வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

பசுமை நினைவுகள்:அது ஒரு கனாக்காலம்…..

Posted by Thava திங்கள், 17 நவம்பர், 2008

இக்கட்டுரை இலண்டன் பழையமாணவர் சங்கத்தின் ஒன்றுக்காக 2006 இல் நான் அனுப்பி வைத்தது. மின்னஞ்சலில் சேமிக்கப்பட்டிருந்தது என்கண்ணில் இன்று பட்டது இங்கே பதிவு செய்கிறேன்.
எனது வாழ்கையில் என்றும் பெருமை கொள்வது யாழ்பாணம் இந்தக்கல்லூரியில் கல்வி கற்றேன் என்பதுதான். எந்த ஒரு மாணவனோ பழையமாணவனோ தான் யாழ் இந்துக்கல்லூரியில் கற்றிராமல் வேறிடத்தில் கற்றிருந்தால் வாழ்க்கையில் உயர்ந்திருப்பேன் என்று ஒருபோதும் மனம் வெதும்பியதில்லை மாறாக யாழ் இந்துவில் கற்கமுடியாமல் போய்விட்டதே என வெதும்புபவர்கள் ஏராளம். கல்வி என்பது வெறும் ஏட்டுக்கல்வியை மாத்திரம் குறிப்பதல்ல என்பது யாவருமறிந்தது. இலங்கை போன்ற நாடுகளின் பரீட்சையினை மட்டுமே மையமாகக்கொண்ட கல்வித்திட்டம் இதனை உணர்த்துவதற்கு தடங்கலாகத்தான் இருக்கின்றது. எனினும் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகளும் சூழலும் இந்த இடைவெளியினை நிரப்ப பெரிதும் பங்காற்றுகின்றன. தனியார் கல்வி நிலையங்கள் வெறுமனே பரீட்சையினை நோக்கமாகக்கொண்டவை. இவை மாணவர்களின் சிந்தனைத்திறனை புடம்போடுவதற்கு மறுக்கின்றன. மாறாக அதனை மழுங்கடிக்கின்றன. ஆனால் கல்லூரிகளும் பாடசாலைகளும் பல்கலைக்கழங்களும் அவ்வாறல்ல அவை பரீட்சைக்கான கல்வியை விடவும் வாழ்க்கைக்கான கல்வியை வழங்குவதில் கூடிய கவனம் செலுத்துகின்றன. வாழ்கைக்கான கல்வி சரியாக வழங்குமிடத்து பாட்சைக்கான கல்வியில் மாணவர்களின் சிந்தனைத்திறன் விருத்தியடைகின்றது என்பது என் கருத்து. இந்த வகையில் மாணவனை நாட்டுக்கு நல்லதொரு பிரசையாக வளத்தெடுப்பதில் எமது கல்லூரிக்கு நிகர் எமது கல்லூரிதான். எமது கல்லுரியின் பழைய மாணவர்கள் பல்துறை வல்லுனர்களாக உலகளாவிய ரீதியில் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் சளைத்தவர்கள் அல்லர். ஆளுமையுடையவர்கள் முற்போக்கு சிந்தனையுடையவர்கள். கல்லூரி வாழ்கையில் ஒவ்வொரு விதமாக இருந்தவர்கள் இன்று ஏதோ ஒருதுறை வல்லுனர்களாக இருக்கின்றார்கள். இதற்கெல்லாம் காரணகர்த்தா யார்? யாழ் இந்து அன்னை என்கின்ற ஒரு “வேர்ச்சுவல் மதர்” என்றுதான் கூறவேண்டும் அதற்கு வரைவிலக்கணம் கொடுக்கமுடியாது அவள் ஒருவகையில் தாய் ஒருவகையில் சமூகம் என ஒவ்வொருவகையில் ஒவ்வொரு வடிவமாக நின்று எம்மை வழிநடத்தினாள். வகுப்பறையில் கற்றவைகள் பாடப்புத்தகங்களாக இருக்கலாம்.ஆனால் கல்லுரி மண்ணில் கற்றவைகள் ஏராளம் ஏராளம். இப்படித்தான் இதைச்செய்யவேண்டும் என்று கரும்பலகையில் எழுதிக்காட்டப்படவில்லை மாறாக செய்து காட்டப்பட்டது.அதனை காட்டியவர்கள் பலர். இவர்களில் அதிபர்கள் ஆசிரியர்கள் சக மாணவர்கள் பழையமாணவர்கள் நலன்விரும்பிகள் என எமது கல்லுரிச்சமூகமே எடுத்துக்காட்டுக்காட்டுகளாக திகழ்ந்ததன் விளைவு இன்று இந்த இதழில் என் வரிகள்…. இவை பேனா மை சிந்திய எழுத்துக்களல்ல நவீன கணினி ஒன்றில் எனது விரல்களின் அழுத்தல்களில் இருந்து வெளிவந்தவை.

