பங்களிப்பனை செய்து வருவதை அவதானிக்க முடிகிறது. மாணவருக்கு பயிற்சிக்கொப்பி ,விதைவைக்கு உதவிப்பணம் வாங்கிக்கொடுப்பதில் ஆரம்பிக்கிறது அவர்களின் உதவி. 

உதவி தேவையானவர்களைவிட வழங்குதற்காக முளைத்துள்ள உள்ளுர் உதவி வழங்கும் நிறுவனங்கள் , இணையத்தளங்களின் எண்ணிக்கை அதிகம். புலம்பெயர்ந்தவர்கள் நீண்டகால நோக்கிலான உதவிகளை செய்வதே நல்லது. குறித்த உதவி தொடர்ந்து வழங்கக்கூடிய அல்லது உதவிபெறுபவர்கள் தங்கி வாழ்வதில் இருந்த மீண்டு வரக்கூடிய நிலையினை எய்தும்வரையிலான உதவிகளாக இருப்பதற்கு உறுதிசெய்யவேண்டும்

அப்பியாசக்கொப்பிகளை வழங்குவதிலேயே அரசியலை ஆரம்பிக்கிறார்கள் இங்குள்ள அரசியல்வாதிகள். ஒரு வீடமைப்புத்திட்டத்தினை வழங்கலாம். ஒரு கல்விக்கூடத்தினை ஆரம்பிக்கலாம்(வெளிநாட்டுக்கு அனுப்புவோம் என்று கூறும் கூடங்களை அல்ல,வெளிநாட்டு பல்கலைக்கழகத்துக்கு ஆட்பிடிக்கும் நிலையங்களையும் அல்ல). பாடசாலை உபகரணங்களை உற்பத்திசெய்யும் நிறுவனங்களை ஆரம்பித்து வேலை வாய்ப்பினை கொடுத்து அதன் இலாபத்தினை மாணவர்களுக்கு உதவியாக வழங்கினால் நிறைய மாற்றம் ஏற்படும்.

நிதியங்களை ஏற்படுத்தி அதன் வட்டியில் இருந்து மாணவர் புலமைப்பரிசில்களை வழங்கலாம்,மருத்துவ உதவிகளை வழங்கலாம். புதிய மருத்துவமனைகளுக்கும் இது பொருந்தும்.பாதிக்கபட்ட மக்களுக்கு சலுகை வழங்கலாம்.


இதைவிட எம்மக்களின் அவலங்களை காட்டி புலம்பெயர் தேசங்கள் பலவற்றில் இன்னும் பணம்சேகரிப்பு நின்றபாடில்லை. சரி சேகரிக்கப்படுபவை உரியவர்களை உரிய திட்டங்களினை அடைகின்றனவாயின் சந்தோசப்படலாம் ஆனால் ஒரு சில தவிர பல சேகரிப்பவர்களின் பொக்கட்டுக்களுக்குள்ளேயே போகின்றன.அதனால் உண்மையாக சேவை செய்ய முன்வருபவர்களுக்கும் பின்னாளில் உதவி இல்லாது போகின்றது.

எனவே புலம் பெயர்ந்தவர்கள் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கிலான நிலையான முதலீடுகள் பற்றி சிந்திக்க வேண்டும். நீங்கள் நீர்கொழும்பில் கோட்டலுக்கு முதலீடு செய்ய இங்கு காங்கேசன்துறையில் கோட்டலுக்கு இராணுவத்தினர் முதலீடு செய்கின்றனர்.

பலர் இங்கு உறவினர்களால் பிழையாக வழிநடாத்தப்படுகின்றனர். தமது குறுகிய கால நலன்களுக்காகவும் உடனடி பணக்காரத்திட்டங்களுக்காகவும் முதலீடுகளை பிழையாக பயன்படுத்துகின்றனர்.முதலீட்டாளர்களின் சரியான நேரடி கண்பாணிப்பின்மையாலும் பொறுப்பற்ற முகாமைத்துவங்களால் தொழிற்துறைகள் தோல்வியடைகின்றன.

இங்கே கடைகளை கட்டுவதற்குதான் முதலீடுகள் வருகின்றனவே தவிர தொழில் முயற்சிகளுக்கு முதலீடுகள் கிடைப்பதில்லை. தொழிற்துறை ஆளுமையுள்ளவரிடம் பணம் இல்லை பணமுள்ளவரிடம் தொழிற்துறை ஆளுமை இல்லை. முதற்தோல்வியிலேயே முழுவைதையும் கைவிட்டோடுவதற்கு அவர்களுக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி அன்பளிப்புக்கள் வழிகோலுகின்றன. 


கட்டப்பட கடைத்தொகுதிகள் பல முற்பணங்களுக்காக காத்திருக்கின்றன. இன்னமும் கட்டிடங்கள் முளைக்கின்றன. உற்பத்தி மற்றும் சேவைகள் குறித்த தொழிற்துறை முயற்சிகளுக்கான முதலீடுகள் மிக மிக குறைவாக காணப்படுகிறது. வாங்கி விற்கும் முயற்சிகளுக்கு தான் முதலீடுகள் கரைகின்றன. சரியான திட்டமிடலின்றி வியாபாரம் செய்து விட்டு உலக ஒழுங்கில் தமது முயற்சிகளை செய்யாமல் விட்டுவிட்டு வங்கிகளை குறை கூறி சொல்லாமால் கொள்ளாமல் தப்பி ஓடுகிறார்கள்.

நீண்டகால பொருளாதார மாற்றத்தினை நோக்கிய , தூரநோக்குடைய தொழில் முயற்சிகள் குறைவு. ஒருவர் செய்தால் அதைப்பார்த்து மற்றவரும் அதேபோல செய்யும் மனப்பான்மை வளர்ந்துவருகின்றது.

புலம்பெயர்ந்தவர்கள் இங்கு முதலீடு செய்வதற்கு அதுவும் சரியான முகாமைத்துவம் சந்தைப்படுத்தல் கணக்கியல் நடைமுறைகள் திட்டங்கள் உடனான முயற்சிகளில் ஈடுபட முன்வரவேண்டும். 

அரசாங்கம் புலம்பெயர்ந்தவர் முதலீட்டை ஆதரிக்கின்றது அதில் ஏதோ உள் நோக்கம் இருக்கின்றது என பலர் பயப்படுகின்றனர். உண்மைதான் அரசாங்கத்தின் உள்நோக்கத்தில் முக்கியம் தனது அரசை பொருளாதார சரிவில் இருந்து காப்பாற்றவேண்டும். அதேவேளை தனது பங்குடமையினை குறிப்பிட்ட இடங்களில் உறுதிசெய்து அரசில் உள்ளவர்கள் தமது சொந்த வங்கி வைப்பினையும் அதிகரிக்கவேண்டும் என்பதுதான். இதை நாம் அறிவு பூர்வமாக பயன்படுத்தி எமது பிரதேசங்களை வளப்படுத்தலாம். தேவையற்ற பயத்தினை கையிடலாம். அதேவேளை பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தலாம்.


நவீன தோட்டங்கள் உருவாக வேண்டும். சூழலை சூறையாடாத கைத்தொழிற்பேட்டைகள் வரவேண்டும்.மாசு தரும் மற்றும் எம் இயற்கை வளங்களை இல்லாதொழிக்கும் தொழிற்சாலைகள் அவசியமில்லை.மீள் சுழற்சி முறையிலான் உற்பத்தி பொறிமுறை வளர்க்கப்படவேண்டும்

”நெல்லுக்கு இறைக்கும் நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் ” என்பதற்கிணங்க நன்மை அவர்களுக்கும் (அரசு) கிடைக்கபோகின்றதென்றாலும் நாம் எமது பிரதேசத்தை முதலீடுகள் மூலம் வளப்படுத்தி மக்களையும் ஒரு அடுத்த கட்ட வாழ்க்கை வட்டத்திற்கு அழைத்துவரத்தயங்கினால் தரவைக்காணிகளில் சிங்களக்குடியேற்றங்களை தடுக்கவே முடியாது. அப்பியாசக்கொப்பிகளையும் புத்தகப்பைகளையும் காலணிகளையும் தென்னிலங்ககையில் வாங்கி அன்பளிப்புச்செய்து கொண்டே இருப்போம். எமது மக்கள் புலம்பெயர்வார்கள் . புலம்பெயர் மக்களின் முதலீட்டில் தென்னிலங்கை வளப்படும். .சிந்திப்போம் செயல்படுவோம் இதுபற்றி நிறைய கருத்துக்களை தொடர்ந்து பதிவிடுகேின்றேன்