1990 ம் ஆண்டு சனவரி 9 ம் திகதி யாழ் இந்துக்கல்லுரியில் நான் புதியமாணவனாக அப்பாவுடன் உள்நுழைந்த போது எழுந்த உணர்வுகளை எந்தப்பேனாகொண்டோ எந்தக்கணினி கொண்டோ எழுத்துருவாக்கம் செய்யமுடியாது. இது திரு பொன்னம்பலம் அதிபராக இருந்த காலப்பகுதி திரு மகேந்திரன் உப அதிபராக இருந்தார். கல்லுரியின் விடுதியில் சேர்த்து விடடார்கள் நானோ சின்னப்பயைன் உருவத்திலும் கூட. கல்லுாரி விடுதியின் நுழைவாயில் எனக்கு உண்மையிலேயே பென்னம்பெரியதாக தோன்றியது. ஏன் அரசகாலச்சிறை போலவும் தோன்றியது. எனது கண்ணில் கண்ணீர் குழமாகி தெரிந்த பயத்தை உபஅதிபர் தேற்றி நான் பார்த்துக்கொள்கிறேன் என அப்பாவிடம் கூறியது நெஞ்சைவிட்டகலவில்லை. எனது விடுதிவாழ்க்கை கற்றுத்தந்தவைகள் நிறைய இருக்கின்றன. அங்கு எனக்கு வழங்கப்பட்ட “சிறுசு” என்ற பட்டப்பெயரை மறக்கவில்லை. நான் எந்த ஒருசின்னப்பிரச்சனைக்கும் அழுதுவிடுவேன் இது எனது ஆரம்ப கல்லூரிவாழ்கை ஆனால் இன்று துன்பம் வரும்போதும் சிரிக்கின்றேன் இது கல்லூரி எனக்கு கற்று;த்தந்தது. என்னுடன் பழகியவர்கள் பலர். இருப்பவர்கள் சிலர். என் கல்லுாரி வாழ்க்கையில் பழகிய மூத்த ,சக மாணவர்கள் சிலர் உயிருடன் கூட இல்லை தம்மையே அவர்கள் தியாகம் செய்துவிட்டார்கள். கற்பித்த ஆசிரியர்களில்,மாணவர்களில் சிலர் எனது அழுகைக்கு காரணமாயிருந்தார்கள் அவர்களின் மீது எனக்கு அன்று வெறுப்பாயிருந்தது. அப்போது நினைத்தேன் வளர்ந்து பெரியவனாகியதும் அவர்களை ஒருவழிபார்க்க வேண்டும் என்று. ஆனால் இன்று பெரியவனாகிவிட்டேன். இவர்களைக் காண்கிறேன். வெறுப்புவரவில்லை.இனம்புரியாத அன்பு ,பணிவு பெருகுகிறது இதற்கு காரணம் எனது கல்லூரி வாழ்க்கை தான்.

விளையாட்டுத்திடலுக்கு சென்றால் என்ன ஆய்வுகூடத்துக்கு சென்றால் என்ன நூலகத்துக்கு சென்றால் என்ன கல்லூரி மண்ணில் எமது வகுப்பு மாணவர்கள் ஒழுங்கு வரிசையில் செல்லும் ஒவ்வொரு கணத்திலும் நான் முதல் மாணவனாக சென்ற கணத்தை நினைத்துப்பார்க்கின்றேன் ஆம் இந்த சம்பவத்தை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது .எனது பழைய நண்பர்களுடன் கதைக்கும்போது நினைவு கூருவேன். வயிறு குலுங்க சிரிப்பார்கள். ஆண்டு 11 படித்துக்கொண்டிருந்த காலம் எமக்கு சமூகக்கல்வியும் வரலாறும் கற்பித்தவர் திரு ஜெயபாலன் அவர்கள்.(இப்பொழுதும் கற்பிக்கிறார்)அவர் உருவத்தில் சிறியவர் அதனால் முதல்வரிசை மேசையில் நடுவில் இருந்த சேயோன் என்ற மாணவனின் மேசையில் ஏறி உட்கார்ந்து பாடம்சொல்லுவார். ஒருநாள் மேசையில் ஏறிஇருந்து கற்பித்துக்கொண்டிருக்கையில் மேசையில் பேனா மையினை சேயோன் சாதுர்ஜயமாக கொட்டிவிட அது ஆசிரியரின் காற்சட்டையினை பாழாக்கிவிட்டது. அதனை ஒழுக்கவிதி மீறாத நண்பன் ஜெயமதன் காட்டிக்கொடுத்தது விட சேயோன் வாங்கிஅடியை சேயோன் மறந்தானோ என்னவோ என்னால் மறக்கமுடியாது.

இது தவிர தவமணிதாசன் ஆசிரியரின் அடிகளுடன்கூடிய கற்பித்தல்கள், மனோரஞ்சன் ஆசானின் கராட்டி குத்துக்களுடன்கூடிய ஆங்கிலம், என்னை கணிதபாடத்தை விரும்ப வைத்த சிறீதரன் மற்றும் சபாநாயகம் ஆசான்களின் கண்டிப்புடன் கூடிய கணிதபாட வகுப்புக்கள், ச.வே.பஞ்சாட்சரம் ,சிவராஜா ஆசான்களின் தேசியப்பற்றுடனான தமிழ் வகுப்புக்கள், கஜன் ஆசிரியரின் அறிவியலுடன் கூடிய விஞ்ஞானம், புண்ணியலிங்கம் ,தர்மகுலசிங்கம் ஆசிரியர்களின் இந்துமதத்தை உணரவைத்த பிரார்த்தனை வழிபாடுகள்,சண் தயாளன் ஆசிரியரின் சகோதரத்துவமான விளையாட்டுப்பயிற்சிகள், செல்வி செல்லத்துரை மற்றும் பத்மநாதன் ஆகியோரின் இனிமையான சங்கீத வகுப்புக்கள், வகுப்பறையில் நுழையும்போதே ”31.12 ஆயிரத்து தொளாயிரத்து...” என வியாபார இலாபநட்டகணக்கினை ஆரம்பித்து விடும் சிவஞானசுந்தரம்பிள்ளை அவர்களின் வர்த்தகமும் கணக்கியலும் வகுப்புக்கள் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. அதிபர் பஞ்சலிங்கம் அவர்களின் மாணவர்களின் ஆக்கத்திறன் விருத்தியின் மீது கவனம் செலுத்திய நிருவாகம் நினைவகலாதது, அதிபர் சிறீகுமரன் அவர்களின் கண்டிப்பான அணுகுமுறைகளும் எம்மை வியக்கவைத்தவைகளே. இதேபோல உயர்தரவகுப்பில் எனது லியோக்கழக சாதனைகளுக்கு முன்னோடியாக இருந்தவரும் வகுப்பாசிரியராக இருந்து பிரயோக கணிதம் கற்பித்த கொஸ்அல்பா என்றே மாணவரால் அறியப்பட்ட ஞானப்பிரகாசம் ஆசிரியரின் பயனள்ள அறிவுரைகள் பயனுள்ளவை. இரசாயனவியலில் சுருக்கமானதும் காட்டமானதுமான கற்பித்தலை செய்த குட்டி மக்கர் என்று செல்லமாக அழைக்கும் மகேஸ்வரன் அவர்களின் கற்பித்தல் .என்னை லியோக்க கழகம் சார்பாக அழைக்க கழகத்தில் இருந்து யாரேனும் வந்தால் அவர்கள் கேட்காமலேயே என்னை நக்கலுடன் அனுப்பிவைப்பதன் மூலம் என்னை சிந்திக்கவைத்தவரும் இவரே. அத்துடன் உயர்தர மாணவர்களின் ஒழுக்க நலன்களில் பெரிதும் பங்காற்றிய பிரதி அதிபா மகேஸ்வரனும் மறக்க முடியாத ஒருவர்.

இவ்வாறு என் வாழ்கையில் மாத்திரமல்ல பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய கல்லுரிச்சமூகத்தில் இன்று பல புதியவர்கள் வந்து இணைந்திருக்கிறார்கள்.அவர்களில் பலர் எமக்கு புதியவர்களாயிருக்கலாம் ஆனால் கல்லுரிக்கு அவர்கள் பழையவர்களே. இன்று நான் பழையமாணவனாக கல்லூரிக்கு செல்லும்போது உலகளாவிய பழைய மாணவர்களின் ஆதரவுகளின் வெளிப்பாடுகளும் புதிய துடிப்பான அதிபரின் நிர்வாக திறமையும் எமது கல்லூரிக்கு புதிய மெருகூட்டிக்கொண்டிருப்பதை உணர்கின்றேன். பழையமாணவர்சங்க பிரதிநிதியாக இருப்பதன் மூலம் எனது கல்லூரிச்சமூகத்துக்கு நிறையவே பங்களிக்கக்கூடியதாக இருப்பதையும் உணர்கிறேன்
“வாழிய யாழ் நகர் இந்துக்கல்லூரி

0 comments

கருத்துரையிடுக